இஸ்லாமும் முதலாளித்துவமும்– மாக்சிம் ரேடின்சனின் பார்வையில்
முஸ்லிம்களின் மத மரபு மற்றும் தேசிய வாதம் அல்லது இரண்டும் எப்போதுமே நவீன பொருளாதார முறைமைகளுக்கு எதிராக இருந்ததில்லை. இன்னொரு வகையில் இந்த மரபு பொருளாதார மற்றும் சமூக நீதிக்கு சாதகமானதாகவே இருக்கிறது.
பிரஞ்சுப் பத்திரிக்கையான ”லெ மோந்தே”, இஸ்லாமிய உலகிம் பற்றிய அபரிமிதமான புலமை பெற்றவர் என்று பாராட்டப்பெற்ற பெருமைக்குரியவர் மாக்ஸிம் ரோடின்சன். கடந்த 2004-ம் ஆண்டு தனது 89ம் வயதில் மறைந்துபோன ரோடின்சன் அரபு மற்றும் இஸ்லாமிய சரித்திரம், நாகரீகம் ஆகியவை குறித்த பல பிரசித்தி பெற்ற புத்தகங்களை எழுதியவர்.
இவர் 1961ம் ஆண்டு எழுதிய ”முஹம்மதுவின் வாழ்க்கைச் சரித்திரம்” எனும் புத்தகம் மிகவும் குறிப்பிடத்தக்க புத்தகங்களில் ஒன்றாகும். மேலும் இவர் 1966-ல் எழுதிய மாக்ஸ் வெப்பரின் புகழ்வாய்ந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் எதிரொலியாய் எழுதப்பட்ட ”இஸ்லாமும் முதலாளித்துவம்” மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
மிகச்சமீபத்தில் இவரது ”மெமாயர்ஸ்” புத்தகமாய் வெளியிடப்பட்டது. அப்புத்தகம் பிரஞ்சு நாட்டின் தலை சிறந்த எழுத்தாளரான ரோடின்சன் தனது பாரிஸ் நகர வாழ்வினை வாழ்வை மீள்பார்வையினைப் பிரதிபலிக்கிறது.
உலகளாவிய பொருளாதார மந்தநிலை முதலாளித்துவத்தின் போக்கில் பெரும் தடையை ஏற்படுத்தியிருக்கிறது. முதலாளித்துவ சமூகம் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய மறுமலர்ச்சி கட்டத்தின் தோற்றத்தை பின் தொடர்ந்து உருவானது. அதற்கு முந்தைய நிலபிரபுத்துவ சமூகம் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பெரும் சமூக மாறுதலை ஏற்படுத்தியது. அது வெளிப்படையான மாற்றமாக இல்லாவிட்டாலும் சமூக குழுக்களிடையே முரண்பாடுகளையும், மோதல்களையும் ஏற்படுத்துவதில் பெருவாரியான பங்கை வகித்தது.
இதில் ஆசியா மற்றும் ஐரோப்பா ஆகிய இரு பெரும் கண்டங்கள் சார்ந்த முரண்பாடுகள் முக்கியமானவை. உற்பத்தி முறை மற்றும் சமூக உற்பத்தி முறை ஆகிய கருத்தாக்கங்கள் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த பொருளாதார, சமூக மாறுதல் உலகின் பெருமதங்களில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுத்தியிருக்கிறதா? குறிப்பாக இஸ்லாமிய சமூக அமைப்பின் மீது தாக்கத்தை செலுத்தியிருக்கிறதா? இஸ்லாம் அதனளவில் முதலாளித்துவ கூறுகளை கொண்டதா? என்பதான கேள்விகள் ஓரியண்டல் சிந்தனையாளர்கள் மத்தியில் எழுந்தன. இதனைக்குறித்து மாக்சிம் ராடின்சன் விரிவாக ஆராய்ந்தார்.
