மிக உயர்ந்த தரம்
திருக்குர்ஆனை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனின் செய்திகள் என்று அறிமுகம் செய்தார்கள். இறைவனின் செய்திகள் என்றால் அது மனிதர்களின் செய்திகளைப் போல் அல்லாமல் அனைத்து வகையிலும் அனைத்தையும் மிஞ்சும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.
திருக்குர்ஆன் இப்படி அமைந்துள்ளதா என்றால் அரபுமொழி அறிந்த முஸ்லிம் அல்லாதவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்தால் கூட மனிதனால் எட்ட முடியாத உயர்ந்த தரத்தில் அது அமைந்திருப்பதை அறிந்து கொள்வர். அரபு மொழியின் மிக உயர்ந்த இலக்கியமாக திருக்குர்ஆன் 14 நூற்றாண்டுகளாக மதிக்கப்பட்டு வருகிறது.
மாபெரும் இலக்கியங்களில் பொய்களும், மிகையான வர்ணனைகளும் அவசியம் இடம் பெற்றிருக்கும். ஆனால் திருக்குர்ஆனில் பொய் இல்லை! முரண்பாடு இல்லை! ஆபாசம் இல்லை! மிகையான வர்ணனைகள் இல்லை! கற்பனைக் கலவை இல்லை! நழுவுதலும் மழுப்புதலும் இல்லை! மன்னர்களையும், வள்ளல்களையும் மிகைப்படுத்திப் புகழுதல் இல்லை!
இலக்கியத்திற்குச் சுவையூட்டும் இந்த அம்சங்கள் அனைத்தையும் அடியோடு நிராகரித்துவிட்டு உண்மைகளை மட்டுமே மிக உயர்ந்த இலக்கியத் தரத்துடன் திருக்குர்ஆன் பேசியிருப்பது, அன்றைய இலக்கிய மேதைகளையும் பிரமிப்புடன் பார்க்க வைத்தது. இன்று வரை அந்த பிரமிப்பு நீடிக்கிறது.
இவ்வளவு உயர்ந்த இலக்கியத் தரத்தில் முஹம்மது நபி அவர்கள் ஒரு நூலை இயற்ற வேண்டும் என்றால் அவர் மாபெரும் பண்டிதராகவும், அரபு மொழியில் கரை கண்டவராகவும், அவருக்கு முந்தைய இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவராகவும் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது என்பது ஆச்சரியமான உண்மை.
” அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம். ” (அல்குர்ஆன் 29:48)
” எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ – அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள். ”
“(அல்குர்ஆன் 7:157) அரபு மொழிப்பண்டிதராக இல்லாத, முந்தைய இலக்கியங்களை வாசிக்கவும் தெரியாத முஹம்மது நபி அவர்கள் சொந்தமாகக் கற்பனை செய்தால் அது எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்தில் திருக்குர்ஆன் இல்லை. அரபு மொழிப் பண்டிதர் கற்பனை செய்தால் எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்திலும் இல்லை. மாறாக பல நூறு மடங்கு உயர்ந்த தரத்தில் இருக்கிறது. எனவே இது இறைச் செய்தியாகத் தான் இருக்க முடியும்.
படிக்காதவர்களுக்கும் புரியும் ஒரே இலக்கியம்
பொதுவாக ஒரு நூல் எந்த அளவுக்கு உயர்ந்த இலக்கியத்தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளதோ அந்த அளவுக்கு சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படும்.மிக உயர்ந்த இலக்கியங்கள் எந்த மொழியில் இருந்தாலும் அம்மொழியின் பண்டிதர்கள் மட்டும்தான் அதைப் புரிந்து கொள்ள முடியுமே தவிர அம்மொழி பேசும் சாதாரண மக்களுக்கு அவை புரியாது. சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் ஒரு நூல் இருந்தால் நிச்சயமாக உயர்ந்த இலக்கியத்திற்குரிய அம்சங்கள் ஏதுவும் அந்த நூலில் இருக்காது.
