இம்ரான் இப்னு ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”நிச்சயமாக, வெட்கம் என்பது, நல்லதைத்தவிர வேறொன்றைக் கொண்டு வராது” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) ”வெட்கம் அனைத்தும் நல்லதே” என்று முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் உள்ளது.
அபூஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”நிச்சயமாக, கன்னிப் பெண் தன் அறையில் வெட்கப்பட்டுக் கொண்டிருப்பதை விட மிகக் கடுமையாக வெட்கம் கொள்பவர்களாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இருந்தார்கள். (புகாரி, முஸ்லிம்)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ‘‘உலகம், இறை விசுவாசிகளுக்கு சிறைச்சாலையாகும். இறை மறுப்பாளர்களுக்கு சொர்க்கம் ஆகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
நுஃமான் இப்னு பஷீர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”உலகத்தின் பயனை மக்கள் பெற்றுக் கொண்டது குறித்து நினைவு கூர்ந்த உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அன்றைய நாளில் பசி காரணமாக சாய்ந்த நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கண்டுள்ளேன். அவர்கள் தன் வயிற்றை நிரப்பிட மட்டமான பேரீத்தம் பழத்தைக் கூட பெற்றுக் கொண்டதில்லை” என்று கூறினார்கள். (முஸ்லிம்)
[ உணவுப்பொருள்களை வீண் விரயம் செய்யும் சகோதரர்களே! அகிலத்தின் அதிபதியான அல்லாஹ், அகிலத்தின் அருட்கொடையாக திருக்குர்ஆனில் எவரை புகழ்கின்றானோ, அந்த உத்தம திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிலையை சிறிது நேரம் எண்ணிப்பாருங்கள். ஒருமுறைக்கு பல முறை இந்த நபிமொழியை படியுங்கள், சிந்தியுங்கள்.]
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ‘‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் தோள் பட்டையைப் பிடித்துக் கொண்டு, ”ஒரு பயணியாகவோ அல்லது பாதையைக் கடந்து செல்பவராகவோ நீர் இந்த உலகில் இருந்து கொள்” என்று கூறினார்கள். ”நீர் மாலை நேரத்தில் இருந்தால் காலை நேரத்தை எதிர் பார்க்காதே! நீ காலை நேரத்தில் இருந்தால் மாலை நேரத்தை எதிர் பார்க்காதே! உன் நோய் (நிலையை கருத்தில்) கொண்டு, உன் உடல் நிலையையும், நீ இறப்பதை (கருத்தில்) கொண்டு உன் உயிர் வாழும் காலத்தையும் பயன்படுத்திக் கொள்வீராக! என்று இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள்.” (புகாரி)
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ‘‘நீங்கள் சொத்துக்களை (கவனத்தில்) எடுத்துக் கொள்ளாதீர்கள். இதன் மூலம் நீங்கள் இவ்வுலகில் பேராசைக்காரர்களாகி விடுவீர்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி)
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்: ”நிச்சயமாக, ஒரு சமயம், மக்சூமிய்யா குலத்தாரைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டாள். இது குறைஷி மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. ”அப்பெண் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பரிந்து பேசுபவர் யார்?” என்று அவர்கள் பேசிக் கொண்டனர்.
‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிரியமானவரான உஸாமா இப்னு ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தவிர நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பேச தைரியமானவர் யார் உள்ளார்?’ என அவர்கள் கூறினர்.
எனவே உஸாமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பேசினார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”அல்லாஹ்வின் குற்றவியல் சட்டங்களிலே ஒன்றில் நீ பரிந்துரை செய்கிறாயா?” என்று கேட்டார்கள்.
அதன்பின் எழுந்து, உரை நிகழ்த்தினார்கள். ”உங்களுக்கு முன் இருந்தோர் அழிந்து போனதன் காரணம், அவர்களில் வசதியானவர் திருடினால், அவரை அவர்கள் விட்டு விடுவார்கள். அவர்களில் ஏழை ஒருவர் திருடினால், அவரைத் தண்டிக்க முயற்சிப்பார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, முஹம்மதின் மகளான பாத்திமா திருடி விட்டால் கூட, அவளின் கையையும் நான் துண்டிப்பேன்” என (தன் உரையில்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.(புகாரி, முஸ்லிம்)