குளிர்பானத் தயாரிப்பு – விற்பனைக்கான அடிப்படை கட்டுமான வசதிகளுக்காக இந்நிறுவனங்கள் பாதியை மட்டும் முதலீடு செய்கின்றன. மீதியை ஒப்பந்ததாரர்கள் மூலம் முதலீடு செய்ய வைக்கின்றன.
பெப்சி – கோக்கின் ரசாயன கரைசல் கூழ் (எசன்ஸ்) மட்டும் அமெரிக்காவிலிருந்து வரும். கூழை நீரில் கலந்து பாட்டிலில் விற்பதற்கென்றே உலகம் முழுவதும் பிராந்திய அளவில் ஏராளமான பாட்டில் தொழிற்சாலைகளை வைத்திருக்கின்றனர்.
இந்தியாவில் கோக்கிற்கு 60, பெப்சிக்கு 26 தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் கோக் மட்டும் பாதியை சொந்தமாகவும் மீதியை ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும் வைத்திருக்கின்றது.
இத்தகைய பாட்டில் தொழிற்சாலைகளின் அதிபர்கள் கோக் கோருகின்ற அளவு முதலீடு செய்ய வேண்டும். கோக் பானங்களை மட்டும் தயாரிக்க வேண்டும். தேவைப்பட்டால் தொழிற்சாலையை விரிவுபடுத்த வேண்டும். இவையெல்லாம் ஒப்பந்த விதிகள்.
தற்போது இத்தொழிற்சாலைகளை அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்கி வருகிறது கோக். சிலரை பாதி பங்குகளை தருமாறு கட்டளையிடுகிறது.
கோக்கின் மிரட்டலை எதிர்த்து 23 அதிபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். ”எங்களை அதிக முதலீடு செய்ய வைத்துவிட்டு, இப்போது ஒப்பந்தத்தை ரத்துசெய், அல்லது விற்றுவிடு” என்று கோக் மிரட்டுவதாக பூனா பாட்டிலிங் தொழிற்சாலை அதிபர் தனது வழக்கில் கூறியிருக்கிறார்.
அதே போன்று மொத்த வியாபாரிகளும் கோக்கினால் அச்சுறுத்தப்பபடுகின்றனர். தமிழக நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் கணேஷ், ”கோக்கின் அநீதியான வர்த்தகப்படி எங்களுக்கு மாதம் 2000 ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. எதிர்த்துக் கேட்டால் வேறு வணிகர்களை நியமனம் செய்வோம் என்று மிரட்டுகிறார்கள்” என்கிறார்.
இது போக பெப்சியும், கோக்கும் தங்களுக்குள் அடித்துக் கொள்வார்கள். தனது நிர்வாகிகளை கோக் விலைக்கு வாங்குவதாக பெப்சி வழக்குத் தொடுத்திருக்கிறது. இதில் பெப்சிக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர் தேசபக்த ஆர்.எஸ்.எஸ் இன் அருண் ஜெட்லி, ”2000 கோடி முதலீடு செய்திருக்கும் பெப்சிக்கு இழைக்கப்படும் அநீதி” என்று நீதிமன்றத்தில் உருகினார். ”இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பபடி ஒரு ஊழியர் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யும் உரிமையை தடை செய்ய முடியாது” என்று கோக் திருப்பியடித்தது. பெப்சியும், கோக்கின் பானங்களைத் தயாரித்து வந்த குஜராத், கோவா பாட்டில் தொழிற்சாலைகளை விலைக்கு வாங்கியிருக்கிறது. இப்படி இருவரும் தங்களது வியாபார மோசடிகளுக்காக இந்தியாவில் மட்டும் 300 கோடி ரூபாய் ஒதுக்குகிறார்கள்.