ஆனால் திருக்குர்ஆன் அரபு மொழியைப் பேச மட்டுமே தெரிந்த மக்களுக்கும் புரிந்தது. பண்டிதர்களையும் கவர்ந்தது. அரபு மொழியில் உள்ள எண்ணற்ற இலக்கிய நூல்களை இன்றைய அரபுகளில் பலரால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அரபு மொழி பேசும் ஒவ்வொருவரும் குர்ஆனைப் புரிந்து கொள்கிறார்.
இன்றைக்கும் கூட எந்த மனிதனாலும் இத்தகைய அம்சத்தில் ஒரு நூலை இயற்றவே முடியாது. எந்த மனிதருக்கும் இயற்ற இயலாத ஒரு நூலை மக்களிடம் முன் வைத்துத் தான் ‘இது இறை வேதம்’ என்று முஹம்மது நபி அவர்கள் வாதிட்டார்கள். குர்ஆன் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கற்பனை அல்ல என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.
இசை நயம்
எந்த இலக்கியமானாலும் அதில் ஒசை அழகும், இசை நயமும் கிடைக்க வேண்டுமானால் அதனுடைய சீர்களும் அடிகளும் ஒழுங்கு முறைக்கு உட்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதால் தான் அவற்றில் இசை நயத்தை நாம் உணர்கிறோம்.ஆனால் திருக்குர்ஆனில் ஒழுங்கு முறைப் படுத்தப்பட்ட அடிகள் இல்லை. மாறாக உரைநடை போலவே அதன் வசனங்கள் அமைந்துள்ளன. அவ்வசனங்களிலும் குறிப்பிட்ட அளவிலான சொற்கள் இடம் பெறவில்லை. மாறாக சில வசனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வார்த்தைகளும், சில வசனங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வார்த்தைகளும், சில வசனங்களில் பத்து வார்த்தைகளும்,சில வசனங்களில் ஐந்து வார்த்தைகளும் இருக்கும். ஒரு வார்த்தையே வசனமாகவும் இருக்கும்.
இப்படி அமைந்துள்ள எந்த நூலிலும் இசை நயம் அறவே இருக்காது. ஆனால் எதில் இசை நயத்தை மனிதனால் கொண்டு வர இயலாதோ அந்த நடையில் மனித உள்ளங்களை ஈர்க்கும் இசை நயம் திருக்குர்ஆனுக்கு மட்டுமே இருக்கிறது. அரபு மொழி தெரியாத மக்களும் கூட அதன் இசை நயத்துக்கு மயங்குகின்றனர். இசை நயத்துக்கு எதிரான ஒரு முறையைத் தேர்வு செய்து அதற்குள் இசை நயத்தை அமைத்திருப்பது இது முஹம்மது நபியால் கற்பனை செய்யப்பட்டது அல்ல என்பதற்கு மற்றொரு சான்று.
காலத்தால் முரண்படாதது
• முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கி.பி. 570-ல் பிறந்தார்கள். இந்தக் கால கட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாரண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை. இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு தான் பெரிய மேதையாக இருந்தாலும், அவரது காலத்து அறிவைக் கடந்து எதையும் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகள் இருப்பதை உலகம் கண்டு கொள்ளும்.
இதற்கு காரணம் நூறு வருடங்களுக்குப் பின் என்ன நடக்கும்: என்னென்ன கண்டு பிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது. பல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். அந்த நூலே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி விடும்.
ஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறை வேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை. • திருக்குர்ஆனைப் பொருத்த வரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, எல்லாத் துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது.
பூமி மற்றும் ஏனைய கோள்களின் அமைப்பு, வானில் இருக்கின்ற அதிசயங்கள், புவியியல் மற்றும் வானியல் குறித்து பேசும்போது, இந்த நூற்றான்டின் மாமேதையும் வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.
source: விக்கிப்பீடியா