பெண்களுக்கு ஹைளூ என்னும் மாதவிடாய் ஏற்பட்டு அது நின்ற பிறகு குளிப்பது கடமையாகும். நிஃபாஸ் என்னும் பிரசவத் தீட்டு ஏற்பட்டு அது நின்றுபோனதும் குளிப்பதும் கடமையாகும். ஹைளூ, நிஃபாஸூடைய காலத்தில் பெண்களுக்கு தொழுகை மன்னிக்கப்பட்டுப் போகிறது!
ஆனால், ஹைளூ, நிஃபாஸ் நின்றுபோனதும் குளித்து சுத்தமாகி தொழவேண்டியது கடமையாகும்! ”மதீனாவின் ஆதரவாளர்களைச் சேர்ந்த ஒரு பெண் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் மாதவிடாய் குளிப்பைப் பற்றி வினவினார்.
அதற்கு நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், எவ்விதம் குளிக்க வேண்டுமென்று (அவருக்குக்) கட்டளையிட்டு, ”நீர் கஸ்தூரி கலந்த சிறிது பஞ்சைக் கொண்டோ அல்லது கந்தையைக் கொண்டோ அதனைத் துப்புரவு செய்து கொள்ளும்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹுதஆலா அன்ஹா அவர்கள், நூல்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், நஸாயீ)
இப்படியாக பெருந்துடக்குடையவர்கள் கடமையை பேணியவர்களாக குளித்து சுத்தமாக இருக்கிறார்கள்!
மேலும், காஃபிர் இஸ்லாத்தை தழுவியவுடன் குளிப்பது முஸ்தஹப்பு ஆகும். மய்யித்தை குளிப்பாட்டிய பிறகு குளிப்பது முஸ்தஹப்பு ஆகும். பராஅத் இரவில் குளிப்பது முஸ்தஹப்பு ஆகும்.
லைலத்துல் கத்ரு தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும். சூரிய கிரகண தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும். பகலில் கடும் இருள் சூழ்ந்துவிட்டால் அதை நீக்கத் தேடும் தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும். மழை பொழியத் தேடும் தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும். திடுக்கம் நீங்கத் தொழும் தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும்.
புயல் காற்று விலகிட தொழும் தொழுகைக்காக குளிப்பது முஸ்தஹப்பு ஆகும். இப்படியாக பல்வேறு காரணங்களுக்காக குளிப்பும், அதன் மூலமாக உடல் சுத்தமும் பேணப்படுகிறது!
குளிக்கும் முறை:
நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் குளிக்கும் முறையையும் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நிர்வாணமாக குளிக்கக்கூடாது. ஒவ்வொரு முடியின் அடிவரை கழுவிக் குளிக்கவேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இப்படி குளிப்பு பற்றிய பல்வேறு விஷயங்களை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
இவை குறித்த சில ஹதீஸ்கள்: ”ஒருவர் நிர்வாணமாகக் குளிப்பதைக் கண்ட நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், மிம்பர் (மேடை) மீது ஏறி (நின்று) அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைத் துதி செய்து பின்னர், ”நிச்சயமாக அல்லாஹ் நாணமுறுபவனும் திரை மறைவிலிருப்பவனுமாவான். (அன்றி) அவன் நாணமுறுவதையும் திரை மறைவையும் நேசிப்பவனாக இருக்கிறான். எனவே உங்களில் எவரேனும் குளிக்க நாடினால் திரை மறைவில் (கீழாடை அணிந்தவண்ணம்) குளிக்கவும்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: யஃலா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: அபூதாவூத், நஸாயீ).
.”ஒவ்வொரு முடியின் அடியிலும் குளிப்பு விதியாகி விடுகிறது. எனவே முடியின் அடிவரைக் கழுவுங்கள்” என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: அபூதாவூத், திர்மிதீ). ”முழுக்குக்கான குளிப்பில் ஒரு முடி அளவுள்ள இடத்தைக் கழுவாமல் எவர் விட்டு விடுகிறாரோ அவருக்கு நரகத்தில் இன்ன இன்ன விதமாக வேதனை செய்யப்படும்” என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அலீ கர்ரமல்லாஹூ வஜ்ஹஹூ அவர்கள் தெரிவித்து, இதற்காகத்தான் தாம் தம் தலை முடியை எடுத்து விட்டதாக மூன்று முறை கூறினார்கள்”. (அறிவிப்பவர்களும் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹூ அவர்களே, நூல்: அபூதாவூத்).
