இஸ்லாத்தில் மனுவாதிகள் (2)
[ ஹனஃபி மரபினர் தமது பெரும்பாலான மதரசாக்களில் பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற மடமையை இன்னமும் போதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நான் பயின்ற மதரசாவில் சாதி என்பது இஸ்லாமியத் தன்மையற்றது என்றும், அதை நாம் தகர்க்க வேண்டும் என்றும் நாங்கள் போதிக்கப்பட்டோம்.
ஆனால் தேவ்பந்த் மரபு மதரசாக்களில், பிறப்பை அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாகக் கொண்ட காஃபா என்ற பொருளில், ”சாதி என்பது இஸ்லாமியத் தன்மையுடையது” என்று கற்பிக்கப்படுகிறது.
இதற்குக் காரணம் என்னவென்றால், இந்தியாவிலுள்ள மிக அதிக எண்ணிக்கையிலான பாரம்பரிய மதரசாக்கள், இந்த விசயத்தில் இஸ்லாமிய மார்க்கத்துக்கு உண்மையானவையாக இல்லாமல், ஹனஃபி சட்டவியல் விதிகளின் அடிப்படையில் போதிப்பவையாக இருப்பதுதான். இதற்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளது.]
மேல் சாதியினர் என்று கூறப்படுபவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்வதற்காகவே கீழ் சாதியினர் கடவுளால் படைக்கப்பட்டுள்ளனர் என்ற பார்ப்பனக் கோட்பாட்டைப் போன்றதுதான் இந்தக் கருத்து. பார்ப்பனர்களின் வேத நூலான மனுதர்மத்தின் நேரடி நகலைப் போன்றதுதான் இது!
இதனால்தான் சாதிய பாரபட்சத்தை உயர்த்திப் பிடிக்கும் இத்தகைய உலமாக்களை ”மனுவாதிகள்” என்று நான் அழைக்கிறேன். ஒடுக்கப்பட்ட சாதிகளிடம் பார்ப்பனர்கள் எத்தகைய மனப்பான்மையைக் கடைபிடிக்கிறார்களோ, அதிலிருந்து இந்த உலமாக்களின் மனப்பான்மையை வேறுபடுத்திப் பார்க்கவே முடியாது.
”மாபெரும்” மொகலாயப் பேரரசரான அக்பர், ரஸில் சாதியினர் என்றழைக்கப்படுவோருக்குக் கல்வி அளிக்கப்பட்டால், பேரரசின் அடித்தளமே ஆட்டங்கண்டுவிடும் என்று பிரகடனப்படுத்தியுள்ளதாக அப்துல் காதிர் பதாயுனி தனது ”முன்தகாப்-அல்-தாவாரிஹ்” நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பேரரசர் ஒளரங்கசீப் இன் ஆணைப்படி தொகுக்கப்பட்ட ”ஃபத்வாஇஆலம்கிரி” என்ற ஹனாஃபி சட்டவியல் கருத்துரைத் தொகுதியில் ”கீழ்” சாதியினர் பற்றி இதேபோன்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. கடைசி மொகலாயப் பேரரசரான பகதூர்ஷா ஜாஃபரும் இவற்றிலிருந்து வேறுபட்டவராக இல்லை.
பல நூல்களைத் தேடிப்படிக்கும்போது, 24.5.1857 நாளிட்ட ”டெல்லி உருது அக்பர்-இல் ஒரு செய்தி அறிக்கையைக் கண்டேன். அது பின்வருமாறு கூறுகிறது: பிரிட்டிஷாருக்கு எதிரான எழுச்சியைத் தொடர்ந்து 500 பேர் கொண்ட படையொன்றைக் கட்டியமைக்க தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு மாமன்னர் பகதூர்ஷா ஆணையிட்டார்; ஆனால், அந்தப் படையினர் அஷ்ரஃப் (மேல்) சாதியினராக இருக்க வேண்டும்; ”கீழ்” சாதியினர் எவரும் அதில் இருக்கக் கூடாது என்று குறிப்பாக உத்தரவிட்டார். ”இதிலிருந்து தெரிவது என்ன?
