ஒரு கொசுவின் எடை 0.025 மில்லிகிராமாக இருந்தாலும், ஒரு பெண் கொசு தன்னுடைய ஆயுளில் 3 ஆயிரம் முட்டைகள் இடுமாம். அதை 3 ஆயிரத்தால் பெருக்கினால் என்னவாகும்? பூனையைவிட புலிகள் வலிமையானவை என்பதை எலிகள் ஏற்றுக் கொள்வது இல்லை. ஆனால், கொசுக்கள் எவ்வளவு கொடூரமானவை என்பதை உலகமே ஒப்புக் கொள்ளும்!
தமிழ்நாட்டு மக்களை மரணபயத்தின் பக்கம் கொசுக்கள் மெள்ள நகர்த்திக்கொண்டு இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.எங்கே பார்த்தாலும் மர்மக் காய்ச்சல். சிலர் மலேரியா என்கிறார்கள். பலர் சிக்கன்குனியா என்கிறார்கள். டெங்குவில் இது ஒருவகை எனச் சொல்லப்படுகிறது. யானைக்கால் வியாதியில் கொண்டு போய் விடும் என்ற பயம் இருக்கிறது.
நடையைத் தளர்த்தி காய்ச்சல் வந்தவரின் வாழ்க்கையை ஓரத்தில் இருத்தி உட்கார வைக்கிறது. குழந்தை, பெரியவர் என வயது வித்தியாசம் இல்லை. ஆண்,பெண் பேதம் இல்லை.
மலேரியா, சிக்கன்குனியா, மூளைக்காய்ச்சல், டெங்கு, யானைக்கால் நோய் என என்ன பெயரிட்டு அழைத்தாலும் அவை ஐந்தும் கொசுக்களால் வருபவைதான்.பொதுநல மருத்துவர் சிவந்தி பாஸ்கரிடம் இதுபற்றிக் கேட்டபோது, ”மலேரியாவில் நான்கு வகை உள்ளன. மலேரியா என்பது ஒட்டுண்ணி. ஆலோபீலஸ் என்ற பெண் கொசு மூலமாகப் பரவுகிறது. பிளாஸ்மோடியம் மலேரியா, பிளாஸ்மோடியம் பால்சிபேரம், ஓவேல், வைவாக்ஸ் என்ற வகைககள் உள்ளன.
இதில் எது வேண்டுமானாலும் வரலாம். வைவாக்ஸூம், பால்சிபேரமும் திரும்பத் திரும்ப வரக்கூடியவை. இவை கல்லீரலில் நிரந்தரமாக இருந்து கொண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ஆறுமாதங்களுக்கு ஒருமுறை என்று திரும்பத் திரும்ப வரும்.
ஆரம்ப காலத்தில் கட்டுப்படுத்தாவிட்டால், மூளையைப் பாதிக்கும் செரிபெரல் மலேரியாவாக மாறக்கூடும். இது மிக சீரயஸான கண்டிஷன். மூளைக்காய்ச்சலாக மாறி உயிருக்கே ஆபத்தாகி விடும். எனவே, ஆரம்பத்திலேயே கண்டறிந்து பிடித்துச் சரிபடுத்திவிட்டால், வீக்கங்கள் வராது. இல்லையென்றால், கை, கால்களைப் பாதிக்கலாம். ஆண்களுக்கு விரைவீக்கம் எனப்படும் ஹைட்ரோசில் பாதிப்பு இந்தக் கொசு கடிப்பதால்தான் ஏற்படுகிறது.பெண்களுக்கு மார்பகம் பாதிக்கப்படலாம்.
டெங்கு காய்ச்சலானது ஏடிஸ் கொசுக்களால் பரவாது. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடியாகப் பரவுவது இல்லை. ஆனால், நோய் பாதித்தவரைக் கடித்த கொசு மற்றொருவரைக் கடிக்கும் போது இந்த நோய் பரவும். டயர், தொட்டி போன்ற இடங்களில் தேங்கும் நல்ல தண்ணீரில்தான் இந்தக் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. கொசு கடித்த 18 மணி நேரத்தில் இந்த வைரஸ் தனது வேலையைத் தொடங்கிவிடும். பெரும்பாலும் கோடைக்காலத்தில்தான் அதிகமாக இருக்கும். வெயில் சீஸன் முடியும் நேரத்திலும் அதிகம் இருக்கும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன்குனியா தாக்குதல் அதிகமாக இருந்தது. பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்கள் அவை.
