இஸ்லாத்தில் மனுவாதிகள் (1)
[ இந்திய உலமாக்கள் பெரும்பாலும் ஹனஃபி மரபில் பயிற்றுவிக்கப் பட்டவர்கள். சாதி அடிப்படையிலான பாரபட்சம் காட்டுவதற்கு இந்த ஹனஃபி மரபானது, மதரீதியில் புனித இஸ்லாத்தை தவறாகக் கற்பித்து வருகிறது. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இது நடந்து வருகிறது. ஹனஃபி மரபுவழி சார்ந்த அறிஞர்களின் படைப்புகளைப் பரிசீலித்தால் இது தெளிவாகத் தெரியும்.
சாதியம் பற்றிய எண்ணற்ற இந்திய உலமாக்களின் நூல்களைப் படித்த பிறகு, ஜமாத்-இ-இஸ்லாமி தலைவரிடம் அந்த தலித் இளைஞர் முன்வைத்த கேள்வி கிட்டத்தட்ட முழுமையாக சரியானதுதான் என்பதை நான் புரிந்து கொண்டேன். சாதிய அமைப்பை நியாயப்படுத்துவதற்கு இத்தகைய உலமாக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை இப்படித் தவறாக வியாக்கியானம் செய்வார்களானால், இஸ்லாம் மதத்துக்கு மாறுவது பற்றி எந்த தலித் அக்கறையோடு பரிசீலிப்பார்? இந்த மௌலவிகளால் திரித்து முன்வைக்கப்படும் இஸ்லாமிய மார்க்கத்தை எந்த தலித் ஏற்றுக் கொள்வார்?
இந்திய முஸ்லிம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையானது, ஏதோ இந்து மதத்தின் தாக்கத்தினால் மட்டும் ஏற்பட்டதல்ல; சாதிய அமைப்பை இஸ்லாமிய சட்டம் அல்லது ஷரீஅத் இன் ஓர் அங்கம் எனத் தவறாகக் கருதும் பெரும்பாலான இந்திய உலமாக்களின் செல்வாக்கும் இதற்குக் காரணமாகும். இஸ்லாமிய மார்க்கத்தை முற்றிலும் தவறாக வியாக்கியானம் செய்வதன் மூலம் இந்த மௌலவிகள் இஸ்லாத்துக்கு எவ்வளவு பெரிய இழுக்கைக் கொண்டு வந்துள்ளனர் என்பதை உணர்ந்தபோது, நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.]
இஸ்லாத்தின் சமூக சமத்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் நேரெதிரான வகையில், இந்திய முஸ்லிம்களிடையே சாதிய வேற்றுமையும் பாரபட்சமும் புரையோடிப் போய் கிடக்கிறது. இது, பார்ப்பன இந்து மதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டது என்று சொல்வதைவிட, பல இஸ்லாமிய மன்னர்களும் உலமாக்களும் இச்சாதிய பாரபட்சத்தை நியாயப்படுத்தி கட்டிக் காத்து வந்துள்ளனர். இந்த உண்மையையும், மனுவாத அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கம் எவ்வாறு இந்தியாவில் உருத்திரிக்கப்பட்டுள்ளது என்பதையும் வரலாற்றுப் பின்னணியுடன் வெளிக்கொணர்கிறார், முஸ்லீம் இளைஞரான மசூத் ஆலம் ஃபலாஹி.
தற்போது டெல்லி நேரு பல்கலைக்கழகத்தின் அரபுமொழித் துறையில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மாணவராக உள்ள இவர், ஜாமியா உல்ஃபலா மதரசாவில் இஸ்லாமிய மார்க்கக் கல்வியைப் படித்து முடித்தவர். இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி மற்றும் சாதி அடிப்படையிலான இழிவுபடுத்தல்கள் பற்றி இவர் விரிவாக ஆய்ந்தெழுதியுள்ளார்.
கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் ”ஃபிராண்டியர்” (பிப்ரவரி 511, 2006) என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர், இவை குறித்து அலசுகிறார். புறக்கணிக்கப்படும் பிரச்சினை குறித்த இச்சிறுவெளியீடு இந்துமதத்தின் கொடுமைகளை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு இஸ்லாத்திலும் மனு’தர்ம’ அடிகொடுக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சாதியத்திற்கு எதிராகவும் விடாப்பிடியாகப் போராட விரிந்த பார்வையை அளிக்குமென்று நம்புகிறோம்.- கீழைக்காற்று
இஸ்லாத்தில் மனுவாதிகள்:
இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி – தீண்டாமை குறித்து ஆய்வு செய்து, மசூத் ஆலம் ஃபலாஹி அளித்த நேர்காணல்
கேள்வி:இந்திய முஸ்லீம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையை ஆய்வு செய்வதில் நீங்கள் எவ்வாறு அக்கறை காட்டத் தொடங்கினீர்கள்?
பதில்: பீகார் மாநிலத்திலுள்ள சீத்தாமரி என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். கிழக்கு உத்திரப்பிரதேசத்திலுள்ள மவுனத் பான்ஜன் என்ற ஊரில் எனது பள்ளிப் படிப்பை நான் முடித்தேன். பின்னர், இஸ்லாமிய உயர் கல்வி பெறுவதற்காக, ஆஜம்கார் மாவட்டத்தின் பிலாரியாகன்ஜ் எனும் ஊரிலுள்ள ஜாமியா உல்ஃபலா மதரசாவுக்குச் சென்றேன். 1999ஆம் ஆண்டில் ஃபசிலத் கல்வியை முடித்த நான், இளங்கலை பட்டப்படிப்புக்காக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அதன்பின்னர், புதுடெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து முதுகலைப் பட்டம் பெற்றேன்.
1996ஆம் ஆண்டில், ஜாமியா உல்ஃபலாவில் நான் மாணவனாக இருந்தபோது, ”குர்ஆனைப் பற்றிய ஓர் அறிமுகம்” என்ற ஒரு வார கால நிகழ்ச்சியை ஜமாத்இஇஸ்லாமிஹிந்த் என்ற அமைப்பு உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்திருந்தது. இதன் ஒரு பகுதியாக, முஸ்லிம்கள் அல்லாதோர் வாழும் பகுதிகளில் இஸ்லாமிய மதம் பற்றி விளக்குவதற்காக ஜமாத் தலைவர்கள் சென்றனர். குறிப்பாக, தலித்துகள் வாழும் பகுதிகளில் அவர்கள் கவனம் செலுத்தினர். இஸ்லாத்தின் பொதுக்கருத்தான சமூக ரீதியிலான சமத்துவம் பற்றி தலித்துகளிடம் அவர்கள் பேசினர்.
ஹக்கிம் அப்துர்ரவூஃப் என்ற மூத்த ஜமாத் தலைவர், பிலாரியாகன்ஜ் இல் உள்ள தலித்துகள் வாழும் சேரிப் பகுதிக்கு வந்தார். நான் படித்துக் கொண்டிருந்த மதரசாவும் இந்த ஊரில்தான் இருந்தது. இஸ்லாம் சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்றும் சாதி, தீண்டாமை ஆகிய இழிவுகளுக்கு ஒரே தீர்வு இஸ்லாம்தான் என்றும் தலித்துகளிடம் அவர் கூறினார். தலித்துகள் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டு மதம் மாறுவார்களானால், முஸ்லிம்கள் அவர்களைக் கட்டித் தழுவி வரவேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.
அவ்வாறு அவர் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு தலித் இளைஞர் எழுந்து நின்று, அவரை நோக்கி, ”இஸ்லாம் என்பது சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், உங்களுடைய முஸ்லிம் சமுதாயம் சாதிகள் மலிந்ததாகவே இருக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தமது சாதிக்கு வெளியில் திருமணம் செய்து கொள்வதில்லை; மற்ற பகுதிகளிலும் அநேகமாக இதே நிலைமைதான். இந்நிலையில், தலித்துகளாகிய நாங்கள் முஸ்லிம்களாக மதம் மாறினால், எங்களுடன் யார் மணஉறவு வைத்துக் கொள்வார்கள்? எங்களுடன் சமமாக அமர்ந்து யார் உணவருந்துவார்கள்?” என்று கேட்டார்.