இந்தியாவில் ”இஸ்லாமிய” ஆட்சிக் காலத்தின் ”பொற்காலம்” என்று மிகப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் எழுத்தாளர்கள் சளைக்காமல் ஏற்றிப் போற்றிய காலத்தின் நிலைமையே இதுதான்.
சாராம்சத்தில் இப்”பொற்கால” ஆட்சிகள், மனுவாத முஸ்லிம்கள் மற்றும் இந்து மேட்டுக்குடியினரின் ஆட்சிகளாகவே இருந்தன. இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் இருந்த ”கீழ்” சாதியினர் என்று சொல்லப்படும் மக்களை, இந்த மேட்டுக்குடி கும்பல் ஆதிக்கம் செலுத்தி ஒடுக்கினர் என்பதே உண்மை.பல மன்னர்களும், உலமாக்களும் சாதிய அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்த போதிலும், அவர்களில் சிலர் இதற்கு எதிராகவும் இருந்துள்ளனர்.
எடுத்துக்காட்டாக, சுல்தான் முஹம்மது கஜ்னவி தமது அடிமையான அயாஸ் என்பவரை பஞ்சாபின் ஆளுநராக நியமித்தார். ஹஜ்ஜம் எனப்படும் நாவிதர் சாதியைச் சேர்ந்த இந்துவான திலக் என்பவரைத் தமது தலைமைத் தளபதியாக நியமித்ததுடன் ”ராஜா” என்ற பட்டத்தையும் அவர் வழங்கினார். சுல்தான் ஷஹாபுத்தீன் கோரி, தமது அடிமையான குத்புதீன் ஐபக் என்பவரை இந்தியாவில் தனது ஆளுநராக நியமித்தார். ஐபக், தனது அடிமையான ஷம்சுதீன் அல்டுமிஷ் என்பவரை குவாலியர், புலந்த்சாகர், படாயுன் ஆகிய பகுதிகளுக்கான ஆளுநராக நியமித்தார்.
சுல்தான் அலாவுதீன் கில்ஜி, பல உயர் பதவிகளில் சையதுகள் மற்றும் அஷ்ரஃப் என்றழைக்கப்பட்ட ”மேல்” சாதியினரை அமர்த்திய போதிலும், தனது வேலையாளான மாலிக் உத்துஜ்ஜார் ஹமீதுத்தீன் முல்பானி என்பவரைத் தலைமை நீதிபதியாக (காஸி உல் காஸட்) நியமித்தார். குஜராத்தின் புர்வா எனப்படும் சாமர் சாதியைச் சேர்ந்தவரும் இஸ்லாமிய மதத்துக்கு மாறியவருமான மாலிக் காபூர் என்பவரைத் தனது தலைமை அமைச்சராகவும் அவர் நியமித்தார். சுல்தான் முகமது பின் துக்ளக், சுல்தானா ரஸியா, சுல்தான் குத்புதீன் முபாரக் ஷா கில்ஜி ஆகியோரும் ”கீழ்” சாதியினர் என்று கூறப்படுபவர்களை உயர் பதவிகளில் அமர்த்தினர்.
கேள்வி: இந்திய வரலாற்றின் இடைக்காலத்தைச் சேர்ந்த ”மனுவாதி உலமாக்கள்” என்று உங்களால் அழைக்கப்படுபவர்கள், பார்ப்பனர்களைப் போலவே சாதிய பாரபட்சத்தை ஈவிரக்கமின்றி உறுதியாக உயர்த்திப் பிடித்த போதிலும், கீழ் சாதியினர் என்று கூறப்படும் கோடிக்கணக்கான இந்துக்கள் இஸ்லாமிய மதத்தை எப்படி ஏற்றுக் கொண்டனர்?
