கணவனின் கொடுமைகளை எதிர்கொள்வது எப்படி?
[ மனைவியைக் கொடுமைப்படுத்துவது என்கிற சமூகத் தீமைக்கு இன்னதுதான் காரணம் என்று சுட்டிக்காட்ட முடியாது. சமூகம் வன்முறையை சகித்துக்கொள்வதற்கு பதிலாக அதை முறியடிப்பதில் இறங்கினால்தான் இந்தத் தீமையை ஒழிக்க முடியும். எந்த காரணத்திற்காகவும் யாரையும் சித்திரவதை செய்ய யாருக்கும் உரிமை இல்லை.
பெண்கள் கணவர்களால் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சகித்துக்கொண்டால் அது குழந்தைகளை பாதிக்கும் என்பதை மறக்கக் கூடாது. இல்லையென்றால் அது இன்னொரு தலைமுறைக்கும் தொற்றிக்கொள்ளும், தொடரும். கோபத்தைக் கையாள்வது எப்படி என்று ஒரு தாய் தன் மகனுக்கும் கற்றுக்கொடுக்க இது ஒரு வாய்ப்பு. கொடுமையைத் தாங்கிக்கொண்டால் பிறகு ஒரு நாள் மகனும் தந்தையைப் போல்தான் நடந்துகொள்வான்.
வரதட்சிணைக் கொடுமை என்றால் கூட போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க வைக்கலாம். ஒரு கணவன் தன் மனைவியைக் கொடுமைப்படுத்த எத்தனையோ காரணங்கள் இருக்கும். ஆனால் வரதட்சிணைக் கொடுமைக்குத்தான் போலீஸ் முக்கியத்துவம் கொடுக்கிறது. ‘சாதா’ கொடுமைகளை குடும்ப விவகாரம், அவர்களே பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டிய விஷயம் என்று அலட்சியப்படுத்துகிறது.
ஒரு பெண் முதலில் தான் ஒரு தனிநபர், பிறகுதான் ஒரு மனைவி, தாய் என்பதை மறந்துவிடக் கூடாது. கணவன் கொடுமைப் படுத்துகிறான் என்றால் அதை எப்படிக் கையாளுவது என்பது பற்றி அவள்தான் முடிவு செய்ய வேண்டும். சித்திரவதை செய்யப்படும் பெண்கள் தன்னைப் பற்றி உயர்வான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்.]
ஆணாதிக்கம் குறைந்துவரும் இந்தக் கால கட்டத்தில் கூட, பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறையவில்லையே! கொட்டிக்கொடுத்துப் பெண்ணைக் கட்டிக்கொடுத்த பின்னும் பிணந்தின்னிக் கழுகுகளாய் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தும் ‘உத்தம’க் கணவர்கள் நாளும் பெருகிக்கொண்டுதானே இருக்கிறார்கள். பிறந்தது பெண்ணாக இருந்துவிட்டால் இறந்துதான் தீர வேண்டும் எனக் கள்ளிப் பாலும் கையுமாக அலையும் கயமை நெஞ்சங்கள் தாம் எத்தனை எத்தனை! இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்,
வரதட்சிணை, கள்ளக் காதல் என்று பல விதமான காரணங்கள் காட்டி பெண்கள் உயிரோடு எரிக்கப்படுவதை கிட்டத்தட்ட தினமுமே செய்தித் தாள்களில் படிக்கிறோம். ஸ்டவ் வெடித்து’ பலியாகும், அல்லது மிக சீரியஸாக தீக்காயம் அடையும் பெண்களைப் பற்றியும் கேள்விப்படுகிறோம்.
ஆனால் கணவர்கள் மனைவியைச் சித்திரவதை செய்வது நாம் நினைப்பதை விட அதிகமாவே நடக்கிறது. பல பெண்கள் தாங்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் படும் வேதனைகளை வருடக்கணக்கில் வெளியே சொல்லாமலே குமைவதுதான் சோகம்.
ஒரு கணவன் தன் மனைவியிடம் வன்முறையைக் காட்ட ஆரம்பித்துவிட்டால் பிறகு அதற்கு முடிவே இல்லாமல் போகிறது. அதன் உக்கிரம் தீவிரமடைகிறதே தவிர குறைவதில்லை. குடிகாரக்கணவனிடம் மாட்டிக்கொண்டால் அந்த பெண்ணின் வாழ்வு அவ்வளவுதான். அடி உதைக்கு பஞ்சமிருக்காது.
