டாக்டர் ஷேக் சையது M.D
அழியாத அற்புதம்:
கடந்த தொடரில் கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா? என்பதை தீர்மானிப்பது ஆணின் விந்தணுதான் என்ற அறிவியல் ஆய்வின் முடிவினை தெரிந்து கொண்டோம். இந்தச் செய்தியினை அறிவியல் வாடை கூட இல்லாத அறியாமைக் காலம் என வர்ணிக்கப்பட்ட 1430 ஆண்டுகளுக்கு முந்திய காலத்திலேயே எழுதப்படிக்கத் தெரியாத உம்மி நபியான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலம் சொல்லப்பட்டு விட்டது. இந்தச் செய்தியினை எவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, அவ்வாறு சொல்லப்பட்டிருப்பது உண்மைதானா? என்பதை இந்தத் தொடரில் ஆதாரத்தின் அடிப்படையில் தெரிந்து கொள்வோம்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைத்தூதராக ஏற்று, ஏக இறைவனை மட்டுமே வழிபட வேண்டும் என்பதை ஏற்க மறுத்துக் கொண்டிருந்த அறியாமை காலத்து மக்களிடம், அவர் ஒரு இறைத்தூதர்தான் என நிரூபனம் செய்தவற்கு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பல அற்புதங்களை அல்லாஹ் வழங்கி இருந்தான். அவ்வாறு அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்களிலேயே மிகச்சிறந்த பேரற்புதமாக விளங்குவது அருள் மறை குர்ஆனாகும். இதனை ஒரு அரபுக் கவிஞர் எல்லா அற்புதங்களையும் மிகைத்து, நம்மோடு காலமெல்லாம் நிலைத்து நிற்கும் பேரற்புதம் அருள் மறைக் குர்ஆன் ஆகும் என்று குறிப்பிடுகிறார்.
இலக்கணமும், இலக்கியமும் செரிந்த கருத்தாழமிக்க அதன் வசன நடை கண்டு அன்றைய பிறவிக் கவிஞர்களும் அதிசயித்துப் போனார்கள். உம்மி நபியினால் சொல்லப்பட்டது போல் நாமும் ஏன் எழுத முடியாது? என்று போட்டிக்கு நின்றவர்கள் கூட அதன் சொற்பிரயோகத்தில் சொக்கிப் போனார்கள்.
குர்ஆனின் ஒரேயொரு வசனத்தைப் போன்ற மாற்று வசனம் ஒன்றை உருவாக்கிட நீங்கள், விரும்புவோரையெல்லாம் கூட்டுக்கு அழைத்துக் கொண்டு முயன்றுபாருங்கள் என 1430 ஆண்டுகளுக்கு முன்னால் உம்மி நபியின் மூலம் இந்த உலகிற்கு எடுத்து வைக்கப்பட்ட அந்த சவால் இது வரைக்கும் யாராலும் எதிர் கொள்ள முடியாத சவாலாகவே இருந்து கொண்டிருப்பது அந்த குர்ஆன் இறைவேதம் என்பதற்கான அழியாத அடையாளமாகும். உலக அழிவு வரை அந்த சவாலை யாரும் எதிர்க் கொள்ள முடியாது என்பது வேறு விஷயம்.
ஏகத்துவப் பிரச்சாரம் ஏற்புடையதல்ல என்று ஏட்டிக்குப் போட்டியாக பேசித் திரிந்த, அடங்காத அட்டூழியங்களை அப்பாவி முஸ்லிம்களின் மீது தகாத முறையில் ஏவி விட்டு, அதனால் அவர்கள் படும் அவஸ்தையை கண்டு அளவிலா ஆனந்தம் அடைந்து வந்த, அறியாமையின் பிறப்பிடம் எனும் அடை மொழிக்கு சொந்தக்காரன் அபுஜஹில் கூட இருள் சூழ்ந்த இரவு நேரங்களில் இருளடைந்த கனத்த இதயத்துடன் இறைவேதம் ஓதப்படும் ஓசை வரும் திசை நோக்கி மெல்ல சென்று யாரும் அறியாத வண்ணம் ஒட்டுக் கேட்கத் தூண்டியதே! அது எது? குர்ஆன் வசனங்கள், மனித படைப்பாற்றலுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் வெளிப்பாடு என்பதை அவன் உணர்ந்து கொண்டதல்லவா?
