[மனிதனைத்தவிர மற்ற எந்த உயிரினங்களும் பெண்ணினத்தை இவ்வளவு ஆதிக்கம் செய்வதில்லை. பிஞ்சுக் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் வேலை உட்பட பெண் செய்யும் பணிகளை பறவைகளில் ஆண் பறவைகளே அதிகம் செய்கின்றன. 90 சதவீத வேட்டையாடும் வேலையை பெண் சிங்கமே செய்தாலும் அதை ஆண்சிங்கம் அவமானமாகக் கருதாமல் தன் குடும்பத்தை, குட்டிகளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறது.
பெண்கள் படித்தால் மட்டும் போதாது. தங்களுக்கு இன்னன்ன அதிகாரங்கள் உள்ளது என்பதை தெளிவாக அறிந்து கொண்டு பிரச்சினைகள் வரும் போது அவற்றை துணிச்சலுடன் அணுக வேண்டும்.
ஆணாதிக்க உணர்வு மகாத்மா காந்திக்கும் இருந்தது என்பதை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். ”திருமணமான புதிதில் நான் என் மனைவியை டாமினேட் செய்தேன். அவள் விருப்பத்தை மீறி தெருவில் உள்ள டாய்லெட்டை கழுவப் பணித்தேன். இதில் எங்களுக்குள் தகராறு மூண்டது. பின்பு நான் என் தவறை உணர்ந்து அவளுக்குப் பணிவிடைகள் செய்ய ஆரம்பித்தேன்” என்று தன்னுடைய ‘சத்திய சோதனை’ புத்தகத்தில் காந்திஜி எழுதியுள்ளார்.
நல்ல நாட்டுக்கு நல்ல மக்கள் தேவை. பிறந்த குழந்தைக்கு ஐந்து வயது ஆகும் வரை ஆரம்பக் கல்வி, நற்குணங்கள் போன்றவற்றை குழந்தைக்கு பயிற்றுவிக்கும் அடித்தளத்தை பெண்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும். அதுவரை மிக அவசியம் என்றாலன்றி, பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
தரமற்ற பொருள்களையும் தங்களைப் பயன்படுத்தி தள்ளி விட முடியும் எனுமளவுக்கு அப்பொருளை கவர்ச்சியுடன் கையில் ஏந்தி நிற்கும் விளம்பரக் காட்சிக்கு பெண்கள் ‘நோ’ சொல்ல வேண்டும். செயற்கை அழகுக்கும், கவர்ச்சி அலங்காரத்திற்கும் செலவிடும் நேரத்தை குறைத்து பொது அறிவு, கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.
நாட்டில் பெண்கள் எல்லாம் சேர்ந்து, பெண்களை மட்டும் உறுப்பினர்களாகக் கொண்டு, பெண்களின் முழு ஆதரவோடு ஒரு கட்சி ஆரம்பித்தால் எப்படி இருக்கும்? ரகசிய வாக்குதானே, வீட்டில் உள்ள ஆண்களின் விருப்பப்படி ஓட்டுப் போட வேண்டியதில்லை என்று வைத்துக்க்கொள்வோம்! அவ்வளவுதான். ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் என நாடே பெண் வசப்படும். அப்படி நடந்தால் ஆண் உரிமைக்காக ஆண்கள் ஏங்க வேண்டியிருக்கும்.]
‘சம’ உரிமையும், ‘செம’ உரிமையும்
”கணவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் மனைவி அவனுக்கு அடிபணிய வேண்டும். அவன் சிரித்தால் அவள் சிரிக்க வேண்டும்; அவன் அழுதால் அவளும் அழ வேண்டும். மனைவி என்பவள் கேள்வி கேட்பவளாக இருக்கக்கூடாது; கேள்விகளுக்கு பதில் மட்டும் சொல்பவளாக இருக்க வேண்டும். கணவன் சாப்பிட்ட பிறகுதான் அவள் அந்த இலையில் மீதமுள்ளதை சாப்பிட வேண்டும். அடிவாங்கினால் பொறுத்துக் கொண்டு கணவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அவன் இறந்த உடன் அவளும் தீக்குளித்து இறந்து விட வேண்டும்.” இது பழங்கால மனுநீதி கட்டளைகளில் சொல்லப்பட்டவை.
இந்த பயங்கர (அ)நீதி இப்போது இல்லை எனுமளவுக்கு இன்று பெண்கள் எல்லாத்துறைகளிலும் முன்னேறியிருக்கிறார்கள். குடும்பத்தில் பெண்களும் முக்கியம் என்பது உணரப்பட்ட உண்மையாகி விட்டது.
