தென்னிந்தியாவிற்கு தற்போது `தற்கொலை தலைநகரம்` என்ற பெயர் உலக அளவில் கிடைத்திருக்கிறது. உலக அளவில் ஒரு லட்சம் பேரில் 15 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தென்னிந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 60 ஆண்களும், 150 பெண்களும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
அதிர்ச்சியான செய்திதான். இந்தியாவில் 2008-ம் ஆண்டில் தற்கொலை செய்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 17 பேர். இதில் மேற்கு வங்காளத்திற்கு முதலிடம். அடுத்த இடத்தில் தமிழ்நாடு.
இதில் குறிப்பிடத்தக்க அதிர்ச்சி என்னவென்றால், 2008-ம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்டவர்களில் 6 ஆயிரம் பேர் மாணவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மார்ச் மாதத்தில் தற்கொலை செய்து கொடிருக்கிறார்கள். இந்த மாதம் பரீட்சையோடு தொடர்புடையது. அடுத்தடுத்த மாதங்கள் தேர்வு முடிவுகளோடு தொடர்புடையது. இந்த இரண்டு மாதத்திலும் மாணவ– மாணவிகள் விஷயத்தில் பெற்றோரும், சமுகமும் மிகுந்த அக்கறைக்காட்ட வேண்டும்.
தற்கொலை எண்ணம் என்பது வாழ்க்கையில் எல்லா மனிதர்களுக்கும், ஏதாவது ஒரு கட்டத்தில் ஏற்படவேச் செய்கிறது. `என்னடா வாழ்க்கை இது.. செத்துபோயிடலாமோ..’ என்ற எண்ணம் ஏதாவது ஒரு தடவை வந்துவிடுவது, மனிதர்களுக்கே உரிய மன நிலை. ஆனால் பலரும் அடுத்த சில நேரத்தில் அந்த மனநிலையில் இருந்து விலகி, தங்களுக்குள் மனத் தெளிவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் படிக்கிறார்கள். எல்லோருக்கும் ஒரே வயது. ஒரே மாதிரியான பாட புத்தகங்கள். ஒரே டீச்சர். ஒரே மாதிரி ஹோம் ஒர்க். ஆனால் 39 பேருக்கு அந்த சிந்தனை வராதபோது, ஒரே ஒருவருக்கு மட்டும் தற்கொலை எண்ணம் ஏன் வருகிறது?
இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. மாணவர்களில் பலருக்கு மன அழுத்தம் வரலாம். ஆனால் அதை தாங்கும் சக்தி எத்தனை பேருக்கு இருக்கிறது என்பதுதான் கேள்வி. தாங்கும் சக்தி கொண்டவர்கள், தாங்கிக் கொள்கிறார்கள். அல்லாதவர்களே தற்கொலை பற்றி சிந்திக்கிறார்கள்.
தாங்கும் சக்திக்கு பிறப்பு அதாவது பாரம்பரியம், சுற்றுபுற சூழல் ஆகிய இரண்டும் அடிப்படை காரணங்களாக இருக்கின்றன.மருத்துவக் கல்லூரியில் என்னிடம் பயின்ற மாணவர் ஒருவர் முதல் இடத்தில் இருந்து
, முன்றாம் இடத்திற்கு சென்றதும் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் கடைசி மார்க் வாங்கியவரோ எந்த கவலையும் இல்லாமல் சகஜமாக இருந்தார். 3-ம் இடத்திற்கு வந்த மாணவருக்கு தாங்கும் சக்தி இல்லாமல் இருந்ததுதான் அதற்கு காரணம்.
சென்னையில் இன்று டாப் லெவலில் இருக்கும் இருபது டாக்டர்களின் பெயர்களை குறித்துக் கொள்ளுங்கள். அவர்கள் மாணவர்களாக இருந்தபோது ஏதாவது ஒரு தோல்வியையாவது சந்தித்திருக்கத்தான் செய்வார்கள். அந்த தோல்வியில் மன அழுத்தத்திற்குள்ளாகி அவர்கள் தவறான முடிவு எடுத்திருந்தால், இத்தனை சிறந்த டாக்டர்கள் நமக்கு கிடைத்திருப்பார்களா?
மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வருவதற்கு பல்வேறு காரணங்கள். பரீட்சை மன அழுத்தம், வெற்றி பெற்றும் விரும்பிய பாடத்தை படிக்க வாய்ப்பு கிடைக்காமை, ராகிங் தொந்தரவு, காதல் பிரச்சினை, பெற்றோர்களுக்குள் ஏற்படும் இடைவிடாத மோதல், மொழி புலமை இல்லாமை, அழகு இல்லை என்ற தாழ்வு மனபான்மை, தனக்கு ஏதோ ஊனம் இருப்பதாக கருதுதல், ஆசிரியர்களின் ஒருதலை பட்சமான நடவடிக்கை… இப்படி பல பல காரணங்கள்.