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெருந்துடக்குக்காக குளித்தால் தங்களது இரு கரங்களையும் (மணிக்கட்டுவரை முதலில்) கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளூ செய்வது போல உளூ செய்வார்கள். பின்னர் குளிப்பார்கள். பின்னர் தங்கள் இரு கைகளால் தங்கள் ரோமங்களைக் கோதிவிடுவார்கள். அதன் ரோமக்கால்கள் நனைந்துவிட்டன என்பதை உணர்ந்தால், அதன் மீது மூன்று முறை தண்ணீர் வார்த்துக் கொள்வார்கள். பின்னர் தங்கள் உடல் முழுவதிலும் (நனைத்துக்) குளிப்பார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹூதஆலா அன்ஹா அவர்கள், நூல்: புகாரீ).
”தொழுகைக்கு உளூ செய்வது போல நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கால் நீங்கலாக உளூ செய்தார்கள். தங்கள் வெட்கஸ்தலத்தையும், அசுத்தம் பட்ட இடத்தையும் கழுவினார்கள். பின்னர் தங்கள் மீது தண்ணீர் வார்த்துக் கொண்டார்கள். பின்னர் தங்கள் கால்களை (கொஞ்சம்) நகர்த்தி அவைகளைக் கழுவினார்கள்”. (அறிவிப்பவர்: மைமூனா ரலியல்லாஹுதஆலா அன்ஹா அவர்கள், நூல்: புகாரீ).
இப்படியாக நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளிப்பு பற்றிய விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அன்னாரின் நடைமுறைகளை பேணியவர்களாக முஸ்லிம்கள் அனைவரும் குளித்து சுத்தத்தைப் பேணுகிறார்கள்!
மலம், சிறுநீர் சுத்தம் செய்தல்:
மலம், சிறுநீர் ஆகிய இரண்டும் அசுத்தங்களாகும்! உடலில் அல்லது உடையில் இந்த அசுத்தங்கள் இருக்கும் நிலையில் தொழமுடியாது. எனவே, இவ்விரண்டையும் துப்புரவு செய்வது கட்டாயமாகும்! நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மலம், சிறுநீர் கழிக்கச் சென்றால், தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வார்கள். ”நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மல உபாதை கழிக்கச் சென்றால், நானும் என்னுடன் ஒரு பையனும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு செல்வோம். தண்ணீரால் அவர்கள் சுத்தம் செய்வார்கள்”. (அறிவிப்பவர்: அனஸ் ரலியல்லாஹுதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ).
சிறுநீர் கழித்து சுத்தம் செய்யாதவர்களுக்கு கப்ருக்குள் (சவக்குழிக்குள்) வேதனை செய்யப்படுவார்கள். ”அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இரு அடக்கத் தலங்களைத் கடந்து சென்றார்கள். அப்போது, ”அறிந்துகொள்ளுங்கள்! (இதோ) இவர்கள் இருவரும் (கப்ருக்குள்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. இவர்களில் ஒருவரோ (மக்களிடையே) கோள் சொல்லித் திரிந்துக் கொண்டிருந்தார். மற்றொருவரோ சிறுநீர கழித்துவிட்டு சுத்தம் செய்யமாட்டார்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹுதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: முஸ்லிம்).
மலம், சிறுநீர கழித்த பிறகு வலக் கரத்தால் சுத்தம் செய்யக் கூடாது! ”உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது அவர் தமது பிறவி உறுப்பை வலது கையினால் பிடிக்க வேண்டாம். மலம் சிறுநீர் கழித்த பிறகு வலது கையினால் சுத்தம் செய்ய வேண்டாம்” என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூகத்தாதா ரலியல்லாஹுதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ, முஸ்லிம்). மலம் கழுவி சுத்தம் செய்த பிறகு இடது கையையும் தேய்த்து கழுவவேண்டும்.
”(ஒரு சமயம்) நான் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தேன். அப்பொழுது அவர்கள் மல உபாதை கழிக்கச் சென்றார்கள். மலம் கழித்த பிறகு, ”ஜரீரே! தண்ணீர் கொண்டு வாரும்” என்று கூறினார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன். அதைக் கொண்டு அவர்கள் சுத்தம் செய்துகொண்டனர். பின்னர் தங்களின் இடது கையைத் தரையில் தேய்த்துக் கழுவினார்கள்”. (அறிவிப்பவர்: ஜரீர் ரலியல்லாஹுதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: நஸாயீ). இப்படியாக மலம், சிறுநீர் கழிப்பதிலும் சுத்தம் பேணப்படுகிறது
தொடர்ச்சிக்கு கீழே உள்ள ‘Next’ ஐ ‘கிளிக்’ செய்யவும்.