தினசரி வாழ்க்கையில் பெரும்பாலான வீடுகளில் தங்கள் மனைவியின் உடல்நல முடிவுகளைக்கூட ஆண்களே எடுக்கின்றனர். தெற்காசிய நாடுகளில் 61% ஆண்கள் முடிவின் படிதான் குடும்பத்தாரின் உடல்நல சிகிச்சைகள் கூட தெரிவு செய்யப்படுகின்றன.
நீண்ட காலமாக கணவனால் கொடுமைப்படுத்தப்படும் பெண்கள் மனதை பயம்தான் பிடித்து ஆட்டுகிறது. அந்த பயம் தன்னைப் பற்றி மட்டுமில்லாமல் தன் குழந்தைகளுக்கும் கணவனால் ஆபத்து ஏற்படுமோ என்ற பயமாகவும் மாறுகிறது. எழை – பணக்காரர்கள், ஜாதி – மதம் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லா சமூகங்களைச் சேர்ந்த பெண்களும் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்
ஒரு பெண் ஏன் இத்தனை அநியாயங்களை சகித்துக்கொள்ளவேண்டும்? அதற்குப் பல காரணங்கள் உண்டு. இன்று எத்தனையோ விஷயங்கள் மாறிவிட்டாலும் ”மனைவி கணவனை விடத் தாழ்ந்தவள்” என்கிற கண்ணோட்டம் இன்னும் மாறவில்லை. வாழாவெட்டி என்ற ‘கான்செப்ட்‘டை இப்போதும் பத்திரமாகப் பேணிக்காத்து வருகிறார்கள்.
மகள் என்ன அவதிப்பட்டாலும் பெற்றோர் தரும் அட்வைஸ் இதுதான்: “நீதான் அனுசரித்துப் போகவேண்டும்.” கணவன் ஒரு பொறுக்கியாக இருந்தாலும் அவனைப் பிரிந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டது போல் மனைவி நினைப்பதும் இந்த சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது. வரதட்சிணைக் கொடுமை என்றால் கூட போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க வைக்கலாம்.
ஒரு கணவன் தன் மனைவியைக் கொடுமைப்படுத்த எத்தனையோ காரணங்கள் இருக்கும். ஆனால் வரதட்சிணைக் கொடுமைக்குத்தான் போலீஸ் முக்கியத்துவம் கொடுக்கிறது. ‘சாதா’ கொடுமைகளை குடும்ப விவகாரம், அவர்களே பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டிய விஷயம் என்று அலட்சியப்படுத்துகிறது.
தொடர்ந்து அடிபட்டு, அடிபட்டு ஓய்ந்து போன மனைவிகளுக்கு அதுதான் வாழ்க்கை என்று ஆகிவிடுகிறது. தாழ்வு மனப்பான்மை, விரக்தி எல்லாம் உருவாகி அவர்கள் அடங்கிப் போகிறார்கள். இவர்களில் சிலர்தான் உயிரோடு எரிந்து சாகிறார்கள்.
கணவர்கள் எதற்காகத் தங்கள் மனைவிகளைக் கொடுமைப்படுத்துகிறார்கள்? கணவர்களே தங்கள் சிறு வயதில் பெற்றோரால் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம், அவர்கள் தாய் அவர்கள் கண்முன் அடித்து உதைக்கப்பட்டிருக்கலாம், அவர்கள் அலுவலகத்தில் மேலதிகாரியிடம் திட்டு வாங்கியிருக்கலாம், அல்லது தாழ்வு மனப்பான்மை இருக்கலாம்.
ஒரு கணவனால் வீட்டில் மட்டும்தான் எந்த ஆபத்தும் இல்லாமல் தன் உள்மன வன்முறையை வெளியே காட்ட முடிகிறது. மனைவியை அடித்தால் அவள் திருப்பி அடிக்கவா போகிறாள்? அப்புறம் மன்னிப்பு கேட்டால் போயிற்று! மனதில் இருக்கும் அத்தனை கோபங்களையும் காட்ட மனைவிதான் சரியான இலக்கு.
பொதுவாக மனைவியைச் சித்திரவதை செய்வது மூன்று கட்டங்களில் நடக்கிறது :
முதலில் சின்னச் சின்ன சண்டைகள், பிறகு அடி உதை, பிறகு குற்ற உணர்வு ஏற்பட்டு மனைவியிடம் மன்னிப்பு கேட்டுக் கொஞ்சுகிறார்கள். மன்னிப்பு கேட்பது கூட சில தம்பதிகள் விஷயத்தில்தான் நடக்கிறது.
