இப்போது சிந்தியுங்கள்! காதியானிகள், கபுரு வணங்கிகள், இறைவனுக்கு நேரடியாகவே இணை வைக்கும் “அத்துவைத” கொள்கையை நிலைநாட்டும் சூஃபிகள் போன்ற, வழிகெட்டு நரகில் போய் விழுபவர்கள் எல்லாம் தங்கள் பெற்றோர் தங்களுக்குச் சூட்டிய பெயர்களில் இருக்கிறார்கள் என்பதற்காக,
தங்கள் தங்கள் பெற்றோர்கள் இட்ட – சூட்டிய பெயர்களை் மாற்றிக்கொள்ளத் துணியாத இவர்கள், மேற்கண்ட வழிகேட்டுக் கொள்கையுடையோர் எல்லாம் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்பதற்காக,
அல்லாஹ் சூட்டிய ‘முஸ்லிம்’ என்ற பெயரில் வெறுப்புற்று தங்களை ‘ஸலஃபி’, JAQH, TNTJ, முஜாஹித், அஹ்லஹதீஸ் என்று அழைத்துக் கொள்ள, அதாவது தங்களுக்கு ‘ஸலஃபி’ JAQH, TNTJ, முஜாஹித், அஹ்லஹதீஸ் என பெயர் சூட்டிக் கொள்ள விரும்புகிறார்களே இது சரியா?
இதுவும் ஷைத்தானின் மிகப்பெரிய ஏமாற்று வித்தை என்பதை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லையா?
அல்குர்ஆனில் ‘முஸ்லிம்’ என்று அழைத்துக் கொள்வதற்கு எண்ணற்ற ஆதாரங்களைத் தந்துள்ளோம். அதுபோல் இவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கும் ‘ஸலஃபி’ JAQH, TNTJ, முஜாஹித், அஹ்லஹதீஸ் என்பதற்கு ஒரேயொரு ஆதாரத்தை அல்குர்ஆனிலிருந்து தர முடியுமா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களை ‘ஸலஃபி’ JAQH, TNTJ, முஜாஹித், அஹ்லஹதீஸ் என்று அடையாளப்படுத்தி இருக்கிறார்களா? நான்கு கலீஃபாக்களில் யாராவது தங்களை “ஸலஃபி”, JAQH, TNTJ, முஜாஹித், அஹ்லஹதீஸ் என்று அழைத்துக் கொண்டார்களா?
குறைந்தபட்சம் நபி தோழர்களில் யாராவது தங்களை ‘ஸலஃபி’ JAQH, TNTJ, முஜாஹித், அஹ்லஹதீஸ் என அடையாளப்படுத்தி இருக்கிறார்களா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறப்பித்துக் கூறிய மூன்று தலைமுறைகளில் யாராவது தங்களை ‘ஸலஃபி’ JAQH, TNTJ, முஜாஹித், அஹ்லஹதீஸ் என அழைத்துக் கொண்டதாக ஆதாரம் தர முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் அவர்கள் அனைவரும் தங்களை முஸ்லிம்கள் என்று சொன்னதற்கு எண்ணற்ற ஆதாரங்களைத் தர முடியும்.
அல்குர்ஆனை புரட்டிப்பார்த்தால் 2:275, 4:22,23 5:95, 8:38 ஆகிய ஐந்து இடங்களில் ‘ஸலஃபி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஐந்து இடங்களிலும் முன்னர், முன்னால், முன்பு போன்ற பொருளிலும், 10:30, 69:24 இரு இடங்களில் செய்தனுப்பிய, முற்படுத்திய என்ற பொருளிலும், 43:56 பின்னால் வருவோருக்குப் பாடமாக அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி அழிக்கப்பட்ட முன் சென்றவர்களைக் குறிப்பிடுகிறது.