தற்போது பரவலாகப் பாதிப்புக்களை ஏற்படுத்தி வரும் ஆஸ்திரேலியன் ரோஸ்வரிவர் பற்றி சரியான தகவல் இல்லை. இதுவும் கொசுக்கள் மூலமாகப் பரவும் ஒரு வைரஸ் நோய். ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சிக்குன்குனியா நோய் போன்ற பாதிப்பு இதிலும் உண்டு. இதுபற்றிஆராய்ந்து வருகிறார்கள். இந்த நோயின் மிகப்பெரிய பாதிப்பு மூட்டுதான்” என்றார். இந்தக் காய்ச்சல் வந்தவர்கள் ஒரு வாரத்தில் காய்ச்சல் குணமானாலும் இயல்பாக நடமாடுவதற்கு அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை ஆகும். ”சாதாரணக் காய்ச்சலாக இது வந்து அது மர்மக் காய்ச்சலாக மாறிஸ அதன் பிறகு ஒருவரை மொத்தமாக முடமாக்கி விடும் ஆபத்தை ஒருவர் எப்படி எதிர் கொள்வது?” என்று கேட்டபோது,
இப்போது பரவி வருவது ரோஸ்ரிவர் காய்ச்சலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோமே தவிர, இன்னும் உறுதிப்படுத்தவில்லை. கொசு மூலம் பரவும் இந்தக் காய்ச்சல் வந்தால், இரண்டு மூன்று நாட்களுக்குக் கடுமையான காய்ச்சல் இருக்கும். இந்த மாதிரியான காய்ச்சல்தான் வந்திருக்கிறது என்பதைக் கண்டறியும்,நிரூபிக்கும் பரிசோதனைகள் எதுவும் தற்போது இல்லை. இரவு படுக்கும்போது சாதாரணமாக இருந்த ஒருவருக்கு காலையில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு இருந்தால் இந்த சீரியஸான வகையாகக் கருதலாம். கால்கள் இரண்டையும் தரையில் ஊன்ற முடியாத நிலை இருந்தால் அந்த அனுபவத்தை வைத்தும் இந்த நோயைக் கண்டறிந்து விடலாம்.
இந்தக் காய்ச்சல் வந்த பிறகு தோலில் அரிப்பு, ஒவ்வாமை, வாய்ப்புண் ஏற்படும். இதன் மிகப் பெரிய பாதிப்பு அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு மூன்று நான்கு மாதங்கள் வரை இந்தப் பாதிப்பு இருக்கும். உடல் வலி காரணமாக கை, காலை அசைக்காமல் இருந்துவிடக்கூடாது. வீட்டுக்குள் நடப்பது, காலை மடக்கி விரிப்பது என வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
இந்த நோய் வந்தால் மாத்திரைகளை டாக்டரின் பரிந்துரைப்படிதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அலர்ஜி, வாய்ப்புண், மூட்டுவலி ஆகியவற்றுக்கும் டாக்டர்கள் பரிந்துரைப்படி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்களாக எந்த மருந்தையும் வாங்கி உட்கொள்ளக் கூடாது. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக வேகமாகப் பரவுவதில்லை. ஒட்டுவாரொட்டி கிடையாது.
சாதாரணக் காய்ச்சலின்போது எடுத்துக்கொள்ளும் உணவு முறைகள் இதற்கும் பொருந்தும், நீராகாரமாக உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கென்று உணவுக்கட்டுப்பாடுகளோ, பத்திய முறைகளோ இல்லை!” சொல்கிறார். பொதுநல மருத்துவர் டாக்டர் நிரஞ்சனா, ”கொசுக்களை விரட்ட காயில்,மேட், லிக்விட்,ஜெல் அல்லது க்ரீம் என்று நிறைய உள்ளன.