பதில்: இதற்கான காரணம், சாதிய பாரபட்சம் இந்துக்களிடம் இருப்பதைவிட, முஸ்லிம்களிடம் எப்போதும் கடுமை குறைவாக இருப்பதேயாகும். மேலும், இஸ்லாமிய மார்க்கத்தில் சாதிக்கு மதரீதியில் எப்போதுமே இசைவாணை கிடையாது என்பது இன்னொரு காரணமாகும். இந்திய முஸ்லிம்கள் மத்தியில் சாதி வேறுபாடுகள் பலமாக நீடித்து வந்துள்ள போதிலும், தீண்டாமை என்பது நடைமுறையில் அவர்கள் அறியாத விசயம்தான்.
இருப்பினும், மத்திய காலத்தைச் சேர்ந்த பல இஸ்லாமிய மன்னர்கள் கீழ்வர்க்கத்தினரை தமது அரசவைகளில் அடியெடுத்து வைக்க அனுமதித்ததில்லை; அல்லது, அப்படி ஒரு சிலர் அனுமதித்தாலும், அவர்கள் வாய்திறந்து பேசுவதற்கு அனுமதித்ததில்லை. ஏனெனில், அவர்கள் ”புனித” மற்றவர்களாக ”அசுத்த”மானவர்களாகக் கருதப்பட்டனர் என்று பிரபல வரலாற்று ஆசிரியரான கன்வர் மொகம்மத் அஷ்ரஃப், தனது ”இந்துஸ்தானி மாஷ்ரா அக்த்-இ-உஸ்தா மெய்ன்” நூலில் குறிப்பிடுகிறார்.
கேள்வி: ”இஸ்லாமிய” ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த ”மேல்” சாதி முஸ்லிம் எழுத்தாளர்களும் உலேமாக்களும் சாதிய அமைப்புக்கு மதரீதியாக இசைவாணை வழங்க முயற்சித்திருக்கலாம். ஆனால், அதற்குப் பிந்தைய காலத்தில் இந்த நிலையிலிருந்து நிச்சயம் சில மாறுதல்கள் ஏற்பட்டிருக்க வேண்டுமே?
பதில்: இப்போது அந்த விசயத்துக்கு நான் வருகிறேன். ”ஜிந்தகி-இ-நவ்” இதழுக்கு நான் எழுதிய சில கட்டுரைகளில், காலனிய ஆட்சிக் காலத்தில் இருந்த பிரபலமான உலமாக்கள் பற்றியும், இப்போதைய சமகால இந்தியாவிலுள்ள உலமாக்கள் மற்றும் உலமாக்களின் அமைப்புகள் பற்றியும் நான் பரிசீலித்தேன். பாரெலவிஸ், தேவ்பந்த்திகள், ஹல்-இ-ஹதித், ஜமாத்-இ-இஸ்லாமி, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் போன்ற அமைப்புகளைப் பரிசீலித்தேன். குறிப்பாக, திருமண உறவு பற்றிய விசயங்களில், இவர்கள் சமூக சமத்துவம் அல்லது காஃபா பற்றிய கருத்தாக்கத்தை எப்படிக் கையாண்டனர் என்பதைப் பரிசீலிப்பதில் நான் கவனத்தைக் குவித்தபோது, அவர்களுக்கிடையில் வியப்பிற்குரியதொரு கருத்தொற்றுமை நிலவுவதைக் கண்டேன்.
சாதியைச் சட்ட சம்மதம் கொண்டதாக்குவதற்கு காஃபா பற்றிய கருத்தாக்கத்தைத் தமது ஹனஃபி மரபில் பாரெல்விஸ் மற்றும் தேவ்பந்தி அமைப்பினர் பயன்படுத்துகின்றனர். அஷ்ரஃப் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் மேன்மையையும் ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் தாழ்நிலையையும் இவர்கள் சட்ட மரபாக்குகின்றனர். சமூகத் தகுதி பற்றிய விசயத்தில் ஹனஃபி மரபினர் மிகவும் கறாராக இருக்கின்றனர். எனவே, காஃபா பற்றிய விசயத்தில் பிறப்பு அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாக்குகின்றனர்.
