போலியான சந்தோஷம்!
அறியாமையினால் ஏற்படுவது செயற்கையான சந்தோஷம். உண்மையில் அது சந்தோஷமே அல்ல.போலியான சந்தோஷங்களை அடைந்து, அவைதான் மெய்யான சந்தோஷங்கள் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் என்ற கருத்தை வலியுறுகிறார் ஸிர் ஷ்ரீ என்ற அறிஞர்.
ஒரு ஊரில் மனைவிக்கு பயந்த கணவன் ஒருவன் இருந்தான் (எல்லா ஊர்களிலும் அப்படித்தான்). அவனுடைய மனைவி கல்யாணத்துக்குப் பிறகு முதன் முதலாக தன் தாயாரின் வீட்டுக்குப் போகவிருந்தாள். ‘ஒரு தங்கச் செயினை வாங்கிப் போட்டுக் கொண்டு போனால் என் வீட்டில் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள்’ என்றாள் கணவனிடம். ‘என்னிடம் அவ்வளவு பணம் இல்லையே என்ன பண்ணுவது ?’ கேட்டான் கணவன்.
அவளுக்கு ஒரு ஐடியா தோன்றியது. ‘என்னிடம் இரண்டு பவுனில் வளையல்கள் இருக்கின்றன. அதை எடுத்துப் போய் அழகான ஒரு தங்கச் செயினாக மாற்றிக் கொண்டு வாருங்கள்’ என்றாள்.
நகை கடைக்காரரிடம் அவன் போனான். அவர் இரெண்டே இரண்டு வளையல்களை வைத்துக் கொண்டு எப்படி செயின் வாங்க முடியும்?’ என்றவர் நான் ஒரு இமிடேஷன் செயின் தருகிறேன். அசல் தங்கச் செயினைப் போலவே இருக்கும். இந்த வளையல்களுக்கு பதில் அதைத் தருகிறேன்’ என்றார்.
அவனும் அதை வாங்கிக் கொண்டு மனைவியிடம் தந்து, உண்மையையும் சொன்னான். ‘இப்போதைக்கு இதைப் போட்டுக் கொண்டு போ. கொஞ்ச நாட்கள் கழித்து அசல் செயின் வாங்கித் தருகிறேன்’ என்றான்.
இமிடேஷன் செயினைப் போட்டுக் கொண்டு அவள் தாய் வீட்டுக்குப் போனாள். எல்லோரிடமும் அது தங்கம் என்றே சொன்னான் தன் கௌரவம் குறையக் கூடாதென்று.
அவளுடைய அண்ணிக்கு அந்தச் செயின் ரொம்பவும் பிடித்து விட்டது. அவளும் அது போல ஒன்றை வாங்கித் தரும்படி தன் கணவனை நச்சரித்தாள்.
அவனிடம் போதிய பணம் இல்லை. ஒரு நகைக் கடைக்காரரிடம் போய்க் கேட்டான். அவர் ‘இதோ பார். இப்போதெல்லாம் இமிடேஷன் நகை அணிவதுதான் ஃபாஷன். அதனால் நீ இமிடேஷன் செயினை வாங்கிப் போ. உன் மனைவி சந்தோஷப் படுவாள்’ என்றான்.
அவனும் ஒரு இமிடேஷன் செயினை வாங்கிக் கொண்டு போனான். தன் மனைவியிடம் கொடுத்து, ‘யாரிடமும் சொல்லாதே. இது இமிடேஷன் செயின். இப்போதைக்கு இதை அணிந்து கொள் !’ என்றான்.
ஊரிலிருந்து வந்தவன் ஒரு நாள் தன் செயினை கழற்றி வைத்துவிட்டுக் குளிக்கப் போனாள். அதைப் பார்த்த அண்ணிக்குத் திருட்டு புத்தி ஏற்பட்டது. ‘என் இமிடேஷனை வைத்துவிட்டு இந்த தங்கச் செயினை எடுத்துக் கொண்டாள் என்ன? இரண்டும் ஒரே மாதிரி இருப்பதால் அவளுக்குத் தெரியாது’ என்று எண்ணி அதை எடுத்துக் கொண்டாள். ஒரே சந்தோசம் அவளுக்கு. ‘அசல் தங்கச் செயினைப் போட்டுக்கொண்டிருக்கிறோம்’ என்று ஆனந்தப்பட்டாள்.
அடுத்த நாள் அவள் தன் செயினைக் கழற்றி வைத்துவிட்டுக் குளிக்கப் போகையில் ஊரிலிருந்து வந்தவள் தன் செயினை வைத்துவிட்டு அவளுடைய செயினை எடுத்துக் கொண்டாள். அசல் தங்கச் செயின் தனக்குக் கிடைத்துவிட்டதாக மகிழ்ந்தாள்.
இப்போது இரண்டு பேருக்குமே சந்தோசம் தாங்கள் அணிந்திருப்பது அசல் தங்கச் செயின் என்று! ஆயுட்காலம் பூராவும் போலியான மகிழ்ச்சியிலேயே இருவரும் வாழ்ந்தார்கள்!
இதைப் படிக்கும் நமக்குப் புரியும் எவ்வளவு முட்டாள்தனமான மகிழ்ச்சியில் அவர்கள் இருந்தார்கள் என்று. இப்படிப்பட்ட போலி மகிழ்ச்சியில்தான் நம்மில் பெரும்பாலோர் வாழ்கிறோம். அசல் மகிழ்ச்சி என்னவென்று நமக்குத் தெரிவதே கிடையாது. இப்படிப்பட்ட போலியான திருப்தி நமக்குத் தேவையா?
ரா.கி.ரங்கராஜன்