நம்மை நாமே ஏமாற்றுகிறோம்
[ விலாசமே இல்லாத – ரேஷன் அட்டைக்கு அருகதையில்லாத – தெருவோரவாசிகள் இந்தியப் பிரஜைகள் அல்லாமல் போய்விடுவார்களா? அவர்களின் பசியை யார், எப்போது, எப்படிப் போக்குவது? அவர்களைப் பற்றிக் கவலைப்பட இங்கே யாருமே இல்லையா?]
பத்து ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் இந்திரகுமார் குஜ்ராலைச் சந்திக்க வியட்நாமிய அமைச்சர் ஒருவர் வந்திருந்தார். அவருடன் அளவளாவிக் கொண்டிருந்தபோது, இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருப்பதையும் நமது உணவுக்கிடங்குகள் நிரம்பி வழிவதையும் சொன்னபோது புன்னகைத்தார்.
“ஏன் நீங்கள் இதை நம்பவில்லையா?” என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் –
“பிறகு ஏன் தெருவோரங்களில் பலர் உங்கள் நாட்டில் பிச்சையெடுக்கிறார்கள்? ஒரிசா மாநிலத்தில் பட்டினிச் சாவுகள் நிகழ்வதாகச் செய்தி வருகிறதே, அது எப்படி? பலர் பட்டினி கிடக்கும்போது உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டதாகவும், உணவு ஏற்றுமதி செய்வதாகவும் நீங்கள் கூறுவது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலைமை தொடருமானால், இந்தியாவில் தீவிரவாதம் அதிகரித்து உள்நாட்டுக் குழப்பம்தான் ஏற்படும்”
1991-ல் இந்தியா பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் தாராளமயமாக்கல் கொள்கையை ஏற்றுக்கொண்டபோது அடுத்த பத்துஆண்டுகளில் நமது நாடு பூலோக சொர்க்கமாகப் போகிறது என்று உறுதியளித்தவர்களில் அன்றைய நிதி அமைச்சரும் இன்றைய பிரதமருமான மன்மோகன் சிங்கும் ஒருவர். பத்து ஆண்டுகளாகியும் சொர்க்கம் தென்படவில்லை என்பது இருக்கட்டும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு, எல்லோருக்கும் உணவு போன்ற அடிப்படைத் தேவைகள்கூட நிறைவேறவில்லை.
பொருளாதாரச் சீர்திருத்தத்தின் பயன் இப்போதுதான் மேல்தட்டு மக்களிடமிருந்தும் பெருநகரங்களிலிருந்தும் மெல்ல மெல்ல கீழ்நோக்கி நகரத் தொடங்கியிருப்பதாகவும் அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் வறுமையும், பசி பட்டினியும், வேலையில்லாத் திண்டாட்டமும் இருக்காது என்றும் ஆட்சியாளர்களும் பொருளாதார மேதைகளும் உறுதி அளித்தனர்.
அடுத்த பத்து ஆண்டுகளும் இப்போது உருண்டோடிவிட்டன. இன்றைய நிலைமை என்ன தெரியுமா? மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி மத்திய திட்டக்கமிஷனுக்கு அளித்திருக்கும் அறிக்கையின் 2004-05 ஆண்டுக்கான புள்ளிவிவரப்படி, இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கீழே வாழ்பவர்களின் எண்ணிககை 37.2 சதவிகிதம். அதாவது, ஏறத்தாழ 40.71 கோடி மக்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் இது நிச்சயமாக அதிகரித்திருக்குமே தவிர, குறைந்திருக்காது.
மத்திய திட்டக்கமிஷனின் கடந்த மார்ச் 2007 புள்ளிவிவரப்படி, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 27.5 சதவிகிதம். அதாவது 30.17 கோடி. திட்டக்கமிஷனின் புள்ளிவிவரத்தை நம்புவதா இல்லை சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டியின் புள்ளிவிவரத்தை நம்புவதா என்பதில் மத்திய அமைச்சரவைக்குக் குழப்பம் ஏற்பட்டு இபபோது பொது விநியோக முறையில் உணவுப் பொருள்களை வழங்க சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டியின் புள்ளிவிவரத்தை ஏற்றுக்கொள்வது என்று தீர்மானித்திருக்கிறார்கள்.
