2009 ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ஒரு நல்ல அறிவிப்பைச் செய்தது. உயர் கல்விக்காக வங்கிகளில் கடன் பெற்றுள்ள, பெறப் போகிற அனைவருக்கும் மகிழ்ச்சி தந்த அறிவிப்பு. அதாவது, கல்விக் கடன் மீதான வட்டித் தொகையை அரசே ஏற்றுக்கொள்ளும் என்பதுதான் அது.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்கு மிகாத அனைத்துத் தரப்பினருக்கும் இந்த வட்டி மானியம் கிடைக்கும் என்றும், 2009-10-ம் கல்வியாண்டு முதலாக இது அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. (அதாவது வட்டி என்ற பெயரில் எதையும் கட்ட வேண்டாம்.)
தொழிற்கல்விக்காக வங்கிகளிடம் பெறும் கடன் தொகையில் அசலைச் செலுத்தாமல் வெறுமனே வட்டியை மட்டுமே செலுத்தி வர வங்கிகள் அனுமதிக்கின்றன. அதாவது பட்டம் பெற்று ஓராண்டு வரை அல்லது வேலை கிடைத்த 6 மாதங்கள் வரை வட்டி மட்டுமே செலுத்தினால் போதும். அதன் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கலாம். மத்திய அரசின் அறிவிப்புப்படி, வங்கிகள் அனுமதிக்கும் இந்தக் காலகட்டம் வரை, மாணவர்கள் தங்கள் கல்விக் கடனுக்கு வட்டி கட்ட வேண்டியதில்லை.இந்த அறிவிப்பு உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்றே சொல்லலாம். ஏனென்றால், கல்விக் கடன் கொடுத்த பல வங்கிகள், வட்டியை மாதந்தோறும் செலுத்த வற்புறுத்துகின்றன. அவ்வாறு வட்டியைச் செலுத்தி வரும் மாணவர்களுக்கு மட்டுமே அடுத்த கல்வி ஆண்டில் உடனடியாகப் பணம் தருகிறார்கள். வட்டி செலுத்தாத மாணவர்களை வேண்டுமென்றே இழுத்தடிக்கிறார்கள் என்பதே உண்மை நிலைமை. இதனால் கந்துவட்டிக்குக் கடன் வாங்கி, முதலில் கல்லூரிக்குச் செலுத்திவிட்டு, பிறகு வங்கிக்கு நடையாய் நடந்து பணத்தைப் பெற்று, கந்துவட்டிக் கடனைத் தீர்க்கும் பெற்றோரின் துயரம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
உயர்கல்வி பயில்வோருக்கு, மொத்தம் ரூ.4 லட்சம் வரை கடனை நிர்ணயித்திருந்தால், ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும். முதலாண்டில் இந்த ஒரு லட்சத்துக்கு வட்டி ஏறக்குறைய மாதந்தோறும் ரூ.1000 வரை. இரண்டாம் ஆண்டு இது ரூ.2000 ஆகிறது. பல குடும்பங்களால் இந்த வட்டியைக் கட்ட முடியாத நிலை. படித்து வேலைக்குப் போய் நானே கட்டிக் கொள்கிறேன் என்று சொல்லும் பிள்ளைகளின் அன்புக்காகக் கடன் பெற்றுவிட்டு, வங்கியிடம் வட்டி கட்ட முடியாமல் அவதிப்படும் குடும்பங்கள் நிறைய. ஆகவேதான் இந்த மத்திய அரசின் அறிவிப்பு வெளியானவுடன் கல்விக்கடன் வாங்கிய பெற்றோர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்.
ஆனால் இதுவரை எந்த வங்கியிலும் வட்டிக் கடன் மானியம் பற்றி பேச்சே இல்லை. உத்தரவை எதிர்பார்த்திருக்கிறோம் என்பதுதான் பதிலாக இருந்தது. இந்நிலையில், இப்போதுதான் மத்திய அரசு மாநில அரசுக்கு இந்த வங்கிக் கடன் மானியம் பற்றி கடிதம் அனுப்பியிருக்கிறது.
அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் கல்விக் கடன் பெற்றுள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு மத்திய அரசு அளிக்கவுள்ள வட்டி மானியத்தை வழங்க, அவர்களுக்கான வருவாய்ச் சான்றிதழ் அளிக்க வேண்டியது யார் என்பதை நிர்ணயிக்குமாறும், இதுபற்றி மாநிலத்தில் விரிவான விளம்பரம் தரும்படியும் இந்தக் கடிதத்தில் மத்திய அரசு மாநில அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இனி மாநில அரசு, அறிவிப்பை வெளியிட்டு, அதன் பின்னர் அந்தச் சான்றிதழ்களை சமர்ப்பித்து வட்டி மானியத்தைப் பெறும் முயற்சியில் மாணவர்களும் பெற்றோரும் ஈடுபட வேண்டும்.
2009 ஆகஸ்ட் மாதம், இந்த கல்விக் கடன் மீதான வட்டி மானியம் குறித்து அறிவிப்பு செய்தபோதே, மாநில அரசுக்கு ஒரு கோரிக்கையை வைத்திருந்தால் இந்நேரம் அனைத்து மாணவர்களும், உரிய சான்றிதழ்களை அளித்து நிம்மதியாக இருந்திருப்பார்கள். ஒரு கடிதம் அனுப்பவே ஏறக்குறைய 8 மாதங்கள் ஓடிவிட்டன.
வங்கிக் கடன் பெறுவோரில் 90 சதவீதம் பேர் தங்கள் வருமானம் குறித்த தகவல்களை வங்கிகளுக்கு அளித்துள்ளனர். இவர்களிலும் 75 சதவீதம் பேர் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் என்பதால் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்கும் நபர்களாக இருப்பார்கள். ஆகவே, வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வோர் தாங்கள் தாக்கல் செய்த வருமானவரி படிவத்தில் குறிப்பிட்டிருக்கும் மொத்த வருமானத்தை வைத்து வங்கிகளே இதைத் தீர்மானிக்கலாம் என்றால் பாதிப்பேருக்கு பிரச்னையே இருக்காது.
வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாதவர்கள் அந்தந்த மாநிலத்தில் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக, தற்போது யாரிடம் வருவாய்ச் சான்று பெறுகிறார்களோ அதே அதிகாரியிடம் வருவாய்ச் சான்று பெற்றுக் கொடுத்தால் போதுமானது என்று அறிவித்திருந்தாலும் அனைவரும் இந்நேரம் சான்றுகளை வாங்கிக் கொடுத்திருப்பார்கள். ஒரு திட்டத்தை அறிவிக்கும்போதே அதற்கான நடைமுறைகளையும் சேர்த்தே அறிவித்தால் எத்தனை நன்றாக இருக்கும்.
இதில் அரசு நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளின் மெத்தனத்தாலும், எல்லாவற்றையும் அதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொள்ளாமல் கிடப்பில் போட்டு, நிதானமாகப் பணியாற்றுகின்ற இந்த மக்கள் விரோத அணுகுமுறையாலும்தான் பல நல்ல திட்டங்கள் கூட உடனடியாக மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமல் போகிறது.
source: ”தேவை அணுகுமுறையில் மாற்றம்” Dinamani