உளூவின் மூலம் காதின் சுத்தமும் பேணப்படுகிறது. நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உளூச் செய்யும் போழுது தங்களின் இரு விரல்களைத் தங்களின் இரண்டு காதுகளின் துளையிலும் நுழைத்தார்கள்” என ரபீஉ பின்து முஅவித் ரலியல்லாஹுதஆலா அன்ஹூஅவர்கள் அறிவித்திருக்கிறார்கள். (ஆதாரம்: அபூதாவூத்.)
மேலும், ”இப்னு உமர் ரலியல்லாஹுதஆலா அன்ஹூ அவர்கள் தம் இரு காதுகளுக்காகத் தம் இரு விரல்களில் தண்ணீர் எடுத்தனர்” என நாஃபிஃ அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். (நூல்: முஅத்தா). இவ்விதமாக காதுகளும் சுத்தம் செய்யப்படுகின்றன.
அடுத்து, இரு கால்களும் கணுக்கால்கள் வரை கழுவி சுத்தம் செய்யப்படுகின்றன! சாதாரணமாக எல்லோருமே கால்களை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆயினும் சர்க்கரை வியாதி (நீரிழிவு) உள்ளவர்கள் தமது பாதங்களை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கண்டிப்புடன் கூறுவார்கள். உளூவின் மூலம் பாதங்களை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள முடியும்!
உளூவில் இரண்டு கால்களும் கணுக்கால் வரை மூன்று முறை கழுவி சுத்தம் செய்யப்படுகின்றன. கால்களை முழுமையாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். ”ஒரு மனிதர் உளூ செய்தார். அப்போது அவர் தமது பாதத்தில் நகம் அளவு இடத்தை (கழுவாமல்) விட்டுவிட்டார். இதைக் கண்ட நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”திரும்பிச் சென்று, சரியாக உளூச் செய்யுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே அவர் திரும்பிச் சென்று (மீண்டும் உளூச் செய்து) பின்னர் தொழுதார். (அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் ரலியல்லாஹுதஆலா அன்ஹூ அவர்கள், நூல: முஸ்லிம்).
”தம் குதிகால்களைக் கழுவா(மல் உளூச் செய்து கொண்டிருந்)த ஒரு மனிதரை நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டார்கள். அப்போது, ”(உளூவில் சரியாக கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனைதான்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைர ரலியல்லாஹுதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: முஸ்லிம்). உளூவில், கால்களை கழுவுவதில் அலட்சியம் காட்டுபவர்களுக்கு நரக வேதனைதான் என நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதால் உளூ செய்பவர்கள் கால்களை கவனமாக, முழுமையாகக் கழுவி சுத்தம் செய்கிறார்கள்.
இவ்விதம் கண், காது, மூக்கு, கைகள், கால்கள் போன்ற புற உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உளூவை, தினமும் ஐவேளை தொழுகைகளுக்காக ஐந்து முறை செய்திட வேண்டும். ஆயினும், உளூ சிறு துடக்கு (ஹதஸ்) ஏற்பட்டு முறிந்துவிடும் போது மறுபடியும் உளூ செய்திட வேண்டும். இவ்விதம் மறுபடியும் உளூ செய்யாத வரை தொழுகை ஏற்கப்படாது! உடலிலிருந்து சிறுநீர், மலம், பின் துவாரத்திலிருந்து வாயு ஆகியவை வெளியேறுவதற்கே சிறு துடக்கு (ஹதஸ்) என்பார்கள்.
இவ்விதம் சிறு துடக்கு ஏற்படும் போது ஏற்கெனவே செய்த உளூ முறிந்துவிடும்! எனவே மறுபடியும் உளூ செய்தால்தான் தொழுகை கூடும். ”உங்களில் ஒருவருக்கு சிறு துடக்கு ஏற்பட்டு விட்டால், அவர் உளூ செய்து கொள்ளாதவரை அவரது தொழுகை ஏற்கப்படாது” என நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா ரலியல்லாஹுதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ, முஸ்லிம்). இதன் காரணமாக புற உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும் வாய்ப்பு கூடுகிறது!
உடல் ஆரோக்கியத்திற்கு உடல் சுத்தம் தேவை! உடல் சுத்தமே தொழுகைக்கு தேவை! குளிப்பு, உளூவின் மூலம் உடல் சுத்தம் கிடைக்கிறது! எனவேதான் தொழுகை உடல் ஆரோக்கியத்தை பேணக் கூடியதாக இருக்கிறது எனக் கூறப்பட்டது!