இப்போது குடிநீர் என்றாலே ”மினரல் வாட்டர்” என்றாக்கி விட்டார்கள். இந்தியாவின் மினரல் குடிநீர் சந்தை மதிப்பு 1250 கோடி ரூபாயாகும். வருடந்தோறும் 100 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும் இத்துறையையும் அமெரிக்க சோடாக் கம்பெனிகள் விட்டு வைக்கவில்லை. கோக் – கின்லே, பெப்சி – அக்வாபினா எனும் குடிநீர் பாட்டில்களை அறிமுகப்படுத்தி அதை மட்டுமே விற்குமாறு தமது விற்பனையாளர்களை மாற்றி வருகின்றனர். தற்போது குடிசைத் தொழில்போல நடந்துவரும் இத்தண்ணீர் வியாபாரமும் அவர்களால் வெகு விரைவில் ஒழிக்கப்படும்.
இதற்கு மேல் பல மாநிலங்களில் பல ஏக்கர் நிலங்களை வாங்கியிருக்கின்றனர். ஆய்வகம், சரக்கு லாரி கட்டும் பனிமணை, பழரச உற்பத்தி, காய் – கனி பண்ணை, நொறுக்குத்தீனி, டப்பா உணவு ஏற்றுமதி என ஏராளமான திட்டங்களையும் வைத்திருக்கின்றன.
இந்தியாவின் 15 கோடி நடுத்தவர வர்க்க மக்களைக் கொண்ட வலுவான சந்தையைக் கைப்பற்றுவதை தமது நோக்கமாகக் கொண்டுள்ளன. மாத சம்பளம் வாங்கும் நடுத்தரக் குடும்பம் ஒருமாதம் பல நூறு ரூபாய்களை தங்களுக்கு மொய் எழுதவேண்டும் என்பதே அவர்களது இலக்கு.
கனவில் வாழும் நடுத்தர வர்க்கத்தைக் கள் ஊற்றி மதி மயங்க வைக்கும் வித்தைக்காக பல விளம்பர படைப்பாளிகள் பெப்சி – கோக்குக்காக உழைக்கின்றனர். விளம்பர நிறுவனங்களுக்கு மட்டும் இரு நிறுவனங்களும் தலா 50 கோடியை கட்டணமாகக் கொடுக்கின்றன.
இதுபோக வானொளி, ஏனைய விளம்பரங்களுக்காக பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகின்றன. ஷாருக்கான், டெண்டுல்கர், ஐஸ்வர்யாராய் போன்ற நிழலுலக நட்சத்திரங்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்கப்படுகிறது.
”உலக அளவில் கொள்ளையடிக்க உள்ளுர்ககாரனாக வேடம் போடு” என்பது பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டும் செயல் திட்டம். அதற்கேற்ப தங்களது விளம்பரங்களுக்கு அந்தந்த மாநில நடிகர்களை ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். கோக் ஆந்திராவில் சிரஞ்சீவியையும், தமிழ்நாட்டில் விஜயையும், பெப்சி தமிழகத்தில் மாதவனையும், தெலுங்கில் கல்யானையும் விளம்பரங்களில் இறக்கியிருக்கின்றன. இனி இன்பத் தமிழிலும் சுந்தரத்தெலுங்கிலும் ”என்ஜாய் கொக்கோ கோலா, ஏ தில் மாங்கே மோர், ஆஹா”வும் கவிதையாய் பொழியும்.
இதுவும் போக டி ஷர்ட், தொப்பி, கிரிக்கெட், சினிமா ஸ்பான்சர், மூடி சேகரிப்பு, ஹாலிவுட் – மல்யுத்த நட்சததிரங்களின் ஸ்டிக்கர்கள், அறிமுக விலை தள்ளுபடி, சென்னையில் இட்லிக்கு கோக் இலவசம், மும்பையில் சப்பாத்திக்கு இலவசம், பெங்களூருவில் பிஸ்ஸா வாங்கினால் பெப்சி கேன் இலவசம் என மேட்டுக்குடியைக் கவர ஏராளமான மினுக்குத் திட்டங்கள்.
இது அமெரிக்காவின் குளிர்பானக் கம்பெனிகள் இந்தியாவில் தொடுத்திருக்கும் ஆக்கிரமிப்பு போர்!