வீக்கர் செக்ஸ் அதாவது உடல் ரீதியாக பெண்கள் பலவீனமானவர்கள் என்று கருதப்பட்டாலும், ஆண்களை விட பெண்களே புத்திசாலிகள் என்று அறிவியல் அறிவிக்கிறது. ஆண்களுக்கு கையில் பலம்; பெண்களுக்கு காலில் பலம். உடல் வலியைத் தாங்குவதில் பெண்களே வல்லவர்கள். நினைவாற்றலில், பழைய நிகழ்ச்சிகளை துல்லியமாக விளக்குவதில் பெண்களை ஆண்கள் மிஞ்ச முடியாது. இரவில் கண் பார்வை பெண்களுக்கு பவராக இருக்கும். சிறு சத்தங்களைக் கூட பெண்களால் எளிதில், விரைவில் உணர முடியும் என்பதெல்லாம் அறிவியல் தரும் அதிசய நிஜம்.
ஆணாதிக்க உணர்வு மகாத்மா காந்திக்கும் இருந்தது என்பதை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். ”திருமணமான புதிதில் நான் என் மனைவியை டாமினேட் செய்தேன். அவள் விருப்பத்தை மீறி தெருவில் உள்ள டாய்லெட்டை கழுவப் பணித்தேன். இதில் எங்களுக்குள் தகராறு மூண்டது. பின்பு நான் என் தவறை உணர்ந்து அவளுக்குப் பணிவிடைகள் செய்ய ஆரம்பித்தேன்” என்று தன்னுடைய ‘சத்திய சோதனை’ புத்தகத்தில் காந்திஜி எழுதியுள்ளார். பெண்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு மாற காந்திக்கே ஒரு சில ஆண்டுகள் தேவைப்பட்டது. அப்படியென்றால், நம்மைப்போன்ற சாதாரண ஆத்மாக்களுக்கு எத்தனை ஆண்டோ?
மனிதனைத்தவிர மற்ற எந்த உயிரினங்களும் பெண்ணினத்தை இவ்வளவு ஆதிக்கம் செய்வதில்லை. பிஞ்சுக் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் வேலை உட்பட பெண் செய்யும் பணிகளை பறவைகளில் ஆண் பறவைகளே அதிகம் செய்கின்றன. 90 சதவீத வேட்டையாடும் வேலையை பெண் சிங்கமே செய்தாலும் அதை ஆண்சிங்கம் அவமானமாகக் கருதாமல் தன் குடும்பத்தை, குட்டிகளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறது.
“பெண்களை ருதுவாகும் முன்பு (பருவமடையும் முன்) விவாகம் செய்து கொடுக்கக் கூடாது. அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது. விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் விரும்பினால் புருஷனை விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது. பிதுரார்ஜிதத்தில் (சொத்தில்) பெண்களுக்கு சமபாகம் செய்து கொள்வதைத் தடுக்கக் கூடாது.
விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றை செய்து கவுரவமாக ஜீவிக்க விரும்பும் பெண்களுக்கு ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும்.” ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன் ‘பண்விடுதலை’ என்ற கட்டுரையில் பாரதி தெரிவித்திருந்த கருத்துக்கள் இவை. நூறாண்டு போனது; விஞ்ஞானம் வளர்ந்தது; ஆனால் மாறியது தமிழ் எழுத்து நடை மட்டுமே. மாறாதது இந்த உரிமைகளுக்காக இன்னமும் பெரும்பாலான பெண்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலை.
ஆயிரம் ஆண்டுகள் போராடி கி.பி.1829-ல் பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்கும் சட்டம் வந்தது. 1856-ல் பெண்கள் மறுமணம் சட்டமானது. இதெல்லாம் பெண்கள் கேட்டு, போராடி, போராடி பெற்றவை.
நாட்டின் ஜனாதிபதி பெண்; ஆளும் தேசிய கட்சியின் தலைவர் பெண்; பாராளுமன்ற சபாநாயகர் பெண். மூன்று மாநிலங்களில் முதலமைச்சர்களாக மூன்று பெண்கள். அமைச்சர்களாக, உயர் அதிகாரிகளாக ஆங்காங்கே பெண்கள். இவையெல்லாம் பெண்ணினத்திற்கு சிறப்புதான். ஆனால் பெரிய கடலில் சிதறிக்கிடக்கும் சிறிய தீவுகளையும், விலை உயர்ந்த ஆபரணங்களில் பதிக்கப்படும் கண்ணாடி கற்களையும் பார்த்து, ‘ஆஹா, இதுவே போதும்’ என்று பாராட்டிக் கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் நாட்டில் உள்ள 110 கோடி மக்களில் 53 கோடி பேர் (48 சதவீதம்) பெண்கள். அப்படி இருந்தும் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா 14 வருடங்களாக பாராளுமன்றத்தில்……!