இவை அல்லாமல் 2:170, 5:104, 7:28,70,71 10:78, 11:62, 87,109, 12:40, 14:10, 21:53, 54, 26:74, 76, 31:21, 34:43, 37:17,69, 43:22, 23, 56:48 இத்தனை இறைக் கட்டளைகளிலும் வழிகெட்டு நரகைச் சென்றடையும்-இறைவனது கோபத்திற்கும், சாபத்திற்கும், தண்டனைக்கும் ஆளாகியவர்கள், தங்களின் முன் சென்றவர்களை-முன்னோர்களை, ஸலஃபுகளை பின்பற்றி நரகிற்கிரையான கதையையே கூறுகின்றன. மற்றபடி ஸலஃபுகளைப் பின்பற்றி அல்லாஹ்வின் பொருத்தத்தையும், அதன் மூலம் சுவர்க்கத்தையும் அடைந்ததாக ஒரேயொரு குர்ஆன் வசனத்தையும் பார்க்க முடியவில்லை. ஆதாரபூர்வமான ஒரேயொரு ஹதீஸையும் பார்க்க முடியவில்லை.
“ஸலஃபுஸ்ஸாலிஹீன்” என்ற எண்ணத்தில் கூறுவதாக இருந்தாலும், “உங்களைத் தூய்மையானவர் என நீங்களே தற்புகழ்ச்சி செய்து கொள்ளாதீர்கள்; உங்களில் தக்வா உடையவர் யார் என்பதை (அல்லாஹ்வாகிய) அவனே நன்கறிவான்” என்ற 53:32 இறைக்கட்டளைப்படி பெரும் பாவமாகும். ஹனஃபி, ஷாஃபி, மாலிக்கி, ஹன்பலி என்பது போல் ஸலஃபியும் இதர பெயர்களும் மிகமிக சமீப காலத்தில் நடைமுறையில் வந்துள்ளதாகவே அறிய முடிகிறது.
எமக்குத் தெரிந்தவரையில் இமாம் இப்னு தைமிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களது காலத்தில் இந்த நான்கு மத்ஹபுகளின் பிடி அதாவது ‘தக்லீது’ மிகமிகக் கடுமையாக இருந்துள்ளதை அறிய முடிகிறது. அன்று தக்லீத் எனும் குருட்டுக் கொள்கையை எதிர்த்தவர்கள் சிறையிலடைக்கப்பட்டுக் கடுமையாகக் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். சித்திரவதை செய்யப்பட்டார்கள்.
தக்லீதை விட்டு முஸ்லிம்களை விடுவிப்பது கல்லில் நார் உரிப்பதுபோல் மிகக் கடினமாக இருந்திருக்கிறது.
தக்லீதை விட்டு விடுபடாமல் அதில் உறுதியாக இருப்பவர்கள் வேண்டுமானால், கலஃபிகளான பின்னோர்களை தக்லீது செய்வதை விட்டு, முன்னோர்களான ஸலஃபிகளை தக்லீது செய்யட்டும். அது குறைந்த அளவு வழிகேட்டோடு தப்பிக்க வழி வகுக்கும் என்ற கருத்தில் “முகல்லிது யுகல்லிதுஸ்ஸலஃப்” என்று கூறி இருக்கிறார்கள். இது இமாம் இப்னு தைமிய்யாரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் தீர்ப்புகள், சவுதி அரசால் திரட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ள “பதவா இப்னு தைமிய்யா” என்ற நூலின் 20-ம் பாகம் 9-ம் பக்கம் 12-ம் வரியில் பதிவாகியுள்ளது.
இதற்குப் பின்னரே ஸலஃபிகள், நாங்கள் ஸலஃபிகள் என்று கூறிக்கொள்ளும் நடைமுறை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. எமது இந்த கருத்து தவறு என்றால், ஸலஃபி என்று அழைத்துக் கொள்வது எப்போது நடைமுறைக்கு வந்தது? என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து, அவர்கள் தங்கள் கருத்தை நிலைநாட்டட்டும்.
தங்களை முகல்லிதுகள் என்று கூறிக் கொள்ள விரும்புவோர் தங்களை ஸலஃபிகள் என்று கூறிக் கொள்வதில் பொருள் இருக்கலாம். ஆனால் அல்லாஹ் அல்குர்ஆன் 7:3, 33:66,67,68 இறைவாக்குகளில் மறுத்துக் கூறும் தக்லீதை விட்டு விடுபட்டு, யாரையும் தக்லீது செய்யாமல் குர்ஆன், ஹதீஸை படித்து, சிந்தித்து, விளங்கிச் செயல்படுகிறவர்கள் தங்களை ஸலஃபிகள் என்றோ, இதர பெயர்களிலோ பெயரிட்டுக் கொள்வது சரியா? இறைவன் இதை அங்கீகரிப்பானா? ஏற்றுக் கொள்வானா? என்பதை தயவு செய்து முறையாகச் சிந்தித்து விளங்க அன்புடன் வேண்டுகிறோம்.
JAQH, TNTJ, முஜாஹித், அஹ்லஹதீஸ் போன்ற பெயர்களுக்கும் குர்ஆன், ஹதீஸிலிருந்து எந்தவித ஆதாரத்தையும் பார்க்க முடியவில்லை. இப்பெயர்கள் சமீபகால புரோகிதர்களின் கற்பனையில் உதித்த கற்பனைப் பெயர்களே!
42:21-ல் அல்லாஹ் சொல்வதுபோல் அல்லாஹ் விதிக்காததை மார்க்கமாக்க நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே துணியவில்லை. 49:16-ல் அல்லாஹ் கடிந்து கூறுவதுபோல் அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க முற்படவும் இல்லை. மூஸா அலைஹிஸ்ஸலாம் ஃபிர்அவ்னிடம் “இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனின் புத்தகத்தில் இருக்கிறது. என் இறைவன் தவறுவதுமில்லை; மறப்பதுமில்லை” (20:52) என்று கூறியதுபோல், அந்த நயவஞ்சகர்களின் முடிவை அல்லாஹ்விடம் விட்டுவிட்டு, அவர்களையும் இவ்வுலகில் முஸ்லிமாக ஏற்று, ஒரே உம்மத்-உம்மத்தன் வாஹிதா (23:52) என்ற அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்தார்கள்.
முனாஃபிக்கள் பேசினால் பொய் பேசுவார்கள், வாக்களித்தால் மாறு செய்வார்கள், நம்பினால் மோசடி செய்வார்கள்” என்ற ஹதீஸை காட்டி இப்படிப்பட்ட குணமுடையவர்களே முனாஃபிக்குகள். அவர்கள் முஷ்ரிக்குகள் அல்ல; காஃபிர்கள் அல்ல; அதனால்தான் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த நயவஞ்சகர்களை முஸ்லிம்களாக ஏற்றுக் கொண்டார்கள்;
ஆனால் இன்றைய தர்கா, தரீக்கா, மத்ஹபு வழிபாட்டினர் ஷிர்க் செய்பவர்கள்; அவர்களை முஸ்லிம்களாக ஏற்க முடியாது. அவர்கள் பின்னால் தொழ முடியாது என JAQH, TNTJ வகையறாக்கள் வாதிட்டு வருகின்றனர். இது அவர்களின் அறியாமை வாதமாகும். அந்த மூன்று குணங்களையும் மேலதிகமாகக் கொண்டிருந்தார்கள் என்பதை, நயவஞ்சகர்கள் பற்றி குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் நடுநிலையோடு படித்து விளங்குகிறவர்கள் அறிந்து கொள்ள முடியும்.
இன்று கூட ஹிந்து தாய், தகப்பனுக்குப்பிறந்த காரணத்தால், ஹிந்துவாக இணைவைக்கும் முஷ்ரிக்காக இருக்கும் சிலரிடம், பொய் பேசாத நிலையையும், வாக்கு மாறாத நிலையையும், அமானிதத்தைப் பாதுகாத்துக் கொடுக்கும் உயர் குணத்தையும் பார்க்க முடியும். எனவே நபி காலத்து முனாஃபிக்குகள் முஷ்ரிக்களாக காஃபிர்களாக இருந்ததோடு, மேலே கூறிய மூன்று துர்குணங்களை மேலதிகமாகக் கொண்டிருந்தார்கள் என்பதே உண்மையாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்து முனாஃபிக்குகள் ஈமான் கொள்ளவில்லை என்று அல்லாஹ் 2:8ல் கூறுகிறான். 2:19-ல் அந்த முனாஃபிக்கான காஃபிர்களை அல்லாஹ் சூழ்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுகிறான். 2:14-ல் அந்த முனாஃபிக்குகள் ஷைத்தான்களுடன் தனித்து இருக்கும்போது நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம் என்று சொல்வதாக அல்லாஹ் கூறுகிறான்; ஷைத்தான்களுடன் இருப்பவர்கள் காஃபிராகவும் முஷ்ரிக்காகவும் இருப்பார்கள் என்பதில் ஐயம் இருக்க முடியுமா?
முனாஃபிக்குகள், காஃபிராகவும், முஷ்ரிக்காகவும் இருக்கிறார்கள் என்று அல்லாஹ்வும் கூறுகிறான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், நபிதோழர்களும் அந்த முனாஃபிக்குகளது குஃப்ரான, ஷிர்க்கான செயல்களைத் தங்கள் கண்களால் கண்டனர். அப்படிக் கண்டதால்தான் மற்றவர்கள் நம்பிக்கைக் கொண்டது போல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று முனாஃபிக்குகளைப் பார்த்து கூறி இருக்கிறார்கள். அதற்கு, “அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டதுபோல் நாங்களும் நம்பிக்கை கொள்வதா? என்று கேட்டு உண்மை முஸ்லிம்களை-நபிதோழர்களை அறிவிலிகள் என்று கூறியுள்ளனர் அந்த முனாஃபிக்கள் (பார்க்க 2:13)
முனாஃபிக்கள் பற்றிய குர்ஆன் வசனங்களை குறிப்பாக 4:88,138,139,145, 9:68,73, 33:1,48,73, 48:6, 63:3,6, 66:9 வசனங்களை நடுநிலையோடு முறையாகப் படித்து விளங்குகிறவர்கள், அவர்கள் முனாஃபிக்குகள்தான், காஃபிர்கள்தான், முஷ்ரிக்குகள்தான் என்பதைத் தெளிவாக விளங்கமுடியும். நபி காலத்து முனாஃபிக்கள், முனாஃபிக்குகள் மட்டுமே! அவர்கள் காஃபிர்களுமல்ல; முஷ்ரிக்குகளுமல்ல.
ஆனால் இன்றைய தர்கா, தரீக்கா, மத்ஹபு முஸ்லிம்கள் காஃபிர்கள், முஷ்ரிக்குகள் என்று கூறும் JAQH, TNTJ மவ்லவிகள் மற்றும் அவர்களின் ஆதாரவாளர்கள் அல்குர்ஆனை முறையாக விளங்க முடியாத அறிவிலிகளாக இருக்க வேண்டும்; அல்லது தங்களின் JAQH, TNTJ பிரிவுப் பெயர்களை நியாயப்படுத்த அறிந்து கொண்டே மனட்சாட்சிக்கு முரணாகப் பொய்யுரைப்பவர்களாக இருக்க வேண்டும்; மூன்றாவது ஒரு நிலை இருக்க முடியாது. அவர்களின் உண்மை நிலையை அவர்கள்தான் விளக்க வேண்டும்.
அல்குர்ஆன் 4:116 வசனம் இணைவைப்பவர்கள் நிரந்தரமாக நரகில் இருப்பார்கள், விடுதலையே இல்லை என்று கூறுகிறது. முனாஃபிக்குகளுக்கும் நிரந்தர நரகம் என்றே குர்ஆன் கூறுகிறது. இதிலிருந்தே அவர்களும் இணைவைப்பவர்களே என்பது உறுதியாகிறதே. இதற்கும் இயக்கவாதிகளின் விளக்கம் தேவை.