வேடிக்கை இத்துடன் நின்றுவிடவில்லை. அனைவருக்கும் உணவுதிட்டத்தின்படி பயன் அடையப்போவது திட்டக்கமிஷனால் அடையாளம் காட்டப்பட்ட 30.17 கோடிப் பேரோ சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டியால் குறிப்பிடப்படும் 40.71 கோடிப் பேரோ அல்ல. வெறும் 10 கோடிப்பேர் மட்டும்.
ஏன் என்று கேட்கிறீர்களா? இந்தப் பத்துக் கோடிப் பேருக்குத்தான் இருப்பிடம் என்று பெயருக்கு ஒரு குடிசையாவது, விலாசமாவது இருக்கிறது. ஏனையோர் தெருவோரங்களிலும் பொதுஇடங்களிலும் உண்ண உணவும், உடுக்க உடையும், செய்ய நிரந்தரத் தொழிலும் இல்லாமல் நாடோடி வாழ்க்கை வாழ்பவர்கள். இல்லையென்றால், காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகள்.
மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் சரிதானா? இன்னொருபுறம் நடந்து கொண்டிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் தந்தேவாடா பகுதியில் ஆதிவாசிகள் வசிக்கும் சுமார் 258 கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார்கள். இதேபோல, டெண்டுல்கர் கமிட்டியின் புள்ளிவிவரமும் பல ஆதிவாசிக் கிராமங்களைக் கணக்கில் எடுக்காமல் தானே தனது அறிக்கையைத் தயாரித்திருக்கும்?
உணவுப் பாதுகாப்பு என்கிற பெயரில் அனைவருக்கும் உணவு என்று திட்டம் தீட்டி பொது விநியோக முறை மூலம் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது என்பது அத்தியாவசியத் தேவை. இதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க முடியாது. ஆனால், முறையாக நிறைவேற்றப்படாத நல்ல திட்டம் என்பது முறைகேடுகளின் ஊற்றுக்கண்ணாக மாறி, மக்கள் மனதில் கொந்தளிக்கும் எரிமலையாக மாறிவிடுமே என்பதுதான் நமது கவலை.
ஒருபுறம், வளர்ச்சி என்கிற பெயரில் காடுகள் மட்டுமல்ல, விவசாய நிலங்களும் கபளீகரம் செய்யப்படுகின்றன. இன்னொருபுறம் 60 ஆண்டுகளாகியும் இன்னும் இந்தியா முழுவதும் முறைகேடுகள் இல்லாத பொது விநியோக முறையை ஏற்படுத்தாமல் இருக்கிறோம். பல மாநிலங்களில் ரேஷன் கடைகள்கூட கிடையாது என்பதுதானே யதார்த்த உண்மை? அப்பழுக்கில்லாத பொதுவிநியோகச் சங்கிலியைக் கூட நம்மால் முறைப்படுத்தி நெறிப்படுத்த முடியாத நிலையில் அனைவருக்கும் உணவு எப்படிச் சாத்தியம்?
விலாசமே இல்லாத – ரேஷன் அட்டைக்கு அருகதையில்லாத – தெருவோரவாசிகள் இந்தியப் பிரஜைகள் அல்லாமல் போய்விடுவார்களா? அவர்களின் பசியை யார், எப்போது, எப்படிப் போக்குவது? அவர்களைப் பற்றிக் கவலைப்பட இங்கே யாருமே இல்லையா?
பொருளாதாரத் தாராளமயமாக்கல் என்று சொன்னபோது செல்வம் தாராளமயமாக்கப்படும் என்றும் குடிசைகள் கோபுரங்களாக மாறும் என்றும் கனவு கண்டோம். 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் புரிகிறது தாராளமயமாக்கப்படுவது செல்வம் அல்ல, வறுமை என்று. இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு மாவட்டங்கள் இந்திய அரசின் ஆளுமையில் இல்லை என்று. ஆண்டுதோறும் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று…
முன்னாள் பிரதமர் குஜ்ரால் வீட்டில் சந்தித்த வியட்நாமிய அமைச்சருடனான உரையாடல் ஏனோ நினைவை உலுக்குகிறது. நமது ஆட்சியாளர்கள் போடுவது தப்புக்கணக்கு என்று எச்சரிக்காமல் இருக்க முடியவில்லை!
மிக்க நன்றி: தினமணி