குடும்பத்தார்களுடன் மாணவி ஜாஸ்மின்
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. நெல்லை மாணவி ஜாஸ்மின் 495 மார்க்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி எம்.பி.எல்., அரசுப்பள்ளியை சேர்ந்தவர்.
ஜாஸ்மினின் தந்தை ஷேக் தாவூது வீடுகளுக்கு சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அம்மா நூர்ஜஹான், சகோதரர்கள் இம்ரான் இப்ராஹிம், இர்ஃபான். இவர்கள் திருநெல்வேலி டவுண், கல்லணைத் தெருவில் வசித்து வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்தது குறித்து மாணவி ஜாஸ்மின், ”மாநில அளவில் முதலிடம் பிடித்ததற்கு எனது பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் எனது பெற்றோர்கள் கொடுத்த ஊக்கமே அதிக மதிப்பெண்கள் பெற்றதற்கு காரணம். அதிக பணம் அளித்து பெரிய பள்ளியில் படிக்காமல் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து, வெற்றி பெற்றது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.
எனது அடுத்த முயற்சி ஐஏஎஸ் படித்து ஏழை, எளிய மக்களுக்கும், பொது மக்களுக்கும் சேவை செய்வதே நோக்கமாகும்” என்று தெரிவித்தார்.
ஜாஸ்மினின் தந்தை ஷேக் தாவூத் மிகவும் கஷ்டப்பட்டே குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இருந்த போதிலும் தனது குழந்தைகள் படிப்புக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். ஜாஸ்மின் சிறுவயதிலிருந்தே மிகவும் ஆர்வமாக படித்து வந்தார்.
இவருக்கு அடுத்து 494 மார்க்குகள் பெற்று சிவப்பிரியா (வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி தாளப்பட்டி கரூர் ), நிவேதா ( பாத்திமா மேல்நிலைப்பள்ளி கூடலூர்), பிரியங்கா (செங்கல்பட்டு), தமிழரசன் (புதுச்சேரி ), ஆகிய 4 பேர் 2 வது இடத்தை பிடித்துள்ளனர்.
ஆரணியைச் சேர்ந்த நஸ்ரின் பாத்திமா 493 மதிப்பெண் எடுத்து மாநிலத்தில் 3-ஆம் இடம் பிடித்துள்ளார்.
இவ்வருட SSLC தேர்வில் 82.56 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்கள் 79.4 சதவீதமும், மாணவிகள் 85.5 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். இதன்மூலம் இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநில அளவில் முதல் இடம் பிடித்தது குறித்து மாணவி ஜாஸ்மின் மேலும் கூறியதாவது:
மாநில அளவில் சாதனை படைக்க கடினமாக படித்தேன். 498 மதிப்பெண்கள் பெறுவேன் என எதிர் பார்த்தேன். சமூக அறிவியலில் 2 மதிப்பெண்கள் குறைந்து விட்டதால் அதனை பெற முடியவில்லை.
பெரிய பள்ளியில் படித்தால்தான் சாதிக்க முடியும் என்றனர். ஆனால் எங்கள் பள்ளி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை இறைவனின் கிருபையால் நடந்தது. ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து எனக்கு ஊக்கமளித்தார்கள். மற்ற பள்ளிகளை போல எங்கள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் போதே 10-ம் வகுப்பு பாடங்களை தொடங்குவது கிடையாது. தினமும் காலையிலும், மாலையிலும் படிப்பேன். அன்றைய பாடங்களை அன்றே தவறாமல் படித்து விடுவேன். இரவு 1 மணி வரை படிப்பேன்.
10-ம் வகுப்புக்கு வந்த பிறகு டி.வி பார்க்க மாட்டேன். எனது குடும்பம் நடுத்தர குடும்பம். தற்போதும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படிக்க ஆசைபடுகிறேன். அதன் பிறகு ஐ.ஏ.எஸ் முடித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
மாணவி ஜாஸ்மின் குறித்து அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நடராஜன் கூறியதாவது:
எங்கள் பள்ளி தொடர்ந்து பல சாதனைகள் படைத்து வருகிறது. இந்த முறை மாநில அளவில் முதலிடத்தை பிடித்தது மிகவும் மகிழ்ச்சி. இதற்கு எங்கள் பள்ளி ஆசிரியர்களின் கடின உழைப்பே முக்கிய காரணம். மாணவி ஜாஸ்மின் மிகவும் அமைதியானவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர் மிகவும் கவனமாக படிப்பார். இதனால் வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார் என்றார் அவர்.
மாணவி ஜாஸ்மினின் தந்தை ஷேக்தாவூத் கூறியதாவது:
நான் கடந்த 17 ஆண்டுகளாக ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். எனது மகள் ஜாஸ்மின் எல்.கே.ஜி.யில் இருந்தே நன்கு படிப்பாள். முதலாம் வகுப்பில் இருந்து கல்லணை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் படித்து வருகிறாள். மற்ற பள்ளிகளை விட இந்த பள்ளியில் சிறந்த முறையில் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
நான் பெரிய அளவில் படிக்காததால் எனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்க வைத்து வருகிறேன். அதற்கு ஏற்றாற்போல் மகள் ஜாஸ்மின் சிறப்பாக படித்து வருகிறாள். அவள் தொடக்கத்திலிருந்தே படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டியதால் அவள் படிப்புக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாத வகையில் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தோம்.
தினமும் பள்ளி முடிந்து மாலையில் வீடு வந்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுவாள். அதிகமாக டி.வி. பார்க்க மாட்டாள். பத்தாம் வகுப்பிற்கு வந்ததும் டி.வி. பார்க்கும் பழக்கத்தை விட்டு விட்டாள். டியூஷனுக்கு எங்கும் செல்லவில்லை. அன்றைய பாடங்களை அன்றே படித்து வந்ததால் சாதனை படைத்துள்ளார். அவளது விருப்பப்படி படிக்க வைப்பேன் என்றார் ஷேக்தாவூத்.
சில தினங்களுக்கு முன் நடந்த UPSC (IAS,IPS,IFS) தேர்வில் கஷ்மீரைச்சேர்ந்த முஸ்லீம் மாணவர் ஃபைஸல் முதலாக தேர்வு பெற்றார் என்பது அனைவரும் அறிந்ததே. அல்ஹம்துலில்லாஹ்.