அந்த இளைஞரின் வாதம், எனது நெற்றிப் பொட்டில் தாக்கியதைப் போலிருந்தது; என்னைச் சிந்திக்கத் தூண்டியது. அவர் கூறியது பெருமளவு உண்மை என்பது எனக்குத் தெரியும். அது முதற்கொண்டு, சாதிய அமைப்பின் வரலாறு பற்றிய பல்வேறு நூல்களை நான் படிக்கத் தொடங்கினேன். பல்வேறு இந்திய உலேமாக்களின் நூல்களையும் நான் ஆழ்ந்து படித்தேன். இந்த உலேமாக்கள், அவர்களது சீடர்கள் பலராலும் மிகச் சிறந்த அறிஞர்கள் என்று பெரிதும் மதிக்கப்பட்டவர்கள். மௌலவி அகமத் ரசாகான் பரேல்வி, மௌலவி அஷ்ரப் அலி பரூக்கி தான்வி முதலான இத்தகைய அறிஞர்களின் நூல்களையும் நான் படித்தேன்.
இந்த உலமாக்களில் பலரும், பிறப்பு அடிப்படையிலான சாதிய மேன்மையை நடைமுறையில் ஆதரித்து வாதிடுவோராக இருப்பதைக் கண்டேன். இந்தச் சாதியக் கருத்தாக்கத்தின் அடிப்படையில், குரானுக்கு முற்றிலும் எதிரான வகையில் இவர்கள் ஃபத்வா வழங்கியுள்ளதை கண்டறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியடைந்தேன். அரபு மொழியில் காஃபா என்றழைக்கப்படுவதன் கருத்தாக்கத்தைத் துணையாதாரமாகக் கொண்டு, சாதியப் படிநிலை வரிசைப்படி, குழுக்களுக்கிடையே சாத்தியப்படும் மண உறவுகளைப் பற்றிய விதிகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
இதன்படி, அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்த முஸ்லீம்கள் (சையத்துக்கள், ஷேக்குகள்), அரபுத் தோற்றுவாய் அல்லாதவர்களைவிட அதாவது அஜாமி முஸ்லிம்களைவிட உயர்வானவர்கள். அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்தவர் என உரிமை பாராட்டும் ஒரு ஆண், அஜாமி முஸ்லிம் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால் அஜாமி முஸ்லிமாக உள்ள ஒரு ஆண், அரபு வழித்தோன்றலான ஒரு முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது.
இது போலவே பத்தான் முஸ்லிம் ஆணொருவன், ஜுலாஹா (அன்சாரி), மன்சூரி (துனியா), ராயின் (குன்ஞ்ரா), குரைஷி (காஸி) இனப் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால், அன்சாரி, ராயின், மன்சூரி, குல்ரஷி ஆகிய இனக்குழுவைச் சேர்ந்த எந்தவொரு முஸ்லிம் ஆணும், பத்தான் முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. ஏனென்றால் இந்தச் சாதிகள் அனைத்தும் பத்தான்களுக்குக் கீழானவை – இவ்வாறாக இந்த உலமாக்கள் வாதிட்டனர்.
ஒருவர் தமது சொந்தச் சாதியிலேயே திருமணம் செய்து கொள்வதுதான் சாலச் சிறந்தது என்று உலமாக்களில் பலரும் நம்பினர்.
இஸ்லாமைப் பற்றிய எனது புரிதலுக்கு முற்றிலும் நேரெதிரானதாக அவர்களுடைய கருத்துக்கள் இருந்தன. அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்ள, அவர்களுடைய நூல்கள் எனக்குப் பெரிதும் உதவின.
இந்தியாவில் உள்ள பல உலேமாக்கள் சாதிய அமைப்புக்குத் தவறாக இஸ்லாமியத் தன்மை வழங்குவதன் மூலம் அல்லது மதரீதியில் இசைவாணை வழங்குவதன் மூலம் சாதியத்தை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். இதை அறிந்த போது நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். இந்து மதத்தில் இன்னமும் நீடித்து வரும் சாதிய நடைமுறையிலிருந்து இது வேறுபட்டதல்ல. ஏனென்றால், இந்துமதம்தான் சாதிய வேறுபாட்டுக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் மதரீதியாக இசைவாணை வழங்குகிறது.
