[ அருமையான கட்டுரை ]
முன்னேற்றத்தின் மூலதளங்கள்
டாக்டர். பெரு. மதியழகன்
வேலை கிடைத்துவிடுவதே முன்னேற்றம் என்றாகி விடாது. தமக்கு அளித்த வேலையை சிறப்பாகச் செய்து முடிப்பது மிக முக்கியம். ஒவ்வொரு நாளும் நம்மை சுய பரிசோதனை, சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
வேலையைத் திருத்தமாக செய்வதும், விரைவாக செய்வதும், குறித்த காலத்தில் செய்து முடிப்பதும் அவசியம். இதற்கு, செய்கின்ற பணியின் சகல பரிமாணங்களையும் அறிந்து தெளிதல் நன்று. இல்லை என்றால் பணிகள் தாமதமாகும். அலுவலரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். சுடுசொற்கள் சுடும். மனம் ரணமாகும். பணிச்சூழல் பாதிக்கப்படும். நம்மைவிட பலமடங்கு திறமைசாலிகள் பல ஆயிரம் பேர் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள் என்ற உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.
பணியாற்றுகிற இடத்தில் உயர் அதிகாரிகளை, மூத்தவர்களை மதித்து நடத்தல், உடன் பணியாற்றுகின்றவர்கள் ஒப்புறவுடன் பழகுதலும் நல்ல பணிச் சூழலை உருவாக்கித் தரும். தன்னைவிட தன் நாடு முக்கியம் என்றமனப்பான்மை வேண்டும். அப்போதுதான் பணியாற்றுவது நம் வயிற்றுப் பிழைப்புக்காக என்றில்லாமல் ஏதேனும் ஒரு வகையில் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு என்ற உணர்வுடன் பணியாற்றவேண்டும்.
தான் பணியாற்றும் துறையை, அலுவலகத்தை தமது என எண்ணி பணியாற்றும் மனம் வேண்டும். அப்படி எண்ணும் போது பணியில் ஈடுபாடும், நாட்டமும் மிகும். நூறு விழுக்காடு ஈடுபாட்டுடன் பணியாற்றும் போது வேலை சுமையாக இருக்காது. சுகமாக இருக்கும். வேலையே ஒரு வேள்வியாக இருக்கும். குறித்த நேரத்தில் பணிகள் பிழையின்றி, குறைவின்றி நிறைவடையும். அதனால் உற்பத்தித் திறன் மிகுந்திருக்கும்.
தாமதமானாலும், உங்களுக்கு உரிய உயர்வும் முன்னேற்றமும் ஒழிவின்றி உங்களை வந்தடையும். ஒருவரும் உங்கள் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்திவிட முடியாது.
ஆனால் இப்போதெல்லாம் வேலை வேண்டி வருகிறார்கள். வேலை கிடைக்கும் வரை சகல பொய்களையும் சொல்லி வாங்கி விடுகிறார்கள். பிறகு அவர்களிடத்தில் வேலை வாங்குவதே அதிகாரிக்கு பெரிய வேலையாகிவிடுகிறது. வேலை கிடைக்கும் வரை எங்கு சென்றும் பணியாற்றத்தயார் என்பார்கள். வேலை கிடைத்துவிட்டால் பிறகு உடனே தன் வீட்டு பக்கத்திலேயே மாறுதல் வேண்டும்.
தனியார் நிறுவனங்களில் இந்த மாறுதல் சிக்கல் அதிகம் இருப்பதில்லை. ஆனால் அரசுத்துறையில் பணியாற்றுகிறவர்கள், வேலையில் சேர்ந்த மறுகணமே மாறுதலுக்கு முயற்சி செய்ய தொடங்கி விடு கிறார்கள். மாறுதல் கிடைக்கவில்லையா? விடுப்பு போட்டுவிட்டு போய்விடுவார்கள். இவர்கள், தாம் ஏற்றுள்ள பணிக்கும் நிறுவனத்திற்கும் முக்கியத்துவம் தருவ தில்லை. விடுப்பு எடுப்பது ஊழியருக்காக வழங்கப்பட்டிருக்கும் சலுகை. அதை அவசியமான நேரத்தில் எடுப்பதே அறம். ஆனால் விடுப்பு தன் கணக்கில் இருக்கிறது என்பதற்காக விடுப்பு எடுப்பது சரியன்று. முதுமை, நோய், எதிர்பாராத குடும்பச் சூழல் இப்படி விடுப்பெடுப்பது தவறில்லை. நீங்கள் முன்னேறியவர்களை கவனித்துப் பாருங்கள். சலியாமல் உழைப்பார்கள். அவர்கள் கணக்கில் விடுப்பு எப்போதும் ஒவ்வோர் ஆண்டும் பயன்படுத்தப்படாமல் இருக்கும்.