நாங்கள் பள்ளி பருவத்தை ரொம்ப ஜாலியாக அனுபவித்தோம். அன்று சுகமாக இருந்த அனுபவம், இன்றைய பள்ளி மாணவர்களுக்கு பெரும் சுமையாகிவிட்டது. மகிழ்ச்சியான சிறு பருவத்திலே ஒருவரோடு ஒருவர் போட்டிபோட்டு படிக்கும் அளவுக்கு கொம்பு சீவிவிடப்படுகிறது. நன்றாக படிக்கவில்லை என்றால் அவ்வளவுதான் வாழ்க்கையே காலி என்பது போன்ற மன உணர்வை சிறு பருவத்திலே ஏற்படுத்தி விடுகிறார்கள். நாங்கள் எம்.பி.பி.எஸ். படிக்க சேரும்போதுதான் நுழைவுத் தேர்வு எழுதினோம். இன்று குழந்தைகள் எல்.கே.ஜி.க்கே நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய நிலையில் இருக்கின்றன.தென்னிந்தியாவிற்கு தற்போது
`தற்கொலை தலைநகரம்` என்ற பெயர் உலக அளவில் கிடைத்திருக்கிறது. உலக அளவில் ஒரு லட்சம் பேரில் 15 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தென்னிந்தியாவில் 60 ஆண்களும், 150 பெண்களும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
தடுப்பது எப்படி?
பெற்றோரின் பங்கு:
குழந்தைகளாக இருக்கும்போதே மன அழுத்தம் ஏற்படாத அளவிற்கு அவர்களை வளர்க்க வேண்டும். பெற்றோர் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வுகண்டு, குழந்தைகளின் மனநிலையை அது பாதிக்காத அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களோடு நேரத்தை செலவிட்டு, அவர்கள் மனம்விட்டு பேசும் சூழலை உருவாக்கினால், அவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படாது.
பள்ளியில் கிடைக்கும் மதிபெண் மட்டுமே ஒரு குழந்தையை வெற்றியாளனாக ஆக்கிவிடாது. அதனால் படிப்பு மட்டுமின்றி வேறு ஏதாவது திறமைகள் அவர்களிடம் இருந்தால் அதை கண்டறிந்து மேம்படச் செய்ய வேண்டும். வெளிநாடுகளில் மனோதத்துவ நிபுணர்கள் குழந்தைகளிடம் பேசி, அவர்களிடம் இருக்கும் திறமைகளை அடையாளங்கண்டு, அந்த துறையில் அவர்களை மேம்படுத்தச் சொல்வார்கள்.
அந்த நிலை இங்கு இல்லை. பெற்றோரும், ஆசிரியரும் நினைப்பதைத்தான் குழந்தைகள் செய்ய வேண்டிய திருக்கிறது.மைதானங்களில் விளையாடும் விளையாட்டுகளில் குழந்தைகளை கட்டாயம் ஈடுபடுத்த வேண்டும். அதன் முலம் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, வெற்றி– தோல்விகளை சகஜமாக எடுத்துக்கொள்ளும் மன ஆரோக்கியமும் கிடைக்கும். அந்த இருவகை ஆரோக்கியமும் அவர்களுக்கு காலம் முழுக்க கைகொடுக்கும்.
உலக சுகாதார நிறுவன கணிப்புபடி இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 56 ஆயிரம் பள்ளி மாணவர்கள் புதிதாக புகை பிடிக்க பழகுகிறார்கள். இந்த பழக்கம் காலபோக்கில் அவர்களை போதை பொருள் பழக்கத்திற்கு கொண்டு செல்கிறது. பெற்றோர் கூர்ந்து கவனித்தால்தான் பிள்ளைகளிடம் இந்த பழக்கம் இருந்தால் கடறியந்து களைய முடியும்.திடீரென்று தனிமையை விரும்புதல்
, பொய் பேசுதல், இரவில் வெகுதாமதமாக வீடு திரும்புதல், புதிய நபர்களை காரணமின்றி உருவாக்குதல், வீடுகளில் இருந்து அடிக்கடி பணம் திருடுபோகுதல் போன்றவை ஏற்பட்டால் பிள்ளைகள் விஷயத்தில் உடனே உஷார் ஆகிவிடுங்கள்.பரீட்சை என்பது வாழ்வோ, சாவோ பிரச்சினை இல்லை என்பதை பெற்றோர் முதலில் உணர்ந்துகொள்ளவேண்டும். அடுத்த முறை எழுதி ஜெயித்துவிடலாம் என்று கூறி, தோல்வியால் துவண்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள் பங்கு:
எல்லா பாடத்திட்டங்களுமே இப்போது மாணவர்களுக்கு சிரமமாக இருக்கிறது என்பதை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். வருடம் முழுக்க படித்து, நிறைய மார்க் வாங்கினாலும் வருட பரீட்சை அன்று உடல்நிலை சரியில்லாமல் போய், பரீட்சை எழுதாவிட்டால் தோல்விதான் ஏற்படும். இதுவே ஒருவகை பயத்தைதான் விதைக்கிறது. பரீட்சை நெருங்க நெருங்க மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகுகிறார்கள். இந்த பயத்தை போக்கும் விதத்தில் ஆசிரியர்கள் நடந்துகொள்ள வேண்டும்.
