நித்தியானந்தா பள்ளியறை பலாபலன்களால் நாடே சிரிப்பாய் சிரித்த அதே பெங்களூருவில் இப்போது சீசன் 2வாக சிறிராம் சேனாவின் விவகாரம் நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.
ஜனவரி, 2009 இல் மங்களூரு பஃப்பில் குடித்துக் கொண்டிருந்த பெண்களைத் தாக்கி விரட்டியதில் இந்திய அளவில் ஒரே நாளில் பிரபலமானது சிரிராம் சேனா. அதற்கு முன் சிறுபான்மையினரை எதிர்த்து பல கலவரங்கள் செய்திருந்தாலும் மேட்டுக்குடி சீமாட்டிகளுக்கு ஏற்பட்ட அவமானமே பல தேசிய ஊடகங்களுக்கு கவலையாக இருந்தது.
அந்தக் கவலையை சேனாவும் இலவசமான பிரபலமாக நன்கு அறுவடை செய்துகொண்டது. இப்போது இதன் தலைவர் பிரமோத் முத்தாலிக் காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்வதாக ஒரு கேமராவில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
தெகல்கா – ஹெட்லைன்ஸ் டுடே இணைந்து நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷனில் இந்த வானரங்கள் வகையாய் சிக்கியிருக்கின்றன.
இந்த நடவடிக்கையின் படி ஒரு நிருபர் டம்மி ஆர்ட்டிஸ்ட்டாக அதாவது ஓவியனாக நடித்து முத்தாலிக்கை அணுகியிருக்கிறார். அதன்படி அவரது ஓவியக் கண்காட்சியை முத்தாலிக்கின் ராமசேனா வானரங்கள் அடித்து கலவரம் செய்தால் பிரபலமாகிவிடலாமென்றும், அதற்கு எவ்வளவு பணம் தரவேண்டுமென்பதே டீல். இதற்காக முத்தாலிக்கை மட்டுமல்ல அவரது இயக்கத்தின் மற்ற தலைவர்களையும் அந்த நிருபர் பார்த்திருக்கிறார். அவர்களும் அந்த கண்காட்சி முஸ்லீம்கள் இருக்கும் பகுதியில் இருந்தால் பிரச்சினையை பெரிதாக கொண்டு செல்லலாமென்று வழிகாட்டியிருக்கிறார்கள்.
உரையாடலிலிருந்து சில பகுதிகள்:
நிருபர்: நான் பிரபலமானால் எனது வியாபாரம் வளர்வதற்கு உதவியாக இருக்கும். இதைச் செய்வதற்கு உங்களுக்கு எவ்வளவு ஆட்கள் தேவைப்படுவார்கள், எனக்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்கள். இந்த கலவரத்திற்காக நான் போலீசில் புகார் கொடுக்கமாட்டேன், இது நமக்குள்ளே மட்டும் நடக்கும் விசயம். முன்பணமாக எவ்வளவு தரவேண்டுமென்று சொல்லுங்கள், கொடுத்துவிடலாம்.
(இந்த வேலையைச் செய்வதற்கு தயாரான முத்தாலிக் அதற்கான ஏற்பாடுகளை பெங்களூருவிலேயே செய்துவிடலாமென்று சம்மதிக்கிறார்.)
நிருபர்: ஐயா, இதை நான் உறுதி செய்து கொள்ளவேண்டும். உடனடியாக இல்லையென்றாலும் சில நாட்கள் கழித்துக் கூட நான் வருகிறேன். இதற்கு மொத்தமாக எவ்வளவு செலவு பிடிக்குமென்று தெரிந்தால் நான் அதற்கு ஏற்பாடு செய்து விடுவேன்.
முத்தாலிக்: நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் எங்களது கிளைத் தலைவர்ஸ..
நிருபர்: பெங்களூருவில்…?
முத்தாலிக்: ஆமாம், பெங்களூருவில்தான். அவர், வசந்த் குமார் பவானி, பலமான கை. அவரோடு அறிமுகமாகியிருக்கிறீர்களா?
(இறுதியில் முத்தாலிக் கலவரத்தை நடத்துவதற்கு ஒப்புதல் தந்த உடன் மிச்சிமிருந்த ஒரே வேலை தொகையை நிர்ணயம் செய்வதுதான். அதற்கு முத்தாலிக் தனது தளபதிகளான பிரசாத் அட்டாவர் (சேனாவின் தேசிய துணைத் தலைவர்), மற்றும் வசந்த் குமார் பவானி (சேனாவின் பெங்களூரு தலைவர்) இருவரையும் சந்திக்க சொல்கிறார். இதில் அட்டாவர் என்பவனை சிறையில் சந்திக்கிறார் நிருபர்.)
நிருபர்: நாங்கள் பதினைந்து இலட்சமாக கொடுத்து விடுகிறோம்.
அட்டாவர்: ஆமாம் ஆமாம்? இருந்தாலும் நான் அதை கணக்கட்டு சொல்கிறேன்.