சாதியம் பற்றிய எண்ணற்ற இந்திய உலமாக்களின் நூல்களைப் படித்த பிறகு, ஜமாத்-இ-இஸ்லாமி தலைவரிடம் அந்த தலித் இளைஞர் முன்வைத்த கேள்வி கிட்டத்தட்ட முழுமையாக சரியானதுதான் என்பதை நான் புரிந்து கொண்டேன். சாதிய அமைப்பை நியாயப்படுத்துவதற்கு இத்தகைய உலேமாக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை இப்படித் தவறாக வியாக்கியானம் செய்வார்களானால், இஸ்லாம் மதத்துக்கு மாறுவது பற்றி எந்த தலித் அக்கறையோடு பரிசீலிப்பார்? இந்த மௌலவிகளால் திரித்து முன்வைக்கப்படும் இஸ்லாமிய மார்க்கத்தை எந்த தலித் ஏற்றுக் கொள்வார்?
இந்திய முஸ்லிம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையானது, ஏதோ இந்து மதத்தின் தாக்கத்தினால் மட்டும் ஏற்பட்டதல்ல; சாதிய அமைப்பை இஸ்லாமிய சட்டம் அல்லது ஷரீஅத் இன் ஓர் அங்கம் எனத் தவறாகக் கருதும் பெரும்பாலான இந்திய உலமாக்களின் செல்வாக்கும் இதற்குக் காரணமாகும். இஸ்லாமிய மார்க்கத்தை முற்றிலும் தவறாக வியாக்கியானம் செய்வதன் மூலம் இந்த மௌலவிகள் இஸ்லாத்துக்கு எவ்வளவு பெரிய இழுக்கைக் கொண்டு வந்துள்ளனர் என்பதை உணர்ந்தபோது, நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
கேள்வி: முஸ்லிம்களிடையே சாதிய பாரபட்சம் என்ற பிரச்சினையைப் பற்றி நீங்கள் எவ்வாறு எழுதத் தொடங்கினீர்கள்?
பதில்: சாதியையும் சாதிய பாரபட்சம் இழிவுபடுத்துதலையும், அப்பட்டமாக நியாயப்படுத்தி, மதரீதியில் சட்டபூர்வமாக்குவதற்கு இந்த உலமாக்கள் முயற்சித்ததை அறிந்தபோது, இதைப் பற்றி எழுதுவது முக்கியத்துவம் வாய்ந்ததென நான் உணர்ந்தேன். இந்தப் பிரச்சினையைப் பற்றி எழுத முற்பட்டபோது, ஜாமியா உல்ஃபலாவில் பணியாற்றிய மௌலவி அனீஸ் அகமது சித்திகி ஃபலாஹி மதானி என்ற எனது மதிப்புக்குரிய ஆசிரியர், எனது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருந்தார். அவர் எங்களுக்கு மதங்கள் குறித்த ஒப்பீடு என்ற பாடத்தைக் கற்பிப்பவராக இருந்தார். படிநிலையாக உள்ள சாதிய அமைப்பு முறையை இந்திய முஸ்லீம்கள் எவ்வாறு இஸ்லாத்தின் உள்ளார்ந்த ஆன்மீகமாக மாற்றிவிட்டார்கள் என்பதையும், இந்து மதத்தின் தாக்கம் இதற்கு ஓரளவுக்குக் காரணமாக இருந்தது என்பதையும் அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.
இருப்பினும், முஸ்லிம் பத்திரிகைகளில் இந்தச் சாதியப் பிரச்சினை பற்றி அபூர்வமாகவே விவாதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினையைப் பற்றி அவை முற்றாக மௌனம் சாதிக்கின்றன. இந்தியாவிலுள்ள பெரும்பாலான முஸ்லிம் பத்திரிகைகள் சுயநலவாதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன; வெளியிடப்படுகின்றன. மதரசாக்களில் அளிக்கப்படும் குறுகிய கண்ணோட்டமுடைய பயிற்சியின் காரணமாக, உண்மையிலேயே அவர்கள் விரும்பினாலும் கூட, இத்தகைய பிரச்சினைகளைப் பற்றி எழுத இயலாத நிலையிலேயே உலமாக்கள் உள்ளனர்.