உடை சுத்தம்:
”கந்தையானாலும் கசக்கிக் கட்டு” என்பார்கள். இது, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுத்தமான ஆடைகளை அணிய வேண்டியதும் அவசியமாகும். அணியும் ஆடைகளில் சுத்தம் பேணவேண்டியது தொழுகையின் (வெளிக்) கடமைகளில் ஒன்றாகும்! ”ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்” என்று திருக்குர்ஆனிலே ஸூரத்துல் அஃராஃப், வசனம் 31 ல் அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா கூறியுள்ளான். ”உங்கள் ஆடைகளை அழகாக்கிக் கொள்ளுங்கள்” என நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: ஸஹல் பின் ஹள்ளலிய்யா ரலியல்லாஹுதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: ஹாகிம்).
ஆடையில்லாமல் – நிர்வாணமாக ஒரு போதும் தொழக்கூடாது! இரண்டு தோள்கள் திறந்த நிலையிலும் தொழுக்கூடாது. ”உங்களில் ஒருவர் தம் தோள்களை மறைக்காமல் ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழ வேண்டாம்” என நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹுதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ, முஸ்லிம்).
”நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரே துணியில் தொழுதார்கள். ஆனால் இரண்டு ஓரங்களுக்கும் இடையில் வித்தியாசப் படுத்தினார்கள்.” (அதாவது வேஷ்டியை இரண்டு பாகமாக்கி ஒன்றை உடுத்திக் கொண்டு மற்றொன்றை மேலில் போட்டுக் கொண்டார்கள்). (அறிவிப்பவர்: உமறுப்னு அபீஸலமா ரலியல்லாஹுதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ.)
வசதி இருந்தால் குறைந்தது இரு ஆடைகளைக் கீழும் மேலுமாக அணிந்து கொண்டு தொழுவதே சிறந்தது ஆகும். இரு ஆடைகளுக்கு வா்ப்பில்லாத போது ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழுவதில் குற்றமில்லை. அந்த ஓர் ஆடையை தோளை மறைக்கும் வகையில் கட்டிக் கொண்டு, மறைக்க வேண்டிய உறுப்புகள் வெளியே தெரியாதபடி அணிந்து தொழ வேண்டும்” என அல்மின்ஹாஜில் கூறப்பட்டுள்ளது.
ஜும்ஆ தொழுகைக்கு அணிந்து கொள்வதற்காக தம்மிடம் இருப்பதில் சிறந்த ஆடைகளை எடுத்து வைத்துக் கொள்ளலாம். இது குறித்து நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள், ”உங்களில் எவரும் தாம் வேலை செய்யும் போது அணிந்திருக்கும் ஆடைகளைத் தவிர வெள்ளிக் கிழமைகளில் அணிந்து கொள்வதற்காக இரண்டு ஆடைகளை(த் தயாரித்து) வைத்துக் கொள்வதில் எவ்விதக் குற்றமுமில்லை” எனக் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: முஹம்மதுப்னு யஹ்யா இப்னு ஹப்பான் ரலியல்லாஹுதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: அபூதாவூத்).
மேலும், நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுத்தமான ஆடைகளையே விரும்பினார்கள். ”எங்களில் ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த எங்களின் சகா ஒருவரை நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டனர். அப்போது அவர் இரண்டு பழைய ஆடைகளை அணிந்திருந்தார். எனவே நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம், ”அவ்விரண்டையும் தவிர்த்து வேறு ஆடைகள் ஏதுமில்லையா?” எனக் கேட்டார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரலியல்லாஹுதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: முஅத்தா).
மலம், சிறுநீர், இரத்தம், இந்திரியம் போன்றவை அசுத்தங்களே ஆகும். இத்தகைய அசுத்தங்கள் பட்ட ஆடைகளுடன் தொழுக்கூடாது. எனவே, இவை ஆடைகளில் பட்டுவிட்டால் கழுவி சுத்தம் செய்த பிறகே அணிந்து தொழ வேண்டும். ”நான் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆடையில் இருக்கும் இந்திரியத்தைக் கழுவுவேன். அவர்கள் தங்களின் ஆடை காய்வதற்குள் தொழச் செல்வார்கள்”. (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹுதஆலா அன்ஹா அவர்கள், நூல்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸாயீ).
