ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்திறன் ஒளிந்திருக்கிறது. அதற்கேற்ற துறையை தேர்வு செய்து படித்தால் நிச்சயமாக பிரகாசிக்கலாம். உங்களுக்குள் என்ன ஆற்றல் ஒளிந்திருக்கிறது, அதற்கேற்ற துறை எது?
மாணவர்கள் படித்து முடித்தவுடன் மேற்கல்வி மற்றும் வேலைவாய்ப்பை தேர்வு செய்ய முடிவெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை கடந்த வாரம் பார்த்தோம். படிப்பை தேர்வு செய்ய இருக்கும் மாணவர்கள் தங்களுக்கு ஏற்ற துறையை தாமே தேர்வு செய்ய பாடத் துறைகளைப் பற்றி இங்கே விளக்கப்படுகிறது.
பல பிரிவுகளாக பாடங்கள்
படிப்புகளை அவை சார்ந்த வேலை வாய்ப்புக்கள், அதற்கு தேவையான தனித்திறன்களைக் கொண்டு பல பிரிவுகளாக வரிசைப்படுத்தலாம். உங்களுக்கு உள்ள தனித்திறன்கள் அந்தப் படிப்பின் துறையோடு சம்பந்தப்பட்டு இருந்தால் நீங்கள் அந்த துறையை தேர்வு செய்து படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
அம்சங்கள் வருமாறு:
o. கலை மற்றும் தொடர்பு கொள்ளுதல்
o. வணிகம் மற்றும் மேலாண்மை
o. சுற்றுப்புறச் சூழல் மற்றும் விவசாயம்
o. உடல் நலம் சார்ந்த பணிகள்
o. மனிதவளம் சார்ந்த பணிகள்
o. தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பொறியியல்
இந்த பிரிவுகளுக்கு தேவையான தனித்திறன்கள், அவை சார்பான வேலைவாய்ப்புகள் வழங்கும் துறைகளை இனி அறிந்து கொள்வோம்.
கலை மற்றும் தொடர்பு கொள்ளுதல்:
நீங்கள் சுயமாக படைப்பாற்றலுடன் சிந்திப்பவரா எழுதும் திறன், கற்பனை வளம், இசை, கலை, நாடகம், எழுத்து ஆகியவற்றை பயன்படுத்துவது, தகவல்களையும், கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றில் உங்களுக்கு ஆர்வம் உண்டா? உங்களுக்கு ஏற்ற துறைதான் கலை மற்றும் தொடர்பு கொள்ளுதல் துறை.
முனைப்பு, விடாமுயற்சி, புதிய உத்திகளை கையாளும் திறன், படைப்பாற்றல் மற்றும் வித்தியாசமாக செயல்படுவதில் மகிழ்ச்சி கொள்ளும் மனோபாவத்தை பெற்ற நீங்கள் இத்துறையில் சுலபமாக சாதிக்க முடியும்.
இத்துறை சம்பந்தமான படிப்புகளை தேர்வு செய்து படிப்பவர்களுக்கு கட்டிடக்கலை, மலர் அலங்காரம் சார்ந்த பணிவாய்ப்புகள், எழுத்தாண்மை, படைப்பை வடிவமைத்தல், அச்சிட்டு வெளியிடுதல் சார்ந்த பணிகள், இதழியல் எழுத்தாக்கம் சார்ந்த பணிகள், நுண்கலை சார்ந்த பணிவாய்ப்புக்கள், வணிக ரீதியான கலைப்பணிகள் காத்திருக்கின்றன.
வணிகம் மற்றும் மேலாண்மை
வார்த்தைகளை திறம்பட கையாள விரும்புபவர்கள், முறையான வழிமுறைகள், தர நிர்ணயம் ஆகியவற்றை உருவாக்க விரும்புபவர்கள், எதிலும் நிலையாக செயல்படுவதில் ஆர்வம் உடையவர்களுக்கு வணிகம் மற்றும் மேலாண்மை பிரிவு சிறப்பு சேர்க்கும்.