(நிருபர்கள் அட்டாவரை மங்களூர் சிறையில் இருமுறையும், பெல்லாரி சிறையில் ஒரு முறையும் சந்தித்து பேசுகிறார்கள். அட்டாவரும் மங்களூர் பஃப்பில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போல செய்துவிடலாமென்று உறுதி கூறுகிறார்.)
அட்டாவர்: எவ்வளவு பணம் வேண்டுமென்று சொல்வேன்.
நிருபர்: கலவரத்திற்கு எத்தனை நபர்களை கொண்டுவருவீர்கள்?
அட்டாவர்: ஐம்பது.
நிருபர்: ஆக கலவரம் செய்ய ஐம்பது பேர் வருவார்கள்?
அட்டாவர்: நிச்சயமாக. மங்களூர் பஃப்பில் நடந்த மாதிரிதான்.
(ஆனால் கலவரத்தை எப்படி பக்காவாக நடத்த வேண்டுமென்று சொன்னவர் சேனாவின் பெங்களூரு தலைவர் பவானிதான். அவரது உரையாடலைப் பாருங்கள்.)
பவானி: கண்காட்சியைத் திறப்பதற்கு மும்தாஸ் அலியைக் கூப்பிட முடியுமா?
நிருபர்: யார் அது?
பவானி: அவர்தான் கர்நாட வக்ப் போர்டு உறுப்பினர்.
(விசயம் இப்படி நல்லபடியாக போய்க் கொண்டிருந்தாலும் முத்தாலிக் தனது இமேஜூக்கு பிரச்சினை வரக்கூடாது என்பதில் குறியாய் இருந்தார்.)
முத்தாலிக்: இதில் நான் நேரடியாக சம்பந்தப்பட முடியாது. இந்துத்துவ விழுமியங்களின் ஆதரவாளனென்று சமூகத்தில் எனக்கு ஒரு இமேஜ் இருக்கிறது.
நிருபர்: ஆனால் ஐயா, இது யாருக்கும் தெரியாது.
முத்தாலிக்: எல்லாம் சரிதான். ஆனால் எனது மனசாட்சி நான் ஏதோ தவறு செய்கிறேனோ என்று எச்சரிக்கிறது.
நிருபர்: எம்.எப். ஹூசைன் மற்றும் மற்றவர்களது கண்காட்சியில் என்ன செய்தீர்களோ அது போல.
முத்தாலிக்: ஆமா ஆமாம்.
நிருபர்: அதே மாதிரி என் கண்காட்சியிலும் நடக்க வேண்டும். அது பெங்களூருவின் சிவாஜி நகரிலோ, மங்களூருவிலோ இல்லை முசுலீம்கள் இருக்கும் எப்பகுதியிலும் இருக்கலாம்.
முத்தாலிக்: என்ன மாதிரியான உதவியை எதிர்பார்க்கிறார்கள்? அது மங்களூர், பெங்களூரு இரண்டிலும் செய்ய முடியும்.
நிருபர்: அறுபது இலட்சம் போதுமா?
முத்தாலிக்: இதை யார் உங்களுக்கு சொன்னார்கள்?
நிருபர்: வசந்த்ஜியுடன் பேசியிருக்கிறோம்.
முத்தாலிக்: பணத்தை நான் உறுதி செய்ய முடியாது. அது அவர்களின் (சேனாவின் மற்ற தலைவர்கள்) வேலை, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
மேற்கண்ட உரையாடலிலிருந்து ராம சேனாவின் தலைவர் முத்தாலிக்கும் அவரது சகபாடிகளும் கூலிக்கு கலவரம் செய்பவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
யார் இந்த பிரமோத் முத்தாலிக்
கர்நாடக மாநிலம், பெலகாம் மாவட்டம், ஹுக்கேரியில் பிறந்த முத்தாலிக்கின் தற்போதைய வயது 47. பதிமூன்று வயதாக இருக்கும்போது 1975இல் ஆர்.எஸ்.எஸ்இல் சேர்கிறார். 2004இல் பஜ்ரங்க தள்ளின் தென்னிந்திய அமைப்பாளராக நியமிக்கப்படுகிறார். தேர்தல் அரசியலில் நுழைந்து ஒரு ஆளாக விரும்பினாலும் இவருக்கு பா.ஜ.க சீட்டு கொடுக்கவில்லை. இதனால் மனம் வெறுத்த முத்தாலிக் 2005இல் பஜ்ரங்தளத்தை விட்டு விலகுகிறார். அதே ஆண்டு சிவசேனாவின் கர்நாடக மாநில தலைவராக உருவெடுக்கிறார். பிறகு அதிலிருந்து விலகி 2006இல் ராஷ்ட்ரிய இந்து சேனாவை ஆரம்பிக்கிறார். மாநிலம் முழுக்க சுற்றுப் பிரயாணம் செய்து இந்துவெறிப் பேச்சாளராக பிரபலமாகிறார். இதில் மட்டும் இவர் மீது பதினொரு மாவட்டங்களில் வழக்கு இருக்கிறது. 2008இல் சிரிராம் சேனா ஆரம்பித்ததும்தான் முத்தாலிக் நாடு அறிந்த தலைவராக பிரபலம் ஆகிறார்.