”நம்மில் எவருக்கேனும் மாதவிடாய் வந்துவிடின், மாதவிடாயை விட்டும் துப்புரவாகும் போது, அந்தத் துணியிலிருந்த இரத்தத்தைச் சுரண்டி அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தைக் கழுவி, மீதமுள்ள இடத்தில் தண்ணீரைத் தெளித்துப் பின்னர் அதனை உடுத்திக் கொண்டு தொழுததுண்டு”. (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹுதஆலா அன்ஹா அவர்கள், நூல்: புகாரீ).
மேலும், காயாத அசுத்தத்தின் மீது ஆடை பட்டுவிட்டாலும் அதைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். ”நீர், காயாத அசுத்தத்தின் மீது நடந்தாலோ, அல்லது உம்முடைய ஆடை அதன்மீது இழுபட்டாலோ கழுவிவிடும். ஆனால் அது (அசுத்தப் பொருள்) காய்ந்ததாக இருப்பின் உம்மீது யாதொரு குற்றமுமில்லை”. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ், நூல்: ரஜீன்). இவ்வாறெல்லாம் ஆடைகளிலுள்ள அசுத்தங்கள் யாவும் கழுவப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. உடுத்தும் ஆடைகளிலும் சுத்தம் பேணப்படுகிறது! சுத்தமான ஆடைகள் மூலமாக ஆரோக்கியமும் காக்கப்படுகிறது!
இடம் சுத்தம்:
தொழும் இடம் சுத்தமாக இருக்க வேண்டியதும் தொழுகையின் (வெளிக்) கடமைகளில் உள்ளதாகும். நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த பூமி முழுவதும் பள்ளியாகவும் தூய்மையாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. எனவே, எங்கு தொழுகையின் நேரம் வந்து விடுகிறதோ அங்கேயே தொழுது கொள்ளலாம். ஆயினும் சில இடங்களில் தொழுவதை விட்டும் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்திருக்கிறார்கள்.
ஏழு இடங்களில் தொழுவதை நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தனர். (1) மலஜலம் கழிக்கும் இடங்கள் (2) கால்நடைகள் அறுக்கப்படும் இடங்கள் (3) புதை குழிகள் (கப்ருஸ்தான்கள்) (4) நடுவீதி (5) குளியலறை (6) ஒட்டகங்கள் கட்டும் இடங்கள் (7) கஃபாவின் முகடு ஆகியவையாம்” (அறிவிப்பவர்: இப்னு உமர் ரலியல்லாஹுதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: திர்மிதீ).
தொழும் இடங்களான மஸ்ஜித்களை சுத்தப்படுத்துமாறும் நபி பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர். ”வீடுகள் உள்ள பகுதிகளில் மஸ்ஜித்களை கட்டும்படியும், அவற்றை சுத்தப்படுத்துமாறும், அவற்றில் நறுமணங்களை பயன்படுத்துமாறும் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு ஏவினார்கள்” என அன்னை ஆயிஷா ரலியல்லாஹுதஆலா அன்ஹா அவர்கள் அறிவித்துள்ளனர். (நூல்: அஹ்மது, திர்மிதீ, அபூதாவூது, இப்னுமாஜா.)
தொழுகைகளில் சிலவற்றை வீடுகளில் தொழும்படியும், வீடுகளை அழகாக வைக்கும்படியும் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். ”உங்களுடைய வீடுகளிலும் உங்கள் தொழுகைகளில் சிலவற்றைத் தொழுங்கள். வீடுகளை (தொழுகை நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்” என நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரலியலலாஹூதஆலா அன்ஹூ அவர்கள், நூல்: புகாரீ, முஸ்லிம்).
”உங்கள் ஆடைகளை அழகாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகளை சீராக்குங்கள்” என நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹல் பின் ஹள்ளலிய்யா அவர்கள், நூல்: ஹாகிம்). தொழும் விரிப்புகளை சுத்தம் செய்திடுமாறும் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர். இது குறித்த ஹதீஸ்: ”நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவர்களாக விளங்கினார்கள். அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும் போது சில நேரங்களில் தொழுகை(யின் நேரம்) வந்துவிடும்.”
source: azeezahmed.wordpress.com/