இந்த நிலையில் அல்லாஹ்வையும், அவனது இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனையும், அவனது இறுதித் தூதரையும் மனப்பூர்வமாக – உளப்பூர்வமாக ஏற்று தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு, அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள அவர்களை வழிகெடுத்து ஆதாயம் அடையும் கெட்ட ஆலிம்களான புரோகிதர்களின் வழிகேட்டு போதனைகளை நற்போதனைகளாக நம்பிச் செயல்பட்டு வழிகேட்டில் சென்று கொண்டிருக்கும் முஸ்லிம்களின் இறுதி முடிவை, அவர்களைப் படைத்த அல்லாஹ்விடமே விட்டுவிட்டு,
இவ்வுலகில், நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஷ்ரிக்கான, காஃபிரான முனாஃபிக்குகளை முஸ்லிம்களாக ஏற்றிருந்ததுபோல், இந்த வழிகேட்டு முஸ்லிம்களை முஸ்லிம்களாக ஏற்று, அவர்களையும் அரவணைத்துச் செல்வதால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நிலைநாட்டிய உம்மத்தன் வாஹிதாவை-ஒரே சமுதாயத்தை நாமும் நிலை நாட்டுவதால், நமக்கு என்ன நட்டம் இவ்வுலகிலோ, மறு உலகிலோ ஏற்பட்டு விடப்போகிறது? என்பதை சிந்தித்து விளங்க அன்புடன் வேண்டுகிறோம்.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்து முனாஃபிக்குகளான, முஷ்ரிக்குகளான, காஃபிர்களான அந்த நயவஞ்சகர்களின் இறுதி முடிவு நரகம்தான், மீட்சியே இல்லை என்று அல்லாஹ் அல்குர்ஆனில் திட்டமாக அறிவித்த நிலையிலும், அவர்கள் போலியாக, வஞ்சகமாக நாவினால் மட்டும் தங்களை முஸ்லிம்கள் என்று சொன்ன ஒரே காரணத்தால், இன்றைய முஸ்லிம்களைவிட மிகமிக கேடுகெட்டவர்களையே நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகில் முஸ்லிமாக ஏற்று தமது உம்மத்தில் அரவணைத்து “உம்மத்தான் வாஹிதாவை” நிலைநாட்டி இருக்க,
இன்று அல்லாஹ்வையும், அவன் இறக்கியருளிய அல்குர்ஆனையும், தூதரையும் மனப்பூர்வமாக-உளப்பூர்வமாக ஒப்புக்கொண்டு தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு வழிகேட்டுப் புரோகிதர்களின் துர்போதனை காரணமாக வழிகேட்டிலிருப்பவர்களை, அதுவும் அவர்களின் இறுதி முடிவைப் பற்றி அல்லாஹ் அறிவிக்காத நிலையில், அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று தீர்ப்பளிப்பதோ அல்லது அவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் எண்ணத்தில் அல்லாஹ் சூட்டியுள்ள முஸ்லிம் அல்லாத ஸலஃபி, JAQH, TNTJ, முஜாஹித், அஹ்ல ஹதீஸ் போன்ற பெயர்களைத் தங்களுக்குத் தாங்களே சூட்டிக்கொள்வதை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானா? என்பதை ஆத்திரமோ, அனுதாபமோ இல்லாமல் நடுநிலையோடு சிந்தித்து உணர வேண்டுகிறோம்.
வழிகெட்ட முஸ்லிம்களை தங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்ற அடிப்படையில்தானே தங்களை “ஸலஃபி’ JAQH, TNTJ, முஜாஹித், அஹ்லஹதீஸ் என்று அழைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.
அப்படி வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்று அல்லாஹ்வோ, அவனது தூதரோ கூறி இருக்கிறார்களா?
அப்படி ஒரு குர்ஆன் ஆயத்தையோ, ஹதீஸையோ அவர்களால் காட்ட முடியுமா?
குர்ஆன், ஹதீஸ் ஆதாரமில்லாத ஒரு செயலை – அதுவும் ஒரே சமுதாயம் என்று அல்லாஹ் வலியுறுத்திக் கூறும் முஸ்லிம் சமுதாயத்தைப் பிரித்து, பிளவுபடுத்தி, கூறுபோடுவதை, நம்மைப் படைத்த அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா?
என்பதை ஆத்திரமோ, அனுதாபமோ இல்லாமல் நடுநிலையோடு சிந்தித்து ஒரு முடிவுக்கு வர அன்புடன் வேண்டுகிறோம்.
source: http://www.annajaath.com/?p=13#more-13
www.nidur.info