முத்தாலிக்கின் சிறிராம சேனாவின் கைங்கரியங்கள் சில:
o 2009 ஜனவரியில் இந்து கலாச்சாரத்திற்கு விரோதமென்று கூறி மங்களூர் பஃப்பில் பெண்களை அடித்து கலவரம் செய்தார்கள். இதில் முத்தாலிக்கும் 27 பேர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
o ஆகஸ்ட்டு 2008 இல் சேனாவின் குண்டர்கள் எம்.எப்.ஹூசைனது கண்காட்சியை டெல்லியில் வைத்து தாக்கி கலவரம் செய்தார்கள்.
o 2008 இல் மதமாற்றம் என்று குற்றம் சாட்டி கர்நாடகாவின் பல கிறித்தவ தேவாலயங்களை தாக்குகிறார்கள். 2009இல் ஆறு தேவாலயங்களை அடித்து நொறுக்குகிறார்கள்.
o 2009 பிப்ரவரியில் காதலர் தினத்தை கொண்டாடுபவர்களை பிடித்து திருமணம் செய்து வைக்கப் போவதாக முத்தாலிக் அறிவித்தார். இதை எதிர்த்து சில பெண்கள் அமைப்புகள் முத்தாலிக்கு பிங்க் நிற ஜட்டியை அனுப்பி எதிர்ப்பு தெரிவித்தன. இது நாடெங்கும் ஆதரவை ஏற்படுத்தியது.
நுகர்வுக் கலாச்சாரத்தின் அங்கமாகிப் போன காதலர்தினம், பஃப் இரண்டையும் பாரதக் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று முத்தாலிக் செய்த பிரச்சாரம் நடுத்தர வர்க்க பெற்றோர்களான இந்துக்களின் ஆதரவைப் பெறாமலில்லை. இளையவர்கள் இதை ஆதரிக்கவில்லை என்றாலும் பொதுவில் இந்துக்களின் சாம்பியனாக காட்டிக் கொள்ள இந்தப் போராட்டங்கள் கைகொடுத்திருக்கின்றது. மேலும் மேட்டுக்குடியின் நிகழ்ச்சி நிரலில் இத்தகைய தாக்குதல்கள் வந்த உடன்தான் தேசிய ஊடகங்கள் இதை கவனம் கொடுத்து முக்கியத்துவம் கொடுத்தன. மங்களூரு பஃப்பில் சுமார் 25 குண்டர்களை வைத்தே நடத்திய தாக்குதல் முத்தாலிக் பிரபலம் ஆவதற்கு போதுமானதாக இருந்தது.
இத்தகைய சிறு கும்பலை வைத்து ரகளை செய்யும் இந்தக் கூட்டத்தை இருக்கும் சட்டப்பிரிவுகளின் படியே கூட எளிதாக முடக்க முடியும். ஆனால் அதைச்செய்ய எந்த அரசும் துணியவில்லை என்பதை எந்த ஊடகங்களும் எழுதவில்லை. மேலும் கர்நாடகாவில் இருக்கும் பா.ஜ.க அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அரவணைக்கும் வேலையை செய்து வந்தது. இந்துத்தவா கும்பலில் இருக்கும் தீவிர இளைஞர்களை அணிதிரட்டும் வேலையை இவர்கள் செய்துவருகிறார்கள்.
காசுவாங்கிக் கொண்டு இவர்கள் எதுவும் செய்வார்கள் என்பது கூட புதிதில்லைதான். ஏனென்றால் விசுவ இந்து பரிஷத்தின் வேதாந்தி கூட ஹவாலா ஊழலில் கேமராவின் முன்னர் சிக்கியவர்தான். விசுவ இந்து பரிஷத் இயக்கம்தான் நாட்டிலேயே மிக அதிகமான வெளிநாட்டுப் பணத்தைப் பெறும் தன்னார்வ அமைப்பாகும். இந்தப் பணத்திற்கு முறையான கணக்குகள் எதுவுமில்லை என்பதுகூட ஊடகங்களில் பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
ஆர்.எஸ்.எஸ் இன் இந்துத்துவ வேகம் போதுமானதல்ல என்ற போட்டியின் விளைவாகத்தான் சிரிராம் சேனா, இந்துமக்கள் கட்சி போன்றோர் தோன்றி பிரபலமாகிறார்கள் என்பது உண்மைதான். ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நேரடியாக மறுகாலனியாதிக்கத்தின் மூலம் பெரும் ஆதாயத்தை அடையும் போது இந்தப் போட்டிக் கூட்டம் இந்துத்தவக் கற்பை முன்வைத்து இப்படி சில்லறை ஆதாயங்களை அடைகிறது.
ஐ.பி.எல் ஊழலைக் காப்பதற்கு பா.ஜ.கவின் அருண் ஜெட்லி துணிவதும், பாரதா மாதாவின் கற்பைக் காப்பதற்கு காதலர் தினத்தை சிரிராம் சேன எதிர்ப்பதும் வேறு வேறல்ல.
நன்றி – வினவு.
மேலும் ஆங்கிலத்தில், விபரங்களுக்கு: