அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான். (அதாவது கோபம் வரும்போது இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் விருப்பமில்லாத செயலை தவிர்ப்பவன்) (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி)
கோபம் !! உறவுகளைக் கொல்வதுடன், தன்னையும் கொல்லும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கோபம் வீரத்துக்கு அழகு என்று சிலர் கோபத்தை ஆயுதமாகக் கொண்டு அனைவரையும் அடக்க நினைக்கிறார்கள். கோபப்படுபவர்களைப் போல் கோழைகள் யாரும் இருக்க முடியாது.
ஏதோ ஒரு பயத்தை மறைக்க அவர்கள் கோபத்தைத் திரையாகத் தொங்க விடுகிறார்கள். அவன் ரொம்பக் கோவக்காரன் என்று யாராவது யாரைப் பற்றியாவது சொன்னால் ஐயோ பாவம் என்றுதான் மனதில் விழும்.
பட் பட்டென எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஆசாமிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்றை இங்கிலாந்து மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.பெரும்பாலும் மனிதனுடைய கோபம் வெளிப்படும் இடம் குடும்பம் என்றாலும் அது வீடுகளில் வெடிக்கும் வரை உள்ளுக்குள்ளேயே வெகு நேரம் காத்திருக்கிறது.
கோபம் அதிகரிக்கும் போது மனித உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, குருதி அழுத்தம் கூடுகிறது, பல்வேறு வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன, உடலின் தன்மையே நிலை தடுமாறுகிறது.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: ”கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பு, நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கும் கோபம் வந்துவிட்டால் அவர் ஒளு செய்து கொள்ளட்டும்.” (அறிவிப்பாளர் : அத்தியா அஸ் ஸஅதி ரளியல்லாஹு அன்ஹு, அபூதாவூத்)
நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கு, கோபம் மட்டும் அடிக்கடி வருகிறது என வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வந்து மரணமடையும் வாய்ப்பு 19 விழுக்காடு அதிகரிக்கிறதாம்.
கோபத்தை தவிர்ப்பது எப்படி, மற்றவர்கள் கோபப்படும்போது பொறுத்து கொள்வது எப்படி? இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு மனிதர்களும் சிந்திக்க வேண்டியது இதைதான்..! நமக்கு கோபம் வருவது மட்டும் இல்லாமல் அந்த கோபத்தை மற்றவர்கள் மீதும் காட்டி விடுகிறோம். நமது கோபத்தால் நமது நண்பர்களையும் சரி மற்றவர்களையும் சரி வெகு விரைவாக இழந்து விடுகிறோம் என்பதை நினைவில் வைத்து கொள்ளுஙள்.
கோபம் நமக்கு எவ்வளவு சீக்கிரம் வருகிறது என்பதையும் பாருங்கள். மூன்று முறை தொடர்ந்து ஒருவரே “ரோங் கோல்” செய்தால் போதும், “யாரடா ராஸ்கல்” என கோபம் தலைக்கேறிவிடும்.
கோபமுள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை.
கோபம் ஏற்படும்போது மனிதனின் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்களை டாக்டர்கள் பட்டியல் இடுகிறார்கள்.
நாக்கு நீள்கிறது,
பற்கள் கடிக்கிறது,
கைவிரல்கள் மூடுகிறது,
கண்கள் சிவக்கிறது,
வியர்வை கொட்டுகிறது,
ஹார்ட் பீட் (heart beat) அதிகரிக்கிறது,
நரம்புகள் துடிக்கிறது,
ரத்தம் சூடாகிறது” என்கிறார்கள்.
ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா?
அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ”உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படிச் செய்து கோபம் மறைந்துவிட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும்.” (அறிவிப்பாளர் : அபூதர் ரளியல்லாஹு அன்ஹு, மிஷ்காத்)
கோபப்படும்போது கண்ணாடியில் ஒரு தடவை நம் முகத்தை பார்த்துக் கொள்வது நல்லது. ஒருவரை பழிவாங்கியே ஆக வேண்டும் என்ற வெறி அடங்கவில்லை என்றால், நாளை இந்நேரம் கண்டிப்பாக அவருக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என எண்ணிக் கொள்ளுங்கள். தள்ளிப்போட்ட கோபம் கொள்ளிப்போட்ட கோபத்துக்கு சமம். 24 மணி நேரம் கழித்து “போய் தொலையட்டும்” என்பீர்கள்.
கோபம் வரும்போது ஒரு பேப்பரை எடுத்து எழுத நினைப்பதை எல்லாம் மனதை விட்டு எழுதுங்கள். ஆனால் அதை அஞ்சல் செய்யாதீர்கள். சில மணி நேரங்களில் நீங்கள் எழுதியதை நீங்களே கிழித்து போடுவீர்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: ”(உண்மைக்கு மாறாகப் பேசுவதைவிட்டு) தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தைத் தடுத்துக் கொள்பவனை விட்டு மறுமை நாளில் வேதனையை அல்லாஹ் அகற்றிவிடுவான். இறைவனிடம் மன்னிப்புக் கோருபவனை அல்லாஹ் மன்னித்துவிடுவான்.” (அறிவிப்பாளர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, மிஷ்காத்)
posted by; Abu Safiyah