ஹனஃபி சிந்தனை மரபு உருவான ஈராக்கைச் சேர்ந்த குஃபாவில் சமூக ஏற்றத்தாழ்வுகள் மலிந்திருந்ததும், அவற்றை அது நியாயப்படுத்த முனைந்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். சன்னி சட்டப்பள்ளியைப் பின்பற்றுகின்ற அராபிய மையத்துக்கு வெளியில் உருவாகி வளர்ந்த ஷஃபி, ஹன்பாலி போன்ற மரபுகளும் இதே கருத்தைத்தான் கொண்டுள்ளன.
ஆனால், இமாம் ஷாஃபி, இமாம் அஹமது பின் ஹன்பால் ஆகிய இருவரும் பிறப்பு அடிப்படையிலான காஃபாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிறப்பு அல்லது குடும்பத்தை அடிப்படையாக்குவதற்கு நேர்மாறாக, மாலிகி சிந்தனைப் பிரிவு விதிவிலக்காக நிமிர்ந்து நிற்கின்றது. காஃபாவைத் தீர்மானிப்பதில் பிறப்பை ஒரு காரணியாகக் கொள்ளாமல், கடவுட்பற்றையே அடிப்படைக் காரணியாக மாலிகி சிந்தனைப் பிரிவு கருதுகிறது. இதுதான் உண்மையான இஸ்லாமிய அளவுகோலாகும். மாலிகி சிந்தனைப் பிரிவைத் தோற்றுவித்தவரான இமாம் மாலிக் உண்மையான இஸ்லாமிய போதனையின் மையமான மதினாவில் வாழ்ந்தது ஒருவேளை இதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஹனஃபி மரபினர் தமது பெரும்பாலான மதரசாக்களில் பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற மடமையை இன்னமும் போதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நான் பயின்ற மதரசாவில் சாதி என்பது இஸ்லாமியத் தன்மையற்றது என்றும், அதை நாம் தகர்க்க வேண்டும் என்றும் நாங்கள் போதிக்கப்பட்டோம். ஆனால் தேவ்பந்த் மரபு மதரசாக்களில், பிறப்பை அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாகக் கொண்ட காஃபா என்ற பொருளில், ”சாதி என்பது இஸ்லாமியத் தன்மையுடையது” என்று கற்பிக்கப்படுகிறது.
இதற்குக் காரணம் என்னவென்றால், இந்தியாவிலுள்ள மிக அதிக எண்ணிக்கையிலான பாரம்பரிய மதரசாக்கள், இந்த விசயத்தில் இஸ்லாமிய மார்க்கத்துக்கு உண்மையானவையாக இல்லாமல், ஹனாஃபி சட்டவியல் விதிகளின் அடிப்படையில் போதிப்பவையாக இருப்பதுதான். இதற்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளது.
18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷா வலியுல்லா, இந்தியாவின் பிரபலமான முன்னணி இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவர்; சன்னி பிரிவைச் சேர்ந்த சிந்தனை மரபினர் பலர், இவரைப் பெரிதும் மதித்தனர்; இவர் பிறப்பு அடிப்படையிலான காஃபாவை உறுதியாக ஆதரித்து உயர்த்திப் பிடித்தவராவார். காஃபா என்பது ஒருவரின் இயற்கையிலேயே உள்ளார்ந்து உறைந்திருப்பது என்றும், தமது சொந்த காஃபாவுக்கு வெளியில் மணஉறவு கொள்வதானது, கொலை செய்வதை விடவும் அபாயகரமானது என்றும் அவர் தனது ”ஹுஜ்ஜாத்துல்லா அல் பாலிகா”, ”ஃபிக்-இ-உமர்” ஆகிய நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.
இறை தூதருடன் இருந்த அவரது சகாக்களில் பலர் அடிமைப் பெண்களை மணந்த பல நிகழ்வுகள் இஸ்லாமிய வரலாற்றில் காணப்பட்ட போதிலும், இந்த அறிஞர் அதைப் பொருட்படுத்தவில்லை. இறைதூதர் நபிகளார், தமது அத்தை மகளான ஜைனப் பிந்த்-இ-ஜஹாஷ்க்கு விடுவிக்கப்பட்ட தனது அடிமையான சையத்ஐ மணமுடித்து வைத்தார். தனது மாமன் மகளான ஜுபா ஏ பிந்த்-இ-ஜுபைர்க்கு நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த மிக்தாத் என்பவரை மணமுடித்துள்ளார்.