மூன்று ஷிப்ட்களில் 150 தொழிலாளிகள் வேலைபார்த்த காளிமார்க்கின் விருதுநகர் பாட்டில் தொழிற்சாலையில் இன்று இருபது பேர், ஒரு ஷிப்ட் மட்டும் வேலை செய்கின்றனர். தென் மாவட்டங்களில் இன்று காளிமார்க்கை பரிதாபமான ஒரிரு பெட்டிக் கடைகளில் மட்டும் காணலாம்.
திருச்சியில் வின்சென்ட் குளிர்பான அலுவலகப் பெயர் பலகை பாழடைந்து சவக்களையுடன் காணப்படுகிறது. காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற பன்னீர் சோடா நிறுவனங்களை இனி தொல்பொருள் ஆராய்ச்சியில்தான் தேட வேண்டும். மோரும், இளநீரும், போஞ்சியும், பானகமும் அருகி வருகின்றன. நீராகாரம் என்பது என்னவென்றே நகர்ப்புற இளைஞர்களுக்குத் தெரியாது.
பத்து ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான இந்திய குளிர்பான நிறுவனங்களும், இலட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலையிழந்திருக்கின்னர். நமது விவசாய பொருளாதார, தட்ப வெப்ப நிலைக்கு பொருத்தமான மரபு வகை பானங்களை மறந்துவிட்டோம். அமெரிக்காவின் கார்பன் வாயு கலந்த ஆல கால விடத்தை குடிக்க பழக்கப்படுத்தப்படுகிறோம்.
பெப்சியும், கோக்கும் தமது எசன்ஸை மட்டும் அமெரிக்காவில் இருந்து அனுப்பி, உள்ளூர் பாட்டில் தொழிலதிபர்களை வைத்து நீர் கலந்து, ஏஜெண்டுகளை வைத்து விநியோகித்து, விளம்ரங்களுக்கு நுகர்வோரிடமே பிடுங்கிக் கொண்டு, ஏராளமான சொத்துக்களை வாங்கிக் கொண்டு, டப்பா உணவு ஏற்றுமதி – கோலா விற்பனை இரண்டிலும் சில ஆயிரம் கோடிகளை கொள்ளையடிக்கின்றனர்.
இந்தியா மட்டுமல்ல முழு உலகும் இந்தக் கொள்ளையிலிருந்து தப்பவில்லை. அமெரிக்காவுக்கு கீழே இருக்கும் மெக்சிகோ நம்மைப் போன்ற ஏழை நாடுதான். அங்கேயும் ஆண்டுக்கு ஒருவர் 500 பாட்டில்களை குடிக்கும் அளவுக்கு தனிநபர் நுகர்வை ஏற்றி விட்டார்கள். எங்கெல்லாம் அமெரிக்க இராணுவம் நுழைந்ததோ அங்கெல்லாம் பெப்சியும், கோக்கும் நுழைந்தன. பின்னர் இராணுவம் திரும்பினாலும் கோலாக்கள் திரும்பவில்லை.
ஜப்பான், கொரியா, ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து இங்கெல்லாம் கோலாக்கள் அம்மக்களின் ரத்தத்தில் கலந்துவிட்டன. சிங்கப்பூரில் ஒரு ஓட்டலுக்கு சென்றால் முதலில் குடிநீர் வைக்கமாட்டார்கள். கோக்தான் தருவார்கள். இப்படி தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஒழிக்கப்பட்டு வருகிறது.
தொன்மையான புகழ் பெற்ற நாகரிகங்களெல்லாம் நதிக்கரையில் தோன்றின. மனித குலநாகரிகத்தில் நீரின் பங்கு அத்தகையது. இன்றும் நல்லநீர் கிடைக்காமல், மழை பெய்யாமல், ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் ஏராளமான நாடுகள் உள்ளன. வருடா வருடம் ஒரிஸா, ராஜஸ்தான், குஜராத்தில் பிளந்து கிடக்கும் மண்ணுக்கும், மக்களுக்கும் அந்த நீரின் அருமை தெரியும். தண்ணீர் நமது உடலில் இரண்டறக் கலந்தது. நமது பண்பாடு. விவசாயத்தின் உயிர். அத்தகைய நீரை நமது சிந்தனையில் இருந்து அழிக்கிறார்கள் என்றால் எவ்வளவு கொடூரம்?