மாற்றுக் கருத்து கொண்டிருந்த உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனதில் உள்ள விடயங்களை மாற்றிய வசனம்தான் மறக்க முடிகிறதா? கேட்கக்கூடாதென காதில் பஞ்சடைத்து கால் கடுக்க மக்கா வீதியிலேயே நடந்து திரிந்த துஃபைல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை துக்கம் துறந்திட துள்ளிக் குதித்து தூய நபியின் பக்கம் செல்ல வைத்த சிறப்பினை இன்றைக்கும் படித்துப் பார்க்கிறோம். துஃபைல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் காதுப் பஞ்சு பறந்தது, அவரது செவிப்பறையில் அல்லாஹ் அருள் வசனம் புகுந்தது. அதனால் அவரது உள்ளமோ ஆனந்த ஆகாயத்தில் சிறகடித்துப் பறந்தது. இந்த நிகழ்வுகளெல்லாம் குர்ஆன் இருளடைந்த மனித மனங்களில் ஏற்படுத்திய பேரொளிப் புரட்சிகளின் வெளிப்பாடுகளில் சிலவைகள்தான். இன்னும் இது போல, அல்லது இதை விட வியத்தகு ஆச்சரியங்கள் நிறைந்த வரலாறுகள் ஏராளம் உண்டு.
உதாரணத்திற்குச் சொல்லப்பட்ட இவர்களை குர்ஆன் இறைமறைதான் என ஏற்க வைத்ததுதான் எது? அந்தக் காலத்தில் அறிவியல் உண்மைகள் உணரப்பட்டிருந்தனவா? இல்லை அறவே இல்லை. ஏன்? அதன் வாடையைக் கூட அவர்கள் நுகரவில்லை என்பது உலகமறிந்த உண்மை. எனவே, குர்ஆனில் இடம் பெற்றிருக்கும் அறிவியல் கருத்தால் அவர்கள் ஈர்க்கப்பட்டார்கள் என்று சொல்லமுடியாது. என்றாலும் இலக்கணமும், இலக்கியமும் அரபிகளின் உள்ளங்களை ஆட்சி செய்து கொண்டிருந்தது என்று சொல்வதை விட ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது என்றால் அது மிகப் பொருத்தமாக இருக்கும்.
அதனால் இலக்கிய சுவையும், கருத்துக் கோர்வையும் உள்ள கவிதைகள் அவர்களின் உயிரினும் மேலாக மதித்து வந்த கஃபாவின் சுவர்களில் தங்களுக்கும் ஓர் இடம் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தன. அந்த காலகட்டத்தில்தான் அனைத்து இலக்கிய காவியங்களையும் மிகைத்து நிற்கும், அனைத்து அரபிக் கவிஞர்களுக்கும் சவாலாக விளங்கும் குர்ஆன் ஒரு உம்மியின் மீது இறக்கியருளப்பட்டது. அதனை இல்லாமல் ஆக்க எதிரிகள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தார்கள். இறுதியில் தோற்றுப்போய், அதன் இலக்கியத்திற்கு முன் சரணடைந்து இஸ்லாத்தில் தஞ்சம் புகுந்து விட்டார்கள். அதனால் அழிவும், முடிவும் இல்லாத எல்லையில்லா ஆனந்தம் கரைபுரண்டோடும் சுவர்க்கத்தின் சுகத்தில் தஞ்சமானார்கள். அது அன்றைய சரித்திரம்.
அறிவியல் பார்வை:
இன்றோ இலக்கண-இலக்கிய உணர்வுகள் உறைந்து போய், அறிவியல் முதிர்ச்சியில் அலை மோதிக் கொண்டிருக்கும் மனித மனங்களை, குர்ஆன் தனது தீர்க்கமான அறிவியல் உண்மையால் வெற்றி கொண்டுள்ளது என்பதே சரியான உண்மையாகும். அதனால் குர்ஆனின் இலக்கியம் முக்கியத்துவம் இழந்து விட்டது என்று பொருளல்ல. மாறாக மக்களின் மனநிலை இலக்கியத்தில் திளைத்திருந்த காலம் மாறி, அறிவியல் பக்கம் பார்வை செலுத்தி அதற்கு அதி முக்கியத்துவம் வழங்கும் காலம் பிறந்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் குர்ஆன் கூறும் பல அறிவியல் உண்மைகள் புரிந்து கொள்ளப்பட்டு, பல விஞ்ஞானிகளும், அறிவியல் வல்லுனர்களும் குர்ஆன் ஒர் இறைவேதம்தான் என்று உறுதியாக சான்று பகர்ந்து இஸ்லாத்தில் இணைந்துள்ளார்கள். இதற்கான எடுத்துக் காட்டுகள் சமீபத்திய வரலாறுகளில் ஏராளம்! ஏராளம்! எனினும் அவர்களின் வரலாறு கூற இது பொருத்தமான இடமில்லை என்பதால் தவிர்த்துக் கொண்டேன்.
