மானங்கெட்ட
மஞ்சள் நீராட்டு விழா
ஜாதகமும் – ஜோதிடமும்
தாயத்தும் தகடுகளும்
மானங்கெட்ட மஞ்சள் நீராட்டு விழா
பெண்கள் பருவம் அடைந்தால், அதற்காகப் பத்திரகை அடித்து, உறவினர்களை அழைத்து, பூமாலை போட்டு, பூப்பு நீராட்டு விழா நடத்துவதும், அதற்காக விருந்து போடுவதும்,
கேட்பதற்கே கேவலமாக இல்லையா? மறைக்க வேண்டிய ஒரு செய்தியை ஊர் முழுக்க தம்பட்டம் அடித்து அறிவிக்க, பிள்ளையைப் பெற்றோருக்கு வெட்கமாக இல்லையா? எங்கிருந்து காப்பியடிக்கப் பட்டது இந்த மானங்கெட்ட கலாச்சாரம்.
பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான் ஒரு குறிப்பிட்ட வயதில் பருவம் அடைகின்றனர். போகிற போக்கைப் பார்த்தால் அதற்கும் விழா நடத்த ஆரம்பித்து விடுவார்களோ?
பருவம் அடைதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இறைவன் அளித்த அருட்கொடை. இயற்கையாக ஏற்படும் இந்த மாற்றத்தை பகிரங்கப் படுத்த வேண்டும் என்று அவசியமில்லை. தனக்கு ஏற்படும் இயற்கை மாற்றங்களை ஒரு பெண் தன் தாயுடன் பகிர்ந்துக் கொண்டு ஆலோசனைகள் பெறலாம். இதை தந்தை கூட அறிய வேண்டும் என்று அவசியமில்லை.
திருமணத்திற்குத் தயாராக ஒரு பெண் வீட்டில் இருப்பதைப் பலரும் அறிந்தால், பெண் கேட்டு வருவார்கள் என்று காரணம் சொல்வார்கள். பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் உறவினர்களுக்கும், அண்டை அயலாருக்கும் தெரியவரும். தாமாகவே பெண் கேட்டு வருவார்கள்.
பெண் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் தக்க துணையும் – தகுந்த காரணமும் இல்லாமல் வெளியில் அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.பாதுகாப்பான சூழலில் அமைந்த பள்ளிக் கூடங்களுக்கு
மட்டுமே அனுப்பவேண்டும். அதுவும் பெண்கள் மட்டுமே தனியாகக் கல்வி கற்கும் கல்விக்கூடங்களில் சேர்க்க வேண்டும். குறிப்பாக மார்க்கக் கல்வியை கற்பிக்க வேண்டும். இனியேனும் இதுபோன்ற கேவலமான விழாக்களைத் தவிர்ப்போம். மாற்றுக் கலாச்சாரங்களை ஒதுக்கி இஸ்லாமிய வழி நடப்போம்.
ஜாதகமும் – ஜோதிடமும்
எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை ஏக இறைவனைத் தவிர வேறு எவருமே அறிய முடியாது என்று இறைமறை குர்ஆன் கூறுகிறது.
(இன்னும் நபியே) நீர் கூறுவீராக. அல்ல்லாஹ்வைத் தவிர்த்து வானங்க்களிலும் பூமியிலும் இருப்ப்பவர் எவரும் மறைவாயிருப்ப்பதை அறிய மாட்ட்டார். இன்னும் (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்ப்பதையும் அவர்கள்அறிய மாட்ட்டார்கள். (அல்குர்ஆன் 27:65)
ஜாதகம் எழுதி வைப்பதும், ஜோதிடத்தை நம்புவதும், பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, படைத்த இறைவனுக்கும் புறம்பானவை. இஸ்லாத்திற்கு முரணான இக்கொடிய குற்றங்கள் இன்று பல்வேறு பெயர்களில் பாமரர்கள் மட்டுமின்றி படித்தவர்களிடமும் பரவி விட்டன.பெயர் ராசி, பிறந்தநாள் ராசி, பெண் ராசி, கல் ராசி,
கலர் ராசி, இட ராசி, இனிஷியல் ராசி, என்று எத்தனைப் பெயர்களில் அவதாரம் எடுத்தாலும், கைரேகை ஜோதிடம், கம்ப்யூட்டர் ஜோதிடம், கிளி ஜோதிடம், பால் கிதாபு ஜோதிடம், என்று எத்தனைப் பெயர்களில் அழைக்கப்பட்டாலும், இவை அத்தனையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இவை அனைத்துமே மூட நம்பிக்கை மட்டுமல்ல, மிகப் பெரும் பாவம் என்பதை உணர வேண்டும்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாக எச்சரிக்கிறார்கள். ”எவர் குறி சொல்பவனிடம் சென்று அவன் சொல்வதை உண்மையென நம்புகிறாரோ அவருடைய 40 நாள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.” (அறிவிப்பவர் அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் முஸ்லிம்)
நமது எதிர் காலத்தைக் கணித்துச் சொல்வதாகக் கூறி ஏமாற்றுகிறவன், நாள் முழுவதும் வீதிக்கு வீதி காத்துக் கிடக்கிறான். வீடு வீடாக ஏறி இறங்குகிறான். அன்றைய தினத்தில் எத்தனை பேர் தன்னிடம் ஜோதிடம் பார்ப்பார்கள் என்பதைக்கூட அவனால் கணிக்க முடியவில்லை. தன்னுடைய ஒரு நாள் பொழுதைப் பற்றிக் கூட அறிந்துக் கொள்ள முடியாதவன் அடுத்தவருடைய எதிர்காலத்தை கணித்துச் சொல்வான் என்று நம்புவது எவ்வளவு பெரிய அறிவீனம்?
ஜோதிடம் என்றதும், பிற மத ஜோதிடக் காரர்களை மட்டும் என்று பலரும் கருதுகின்றனர். பால் கிதாபும் ஒரு வகை ஜோதிடமே! பால் கிதாபு பார்க்கும் முஸ்லிம் பெயர் தாங்கிகளும் ஜோதிடக் காரர்களே! என்பதை மறந்து விடக்கூடாது.
பால் கிதாபு பார்த்துப் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதாகச் சொல்பவர்களின் வாழ்க்கையையும் குடும்பத்தையும் கவனித்தால் ஏராளமான பிரச்சினைகள் இருக்கும்.
தமக்குத் தாமே பால் கிதாபு பார்த்து பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வக்கற்றவர்கள், உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்துவார்கள் என்று எப்படி நம்புகிறிர்கள்?
ஒவ்வொருவரும் பிறக்கும்போது ஏற்படும் கோள்களின் சஞ்சாரமே நல்லதும் கெட்டதும் நடப்பதற்குக் காரணம் என்று நம்பும் புத்தி கெட்டவர்கள், புயல் வெள்ளத்திலும், பூகம்பத்திலும் ஒட்டு மொத்தமாக ஒரு ஊரே அழியும் போது, அந்த ஊரில் வாழ்ந்த, பல்வேறு காலங்களில் பிறந்த அனைவருக்குமே எப்படி ஒரே ஜாதகம் அமைந்தது? என்பதைக் கூட சிந்திக்க வேண்டாமா?
ஜாதகமும் ஜோதிடமும் மூட நம்பிக்கைகளில் முதலிடம் வகிப்பவை என்பதை உணர்ந்து, முஸ்லிம் சமுதாயம் முற்றிலும்விடுபட வேண்டும். இறை நம்பிக்கையில் இன்னும் உறுதி வேண்டும்.
தாயத்தும் தகடுகளும்
அல்லாஹ்வின் வசனங்களை, அரபி எண்களாக உருமாற்றி அப்படியே சுருட்டி அலுமினியக் குழாய்களில் அடைத்து, கருப்பு நூலில் கோர்த்துக் கழுத்திலும், கைகளிலும், இடுப்பிலும் கட்டீக் கொண்டால், பில்லி சூனியம் பேய் பிசாசுகளை விட்டும் பாதுகாப்புக் கிடைக்கும் என்று சில அரைக் கிறுக்குகள் சொன்னதை நம்பி, ஆயத்துகளை தாயத்துகளாக்கித் தொங்க விட்டுக் கொண்டவர்களை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்.
”எவர் தாயத்தைத் தொங்கவிட்டுக் கொண்டாரோ நிச்சயமாக அவர் இறைவனுக்கு இணை வைத்துவிட்டார்.” (ஆதாரம்: அஹ்மத்)
தற்காப்புக்காகப் பலரும் கராத்தே கற்றுக் கொண்டிருக்கும்போது – வெறும் தாயத்துகளில் தற்காப்புத் தேடும் இவர்களின் மடமையை என்னவென்பது?
தாயத்துகளை நியாயப் படுத்துவோர், அதில் குர்ஆன் வசனங்கள் தானே எழுதப்படுகின்றன என்று கூறுவர். அப்படியானால், குர்ஆன் ஆயத்துகளைக் கட்டிக் கொண்டு மலம் கழிக்கச் செல்லலாமா? என்று கேட்டால், ஆயத்துகளுக்கு பதிலாக அரபி எண்கள் தானே எழுதப்படுகின்றன என்று பதில் கூறுவர்.
இதிலிருந்து எண்களுக்கு எந்தப் புனிதமும் இல்லை என்பதை இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். எண்கள் எப்படிப் பாதுகாக்கும்? என்பதைப் புரிந்துக் கொள்வதில்தான் முட்டாள்களாக இருக்கின்றனர்.
சில தாயத்துகளைப் பிரித்துப் பார்த்தால், சினிமா டிக்கட்டுகளும், பஸ் டிக்கட்டுகளும் கூட இருக்கும். இவை அவசரமாகத் தயாரிக்கப்பட்ட ‘அர்ஜன்ட்” தாயத்துகள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்குக் கொண்டாட்டம் தான். தங்கள் வயிற்றை நிரப்ப, கயிற்றை விற்று ஏமாற்றுகிறார்கள்.
இன்னுமா நீங்கள் ஏமாறப் போகிறீர்கள்?
ஷிர்க்கை ஏற்படுத்தும் தாயத்துகளை அறுத்து எறியுங்கள்.
அரபி எண்களை குறுக்கெழுத்துப் போட்டிக் கோடுகளில் அடக்கிப் பித்தளைத் தகடுகளை பிரேம் போட்டு மாட்டி வைத்தால், வீட்டுக்குப் பாதுகாப்பு என்று மூளையற்றவர்கள் –
சொன்னதை நம்பி மூலைக்கு மூலைத் தொங்க விட்டவர்கள் –
இறை வணக்கங்களால் தங்கள் இல்லங்களை நிரப்புவதை விட்டு, ஈயம் பித்தளைத் தகடுகளில் தங்கள் ஈமானைப் பறி கொடுத்தவர்கள் –
பில்லிச் சூனியத்திலிருந்து பாதுகாக்கும் என்று நம்பிப் படிகாரக் கற்களை வீட்டுப் படிகளில் மாட்டி வைத்தவர்கள்-
கட்டிய வீட்டுக்குக் கண் பட்டுவிடும் என்று புத்தி கெட்டுப் போய் பூசணிக்காயைக் கட்டி வைத்தவர்கள் –
இனியேனும், இவைகள் யாவும் இஸ்லாத்திற்கு முரணான மூடப் பழக்கங்கள் என்பதை உணர வேண்டும்.
வீடுகளில் மட்டுமின்றி, வியாபார நிறுவனங்களிலும் இந்தஅஸ்மாத் தகடுகளை மாட்டி வைத்தால், வியாபாரம் பெருகும் என்று மூட நம்பிக்கைக் கொண்டவர்கள் – இந்தத் தகடுகளை விற்பனை செய்வோர், தாங்கள் தயாரித்தத் தகடுகள் முழுவதும் விற்றுத் தீரும்படித் தங்களுக்குத் தாங்களே தகடு செய்துக் கொள்ளாமல், கடைக் கடையாய் அலைவதைக் கண்ட பிறகாவது, இது ஏமாற்று வேலை என்பதை உணர வேண்டாமா?
தரமானப் பொருளும், நியாயமான விலையும், கனிவானப் பேச்சும் தான் வியாபாரத்தைப் பெருக்குமே தவிர, பித்தளைத் தகடுகளும், பிரேம் போட்ட அஸ்மாக்களும் ஒரு போதும் வியாபாரத்தைப் பெருக்காது, மாறாக பாவப் படுகுழியில்கொண்டு போய் தள்ளும் என்பதை உணர வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்