வளர்ந்த நாடுகளில் கண்டதற்கெல்லாம் விடுப்பு அறிவிக்கிற பழக்கம் இல்லை. நாட்டின் அதிபரே காலமானாலும் கூட ஒரு 5 நிமிடம் அஞ்சலி செலுத்திவிட்டு பணியைத் தொடர்கிறார்கள். இங்கு அப்படியா நடக்கிறது. சமயசார்பற்ற நாட்டில் சமயத்தின் பெயரால் நடைபெறுகிற விழாக்களை கொண்டாட விடுமுறையை அரசே அறிவிக்கிறது. மதம் சார்ந்து நடைபெறும் சில விழாக்கள் அனைத்தும் வன்முறையோடும், ஆவேசத்தோடும், பொது சொத்துக்களுக்கு சேதத்தோடுமே நடைபெறுகிறது. இதற்கெல்லாம் விடுமுறை அளித்து நாட்டின் உற்பத்தியையும், பாதிக்கச் செய்வதைப் பற்றி முன்னேற வேண்டிய நாம் சிந்திக்க வேண்டும்.
வேலைத்திறனை பாதிக்கிற காரணிகளால் மிக முக்கியமானவற்றில் இதுவும் ஒன்று. வேலை செய்கிற சூழலும், நம்முடன் பணியாற்றுகிறவர்களை நமக்குப் பிடிக்காமல் போவதுமே ஆகும். அலுவலக பணியாளர்களிடையே அன்புகலந்த நட்பு இல்லை. நட்பில் உண்மை இல்லை. வெறும் உதட்டளவில் சிரிப்பும், உள்ளத்தில் நஞ்சுடனுமே பழகுவதால் ஆரோக்கியமான பணிச்சூழல் இல்லை. பணியாளரிடையே ஒற்றுமை இல்லை.
அருகில் அமர்ந்து நம்முடன் பணியாற்றுபவருடனும் சுமுக உறவு இல்லை என்றால் வேலை என்பது வேப்பங் காயாகவே இருக்கும். அலுவலகத்தில் இருக்கும் நேரம் முழுவதும் மன அழுத்தத்தில், கழித்திட நேரிடும். இப்படிப்பட்ட சூழலில் ஆற்றல் முழுமையாக வெளிப்படாது. பொதுவாக நம்முடன் பணியாற்றுபவருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்து காழ்ப் புணர்ச்சியை வளர்த்துக் கொள்கிறவர்களே அதிகம். ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்பதை உணர்ந்து கொண்டால் அங்கே புரிதல் இருக்கும். நட்பு மலரும். எனவே அலுவலகத்தில் சக பணியாளர்களின்
நட்பை வளர்த்துக்கொள்வது உங்கள் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை நிற்கும்.
இப்போதெல்லாம் குறிப்பாக அரசு அலுவலகங்களில் கடமையுணர்வுடன் பணி யாற்றுகிறவர்கள் குறைந்து வருகிறார்கள். வெகு சிலரே உண்மையான ஊழியர்களாக உழைக்கிறார்கள். சிலர் வேலை செய்வதாக நடிக்கிறார்கள். சிலர் வேலை செய்யாமலேயே ஊதியம் பெறுகிறார்கள். இன்னும் சிலர் ”மேய்கிற மாட்டை நக்குகிற மாடு கெடுத்தது” என்பது போல வேலை செய்பவர்களையும் வேலை செய்ய விடாது இடையூறு செய்கிறார்கள் எந்நேரமும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அரைமணி நேரத்திற்கு மேல் ஓரிடத்தில் உட்கார்ந்து வேலை பார்த்தால் சிலருக்கு தலை சிதறிவிடும்.