நாட்டில் பெண்கள் எல்லாம் சேர்ந்து, .பெண்களை மட்டும் உறுப்பினர்களாகக் கொண்டு, பெண்களின் முழு ஆதரவோடு ஒரு கட்சி ஆரம்பித்தால் எப்படி இருக்கும்? ரகசிய வாக்கு தானே, வீட்டில் உள்ள ஆண்களின் விருப்பப்படி ஓட்டுப் போட வேண்டியதில்லை என்று வைத்துக்க்கொள்வோம்! அவ்வளவுதான். ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் என நாடே பெண் வசப்படும். அப்படி நடந்தால் ஆண் உரிமைக்காக ஆண்கள் ஏங்க வேண்டியிருக்கும். ‘என் சமையல் அறையில் நீ உப்பா, சர்க்கரையா? என்ற கற்பனை வரிகளை ஆண் பெண்ணைப் பார்த்து மாற்றிப் பாடவேண்டியிருக்கும்! ஆனால் இது நடக்குமா? பூனைக்கு யார் மணி கட்டுவது?
சம உரிமை பெண்களுக்கு கிடைக்காததற்கான முழுப்பழியையும் ஆண்கள் மீது சுமத்துவதும் நியாயமில்லை.
o போதும் என்று மகளை அம்மாவே தடுக்கும் வரை!
o உயிருடன் இருக்கும்போதே பேத்திக்கு 16 வயதுதான் என்றாலும் கல்யாணம்செய்து பார்த்துவிட வேண்டும் என்று பாட்டி ஆசைப்படும் வரை!
o ஒரு பொம்மை என நினைத்து மாமியார் விளையாடும் வரை!
o குழந்தை பிறந்தால் பெற்ற தாயே முகம் சுளிக்கும் வரை!
o எதிரில் வருகிறாள் என்பதை அபசகுனமாகக் கருதி இன்னொரு பெண்ணே தன்கணவனை வேறு திசையில் வழி அனுப்பும் வரை!
o பெண் வாழ்வை இழக்க இன்னொரு குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணேகாரணமாக இருக்கும் வரை!
மேற்சொன்ன இதெல்லாம் தொடரும் வரைபெண் உரிமை, பெண் முன்னேற்றம் என்பது முழு பலன் தரப் போவதில்லை.
பின்வருவனவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்தினால் பெண்ணுக்கு சம உரிமை என்பது சாத்தியமாகக் கூடும்.
என்னதான் சொர்க்க வாழ்க்கை அமைந்தாலும் வேலை செய்து சம்பாதிக்கும் கல்வி ஆயுதத்தை பெண்கள் எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
டூவீலர் மற்றும் கார் டிரைவிங் கற்றுக் கொண்டு ஆண்களை பின்னால் உட்கார வைத்து ஓட்டும் எண்ணமும், தைரியமும் பெண்களுக்கு வரவேண்டும்.
நல்ல நாட்டுக்கு நல்ல மக்கள் தேவை. பிறந்த குழந்தைக்கு ஐந்து வயது ஆகும் வரை ஆரம்பக் கல்வி, நற்குணங்கள் போன்றவற்றை குழந்தைக்கு பயிற்றுவிக்கும் அடித்தளத்தை பெண்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும். அதுவரை மிக அவசியம் என்றாலன்றி, பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
‘உனக்கா, எனக்கா’ என்று அக்கா, தங்கைகள் வரதட்சணையை போட்டி போட்டு எடுத்துச் செல்லக்கூடாது. இவர்கள் மனம் வைத்தால் மட்டுமே டவுரி சிஸ்டம் ஒழியும். அதே சமயத்தில் சொத்தில் சம பங்கு பெறும் உரிமையை அவர்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
தரமற்ற பொருள்களையும் தங்களைப் பயன்படுத்தி தள்ளி விட முடியும் எனுமளவுக்கு அப்பொருளை கவர்ச்சியுடன் கையில் ஏந்தி நிற்கும் விளம்பரக் காட்சிக்கு பெண்கள் ‘நோ’ சொல்ல வேண்டும்.
செயற்கை அழகுக்கும், கவர்ச்சி அலங்காரத்திற்கும் செலவிடும் நேரத்தை குறைத்து பொது அறிவு, கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.
பெண்கள் படித்தால் மட்டும் போதாது. தங்களுக்கு இன்னன்ன அதிகாரங்கள் உள்ளது என்பதை தெளிவாக அறிந்து கொண்டு பிரச்சினைகள் வரும் போது அவற்றை துணிச்சலுடன் அணுக வேண்டும். அதே சமயம் அச்சட்டங்களை தவறாகப் பயன்படுத்தி பொய்ப்புகார் மூலம் அப்பாவி ஆண்களை பழி வாங்கக்கூடாது. தேவைப்படுவது ‘சம உரிமை’ தானே தவிர ‘செம உரிமை’ அல்ல.
-பாபு புருஷோத்தமன்