இன்றைய அறிவியல் உண்மைகள் குர்ஆனில் ஏராளமாக இடம் பெற்றுள்ளது என்பதை விளக்கும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளோம். அந்த வகையில், கருவில் உருவாகும் சிசு ஆணாக, பெண்ணாக பிறப்பதற்கு ஆணின் விந்தணுதான் காரணம் என்பது குர்ஆனில் பல வசனங்களில் மறைமுகமாகவும், தெளிவாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனை பல முறை நாம் படித்துள்ளோம், படித்துக் கொண்டும் இருக்கிறோம். ஆனால், ஆய்வுக் கண்ணோட்டத்தில் அந்த வசனங்களை படித்துப் பார்க்க வில்லை. எனவே, அந்த உண்மைகள் பலரின் கவனத்திற்கு வராமல் போய்விட்டது.
அவர்கள் குர்ஆனை ஆராய்ந்து படிக்க வேண்டாமா? அல்லது அவர்களது இதயங்களில் அதற்குரிய பூட்டுகள் போடப்பட்டுள்ளனவா? என்றும், இந்த குர்ஆனை சிந்தித்துப் படிப்போருக்கு அதில் பல அத்தாட்சிகள் உண்டு என்றும் குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டிருந்தும் இன்று முஸ்லிம்களான நாம் சிந்தித்துப் படிப்பதே இல்லை. அதிலும் வேதனை என்னவென்றால், குர்ஆனின் அரபி எழுத்துக்களையே வாசிக்கத் தெரியாதவர்கள்தான் நம்மில் ஏராளம், ஏராளம். அவர்களால் அதன் பொருளைத்தான் புரிந்து கொள்ள முடியுமா? குர்ஆனை வாசிப்பதற்கே தெரியாத இவர்களால் அதனின் பொருளை அறிந்து, எப்படி ஆய்வுகள் செய்து அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ள முடியும்?.
இன்று மாற்று மதச் சகோதரர்கள் குர்ஆனைப் படித்து, அதில் கூறப்படும் விவரங்களை புரிந்து ஆய்வுகள் நடத்துகிறார்கள். ஆனால் நமது நிலைபாடு என்ன? ஒருவர் வீட்டில் மரணம் விழுந்தால் மட்டுமே பலர் கூடி குர்ஆன் ஓதும் சம்பிரதாயம் நமது சமூகத்தில் வேரூன்றி நிற்கிறது. மற்ற காலங்களில் பட்டுத் துணியில், அல்லது வெல்வெட்டுத் துணியில் துயில் கொள்ளச் செய்து, தூக்கி ஓரம் கட்டி விடுகிறார்கள் நம்மில் பலர். இளவு வீடுகளில் உச்சரிக்கப்படும் மந்திரமாகவே நாம் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். குர்ஆன் உயிருள்ளவர்களை எச்சரிப்பதற்காக அருளப்பட்டது என்ற உண்மையை மறந்து, இந்த இறைமறையையே மரணிக்கச்செய்யும் அவலம் நமது சமூக அமைப்பில் உள்ள வரை உயிரோட்டம் உள்ள சமுதாயமாக நாம் ஒரு போதும் திகழ முடியாது என்பது நிச்சயம்.