தீவிர ஹனஃபி ஆதரவாளர்களான தேவ்பந்த் மரபினர், பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற கருத்தாக்கத்தைத் தீவிரமாக ஆதரித்துச் செயல்படுத்துவோராக உள்ளனர். ”தேவ்பந்த இயக்கமும் சஹரான்பூர் முஸ்லிம்களும்” என்ற நூலின் பாகிஸ்தானிய ஆசிரியரான குலாம் முஸ்தஃபா, அதில் பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்லியுள்ளார். தேவ்பந்த் மதரசாவை நிறுவியவர்களில் ஒருவரும், ஷேக் சாதியைச் சேர்ந்தவருமான மௌலவி காசிம் நானோத்வி, நான்கு சாதியினரை மட்டுமே இறைவன் தமது மதத்துக்குச் சேவை செய்யப் படைத்துள்ளார் என்று அறிவித்துள்ளாராம்; சையத், ஷேக், மொகல், பத்தான் ஆகியவையே இந்நான்கு சாதிகளாம்!
தேவ்பந்த் மரபைச் சேர்ந்த மற்றொரு நூலாசிரியரும், தேவ்பந்த் மதரசாவின் முதல் முஃப்தியுமான மௌலானா அஸிசுர் ரஹ்மான் உஸ்மானி, பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்கிறார். அஷ்ரஃப் சாதியைச் சேர்ந்த ஒரு பெண், தனது தந்தை, பாட்டன் போன்ற தனது ஆண் காப்பாளனின் அனுமதியின்றி, ரஸில் சாதியைச் சேர்ந்த ஒரு ஆண்மகனைத் திருமணம் செய்வாரானால், அந்தத் திருமணம் உண்மையிலேயே நடந்ததாகக் கருத முடியாது; எனவே, அந்தத் திருமணத்தை முறிப்பது (ஃபஸ்க்-இ-நிக்காஹ்) என்ற பிரச்சினைக்கே இடமில்லை என்று அவர் அறிவிக்கிறார். தேவ்பந்த் மதரசாவால் வெளியிடப்பட்ட ”ஃபத்வா இ தாருல் உலூம்தேவ்பந்த்” என்ற ”தேவ்பந்த்” ஆணைகளின் (ஃபத்வா) தொகுப்பில் இந்த விசயம் கூறப்பட்டுள்ளது.
அவர் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அவருடைய வாதத்திலிருந்து தெரிவது என்னவென்றால், இத்தகைய மண உறவுகளில் பிறக்கும் குழந்தைகள் முறைகேடாகப் பிறந்தவர்கள்; இத்தம்பதியினரும் ஒழுக்கக் கேடானவர்கள்; இவர்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி, நூறு கசையடி தரப்பட வேண்டும்! இருப்பினும், ஒரு ”கீழ்” சாதிப்பெண் தனது நெருங்கிய ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதி இல்லாமலேயே ”மேல்” சாதி ஆண்மகனைத் திருமணம் செய்து கொள்ள இந்த உஸ்மானி அனுமதித்திருப்பார் என்பதை நாம் துணிந்து கூற முடியும். உண்மையில், இது பார்ப்பனிய மனோபாவத்தையும் அதேபோல முஸ்லிம்களிடம் உள்ளார்ந்து ஆழப்பதிந்துள்ள மூத்த குல ஆணாதிக்கத்தையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.
