பி.இ., படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இதர சான்றுகளை தயாராக வைத்திருக்க வேண்டும்: மாணவர் சேர்க்கை செயலர் வேண்டுகோள்
சென்னை:”பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ், ‘டிசி’ தவிர மற்ற சான்றிதழ்களை இப்போதே வாங்கி வைத்துக் கொண்டால், விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது கடைசி நேர சிரமங்களை தவிர்க்கலாம்,” என பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.
பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள், கடந்த 3ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதல் நாளிலேயே 63 ஆயிரத்து 800 விண்ணப்பங்கள் விற்பனையானது. இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 411 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. விண்ணப்பங்கள் விற்பனை தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள், வரும் 29ம் தேதி வரை வழங்கப்படவுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இம்மாதம் 31ம் தேதி மாலை 5:30 மணிக்குள், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், கடந்த 14ம் தேதி வெளியானது. மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 26ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன. மதிப்பெண் சான்றிதழ் கிடைத்த பிறகு, மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க ஐந்து நாட்களே உள்ளன.பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரேமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:
பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், 10 ஆவணங்களை சேர்த்து அனுப்ப வேண்டும்.
1. பூர்த்தி செய்யப்பட்ட ‘கோடிங் ஷீட்’
2. சான்றொப்பம் பெறப்பட்ட பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நகல்.
3. சான்றொப்பம் பெறப்பட்ட மாற்றுச் சான்றிதழ்(டி.சி.,) நகல்.
4. சான்றொப்பம் பெறப்பட்ட பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்.
5. சான்றொப்பம் பெறப்பட்ட நிரந்தர ஜாதிச்சான்றிதழ் நகல்.(தேவைப்படுபவர்கள் மட்டும்)
6. சான்றொப்பம் பெறப்பட்ட இருப்பிட சான்றிதழ்(நேட்டிவிட்டி சர்டிபிகேட்) நகல். (தேவைப்படுபவர்கள் மட்டும்)
7. பிளஸ் 2 பொதுத் தேர்வு ‘ஹால் டிக்கெட்’ நகல்.
8. சான்றொப்பம் பெறப்பட்ட முதல் பட்டதாரி மாணவர் சான்றிதழ் நகல்.(தேவைப்படுபவர்கள் மட்டும்)
9. சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கான(முன்னாள் ராணுவ வீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறன் படைத்தோர், விளையாட்டு வீரர்கள்) படிவங்கள், அதற்குரிய சான்றிதழ்கள் மற்றும் ‘டிடி’
10. சுயவிலாசமிட்ட அஞ்சல் உறைகள்.
இந்த பத்து ஆவணங்களில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ‘டிசி’ ஆகிய இரண்டும், வரும் 26ம் தேதி தான் மாணவர்களுக்கு கிடைக்கும். மற்ற எட்டு ஆவணங்களை, மாணவர்கள் தற்போதே தயார் செய்து வைத்துக் கொள்ள முடியும்.
மாணவர்கள், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை உரிய அதிகாரிகளிடமிருந்து பெற்று தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் இறுதி நேர சிரமங்களை தவிர்க்க முடியும்.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் கிடைக்கும் வரை காத்திருந்து, பின் கடைசி ஐந்து நாட்களில் சான்றிதழ்களை பெற தாசில் தார் அலுவலகங்களுக்கு பல மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தாமதம் ஏற்படக் கூடும். எனவே, மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, இதர எட்டு ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக் கொண்டால், மதிப்பெண் சான்றிதழ், ‘டிசி’யை பெற்றவுடன் சிரமமின்றி, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் சமர்ப்பிக்க முடியும்.
Posted by; A.Sarfudeen