வீடு கட்டுவதில் மூடப் பழக்கங்கள்
வாழ்க்கையில் சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்று ஆசை ஏற்படுவது அனைவருக்கும் இயல்பு. அப்படி வீடுகட்டும்போது, மார்க்கத்திற்கு முரணில்லா வகையிலும், ஷிர்க் (இணை வைத்தல்) எந்த வகையிலும் ஏற்படா வண்ணமும் வீடு கட்டப்பட வேண்டும்.
வீடு கட்டுவதற்கு முன், வீட்டு மனையின் அளவையும் அமைப்பையும் பொறுத்து கட்டடப் பொறியாளரைக் கொண்டோ அல்லது அனுபவம் உள்ளவர்களைக் கொண்டோ நம் வசதிக்குத் தகுந்தபடி திட்டமிட்டுக் கட்டுவது நல்லது தான். அதற்காகச் சிலர் வாஸ்து சாஸ்திரம் – மனையடி சாஸ்திரம் என்னும் பெயரில் ஏமாற்றுச் சாஸ்திரங்களில் தங்கள் ஈமானை இழக்கின்றனர்.
மனையடி சாஸ்திரத்தில் ஒரு அளவைக் குறிப்பிட்டு இந்த அளவில் வீட்டின் நீள அகலம் இருந்தால் மரணம் ஏற்படும் என்று குறிப்பிடப் பட்டிருக்கும். அப்படியானால் அந்த அளவைத் தவிர்த்துக் கட்டப் படும் எந்த வீடுகளிலும் யாருமே மரணம் அடைவதில்லையா?
மனையடி சாஸ்திரம் மரணத்தைத் தடுக்காது. இரும்புக் கோட்டைக்குள் இருந்தாலும் ஒரு நாள் இறப்பது நிச்சயம். நாம் வசிக்க உருவாக்கும் வீட்டை, நம் வசதிக்கு ஏற்றபடியும், இடத்திற்குத் தக்கபடியும், நீள அகலங்களை நாம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர – வாஸது சாஸ்திரம் பார்த்து வாசற்படிகளை மாற்றி அமைப்பது, மனித வாழ்க்கையில் எவ்வித மாறுதலையும் ஏற்படுத்தாது.
எந்த சாஸ்திரமும் – சம்பிரதாயமும் இன்றி அரபு நாடுகளிலும் மேலை நாடுகளிலும் கட்டப் பட்ட வீடுகளில் வசிப்போர் – நல்ல வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். இன்னமும் மூட சாஸ்திரங்களை முழுக்க முழுக்க நம்பிக் கொண்டிருப்பவர்கள் சிந்திக்க வேண்டாமா?
கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் – அநாச்சாரத்தில் ஆரம்பிக்கப் படுவதும்– கட்டுகிற வீடு நமக்கு உரியது என்பதைக் கூட மறந்து,
கட்டுபவர்களின் கலாச்சாரப்படி அனைத்து வகை ஆச்சாரங்களையும் அனுமதிப்பதும், அங்கீகரிப்பதும்,
கதவு நிலை வைப்பதற்குக் கூட காலமும் நேரமும் பார்த்து,
பூவும் பொட்டும் வைத்து, பூஜை புனஸ்காரங்கள் செய்வதும்,
காங்கிரீட் போடும் போது ஆடும் கோழியும் அறுத்து பலியிடுவதும்,
கட்டிய வீட்டுக்குக் கண் பட்டுவிடும் என்று பூசனிக்காய் கட்டித் தொங்க வீடுவதும்,
புதிய வீடு கட்டி முடித்த பின் மூலைக்கு மூலை பாங்கு சொல்வதும்,
முதல் வேலையாக பால் காய்ச்சுவதும்,
கூலிக்கு ஆள் பிடித்து குர்ஆனும் – மௌலூதும் ஓதுவதும்
இவைகள் யாவுமே புனித இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டவை என்பதை உணர வேண்டும்.
குர்ஆன் ஓதுவது எப்படித் தவறாகும்? என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். புதுமனை புகு விழாவுக்கு மட்டும் – அதுவும் கூலிக்கு ஆள் பிடித்து ஓதுவதற்கு அருளப்பட்டதல்ல குர்ஆன். குர்ஆன் எப்போதும் ஓதப்பட வேண்டும். குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஓத வேண்டும். சடங்காக்கப்படக் கூடாது. சொந்தமாக வீடு கட்டுவது என்பது சராசரி மனிதனுக்கு ஒரு சாதனை தான். எந்த வகையிலும் இந்த சாதனையில், அநாச்சாரம் நுழைந்து விடாமலும், ஷிர்க் ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
பிறந்தநாள் விழாவும்— பெயர் சூட்டு விழாவும்
பிறந்த குழந்தைக்கு 7 ஆம் நாள், ஆண் குழந்தையாக இருப்பின் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாக இருப்பின் ஒரு ஆடும் அறுத்து அகீகா கொடுக்க வேண்டும். இது நபிவழி. ஆனால் இந்த சுன்னத் (நபி வழி) புறக்கணிக்கப்பட்டு ஒரு பித்அத் உருவாகிவிட்டது. குழந்தை பிறந்த 40 ஆம் நாள் அன்று தடபுடலாக விருந்து வைத்துப் ‘பெயர் சூட்டு விழா” என்று ‘அசரத்தைக“; கூப்பிட்டு பெயர் சூட்டப்படுகிறது.