மேலும் வெண்ணையை கையில் வைத்துக் கொண்டு நெய் தேடி அலைந்த கதையைப் போல, அறிவியல் கருவூலத்தை கையில் வைத்துக் கொண்டு, அறிவியல் உண்மைகளை வேறெடங்களில் நாம் தேடி அலைவது வேடிக்கையானதும் வேதனை தரக் கூடியதுமாகும். அறிவியல் உலகில் கண்டுபிடிப்புகள் வெளிப்படும் போதெல்லாம் வாய்பிளந்து நிற்கிறோம். ஆனால் அந்த அறிவியல் உண்மை 1430 ஆண்டுகளுக்கு முன்பே நமது இறைவேதம் குர்ஆனில் சொல்லப்பட்டு விட்டது என்பதை மறந்து விடுகிறோம்.
எனவே, குர்ஆனை ஆய்வு செய்து படியுங்கள். அதில் படிப்பினைகள் பல உண்டு. அறிவியல் உண்மையோ அள்ள அள்ள குறையாமல் நிறைந்து கிடக்கிறது. குர்ஆன் ஒரு முடிவுறா அறிவியல் சுரங்கம். தோண்டத் தோண்ட புதிய புதிய கருத்துகள் புலப்பட்டுக் கொண்டே இருக்கும். எனவே, அன்பு வாசகர்களே! குர்ஆனை படிப்பதற்கென நமது நேரங்களில் கணிசமான அளவு அதற்காக செலவிட வேண்டும். அதில் ஆய்வுகள் பல நடத்த வேண்டும். ஆயுட்காலம் முழுவதும் அல்லாஹ்வின் அருளுக்கு அருகதையானவர்களாக நம்மை நாம் ஆக்கிக் கொள்ள வேண்டும்.
கர்பத்தில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தீர்மானிப்பது விந்தணுதான் என்ற உண்மையை குர்ஆனின் வசனங்களை படித்துப் பார்க்கும் யாரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அவ்வளவு எளிமையாக சொல்லப்பட்டிருப்பது குர்ஆனின் அறிவியல் அற்புதங்களில் ஒன்றாகும். இந்த அறிவியல் உண்மையை 1430 ஆண்டுகளுக்கு முன்னால் ஏன் சொல்ல வேண்டும்? அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் அறிவியல் உண்மைகளைப் புரிந்து கொள்ளும் நிலையில் இருந்தார்களா? என்று வரலாற்றை படித்துப் பார்க்கும் போது, வேறொரு பெரிய வாழ்வியல் உண்மை அந்த வசனங்களின் மூலம் உணர்த்தப்படுவது தெரியவரும். அறிவியல் வாடை கூட இல்லாத அம்மக்கள், இந்த உண்மையை புரிந்து கொள்வதற்காக மிக எளிமையாக ஆக்கப்பட்டுள்ள இந்த வசனங்கள், மனிதாபிமானமற்ற கொடுமையான பெண் சிசு வதைகளுக்கு முற்று புள்ளி வைப்பதற்காகத்தான் இந்த உண்மையை அப்போது சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
ஆம்! பெண் குழந்தை பெற்றுத் தந்த தனது மனைவியினை அவள்தான் அதற்கு காரணம் என்று கருதி பல சித்திரவதைகள் செய்து, அவள் பெற்ற குழந்தையை புதை குழியில் புதைத்து வந்த அவர்களுக்கு, குழந்தை பெண்ணாகப் பிறப்பதற்கு ஆண்மகனான நானேதான் காரணம், தன்னிலிருந்து வெளிப்பட்ட விந்தணுவின் மூலம்தான் பெண் குழந்தை படைக்கப்பட்டது என்பதை உணர்த்தும் போது, அந்த குற்ற உணர்வு தன் பக்கம் திரும்பி இது போன்ற கொடுமைகள் நடக்காமல் தடுக்க முடியும். அதனைத் தான் இந்த வசனங்கள் சாதித்தன. வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் இது பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்ஸான் என்றால் என்ன?
பாலினத்தை தீர்மானிப்பது விந்தணுதான் என்று கூறும் வசனங்களில் சிலவற்றை எடுத்துக் கூறி, அதில் அந்தக் கருத்து எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது என்பதை உங்களது சிந்தனைக்கு முன் வைக்கிறேன்.