பெப்சி – கோக்கின் ரசாயனக் கலவையில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. வியாபார ரகசியம் என்ற உரிமையால் பாதுகாக்கப்படும் அந்தக் கலவையின் தீங்கை மேற்குலகிலேயே பலர் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். பெப்சி – கோக் சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கும் ”டயட்” என்ற பானத்தில் (கலோரி இல்லாத இனிப்பு நீர்) உள்ள ”ஆஸ்பார்ட்டாம்” என்ற ரசாயனப்பொருள் உடலுக்கு நேரடித் தீங்கை விளைவிக்கக் கூடியது என அமெரிக்காவில் எதிர்ப்பு இயக்கம் கிளம்பியிருக்கிறது. ஆனால் அதிகார வர்க்கத்தைச் சரிகட்டி கோக் தொடர்ந்து அதை விற்கிறது.
ஃபிரான்சில் மக்கள் அருந்தும் பானமும், ஏற்றுமதி செய்யப்படுவதும் ஒயின்தான். ஃபிரெஞ்சு நாடு திராட்சை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு. அந்த விவசாய பொருளாதாரத்தை வைத்து இந்த பானம் அவர்களிடையே மரபு வகை பழக்கமாக உள்ளது. கோக், பெப்சியின் வருகையால் ஃபிரெஞ்சு விவசாயிகள் பாதிக்கப்பட்டு எதிர்த்துப் போராடுகின்றனர்.
இப்படி உலகம் முழுவதும் அந்தந்த மக்களது வாழ்க்கை, பண்பாடு, பொருளாதாரம் மூன்றும் அமெரிக்காவின் ஆக்ரமிப்பு நுகர்வுப் பண்பாட்டால் அழிக்கப்படுகின்றது. பிஸ்ஸா, பர்கர், எம்.டி.வி, ஹாலிவுட், துரித உணவகம், பேரங்காடி, டபிள்யூ. டபிள்யூ. எஃப், நைக், மெக்டோனால்டு போன்றவையே நீங்கள் எப்படி வாழவேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. கற்றுக்கொடுக்கின்ற தேவன்களாக மாறிவிட்டன.
உழைப்பாளிகளின் பானமான தேநீரை நடுத்தர – மேட்டுக்குடி இளைஞர்களிடம் கொண்டு செல்ல நெஸ்லேயும் – கோக்கும், பெப்சியும் – இந்துஸ்தான் லீவரும் இணைந்து ஐஸ் டீ, ரெடிமேடு டீ போன்றவைகளைத் தர இருக்கிறார்கள். கோக், பெப்சி இரண்டும் உலகம் முழுவதும், ஏன் கழிப்பறைகளில் கூட கிடைக்க வேண்டும் என்பது வரை போய்விட்டன. சமீபத்தில் போன் செய்தால் கோக் டின் கொட்டும் ”டயல் எ கோக்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படி இந்தக் கொள்ளையடிக்கும் உத்திக்கு முடிவு கிடையாது.
இது வெறும் குளிர்பானமல்ல. உங்களை உங்கள் மண்ணிலிருந்து பிடுங்கி எறியும் ஒரு வெடிகுண்டு. பெப்சி – கோக் காசு கொடுத்த்து குடிப்பது தாயைக் கூட்டிக் கொடுப்பதை விடக் கேவலமானது. இந்த மண்ணையும், மக்களையும் உதறித்தள்ளி அமெரிக்க நாய்களுக்கு அடிமையாக இருப்போம் என்பவர்கள்தான் கோக் குடிக்க முடியும். ஆம். பெப்சி – கோக் மானங் கெட்டவர்களின் பானம்.
நன்றி: புதிய கலாச்சாரம்