பிரச்னை எப்படி வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். கணவனிடம் பணம் கேட்பது (பெரும்பாலும் வீட்டு செலவுக்காகத்தான் இருக்கும்; நகை, புடவை வாங்குவதற்கு கணவனை நச்சரிக்கும் பெண்கள் கை எப்போதும் ஓங்கியிருக்கும்), கணவனிடம் வீட்டு வேலை செய்ய உதவி கேட்பது, அவள் சமையல் கணவனுக்குப் பிடிக்காமல் போவது, ‘மூட்’ இல்லாததால் மனைவி உடலுறவு கொள்ள மறுப்பது – இப்படி எதிலும் தொடங்கும்.
இதற்கு அடுத்து, அவளுக்குப் பல விதமான ‘தண்டனை’கள் கிடைக்கின்றன. பல கணவர்கள் தங்கள் மனைவிகளை அடிக்கிறார்கள், கழுத்தை நெரிக்கிறார்கள், எட்டி உதைக்கிறார்கள், கத்தியால் கீறுகிறார்கள், சுவற்றில் மோதுகிறார்கள், தள்ளுகிறார்கள், அவள் நடத்தையைப் பற்றி சம்பந்தமில்லாமல், மிக மோசமாக, இன்னும் சொல்லப்போனால் காது கூசும் அளவுக்குக்கூட திட்டுகிறார்கள்.
அடுத்தது மன்னிப்பு கேட்கும் படலம். அடித்த பிறகு கணவனுக்குக் குற்ற உணர்வு ஏற்படுகிறதா, நிஜமாகவே மன்னிப்பு கேட்கிறானா, அல்லது அவனுக்குத் தன் மனைவி மேல் உண்மையான காதல் இருக்கிறதா என்பதெல்லாம் முக்கியமில்லை. தன் மீது எந்த விதமான வன்முறையிலும் ஈடுபட அவனுக்கு உரிமை இல்லை என்பதை மனைவி அவனுக்குப் புரிய வைக்க வேண்டும். அதற்கு சில நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
மனைவி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
ஒரு பெண் தன் பாதுகாப்புக்குப் பல முன்னேற்பாடுகளை செய்துகொள்ள முடியும். இவை மிகவும் சுலபம். கொஞ்சம் பணம், பட்டச் சான்றிதழ்கள் மற்றும் இதர சர்ட்டிஃபிகேட்கள் போன்ற ஆவணங்கள், கார் / பைக் சாவி, இதையெல்லாம் சட்டென்று கிடைக்கும் ரகசியமான இடத்தில் ஒளித்து வைக்கவேண்டும். அவசரம் என்றால் எடுத்துக்கொண்டு கிளம்ப வசதியாக இருக்கும்.
போலீஸ் மற்றும் நண்பர்களின் ஃபோன் நம்பர்களை கைக்குக் கிடைக்கும் இடத்தில் வைத்திருப்பது நல்லது. எப்போது வீட்டை விட்டு வெளியேறினாலும் (குழந்தை இருந்தால் குழந்தையுடன்) உடனே தங்குவதற்கு ஒரு இடத்தைத் தயார் செய்துகொள்வது ரொம்ப முக்கியம் – உதாரணமாக, ஒரு தோழியின் / தோழரின் / உறவினரின் வீடு, அல்லது ஏதாவது மகளிர் சேவை நிறுவன அலுவலகம்.
ஒரு விதத்தில் பார்த்தால் கணவன் அடிக்க வரும்போது, அதை வாங்கிக்கொண்டு சும்மா இருப்பதில்தான் பிரச்னை ஆரம்பிக்கிறது. கணவன் அடிக்க முயற்சி செய்தால் மனைவி தன்னால் முடிந்த வரை தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். கணவனை அடக்க முடியவில்லை என்றால் உடனே போலீசுக்கு ஃபோன் செய்யவேண்டும். உடனே தன் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.
அருகில் இருக்கும் மருத்துவமனையில் மருத்துவ உதவி பெறுவதும் அவசியம். எந்த இடங்களில் எந்த மாதிரி அடிபட்டது, எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பது போன்ற மருத்துவ ரெக்கார்டுகளும், தேவைப்பட்டால் அடிபட்ட இடங்களின் புகைப்படங்களும் கண்டிப்பாகத் தேவை. கணவன் மேல் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும்போது இவை மிகவும் உதவும்.
இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் உதவுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். அதைப் பெண்கள் மறந்துவிடக் கூடாது. நண்பர்கள் மட்டுமல்ல, பெண்களின் நலனுக்காகவே இயங்கும் ஆயிரத்தெட்டு தனியார் அமைப்புகள் உதவிக்கு வரத் தயார் நிலையில் இருக்கும். இவர்கள் ஒரு புது வாழ்க்கை தொடங்கவும் ஆலோசனை தருவார்கள்.