குழந்தை பிறந்தாலும் 40. திரு மணத்திலும் 40. இறந்தவர் வீட்டிலும் 40. சித்த மருத்துவத்தில் மருந்து சாப்பிட ஏற்பட்ட இந்த ‘மண்டலக்” கணக்கிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
பெயர் சூட்டுவதற்கு ஒரு விழா வைத்து அசரத்தைக் கூப்பிட்டுத் தான் பெயர் வைக்க வேண்டும் என்பதில்லை. விருப்பமான பெயரைத் தேர்வு செய்து குழந்தைக்கு அதிக உரிமையுள்ள தாயோ, தந்தையோ கூப்பிட வேண்டியது தான். இதற்கென்று எந்தச் சடங்கும் மார்க்கத்தில் இல்லை.
சிலர் வருடந்தோறும், குழந்தையின் பிறந்த நாளைர் கொண்டாடுகின்றனர். லீப் வருடத்தில் பிப்ரவரி 29 அன்று பிறந்த குழந்தைக்கு வருடந்தோறும் எப்படிக் கொண்டாடுவார்களோ? தெரியவில்லை. இன்னும் சிலர் அநாச்சாரத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று குழந்தையின் வயதுக் கணக்குப்படி மெழுகுவர்த்தி ஏற்றி, கேக் வெட்டி ‘ஹேப்பி பர்த் டே” கொண்டாடுகின்றனர்.
இது முழுக்க முழுக்க ஓர் அந்நியக் கலாச்சாரம். இதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி இல்லை. ‘யார் அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல.” என்பது நபி மொழி. இஸ்லாமியப் பெற்றோருக்குப் பிறந்த குழந்தையைச் சிறு வயது முதலே இஸ்லாமியக் கலாச்சாரத்தின் படி வளர்க்க வேண்டும். குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஐவேளையும் தொழப் பழக்க வேண்டும். முழுக்க முழுக்க முஸ்லிம் குழந்தையாகப் பழக்கவும் வளர்க்கவும் வேண்டும்.
வெட்கங்கெட்ட விருத்தசேதன விழா
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையைப் பின் பற்றிச் செய்யப்படும் அனைத்துச் செயல்களும் ‘சுன்னத்” ஆகும். நகம் வெட்டுவதும், தாடி வைப்பதும், தேவையற்ற முடிகளைக் களைவதும், பல் துலக்குவதும், இன்னும் இது போன்ற ஏராளமான சுன்னத்துகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் யாரும் விழா நடத்தி விருந்து வைப்பதில்லை.
ஆனால் ஆண் குழந்தைகளுக்கு ‘கத்னா” என்னும் விருத்தசேதனம் செய்வதற்கு, ‘சுன்னத்” என்நு பெயர் வைத்து பத்திரிகை அடித்து, ஊர் வலம் வைத்து, விழா நடத்தி விருந்து போடுவதும், பெரும் பொருள் செலவு செய்து ஆடம்பரமாகக் கொண்டாடுவதும், பரவலாகக் கொண்டாடப் படுகிறது. இது மிகவும் கண்டிக்கப் படவேண்டிய தவறானப் பழக்கம்.
நகம் வெட்டுவதற்கு ஒப்பான– இந்த சாதாரனச் செயலைச் சிலர் – தம்மிடம் பணம் இருக்கின்றது என்ற காரணத்துக்காக – வெகு விமரிசையாகக் கொண்டாடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பணக்காரர்கள் செய்யும் இந்த பண்பாடற்றச் செயலைப் பார்த்து – எத்தனையோ ஏழைக் குடும்பத்தினர், இதற்கென ஆகும் செலவுகளுக்கு அஞ்சி, தம் குழந்தைகளுக்குப் பல வருடங்கள் வரை கத்னா செய்யாமல் காலம் கடத்துகின்றனர்.
வசதி படைத்தவர்கள், விருத்த சேதன விழா நடத்தும் செலவில் – தங்கள் பகுதியில் உள்ள ஏழைச் சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து – மருத்துவரிடம் அழைத்துச் சென்று (சுன்னத்) கத்னா செய்வதற்கு முயற்சி எடுத்தால், உண்மையான ‘சுன்னத்“தை நிறைவேற்றிய நன்மையும் கிடைக்கும். மிகப்பெரும் அநாச்சாரத்தை தடுத்து நிறுத்திய புண்ணியமும் கிடைக்கும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்