பிரஸ்ஸல்ஸ்: யூராவை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றவும், யூரோசோனில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் ஐரோப்பிய யூனியன் லட்சம் கோடி டாலர் ( 56 லட்சம் கோடி ரூபாய் ) திட்டத்துடன் களமிறங்கியுள்ளது.
ஐரோப்பிய நாடான கிரீஸில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும், கடனும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு பரவாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 96 ஆயிரம் கோடி டாலர் திட்டத்திற்கு பிரஸ்ஸல்ஸில் கூடிய யூரோசோன் நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மூன்றுவருட அடிப்படையிலான இத்திட்டத்தில் 7,700 கோடியை ஐரோப்பிய கமிஷன் வழங்கும். 57 ஆயிரம் கோடி 16 உறுப்பினர் நாடுகள் கடனாக வழங்கும். 32,400 கோடி உலக வங்கி வழங்கும்.
கடனைத் தொடர்ந்து கிரீஸ் வெளியிட்ட கடன்பத்திரங்களின் விலை பங்குச் சந்தையில் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து யூரோவின் நெருக்கடி கடுமையானது. வியாபாரம் மந்தமடைந்ததைத் தொடர்ந்து யூரோவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டதால் இதனைத் தடுப்பதற்கு யூரோசோன் அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடுச் செய்திருந்தது.பொருளாதார நெருக்கடி ஸ்பெயின், அயர்லாந்து, போர்ச்சுகல் ஆகிய நாடுகளுக்கு பரவிவிடும் என்ற அனுமானமும் பெருந்திட்டத்தை அறிவிக்க காரணமாகும்.
கிரீஸிற்கு உலகவங்கியும், ஐரோப்பிய யூனியனும் சேர்ந்து 14,500 கோடி டாலர் ஆறுதல் நிதியாக அளித்துள்ளன. ஐரோப்பிய யூனியனின் அறிவிப்பு பங்குச் சந்தையில் பிரதிபலித்தது.ஆசிய சந்தையில் போதுமான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்.
ஐரோப்பிய சந்தைக்கு பாதுகாப்பு நிதித்திட்டம் போதுமான அளவு உதவினாலும் அது உலக சந்தையில் சாய்வை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் ஸ்பெயின் மற்றும் போர்சுகலின் நிதியுதவித் திட்டத்திற்கு வருகிற 18 ஆம் தேதி கூடும் ஐரோப்பிய யூனியன் நிதியமைச்சர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.