அதற்காகவே அவரிடம் இருந்து Islam and Capitalism என்ற நூல் வெளியானது. முதலாளித்துவ சமூகம் மத்தியகிழக்கு அரபு சமூகத்தில் எத்தகைய மாறுதலை ஏற்படுத்தியது? அதன் வீச்சு பிற சமூக அமைப்பில் எத்தகைய விளைவுகளை உருவாக்கியது போன்ற முக்கியமான கேள்விகளுக்கு மாக்சிம் ராடின்சன் விடைகாண முயற்சித்தார்.
புதிர்பாதைகள் நிறைந்த கிழக்கத்திய சமூக அமைப்பில் இது குறித்த ஆய்வுமுறை சிக்கலானதாகும். சிக்கலான மலைப்பாதைகள் போன்று இதன் வழிகளும் சிரமமானவை. எந்த ஆய்வாளராலும் திடீர் முன்முடிவுக்கு வர முடியாதவை. ராடின்சன் இதன் புதிர்களை அவிழ்க்க முயன்றார். அதன் கோடுகள் சார்ந்த பாதைக்குள் பயணம் செய்தார்.
மாக்சிம் ராடின்சன் தன் இஸ்லாம் மற்றும் முதலாளித்துவம் பற்றிய ஆய்வை வளர்ச்சி குன்றிய நாடுகளிலிருந்து தொடங்கினார். வளர்ச்சியடைந்த தொழில்வள நாடுகள் மற்றும் வளர்ச்சி குன்றிய வறுமையும், பசியும் ஒன்று சேர்ந்து நிரம்பிய நாடுகள் இவற்றின் போராட்டமாகவே உலகம் இருந்து கொண்டிருக்கிறது. இதுவே உலகின் முக்கிய பிரச்சினையாக வலைகிறது. இவ்வாறான வளர்ச்சி குன்றிய நாடுகளின் பின்தங்கிய மனிதவளம் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளின் செழுமையான மனித வளம் இவை இரண்டின் இயக்கம் பற்றிய எதார்த்தம் உலகிற்கு மிக முக்கியம். இந்த எதார்த்தம் அரபு நாடுகளை சமூக கட்டுமானத்திற்குள் பிரதிபலிக்க செய்கிறது. இதன் நீட்சியில் சில நூற்றாண்டுகளாகவே உலக அரங்கில் முஸ்லிம் மதத்தின் அங்கதம் குறித்து அதிகம் ஆராய வேண்டியதிருக்கிறது என்றார் ராடின்சன்.
இதை சார்ந்த நாடுகளில் சில முக்கிய கருத்துருக்களின் வீச்சு குறித்து பார்க்க வேண்டியதிருக்கிறது. அதன் பொருளாதார வளர்ச்சி நிலை, சோசலிசம், முதலாளித்துவம், தேசியம், இஸ்லாம் போன்ற வித்தியாச கருத்துருக்கள் எவ்வாறு உறவுகொள்கின்றன என்பதும் முக்கியம். அரசியல் இதன் பின்னணியில் இயங்குகிறது. அரசியல் உடனடியான, நடைமுறை சார்ந்த கேள்வியாக இருக்கிறது. இந்த கேள்வி தெளிவானதும் அதற்கான பதிலை சமீபத்தில் வைத்திருப்பதுமாகும்.
ஆட்சியாளார்களின் செயல்பாடு, மற்றும் அரசியலாளர்கள் இதன் பதிலுக்கு ஏற்ற செயல்முறைகளை அரங்கிற்கு கொண்டு வருகிறார்கள். அரசியல் செயல்பாடு, பொருளாதார செயல்பாடு, கருத்தியல் மற்றும் கலாசார மரபு இவற்றிற்கிடையேயான இணைப்பு மற்றும் சரியான உறவு முறை என்பது என்ன? இதற்கான முன்முடிவுகள் சாத்தியமானவை. மத்திய கிழக்கின் வரலாற்றிலிருந்து எளிதில் பெற முடிந்தவை. முதலாளித்துவம் இந்த நாடுகளுக்கு உவப்பான கருத்தாக்கமா? என்பது குறித்த விவாதம் ஓரியண்டல் மற்றும் ஐரோப்பிய சிந்தனையாளர்கள் மத்தியில் நீண்டகாலமாகவே இருந்து கொண்டிருக்கிறது.
