வேப்ப மரக் காற்று உடலுக்கு நல்லது.
வேப்ப மரத்திலிருந்து கிடைக்கும் வேப்பம் பூ மிகச் சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதன் மகத்துவம் தெரிந்தவர்கள் நிச்சயம் இதிலுள்ள கசப்பை அலட்சியம் செய்து பயன்படுத்த தொடங்குவர்.
இப்போதெல்லாம் கடைகளிலேயே, சுத்தம் செய்த வேப்பம் பூக்கள் கிடைக்கின்றன. இதை துவையலாகவோ, பொடி செய்தோ, சர்பத் போல் தயாரித்தோ, பச்சையாகவோ பயன்படுத்தலாம்.
வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள், பல்பம், சாக்குகட்டிகள் சாப்பிடும் வழக்கமுள்ள குழந்தைகளுக்கு வேப்பம் பூ கஷாயம் கொடுத்தால் வயிறு சுத்தமாகும்.
வேப்பம் பூவை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து பருப்புப் பொடியுடன் சேர்த்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி, ஏப்பம், பித்தம் நீங்கும்.
வேப்பம் பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. உடல் பலம் பெறும். வயிற்றில் உள்ள கிருமிகளை கொல்லும்.
வேப்பம் பூவை கொண்டு குல்கந்து தயாரிக்கலாம். இது வியாதியைத் தடுக்கும். ஆண்மையை அதிகரிக்கும் சக்தி கொண்டது.
பசும்பால் 200 கி. தேங்காய்ப்பால் 200 கி. வேப்பம்பூ அரைத்த விழுது 50 கிராம், பனை வெல்லம் 100 கிராம் என்ற
விகிதத்தில் எடுத்து அவற்றை அடுப்பில் வைத்து லேகியமாக கிளறி தினமும் சிறிதளவு சாப்பிட நல்ல பலன் தெரியும்.
கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும். வேப்ப மரக் காற்றே பல வியாதிகளைக் குணப்படுத்தும். அதன் குச்சி, இலை, துளிர், பூ என அனைத்தும் மிக பயன் உள்ளது.
வெந்நீரில் வேப்ப இலைகளைப் போட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு குளித்தால் தோல் வியாதிகளிடமிருந்து தப்பிக்கலாம்.
அமெரிக்காவில் வேப்ப மரம் பற்றிய ஆராய்ச்சியில், வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தால் பல வியாதிகளை வராமல் தடுக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர்.