தம்பதிகளுக்கிடையில் பிணக்கு இருந்தால் அது நான்கு சுவருக்குள் இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அது மற்ற ஆண்களுக்கு தெரியும்படி இருக்கக்கூடாது.
சில குடும்பங்களில் உறவினர்களான ஆண்களும் பெண்களும் நெருங்கிப் பழகி வருகின்றனர். வீடுகளில் தனிமையில் அவர்களோடு பேசிக் கொண்டிருப்பது, வாகனங்களில் பின்னால் வைத்து அழைத்துச் செல்வது போன்று பல விதங்களில் கலந்து பழகி வருகின்றனர்.
இத்தகைய பழக்க வழக்கங்கள் பல நேரங்களில் அவர்களுக்கு மத்தியில் தவறான தொடர்புகள் ஏற்படுவதற்குக் காரணமாகவும் அமைந்து விடும் வாய்ப்பு அதிகம்.
சில ஆண்கள் குடும்பப்பிரச்சனையில் சிக்கித்தவிக்கும் பெண்களிடம் ”விளை நிலத்தில் களைச்செடிகள் இல்லாமல் இருந்தால்தான் பயிர்களில் நல்ல மகசூல் பெற முடியும்; அதேபோன்று, குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சினைகள் – பிரச்சினைக்குரியவர்கள் இல்லாமல் இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும்…” என்று ஆறுதல் சொல்வதுபோல் ஆசை வார்த்தைகள் கூறி, தங்கள் பக்கம் சாய்த்து விடுகிறார்கள்.
இப்படி, சபலங்கள் பக்கம் தன்னை அறியாமலேயே சாய்ந்துவிடும் பெண்கள், ஒருவித ஈர்பில் அவர்கள் சொல்வதற்கு எல்லாம் ‘ஆமாம் போட’ ஆரம்பித்து விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் தங்களையே அவர்களிடம் ஒப்படைக்க தயாராகி விடுகிறார்கள்.
ஒருமுறை இந்த ”தவறு” நடந்து, பின் அதை தவறு என்று உணர்ந்து சம்பந்தபட்ட பெண்கள் திருந்தினாலும் கூட, இந்த சபலங்கள் முன்பு நடந்த ”தவறை” ஆயுதமாக கையில் எடுத்து, முழுவதுமாக இந்த பெண்களை தங்கள் பிடியில் சிக்க வைத்து விடுகிறார்கள்.
இதுபோன்ற சபலங்களிடம் இருந்து குடும்ப பெண்கள் தப்பிக்க என்ன செய்யலாம்?
ஒரு குடும்பத்தில் பிரச்சினை என்றால் அங்கே கணவன்-மனைவி உறவு சுமுகமாக இல்லை என்றுதான் அர்த்தம். தங்களுக்குள் செக்ஸ் விஷயம் முதல் சாதாரண விஷயம் வரை எந்த பிரச்சினையாக இருந்தாலும், கணவன்-மனைவி இருவரும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த பிரச்சினையில் இன்னொருவர் முக்கை நுழைத்தால், தம்பதியருக்குள் ”ஈகோ” ஏற்பட்டு, பிரச்சினை இன்னும் பெரியதாகி விடும்.
அதனால், முடிந்தவரை பிரச்சினையை உங்களுக்குள்ளேயே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். அந்தரங்க விஷயங்களை உங்கள் கணவனிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் காதுகளுக்கு இந்த விஷயம் போனால் உங்களை சபலங்கள் பின்தொடரலாம்.
முன்பின் தெரியாத ஆண்களிடம் உங்கள் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். சமீபத்தில் அறிமுகமான ஒரு ஆண், உங்கள் விஷயத்தில் மெனக்கெட்டு அக்கறை எடுத்துக் கொண்டால் அப்போதே உஷாராகி விடுங்கள்.
முக்கியமாக, எந்த சூழ்நிலையிலும் சபலம் எட்டி பார்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்களே சபலப்படும் நிலையில் இருந்தால் சபல விஷயத்தில் ருசி கண்டவர்கள் உங்களை குறி தவறாமல் தங்கள் வலையில் வீழ்த்த்துவதிலேயே குறியாக இருப்பர்.
அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம்; கணிவான ஆறுதலான வார்த்தைகளைத்தான். ஆறுதலான வார்த்தைகள் அசிங்கத்தில் கொண்டுபோய் விடாமல் இருக்க வேண்டுமானால் இது போன்ற ஆண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
மனித வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட உயர்வாக மதிக்கத் தக்கதாகும் ஒழுக்க நெறி இல்லையேல் மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையில் வேறுபாடு இல்லாமல் போய் விடும். மற்ற படைப்புகளிடமில்லாத சிறப்பம்சம் ஒன்று மனிதனிடம் உண்டென்றால் அது ஒழுக்க நெறியுடன் கூடிய வாழ்வேயாகும்.
”எந்தவொரு ஆணும் (அந்நியப்) பெண்ணோடு தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” (நூல்: அஹ்மத் 109)
”ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 3281)
எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் ஷைத்தான் தன் வேலையைக் காட்டுகிறான். இதை நிதர்சனமாக நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.
எவரும் வீட்டில் இல்லாத நிலையில் நல்ல மார்க்க நூல்களைய் படியுங்கள். ஏனெனில் தனிமையில் இருக்கும்போது ஷைத்தான் தனது வேளையை எளிதாக சாதித்துக் கொள்வான். அதாவது மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்துவான்.
ஒரு விஷயத்தைப் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும், பிரச்சினை இல்லாத குடும்பமே கிடையாது. எல்லா கணவன்-மனைவிக்குள்ளும் பிரச்சினைகள் எற்படத்தான் செய்யும். அந்த பிரச்சினை அவர்களோடு தீர்க்கபட்டால் வாழ்க்கையில் எந்த தொல்லையும் இல்லை.
posted by: Abu Safiyah