முதலாளித்துவ கருத்தாக்கம் மத்திய கிழக்கு அரபுலகில் அதன் ஐரோப்பிய வருகைக்கு பிற்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் எகிப்து, சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் அறிமுகமானது. அங்குள்ள பெரும் நிலபரப்புகள் மற்றும் தொழில்வளங்கள் எல்லாம் தனிநபர்களுக்கு சொந்தமாயின. பூர்வீக நாடோடி பழங்குடிகள் தங்களின் பாரம்பரியத்தை இழந்தார்கள். முதலாளித்துவம் மற்றும் இஸ்லாம் குறித்த ஒப்பீடு முஸ்லிம் சிந்தனையாளர்கள், பொருளியலாளர்கள், மற்றும் வரலாற்றாளர்களால் ஐரோப்பாவில் அதிகம் விவாதிக்கப்பட்டது. இவர்கள் எல்லோருமே ஒரு அர்த்தத்தில் தர்க்கத்தின் அடிப்படையை மறந்து விடுகிறார்கள் என்கிறார் ராடின்சன்.
முஸ்லிம்களின் மத மரபு மற்றும் தேசிய வாதம் அல்லது இரண்டும் எப்போதுமே நவீன பொருளாதார முறைமைகளுக்கு எதிராக இருந்ததில்லை. இன்னொரு வகையில் இந்த மரபு பொருளாதார மற்றும் சமூக நீதிக்கு சாதகமானதாகவே இருக்கிறது.
முதலாளித்துவம் என்ற சொல்லாடலை பற்றி வித்தியாசமான கருதுகோள்கள் இருக்கின்றன. இவை விரிந்த பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு வகையில் இது தனித்த சில பொருளாதார நிறுவனங்களை குறிக்கிறது. மேலும் இந்த நிறுவனங்களின் சட்டகத்தில் இயங்கும் அரசமைப்பையும், அதன் மனோபாவத்தையும் குறிக்கும். இதனடிப்படையில் முதலாளித்துவ நிறுவனங்கள் சில தருணங்களில் மொத்த சமூக அமைப்பையும் தன் கூட்டிற்குள் இழுக்கும். ஆனால் அவை அந்த சமூகத்தில் சிறுபான்மையாகவே இருக்கும். உற்பத்தி சாதனங்களின் தனியுடைமை, தாராள வர்த்தகம்,
இலாபத்திற்கான எத்தனிப்பு, சந்தைக்கான உற்பத்தி, பணப்பொருளாதாரம், போட்டி செயல்முறை, வர்த்தக செயல்பாட்டில் அறிவின் நுட்பம் போன்ற கூறுகள் இவற்றை இயக்கும் சக்திகளாக இருக்கும். முதலாளித்துவத்தின் மற்றொரு அர்த்த வகைபாடு மொத்த சமூகத்தையும் குறிக்கும். அதன் நிறுவனங்கள் அல்லது மனோபாவம் இவற்றை அர்த்தப்படுத்தவதில் முக்கிய பங்காற்றுகிறது. இது மேற்கத்திய சமூகத்தையே அதிகம் குறிக்கிறது. பதினாறாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இந்த அமைப்பே உலகை முதலாளித்துவமாக பிரதிநிதித்துவம் செய்தது. இதில் ரோமப்பேரரசு முக்கிய பங்கு வகித்தது.
தொடர்ச்சிக்கு ‘‘Next” ஐ ‘‘கிளிக்” செய்யவும்