பெண்களுக்கான அவசர அடைக்கல மையங்கள், உடனடி தொலைபேசி உதவி சேவைகள், சமூக சேவை நிறுவன நிறுவனங்கள், மருத்துவமனைகளின் எமர்ஜென்சி ரூம்கள் என்று உதவி பெற இடத்திற்குப் பஞ்சமில்லை.
மற்றவர்கள் உதவுவது இருக்கட்டும். ஒரு பெண் முதலில் தான் ஒரு தனிநபர், பிறகுதான் ஒரு மனைவி, தாய் என்பதை மறந்துவிடக் கூடாது. கணவன் கொடுமைப்படுத்துகிறான் என்றால் அதை எப்படிக் கையாளுவது என்பது பற்றி அவள்தான் முடிவு செய்ய வேண்டும். சித்திரவதை செய்யப்படும் பெண்கள் தன்னைப் பற்றி உயர்வான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
ஜனிஃபர் பேக்கர் ஃப்ளெமிங் என்ற எழுத்தாளர் ‘Stopping Wife Abuse’ ‘ என்ற புத்தகத்தில் சில பயனுள்ள அட்வைஸ்களைத் தருகிறார். கணவனால் கொடுமைப்படுத்தப்படும் ஒரு பெண் கீழ்க்கண்ட விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும் என்கிறார் அவர் :
நான் அடித்து சித்திரவதை செய்யப்பட்டால் அதற்கு நான் காரணம் இல்லை. இன்னொருவனின் வன்முறையான நடத்தைக்கு நான் காரணம் ஆக முடியாது.
இந்த வன்முறை எனக்குப் பிடிக்கவில்லை. இதை நான் நிச்சயம் எதிர்ப்பேன். நான் இதை சகித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
நான் ஒரு முக்கியமான மனுஷி. நான் யாருக்கும் குறைந்தவள் இல்லை.
நான் மற்றவர்களின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் தகுதியானவள். என்னை மதிப்பவர்களைத்தான் நானும் மதிப்பேன்.
என் வாழ்க்கை என் கையில்தான் இருக்கிறது. என் கையில்தான் இருக்க முடியும்.
என் உரிமைகளைப் பயன்படுத்தி என்னை நான் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
எனக்கு எது நல்லது என்று நானே முடிவு செய்ய முடியும்.
என் வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று நான் விரும்பினால் அதை நான் நிச்சயம் செய்ய முடியும்.
நான் நிராதரவானவள் இல்லை. எனக்கு யாரும் அபலைப் பட்டம் கட்ட முடியாது. எனக்கு மற்றவர்களின் உதவி சுலபமாகக் கிடைக்கும்.
என் வாழ்க்கையை பாதுகாப்பாக, சந்தோஷமாக வைத்துக்கொள்ள எனக்கு உரிமை உண்டு.
மனைவியைக் கொடுமைப்படுத்துவது என்கிற சமூகத் தீமைக்கு இன்னதுதான் காரணம் என்று சுட்டிக்காட்ட முடியாது. சமூகம் வன்முறையை சகித்துக்கொள்வதற்கு பதிலாக அதை முறியடிப்பதில் இறங்கினால்தான் இந்தத் தீமையை ஒழிக்க முடியும். எந்த காரணத்திற்காகவும் யாரையும் சித்திரவதை செய்ய யாருக்கும் உரிமை இல்லை. அதே போல சமூகமும் பெண்களைப் பற்றி வைத்திருக்கும் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.
பெண்கள் கணவர்களால் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சகித்துக்கொண்டால் அது குழந்தைகளை பாதிக்கும் என்பதை மறக்கக் கூடாது. இல்லையென்றால் அது இன்னொரு தலைமுறைக்கும் தொற்றிக்கொள்ளும், தொடரும். கோபத்தைக் கையாள்வது எப்படி என்று ஒரு தாய் தன் மகனுக்கும் கற்றுக்கொடுக்க இது ஒரு வாய்ப்பு. கொடுமையைத் தாங்கிக்கொண்டால் பிறகு ஒரு நாள் மகனும் தந்தையைப் போல்தான் நடந்துகொள்வான்.
அடக்கம், பணிவு, விட்டுக் கொடுத்துப் போற குணம் எல்லாமே பெண்களுக்கு வேணும்தான். ஆனா, எதுக்குமே ஒரு எல்லை இருக்கு. விட்டுக்கொடுத்துப் போகணுமேங்கிறதுக்காக நம்மளோட சுயமரியாதையையும் மனதிருப்தியையும் இழக்கவேண்டிய அவசியமில்லை. மீறினா, அது மனநோய்லதான் கொண்டுபோய் விடும்.