மேலும், இந்திய உலமாக்கள் பெரும்பாலும் ஹனஃபி மரபில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். சாதி அடிப்படையிலான பாரபட்சம் காட்டுவதற்கு இந்த ஹனஃபி மரபானது, மதரீதியில் புனித இஸ்லாத்தை தவறாகக் கற்பித்து வருகிறது. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இது நடந்து வருகிறது. ஹனஃபி மரபுவழி சார்ந்த அறிஞர்களின் படைப்புகளைப் பரிசீலித்தால் இது தெளிவாகத் தெரியும்.
இதனால்தான், மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டும் மிகப் பெருமளவுக்கு விவாதத்திற்குரியதுமான இச்சாதியப் பிரச்சினையைப் பற்றி எழுதும் தார்மீகக் கடமை எனக்கிருப்பதாக நான் உணர்ந்தேன்.
எனவே ”இந்தியாவில் முஸ்லிம்களும் தீண்டாமையும்” என்ற தலைப்பில் பல கட்டுரைகளை நான் தொடர்ச்சியாக எழுதினேன். அலிகாரைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரும் ஜமாத்இஇஸ்லாமியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் ஃபரிடி என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ”ஜிந்தகிஇநவ்” என்ற பத்திரிகையில் இவை வெளியாயின. பேரன்பு கொண்ட டாக்டர் ஃபரிடி இவற்றை வெளியிட்டு உதவினார். சாதிய பாரபட்சம்இழிவுபடுத்தலுக்கு மதரீதியில் இசைவாணை வழங்கும் உலேமாக்களைக் கடுமையாக விமர்சிப்பவையாக எனது சில கட்டுரைகள் இருந்தன.
கேள்வி: இந்தக் கட்டுரைகளின் மூலம் நீங்கள் வாதிட்டு நிலைநாட்ட முயற்சித்தது என்ன?
பதில்: இந்திய முஸ்லிம்களிடையே சாதி மற்றும் சாதிய அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதற்கான வரலாற்றுக் கண்ணோட்டத்தை அளிக்க நான் முயற்சித்தேன். இந்தியாவில் சாதிகளின் தோற்றம், சாதியை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பன மதத்தின் வளர்ச்சி; பவுத்தம், சீக்கியம், பக்தி இயக்கம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சாதிய எதிர்ப்பு இயக்கங்களின் பாத்திரம்; இந்தியாவில் இஸ்லாமிய மதம் பரவுதல்; குறிப்பாக, இஸ்லாத்தின் சமூக சமத்துவம் காரணமாக, அதன்பால் ஈர்க்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளிடையே இஸ்லாமிய பரவுதல் ஆகிய இவை பற்றி நான் ஆய்வு செய்தேன்.
மறுபுறம், இந்திய வரலாற்றில் ”இஸ்லாமிய ஆட்சி” என்று சொல்லப்படும் காலத்தில் எழுதப்பட்டு வெளியான நூல்களிலிருந்து பல்வேறு மேற்கோள்களை முன்வைத்து, முஸ்லிம் மன்னர்களும் பொதுவில் இஸ்லாமிய மேட்டுக்குடி ஆளும் கும்பல்களும் சாதிய அமைப்பை எவ்வாறு கட்டிக் காத்தனர் என்பதை நான் விளக்க முயற்சித்தேன். இந்துக்களில் ”உயர்சாதியினர்” என்று சொல்லப்படுபவர்களுடன் கள்ளக்கூட்டு சேர்ந்து, இந்து மற்றும் முஸ்லிம் மக்களில் ”கீழ் சாதியினர்” என்று சொல்லப்பட்டவர்களை எவ்வாறு ஒடுக்கினர் என்பதையும் நான் எடுத்துக் காட்ட முயற்சித்தேன்.
இந்த முஸ்லிம் மன்னர்களும் மேட்டுக்குடி ஆளுங்கும்பலும் கீழ்ச் சாதியினர் அல்லது ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுவர்களை அவர்கள் இந்துக்களானாலும், முஸ்லிம்களானாலும் கல்வி கற்க அனுமதித்ததில்லை; தங்களது அரசவைகளில் நுழையக்கூட அனுமதித்ததில்லை. இவை இந்து மற்றும் முஸ்லிம்களில் உயர்சாதியினருக்கு மட்டுமே என்று ஏகபோக உரிமை கொண்டாடினர்.