خَلَقَ الْأِنْسَانَ مِنْ نُطْفَةٍ
விந்தணுவிலிருந்து மனிதனை (அல்லாஹ்) படைத்தான். அல் குர்ஆன்: 16:4
فَلْيَنْظُرِ الْأِنْسَانُ مِمَّ خُلِقَ . خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ
ஆகவே, மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப் பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்துப் பார்க்கவும். குதித்து வெளியாகும் நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அல் குர்ஆன்: 86:5
முதல் வசனத்தில் நுத்ஃபாவிலிருந்து இன்சான் படைக்கப்பட்டதாகவும், இரண்டாவது வசனத்தில் குதித்து வெளியாகும் நீரிலிருந்து இன்ஸான் படைக்கப்பட்டதாகவும் கூறப் பட்டுள்ளது. நுத்ஃபா என்பதும், குதித்தும் வெளியாகும் நீர் என்பதும் முறையே ஆணின் விந்தணு, மற்றும் இந்திரியத்தைத்தான் குறிக்கிறது என்பதை முந்திய தொடர்களில் வலுவான ஆதாரத்தின் அடிப்படையில் தெளிவுபடுத்தியுள்ளேன். விந்தணுவிலிருந்துதான் இன்சான் படைக்கப்பட்டான் என்ற உண்மை இந்த இரு வசனத்தின் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.
இங்கு இன்ஸான் என்ற அரபிச் சொல் எந்த பொருளில் பயன் படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு குர்ஆனின் பிரயோகமே நமக்கு பதிலாக அமைகிறது. தமிழில் மனிதன் என்ற வார்த்தையை ஆண், பெண் ஆகிய இரு பாலாரையும் குறிப்பதற்கு நாம் பயன்படுத்துவது போல அரபி மொழியில் இன்ஸான் என்று வார்த்தை குறிப்பிடப்படும்.
குர்ஆனில் சுமார் 59 முறை இன்ஸான் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு, அதன் தொடரில் இன்சான் செய்ய வேண்டிய சில கடமைகளும், வேறு சில செய்தித் துளிகளும் சொல்லப்பட்டுள்ளன. அந்தக் கடமைகள் ஆண்கள் மீது மட்டுமல்ல, மாறாக பெண்கள் மீதும் விதியாக்கப்பட்டதாகும். மேலும் அந்த இன்சான் குறித்து சொல்லப்பட்ட செய்திகள் ஆண்கள் விஷயத்தில் எவ்வளவு பொருத்தமானதாக இருக்கிறதோ, அதே போல பெண்களுக்கும் பொருந்தி வரும் செய்திகளாகவே உள்ளன என்பதற்கு பின் வரும் வசனம் சான்றாக இருப்பதைக் கவனியுங்கள்:
وَوَصَّيْنَا الْأِنْسَانَ بِوَالِدَيْهِ إِحْسَاناً حَمَلَتْهُ أُمُّهُ كُرْهاً وَوَضَعَتْهُ كُرْهاًوَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلاثُونَ شَهْراً
மேலும், தனது பெற்றோர்க்கு நன்மை செய்யுமாறு மனித(இன்சா)னுக்கு நாம் உபதேசம் செய்தோம், அவனுடைய தாய், சிரமத்துடன் அவ(இன்சா)னைச் சுமந்திருந்து, சிரமத்துடன் அவ(இன்சா)னைப் பிரசவிக்கின்றாள், (அவள்) கர்பத்தில் அவ(இன்சா)னைச் சுமப்பதும், அவ(இன்சா)னுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும். (அல் குர்ஆன்: 46:15.)
பெற்றோருக்கு நன்மை செய்யும் படி மனித(இன்சா)னுக்கு உபதேசம் செய்ததாக இறைவன் கூறுகிறான். இது ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல, பெண்களும் தங்களது பெற்றோருக்கு நன்மைகள் செய்ய வேண்டும். அது போல் ஒரு தாய் குழந்தையை கர்பத்தில் சுமந்திருப்பதும், அதற்கு பால் குடி மறக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும் என இந்த தொடரில் சொல்லப்பட்ட செய்தித் துளி ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல. பெண் குழந்தைக்கும் அதே கால அளவுதான். எனவே, இன்சான் என்ற வார்த்தை ஆண், பெண் ஆகிய இரு பாலாரையும் குறிக்கப் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும் என்பது இந்த வசனத்தின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
இந்த உண்மையை தெரிந்து கொண்டதற்குப் பிறகு மேலே கூறப்பட்ட இறைவசனத்தை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். ஆண், பெண் என படைக்கப்படுவதற்கு ஆணின் விந்தணுதான் காரணம் என்ற உண்மை மிக எளிதாக புரியவரும்.