தலைமை ஏற்று வழிநடத்தும் திறன், செயல்களத்தில் சுறுசுறுப்பாக செயல்படும் திறன் கொண்ட உங்களுக்கு ஏராளமான பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. கணக்கியல் துறை, சந்தைப்படுத்துதல், வியாபாரம், மக்கள் தொடர்பு, வணிக மேலாண்மை, தகவல்களை வகைப்படுத்தும் துறை, சட்டம் சார்ந்த துறை, நிர்வாகம் செய்தல் போன்ற துறைகளில் பணிவாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும்.
சுற்றுப்புறச்சூழல் மற்றும் விவசாயம் சார்ந்த பிரிவுகள்
ஆராய்ந்தறியும் ஆர்வம், சமயோசிதமாக செயல்படுதல், அதிக ஆற்றலுடன் களத்தில் செயல்படுதல் போன்ற மனோபாவம் கொண்ட சிலர் இருக்கிறார்கள்.
இவர்கள் திட்டமிடுதல் மற்றும் அமைப்பை ஏற்படுத்துதல், கைகளையே மூலதனமாக கொண்டு உழைத்தல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணியாற்றுதல், களத்தில் இறங்கி பணியாற்றுதல், பிராணிகளை வளர்த்தல், பணியில் ஈடுபடுத்துதல், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆராய்தல் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த திறன்கள் உங்களுக்கு இருந்தால், உயிரின வாழ்க்கை சூழல் சார்ந்த பணிவாய்ப்பு, விவசாயப் பொறியியல் சார்ந்த பணிவாய்ப்பு, இயற்கை பண்பாடு சார்ந்த பணிவாய்ப்புகள், பூங்காக்கள், தோட்டங்கள் சார்ந்த பணிவாய்ப்புகள், கால்நடை மருத்துவம், கடல் உயிரியல், இயற்கை நிலக்காட்சி மற்றும் வனப்புடைய தோட்டம் அமைத்தல், விவசாயம் சார்ந்த பணிவாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
செய்யும் வேலையில் திருப்தி?
பலருக்கும் தான் செய்யும் பணிகுறித்து கசப்பான எண்ணங்கள் இருக்கின்றன. தான் சார்ந்திருக்கும் துறை சரியானதுதானா? நல்ல வருவாயும், நல்ல எதிர்காலமும் அமையுமா? என்ற தவிப்பும் இருந்து வருகிறது.
புகைப்படக் கடையில் ஒரு இளைஞன் வேலைக்குச் சேர்ந்தான். அவனுக்கு துணையாக ஒருவனும் இருந்தான். கடைக்கு எப்போதாவதுதான் வேலை வரும். இதை அறிந்த முதல் இளைஞனுக்கு, தான் சார்ந்திருக்கும் துறை பற்றி பலவிதமான எண்ண ஓட்டங்கள் இருந்து வந்தன.
ஒருநாள் முதியவர் ஒருவர் பழமையான புகைப்படத்துடன் வந்தார். அந்தப்படம் சில இடங்களில் கிழிந்து ஒட்டப்பட்டிருந்தது. அதை சரிசெய்து அழகாக பிரேம் செய்து தர வேண்டும் என்று கடையில் இருந்த இளைஞரிடம் கூறினார்.
ஆனால் அவரோ அதை சரி செய்ய முடியாது என்று கூறிவிட்டார். ஆனால் அந்த இளைஞனுக்கு உதவியாக இருந்த இன்னொருவன் அந்தப் படத்தை சரி செய்து தருவதாக வாங்கிக் கொண்டான்.
மறுநாள், முதியவர் வந்தவுடன் சரிசெய்து வைத்திருந்த படச்சட்டத்துடன் கூடிய புகைப்படத்தை கொடுத்தான் அந்த இரண்டாம் இளைஞன். முதியவர் கண்களில் கண்ணீர் ததும்ப படத்தை வாங்கிக் கொண்டார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தானும் தன் மனைவியும் திருமணமான புதிதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. சமீபத்தில் தனது மனைவி இறந்து விட்டதால் நினைவுச்சின்னமான இதை பத்திரப்படுத்த விரும்பியதாக கூறினார். தான் எதிர்பார்த்ததைவிட நன்றாக செய்து கொடுத்திருப்பதாக அவர் நன்றியுடன் பாராட்டினார்.