இந்த உண்மைகளை, முல்லா அப்துல் காதிர் பாவாயுனி இன் ”முன்டாகாப் அல்தாவாரிக்” மௌலவி சய்யத் ஜியாவுதீன் பார்னி இன் ”தாரிக்இஃபிரோஸ் ஷாஹி”, குன்வர் மொகம்மத் அஷ்ரப் இன் ”இந்துஸ்தானி மாஷ்ரா அக்த்இஉஸ்தா மெய்ன்” ஆகிய நூல்கள் மிகத் தெளிவாகவே நிரூபித்துக் காட்டுகின்றன. இந்த மன்னர்களுக்கும் மேட்டுக்குடி ஆளுங்கும்பல்களுக்கும் இஸ்லாத்தைப் பற்றி முழுநிறைவாகத் தெரியாது. இஸ்லாமிய மார்க்கம் போதிக்கும் சமத்துவத்துக்கு அவர்கள் செவி சாய்த்ததுமில்லை.
இல்டுமிஷ், பால்பன் ஆகியோர் துருக்கிய அடிமை வம்சத்திலிருந்து வந்த சுல்தான்களாவர். அவர்களாவது சாதிய விவகாரங்களில் வேறுபட்டு நடந்திருக்க வேண்டுமென நாம் கருதலாம். ஆனால், அவர்களும்கூட கீழ்சாதியினர் என்றழைக்கப்பட்ட முஸ்லிம்களை அரசாங்கப் பணிகளில் அனுமதிக்க மறுத்தனர்.
இஸ்லாமிய அரசுகள் என்று சொல்லப்பட்ட அரசவைகளில் இருந்த எண்ணற்ற அறிஞர்களும் உலேமாக்களும் பராணி, ஃபரிஷ்டா இன்னும் இவர்களைப் போன்றவர்களும் ”கீழ்” சாதி அல்லது ரஸில் சாதி முஸ்லிம்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கு மத ரீதியாக இசைவாணை வழங்கவே முயற்சித்தனர். ரஸில் (கீழ்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள், அஷ்ரஃப் (மேல்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்வதற்கென்றே இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்றுகூட பராணி வாதிட்டுள்ளார்.
கீழ் சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்றழைக்கப்பட்டவர்களின் குழந்தைகள் தமது முன்னோர்களின் பரம்பரைத் தொழிலை மட்டுமே செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கு மாறாக, தமது குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க எவராவது துணிந்து செயல்பட்டால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
”குர்ஆன், தொழுகை, நோன்பு ஆகியவற்றுக்கு அப்பால், மேலான அறிவை ரஸில் என்றழைக்கப்படும் கீழ் சாதியினருக்கு அளிக்கக் கூடாது; இவ்வாறு செய்வது நாய்கள், பன்றிகளின் முன்பு விலையுயர்ந்த முத்துக்களைப் பரப்பி வைப்பதைப் போன்றதாகும்!” இவ்வாறு மக்தும் ஜஹானியான்இஜஹாங்கஷ்ட் என்றழைக்கப்பட்ட சையத் ஜலாலுதீன் புகாரி என்ற பிரபலமான சூஃபி அறிஞர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இதைப் பற்றி காஸி சஜ்ஜத் ஹுசைன் தனது ”சிராஜுல் ஹேதயா” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மது அருந்துபவர்கள், கந்து வட்டிக்காரர்கள் மட்டுமின்றி, நாவிதர்கள், பிணம் கழுவுபவர்கள், சாயத் தொழிலில் ஈடுபடுபவர்கள், தோல் பதனிடுபவர்கள், செருப்பு தைப்பவர்கள், வில் செய்பவர்கள், சலவைத் தொழிலாளிகள் முதலானோருடன் சேர்ந்து மேல்சாதி முஸ்லிம்கள் உணவருந்தக்கூடாது என்று இந்த பிரபலமான சூஃபி அறிஞர் வலியுறுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.
இவர் தமது வாதத்துக்கு வலுவூட்டுவதற்காக, இறைத்தூதர் முஹம்மது நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஒரு போலியான மரபை சான்றாதாரமாகக் கற்பிதம் செய்துக் காட்டியுள்ளார்.
தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ ‘கிளிக்” செய்யவும்.