காலையில் அலுவலகம் வந்தால் உடனே வேலையைத் தொடங்க முடியாது. அலுவலத்தை திறந்து, பணியாளர்கள் கூட்டி துடைத்து முடிக்க குறைந்தது கால் மணி நேரமாகிவிடும். அடுத்து ஆறஅமர பணியைத் தொடங்க மேலும் கால்மணி நேரம் ஆகிவிடும். வளர்ந்த நாடுகளில் நான் கண்டதைக் குறிப்பிட விரும்புகிறேன். காலை 9 மணிக்கு அலுவலகம் என்றால் அதற்கு முன்பே துப்புரவுப் பணியாளர் வந்து கூட்டிப் பெருக்கித் துடைத்து தூய்மை செய்து விடுகிறார்.
மேலும் நாம் 9 மணிக்கு அலுவலகம் வந்து 9.30 மணிக்கு பணியைத் தொடங்கினால் அடுத்து தொலைபேசியில் அழைத்து யாராவது பேசுவார்கள். பிறகு யாராவது திருமண அழைப்பிதழ் கொண்டு வருவார்கள், அல்லது நண்பர்கள் வருவார்கள். பின்பு 11 மணி ஆகிவிட்டால் உடனே டீ கடை, கேண்டீன் சென்றுவர அரைமணி நேரம். இடையில் அவர் இப்படி இவர் இப்படி என்று புறம் பேசித் திரிவர். மாலை 1 மணி முதல் 2 மணி வரை உணவுக்கு, மீண்டு 3.30 மணிக்கு ஒரு முறைதேநீர். மாலை 4.30 மணி ஆனதும் புறப்பட மூட்டை கட்டி தயாராகிவிடுவார். கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஒருநாளைக்கு 4 மணி நேரம் உருப்படியாக பணியாற்றினால் அதுவே பெரிது. இத்தகைய பணியாளர்களால் முன்னேற்றம் வருமா?
ஆண்கள் ஒழுங்காக வேலை செய்ய மாட்டார்கள். பெண்கள்தான் கருமமே கண்ணாக வேலை செய்வார்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால் அவர்களும் இந்த வகையில் 50% யாரும் கொடுக் காமலேயே எடுத்துக் கொண்டுவிட்டார்கள். மேலதிகாரிகள் குறைகளைச் சுட்டி காட்டினால் அவர்மீதே வீண்பழி சுமத்தி விடுகிறார்கள். இதனலேயே சிலர் நமக்கு ஏன் வம்பு என்று கண்டும் காணாமல் இருந்து விடுகிறார்கள். ஏமாற்றுவதில் ஆணுக்கு பெண் சரிநிகர்தான்.
அரசுத்துறையில் வேலை வாய்ப்புகள் அற்றுப் போனதால் தனியார் நிறுவனங் களின் படிகளில் தவமிருக்கும் இளைஞர் களின் எண்ணிக்கை மிகுதி. தனியார் நிறுவனங்களில் நல்ல பணிகளை நகரத்து மாணவர்கள் அதிகம் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். இவர்கள் கிராமத்து மாணவர்களை விட நகரத்து மாணவர்கள் எளிதில் தேர்வாளர்களை நடை, உடை, பாவணை, தன்னம்பிக்கை, கொஞ்சம் ஆங்கிலம் ஆகியவற்றால் கவர்ந்து விடுகிறார்கள்.
பல இளைஞர்கள் பல அலுவலகங்களின் படி ஏறி இறங்கி விட்டு மனம் தளர்ந்து முதலில் ஏதோ ஒரு வேலை என்று தீர்மானித்து குறைந்த ஊதியம் என்றாலும் கூட எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என பணியேற்கிறார்கள்.
இந்தகால இளைஞர்களின் உழைப்பை ரூ.1000, 2000க்கு (அடிமாட்டு விலைக்கு) சுரண்டிவிடுகிறார்கள். பெரிய படிப்பு படித்திருந்தாலும் ஏற்றபணியும் எடுப்பான ஊதியமும் இல்லையே என ஏங்கிப்போய் நிற்கிறார்கள். ”இம்”மென்றால் சிறைவாசம் ”ஏன்?” என்றால் வனவாசம் என்று ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இந்தியர் நிலையைச் சொல்வார்கள். தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் நிலை பல இடங்களில்: ”உங்களுக்கு ஒத்து வரவில்லையென்றால் தாராளமாக வேலையை விட்டுப் போங்கள்” என்னும் படியான நிலைதான்.