நன்றாக படிப்பவர்களை முதல் பெஞ்சில் உட்காரவைத்துக் கொண்டு எதற்கெடுத்தாலும் அவர்களை மட்டுமே ஆசிரியர் கள் ஊக்கபடுத்திக் கொண்டிருக்கக் கூடாது. அவர்களிடம் முளை ஆற்றல் அதிகம் இருக்கலாம். ஆனால் இரண்டாம், முன்றாம் பெஞ்சில் இருப்பவர்கள் எதிர்காலத்தில் முதலாளி ஆகி, முதல் பெஞ்சில் இருப்பவர்களின் முளையை பயன்படுத்தி அவர்களுக்கே சம்பளம் கொடுக்கும் நிலை ஏற்படலாம் என்பதைம் உணரவேண்டும்.
உணர்ந்துகொண்டால் எல்லா தரப்பு மாணவர்களையும் ஒரே மாதிரி ஆசிரியர்கள் நடத்துவார்கள். அதன் முலம் மாணவர்களின் மன அழுத்தம் குறையும்.என்ஜினீயரிங் போன்ற துறையில் படிக்கும் மாணவர்கள் முதலில் தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாடபிரிவிலே கடைசிவரை படிக்க வற்புறுத்தபடுகிறார்கள். முதலில் தாங்கள் தேர்ந்தெடுத்தது தவறு என்றால், கடைசிவரை அந்த தவறையே படித்துக்கொண்டிருந்தால் மன அழுத்தம் ஏற்பட்டுவிடும். மாற்றம் என்பது எல்லா விஷயத்திலும் இருக்கிறது. கல்லூரிகளும் மாற்றங்களை அங்கீகரிக்க முன்வரவேண்டும்.
பரீட்சைக்கு படிக்கும் விஷயத்தில் நான் கடைபிடித்த முறை எனக்கு நல்ல பலனைத் தந்தது. நான் பரீட்சைக்கு முந்தைய நாள்வரை நன்றாக படிப்பேன். பரீட்சை அன்று காலையில் எழுந்ததும் புத்தகத்தை தொடவே மாட்டேன். அன்றைய நாளிதழை படித்துவிட்டு ரிலாக்ஸ் ஆக பரீட்சை எழுதச் சென்றுவிடுவேன். முளை நன்றாக செயல்படும். நன்றாக பரீட்சை எழுதவும் முடியும்.
மாணவர்கள் உடல் தகுதி, உணர்வுத் தகுதி, ஆன்மிகத் தகுதி முன்றைம் பெற்றிருந்தால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாது. உடல் தகுதிக்கு நல்ல சாப்பாடு, தூக்கம், விளையாட்டு, ஆரோக்கியம் போன்றவை தேவை. உணர்வு தகுதிக்கு பெற்றோரின் பாதுகாப்பும், அருகாமையும் தேவை. `நமக்கு பெற்றோர் எப்போதும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நாம் தேவையில்லாமல் எதற்கும் பயபடவேண்டியதில்லை என்ற தன்னம்பிக்கை மாணவர்களுக்கு கிடைத்தால் அவர்கள் உணர்வு ரீதியான தகுதியை பெறுவார்கள்.
ஆசிரியர்கள், நபர்களின் ஒத்துழைப்பும் உணர்வுத் தகுதிகளுக்கு அவசியம். ஆன்மிகத் தகுதி கடவுள் நம்பிக்கை முலம் வருவது. இன்று நமக்கு ஒரு விஷயத்தில் சறுக்கலோ, தோல்வியோ ஏற்பட்டால் அது நாளைய மிகபெரிய வெற்றிக்குரிய அனுபவ பாடமாக இருக்கும் என்ற எண்ணத்தை இந்த ஆன்மிக தகுதி தரும். சில தோல்விகள் தரும் அடுத்த வெற்றி மிக பிரமாண்டமாக இருக்கும் என்பதை தீர்க்க தரிசனமாய் உணரத் தெரிந்திருக்க வேண்டும். இந்த முன்று தகுதிகளையும் நாம் வளர்த்துக்கொண்டால் எதையும் தாங்கும் இதயம் கிடைத்துவிடும். தோல்வியால் மனந்தளராது. தற்கொலை எண்ணமும் வராது.
விளக்கம்: பேராசிரியர் டாக்டர் சி.எம்.கே.ரெட்டி,Dsc, FRCS. தலைவர்– தமிழ்நாடு மருத்துவர் சங்கம். சென்னை.