இவற்றைப் பயன்படுத்துவதால் சிலருக்கு சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும், தோல் அலர்ஜியும் ஏற்படுவது உண்டு. செயற்கையான கொசு விரட்டிகளுக்குப் பதில் வேப்பிலையைக் காயவைத்து அதை புகை போட்டால் கொசுக்கள் வரத்து குறையும். வீட்டு ஜன்னல்களில் கொசு வலை அடித்துவிடுவது சீப் அண்ட் பெஸ்ட். அனைத்துக்கும் மேலாக சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பது மிக முக்கியம்!” என்றார்.
ஒரு கொசுவின் எடை 0.025 மில்லிகிராமாக இருந்தாலும், ஒரு பெண் கொசு தன்னுடைய ஆயுளில் 3 ஆயிரம் முட்டைகள் இடுமாம். அதை 3 ஆயிரத்தால் பெருக்கினால் என்னவாகும்? எனவே, உருவான கொசுவைக் கட்டுப்படுத்துவதை விட, கொசு உருவாகாமல் தடுப்பதுதான் முக்கியமானது. இதற்கான ஆராய்ச்சியே இன்னமும் முடியவில்லை. எனவே, அதற்கு முன் அரசாங்கம் கொசு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ”கடந்த டிசம்பர் மாதம் இந்தக் காய்ச்சலால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டது உண்மை. சுகாதாரத்துறை எடுத்து கொசு ஒழிப்பு மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கையால் ஜனவரி மாதம் காய்ச்சல் குறைந்துள்ளது. கொசு ஒழிப்புப் பணியைத் தீவிரப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.கொசுக்களை ஒழிக்க குறுகிய காலத்திட்டமும், நீண்ட காலத்திட்டமும் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். அதன்படி விரைந்து செயல்பட்டு கொசுக்களை ஒழிப்போம்” என்கிறார்கள்.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க கொசுக்களை லேசர் மூலம் ஒழிக்கும் சாதனத்தை விஞ்ஞானிகள் வடிவமைத்து உள்ளனர். ஃபோடானிக் ஃபென்ஸ் என்றழைக்கப்படும் இந்த சாதனத்தை வாஷிங்டனில் உள்ள இன்டெலக்சுவல் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.இதைசுவற்றிலோ அல்லது வேலிகளிலோ பொருத்தி விட்டால் அதில் இருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள், கொசுக்களை கண்டுபிடித்து ‘எரித்துவிடும்’.
இந்த லேசர் சாதனம் கொசுக்களை மட்டுமே அடையாளம் கண்டு அழிக்கும். மற்ற பட்டாம்பூச்சி உள்ளிட்ட மென்மையான பூச்சிகளை தொந்தரவு செய்யாது.
மேலும், இந்த சாதனத்தின் மூலம் கொசுக்களிலேயே ஆண், பெண் இனத்தையும் தனியாக பிரித்து அறியலாம். மனிதர்களை கடிப்பது பெண் கொசுக்கள் என்பதால் அவற்றை மட்டும் குறிவைத்து ஒழிக்கவும் இயலும். (ஒவ்வொரு பூச்சியின் இறக்கை அசைவிலும் உள்ள வி்த்தியாசம் உண்டு. அதிலும் ஆண்-பெண் பூச்சிகளின் இறக்கை அசைவிலும் கூட வேறுபாடு உண்டு. அதை வைத்து பெண் கொசுவை மட்டும் தனியே பிரித்து இந்த லேசர் பாயும் வகையில் வடிவமைத்திருக்கிறார்கள்)
சர்வேதேச அளிவில் மலேரியா நோய் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், கொசுக்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும் விஞ்ஞானிகள் இந்த புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சிக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பி்ல் கேட்சின் அறக்கட்டளை தான் நிதியுதவி அளித்துள்ளது.
source: vikatan/thatstamil