(நபியே) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும், நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர். (ஸூரத்துன்னிஸா 4:51)
இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான்;. எவர்களை அல்லாஹ் சபிக்கிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர். (ஸூரத்துன்னிஸா 4:52)
இவர்களுக்கு ஆட்சியில் ஒரு சிறு பாகமாவது இருக்கிறதா? அப்படியிருந்தால், (மற்ற) மனிதர்களுக்கு (அதிலிருந்து) ஓர் எள்ளளவும் கொடுக்க மாட்டார்கள். (ஸூரத்துன்னிஸா 4:53)
அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்றாஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்;. அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம். (ஸூரத்துன்னிஸா 4:54)
(அவ்வாறிருந்தும்) அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டார்கள்;. சிலர் தங்கள் முகங்களை அதைவிட்டும் திருப்பிக் கொண்டார்கள்;. (இவ்வாறு முகந் திருப்பிக் கொண்டோருக்கு) கொழுந்து விட்டு எரியும் நரகமே போதுமானது. (ஸூரத்துன்னிஸா 4:55)
யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்;. அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸா 4:56)
(அவர்களில்) எவர்கள் ஈமான் கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்; அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர் உண்டு. அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம். (ஸூரத்துன்னிஸா 4:57)
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸா 4:58)
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (ஸூரத்துன்னிஸா 4:59)
(நபியே!) உம்மீது இறக்கப்பட்ட இ(வ் வேதத்)தையும், உமக்கு முன்னால் இறக்கப்பட்ட (வேதங்கள் அனைத்)தையும் நம்புவதாக வாதித்துக் கொண்டிருப்போரை நீர் பார்க்கவில்லையா? – (எந்த ஷைத்தானை) நிராகரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறதோ அந்த ஷைத்தானைத் தீர்ப்புக் கூறுபவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் – அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறான். (ஸூரத்துன்னிஸா 4:60)