وَاللَّهُ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ جَعَلَكُمْ أَزْوَاجاً وَمَا تَحْمِلُ مِنْ أُنْثَى وَلا تَضَعُ إِلَّا بِعِلْمِهِ
மேலும், அல்லாஹ் உங்களை (துவக்கத்தில்) மண்ணிலிருந்து படைத்தான், பின்னர் விந்தணுவிலிருந்து – (ஆண்-பெண் கொண்ட) ஜோடிகளாக ஆக்கினான். எந்தப் பெண்ணும் கர்பமடைவதும், பிரசவிப்பதும் அல்லாஹ் அறியாமல் நடைபெறுவதில்லை. அல் குர்ஆன்: 35:11.
இந்த வசனத்தில் இன்னும் சற்று தெளிவாகவே இந்த உண்மை விவரிக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். அதாவது உங்களை விந்தணுவிலிருந்துதான் படைத்தான், அந்த விந்தணுவின் மூலம்தான் ஆண், பெண் கொண்ட ஜோடிகளையும் உருவாக்கினான். இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள உங்களை என்ற அர்த்தத்திற்கு பயன் படுத்தப் பட்டுள்ள அரபி வார்த்தை ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் குறிக்கும் வார்த்தையாகும்.
இந்த வசனத்தின் தொடரில் பெண்கள் கர்ப்பம் அடைவது பற்றிய செய்தியை குறிப்பதற்கு சுமத்தல் எனும் பொருளுடைய தஹ்மிலு என்ற வார்த்தை பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. அதிலும் ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது. அதாவது பெண் என்பவள் ஆணிடமிருந்து உற்பத்தியாகி வரும் சிசு, அது எதுவாக இருந்தாலும் அதை சுமப்பவள்தான். அவள் குழந்தையை உற்பத்தி செய்பவள் அல்ல என்ற உண்மையும் மறைந்திருக்கிறது.
وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَى مِنْ نُطْفَةٍ إِذَا تُمْنَى
அல்லாஹ்தான் (கர்பறையில்) செலுத்தப்படும் விந்தணுவிலிருந்து (உங்களை) ஆண் பெண் ஜோடிகளாகப் படைத்தான். அல் குர்ஆன்: 53:45,46.
أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَى . ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّى . فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَى
(கர்பத்தில்) செலுத்தப்படும் இந்திரியத்தில் உள்ள ஒரு விந்தணுவாக அவன் இருக்கவில்லையா?
பின்னர் அவன் அலகத்தாக (இது குறித்து பின்னர் விவரிக்கப்படும்) இருந்தான். பின்னர் அவனைப் படைத்து செம்மையாக்கினான்.
பின்னர் இந்திரியத்திலிருந்து ஆண், பெண் என்ற ஜோடிகளைப் படைத்தான். அல் குர்ஆன்: 75:37,38,39.
இந்த இரு வசனமும் ஐயத்திற்கு இடமின்றி, ஆண், பெண் என்பது ஆணின் விந்தணுவிலிருந்துதான் படைக்கப்படுகிறது என்ற உண்மையை 1430 ஆண்டுகளாக இந்த உலகிற்கு மிகத் தெளிவாகவே அதே நேரத்தில் யாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறன்றன. இந்த உண்மையை அறிவியல் உலகம் மிகத்தாமதமாக தற்போதுதான் கண்டுபிடித்திருக்கிறது. குர்ஆன் விஞ்ஞானத்தையும் போதிக்கும் அற்புத வேதம் என்பதை இனிமேலாவது இந்த உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நமது ஆவல்.
நபி மொழியில் முரண்பாடா?
பாலைத் தீர்மானிப்பது விந்தணுதான் என்பதை திருமறையில் இடம் பெற்ற பல வசனங்களின் மூலம் அறிந்து கொண்ட நாம், இது குறித்து வந்திருக்கும் ஒரு நபி மொழியினை படித்துப் பார்க்கும் சந்தர்பம் ஏற்படலாம். அப்போது அந்த நபி மொழி குர்ஆனுக்கு எதிரான மாற்று கருத்தினை வலியுறுத்துவது போன்று தோன்றலாம். எனவே, அந்த நபி மொழியையும், அதற்கு சரியான விளக்கம் என்ன என்பதையும் அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.