தேவ்பந்த் மரபைச் சேர்ந்த இன்னுமொரு இஸ்லாமிய அறிஞரான மௌலவி முகம்மது சகாரியா சித்திகி என்பவர், இன்றைய உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய இயக்கமான தப்லிஹி ஜமாத் இன் தலைமைச் சித்தாந்த வாதியாவார். ”மெய்யான சமயப் பணிகளின் நற்பேறுகள்” என்ற தமது நூலில் அவர், ”முஸ்லிம்களின் ஒரு குழு, மக்காவுக்குப் புனிதப் பயணம் (ஹஜ்) அல்லது வேறிடத்துக்குப் பயணம் மேற்கொள்ளுமானால், அவர்கள் தம்மில் ஒருவரைத் தலைவராக (அமிர்) நியமிக்க வேண்டும்; இந்தக் குழுவில் குரைஷி (சைய்யத் அல்லது ஷேக்) சாதியைச் சேர்ந்தவர் எவராவது இருப்பின், அவரையே தலைவராக நியமிப்பது சிறந்தது” என்று கூறுகிறார்.
அவர் முஸ்லிம்களை அஷ்ரஃப் (”மேல்” சாதி) என்றும் அர்ஸல் (”கீழ்” சாதி) என்றும் வகைப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முதலாவது அரசாங்க முஃப்தியாக (முஃப்திஇஆஜம்) பின்னாளில் அமர்த்தப்பட்ட தியோபண்டி முஃப்தி முஹம்மது ஷஃபி உஸ்மானி எழுதிய, ”நிஹாயத் அல்அராப் ஃபிகாயத் அல்நஸ்ப்” என்ற சர்ச்சைக்குரிய சாதி பற்றிய நூலையும் இவர் ஆதரித்தார். தேவ்பந்த் உலமாக்கள் பலராலும் ஆதரிக்கப்பட்ட இந்த நூலில், அஷ்ரஃப் சாதிகள் என்றழைக்கப்பட்ட நான்கு வகை சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் தனிச்சிறப்பாகக் கருணை காட்டுவார் என்று இந்த உஸ்மானி கூறியிருக்கிறார்.
முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி தமது இந்த நூலில், சக தியோபண்டி அறிஞரான அகமத் உஸ்மானி என்பவரின் ஒரு கட்டுரையும் இடம்பெறச் செய்திருந்தார். அந்தக் கட்டுரையில், ”கீழ்” சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள் கல்வி கற்கத் தொடங்கியதால்தான் எல்லாவகையான இடர்ப்பாடுகளும் ஆரம்பித்தன என்று அஹமது உஸ்மானி எழுதியிருக்கிறார்!
இன்னுமொரு முன்னணி தேவ்பந்த் அறிஞரான மௌலவி அஷ்ரஃப் அலி ஃபரூக்கி தானவி என்பவர், முஸ்லிம் நெசவாளர்களைச் சிறுமைப்படுத்தும் சொற்களில் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் நெசவாளர்கள் தொழுகை செய்வது பற்றி தனது ”அல்ரஃபிக் ஃபிசவாய் அல்தாரிக்” நூலில் அவர் எள்ளி நகையாடினார். முஃப்தி முஹம்மது ஷாஃபி உஸ்மானி என்பவரின் ”நிஹாயத் அல்அரப் ஃபிகாயத் அல்நஸ்ப்” என்ற நூலை ஆதரித்து, அவர் எழுதி ”வாஸ்லஸ் சபாப் ஃபி ஃபாஸ்லின் நஸ்ப்” என்ற தனது நூலில் நெசவாளர் சாதியினரை வெறுப்புடன் ”ஜுலாஹா” என்று குறிப்பிட்டார். அன்சாரிகள் (”உதவி செய்பவர்கள்”) என்று நெசவாளர்கள் தம்மை அழைத்துக் கொள்வதை அவர் கண்டனம் செய்தார்.
இவ்வாறு அவர்கள் தம்மை அழைத்துக் கொள்வது, ஒருவர் தமது குடும்ப மரபை அல்லது பரம்பரையை மாற்றிக் கொள்ளும் செயலாகும்; மக்காவிலிருந்து மெதினாவுக்குச் சென்று அங்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்தபோது அவருக்கு உதவி செய்த மெதினாவைச் சேர்ந்த அன்சார்களின் வழித்தோன்றல்கள் என்று உரிமை பாராட்டுவதாகும்; இது தவறானதும் தடை செய்யப்பட்டதுமாகும் என்று தானவி வாதிட்டார்.