உழைப்புக்கு ஏற்றஊதியம் இல்லையே என நினைத்தவுடன் இந்த இளைஞர்கள் உடைந்து போய் விடுகிறார்கள். இவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்வது இதுதான். இளைஞர்களே இது ஒன்றும் நிரந்தரம் இல்லை. இதை நீங்கள் பயிற்சி பெறும் காலமாக எடுத்துக் கொள்ளுங்கள். திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். அல்லது வாய்ப்புகளை நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். இப்படி நேர்மறையாக செயல்பட்டால் முன்னேற்றம் உறுதி.
வேலை கிடைப்பது, வேலை செய்வது, வேலைத்திறன் இவையெல்லாம் முன்னேற்றத்திற்கான மூலதளமாக இருக்கின்றனவோ, அதேபோல வேலையாட்கள், ஊழியர்களிடத்திலே பணியை முடிக்க வைக்கிற, நிறுவேற்றுகிற திறன், நிர்வாகியாக இருக்கிற நிறுவனத்தின் அல்லது அந்தக் குழுவின் தலைவருக்கு வேண்டும்.
நிறுவனத்தின் நிர்வாகியாக வருகிறவர் பெரிய அறிஞர்களாக இருக்க வேண்டும் என்றஅவசியம் இல்லை. அறிந்து கொண்டு அலசி ஆராய்ந்து விரைந்து முடிவெடுக்கும் திறன் மிக்கவர்களாக வேண்டும். மாறாக மிகச்சிறந்த அறிவாளிகளாக, விஞ்ஞானிகளாக இருந்த பலர் நிர்வாகத்தில் பூஜியமாக இருந்திருக்கிறார்கள். நிர்வாகத் திறமை இன்மையால் அவர்கள் நடத்திய நிறுவனங்கள் பெரிய சரிவுகளுக்கும், வீழ்ச் சிக்கும் உள்ளானதுண்டு. அப்படிப்பட்ட வர்களின் நிர்வாகத்தில் பணியாற்றியவர்கள் நொந்து நூலாகிப் போயிருக்கிறார்கள்.ource:
சபலபுத்திக்காரர்கள், சந்தேகப் பேர் வழிகள், இரக்கமற்ற குரூர மனத்தவர்கள், பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்கள் மற்றும் பணத்தாசை பிடித்தவர்கள், இவர்கள் நிர்வாகியாகும் பட்சத்தில் அங்கே பணியாற்றுவோர் கதி அதோ கதிதான்.
ஒரு சிறந்த நிர்வாகியின் வேலை, பணியாளர்களை தட்டிக்கொடுத்து, பாராட்டி, ஊக்குவித்து பணியாற்றச் செய்வதும், குறைகள் இருந்தால் அதை முறையாகச் சுட்டிக்காட்டி, அறிவுறுத்தி மீண்டும் அந்த தவறு நிகழாமல் செய்வதே சிறப்பாகும். அதை விடுத்து மிகச்சிறிய தவறுக்கு பணியாளரை திட்டித்தீர்த்து, மனதைக் குத்திக் கிழித்து ரணப்படுத்தி, அழவைத்து ஆனந்தம் அடைபவர் நல்ல நிர்வாகியாக இருக்க முடியாது.
எபோதும் ஊழியர்களை சந்தேகக் கண்கொண்டு எதிர்மறையான அணுகு முறையைக் கொண்டிருக்கும் நிர்வாகிகள் நடத்தும் நிறுவனம் முன்னேற்றம் காண்பது முயற்கொம்பே! மிகச்சிறந்த அறிவாளிகளாக இருந்தும் மனிதத்தன்மை இல்லாது போனால் அத்தகையவர்களிடம் பணி
புரிவோர் மிகவும் மன அழுத்தத்திலேயே இருப்பார்கள். அந்த அறிவாளிக்கு தலை மட்டுமல்ல, உடம்பெல்லாம் மூளை, மூளை எல்லாம் சிந்தனை, சிந்தனை எல்லாம் வஞ்சனை என்றே இருக்கக் கண்டும் கேட்டும் இருக்கிறோம்.