பின்னாளில் அந்த தன்னம்பிக்கை இளைஞன் தனி நிறுவனம் நடத்தும் அளவுக்கு முன்னேறினான். ஆனால் தான் சார்ந்த துறை பற்றி கேள்வி எண்ணத்துடனும், திறமை, ஆர்வம் காட்டி செயல்படாத முதலாவது இளைஞன் இன்னும் கடையில் சாதாரண பணியாளராகவே இருக்கிறான்.
நீங்கள் எப்படி?
உடல் நலம் சார்ந்த பிரிவு
மக்களுடன் இணைந்து செயல்படும் ஆர்வம், ஆய்வு மற்றும் கண்காணிப்பதில் ஆர்வம், நுணுக்கமாக விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுபவராக நீங்கள் இருக்கிறீர்களா?
கனிவுடன் நடந்து கொள்ளுதல், எதையும் அலசி ஆராய்தல், மென்மையான உணர்வு போன்ற மனோபாவத்தை கொண்ட உங்களுக்கு நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு சேவை செய்வதில் விருப்பம் இருக்கும்.
உடற்பயிற்சி, உயிரி மருத்துவ ஆய்வு, பல் சிகிச்சை, மருத்துவம் சார்ந்த பணிகள், மருந்தாளுநர், உளவியல் பிரிவு சார்ந்த பணிகள் போன்றவற்றில் இப்பிரிவினருக்கு பணிவாய்ப்புகள் ஏராளமாக காத்திருக்கின்றன.
மனித வளம் மற்றும் சேவை சார்ந்த பிரிவுகள்
பிறருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் ஆர்வம், வழி நடத்தும் திறன் பலருக்கு இருக்கும். இவர்கள், மற்றவர்கள் நலனில் அக்கறை காட்டுதல், அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுதல், நம்பகத்தன்மையோடு நடந்து கொள்ளுதல், மற்றவர்களை மதித்தல், பிறர் மதிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் போன்ற மனோபாவம் கொண்டவர்களாக இருப்பர்.
தொடர்புகொள்ளும் திறன், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன் ஆகியவற்றை கொண்டவர்களாக இருப்பர்.
இவர்களுக்கு சமூகப்பணி, குழந்தைகள் பராமரிப்பு, சட்டம் சார்ந்த பணிவாய்ப்புகள், தீயணைப்பு மேலாண்மை, கற்பித்தல், மனிதவளம், உளவியல் சார்ந்த துறைகளில் பணிவாய்ப்புகள் இருக்கின்றன.
தொழில் நுட்பம், அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவு
கட்டுமானம், பழுதுநீக்குதல், உபகரணங்களை பயன்படுத்தி பணியாற்றுதல், கைகளையே கருவிகளாக பயன்படுத்தி பணியாற்றுதல், மோட்டார் வாகனங்களை இயக்குதல் ஆகியவற்றில் ஆர்வம் காண்பிப்பவர்களுக்கு இப்பிரிவு ஏற்றது.
தனித்தன்மையுடன் அனுபவ ரீதியாக, சரியான அணுகுமுறையில் செயல்படுதல், தொடர்புகொள்ளும் திறன், ஆராய்ந்து அறியும் திறன், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன் கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள்.
கட்டுமானப்பணி, கணினி தொழில்நுட்பப்பணி, உற்பத்தி, ஓட்டுநர் பணி, வாகனப் பராமரிப்பு பணி, எந்திர பொறியியல், மின்சாரத்துறை சார்ந்த பணிவாய்ப்புக்கள் இவர்களுக்கு கைகொடுக்கும்.
உங்களுக்குள் இருக்கும் திறனை புரிந்து கொண்டு அதுசார்ந்த துறையை தேர்வு செய்து படியுங்கள். பணிவாய்ப்பைப் பெற்று மேன்மை பெறுங்கள். வாழ்த்துகள்!
நன்றி: ப.சுரேஷ்குமார் , உளறுவாயன்