தமது வாதத்துக்கு வலுசேர்க்க, இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஒரு வழிவழிச் செய்தியை இட்டுக்கட்டி கூறினார். தனது தந்தையைத் தவிர வேறொருவருக்கு மகன் என்று உரிமை பாராட்டும் ஒருவன் விண்ணுலகை அடையமாட்டான் என்பதே இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகச் சொல்லப்படும் அந்த வழிவழிச் செய்தியாகும்.
ஷப்பிர் அஹமது ஹக்கீம் என்ற முஸ்லிம் அறிஞர், தான்வியின் ”மசாவத்-இ பகார்-இ ஷாரியத்” என்ற இன்னொரு நூலிலிருந்து ஒரு மேற்கோளை எடுத்தாண்டுள்ளார். ஜுலாஹாஸ் (நெசவாளர்கள்), நயிஸ் (நாவிதர்கள்) ஆகியோரைத் தூய முஸ்லிம்கள் தமது இல்லங்களில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று தான்வி அதில் வாதிடுகிறார். மேலும், சைய்யது சாதி தந்தைக்கும் சைய்யது அல்லாத தாய்க்கும் பிறக்கும் குழந்தை தூய சைய்யது தம்பதியினருக்குப் பிறக்கும் குழந்தையைவிட சமூகத் தகுதி குறைந்தது என்று தானவி ”பாஹிஸ்டி ஜேவார்” என்ற தனது நூலில் வன்மத்தோடு வாதிடுகிறார்.
இதே விசயத்தைத்தான் பிராமணர்கள் ஏற்றிப் போற்றும் மனுவும் தனது மனுதர்ம சாஸ்த்திரத்தில் (மனுஸ்மிருதி) சொல்லியிருக்கிறார்! சைய்யதுகள், ஷேக்குகள், மொகல்கள், பத்தான்கள் ஆகியோர் ”மரியாதைக்குரிய மேல்குடி” (ஷரிப்) சாதியினர் என்றும், எண்ணெய் பிழிபவர்கள் (டெலி), நெசவாளர்கள் (ஜுலாஹா) ஆகியோர் ”கீழ்” சாதிகள் (ரஸில் அக்வம்) என்றும் ”இம்தாத்-உல்-ஃபத்வா” என்ற தனது நூலில் தானவி அறிவித்தார்.
இவர், இஸ்லாத்துக்கு மதம் மாறிய அராபியர் அல்லாதவர்களை ”நவ்முஸ்லிம்கள்” என்று குறிப்பிடுகிறார். காந்தானி முஸல்மான் எனப்படும் பாரம்பரியமாக உறுதிப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் திருமண உறவுக்கான காஃபாவுக்கு, நவ்முஸ்லிம்கள் கருதத்தக்கவர்களே அல்ல என்று இவர் வாதிடுகிறார்.
பத்தான்கள் அரபுவழி வந்தவர்கள் அல்ல என்பதால் அவர்களும் நவ்முஸ்லிம்கள்தாம் என்கிறார். அரபுவழி வந்தவர்களான சைய்யதுகள், ஷேக்குகளின் காஃபா வேறானது; எனவே அவர்களுடன் நவ்முஸ்லிம்களான பத்தான்கள் கலப்பு மணம் புரியக்கூடாது என்று எச்சரிக்கிறார். அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் முதலாவது தலைவரும், தேவ்பந்த் மதரசாவின் துணைவேந்தருமான மௌலவி காரி மொகம்மது தய்யீப் சித்திகி என்பவரும்கூட, சாதியத்தின் ஆதரவாளராக இருந்தார். – இவை எனது ஆய்வில் நான் கண்டறிந்த உண்மைகளாகும்.
நூல்: இஸ்லாத்தில் மனுவாதிகள்
வெளியீடு: கீழைக்காற்று பதிப்பகம்
விலை ரூ. 6.00
கிடைக்குமிடம்:
கீழைக்காற்று. 10, ஔலியா சாகிப் தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 தொலைபேசி = 044 2841 23677
நன்றி: கீழைக்காற்று.