உங்கள் பிள்ளைகளை மருத்துவம் படிக்கவைக்க வேண்டுமானால் கவனமாக இருக்கவும் !
திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரி அனுமதி ரத்து
திருச்சி அருகே கடந்த கல்வி ஆண்டில் (2009-10) 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்பட்ட எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கை அனுமதியை இந்திய மருத்துவக் கவுன்சில் ரத்து செய்துள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சிலின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்ல எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
திருச்சி அருகே “சென்னை மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல் அண்ட் ரிசர்ச் சென்ட்டர்‘ என்ற பெயரில் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கியது. பல்கலைக்கழக அந்தஸ்து காரணமாக இந்தக் கல்லூரியில் தேர்வு நடத்தி 150 மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் கடந்த கல்வி ஆண்டு (2009-10) அது சேர்த்தது.
தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் விண்ணப்பித்து விட்டு, பல்கலைக்கழக அந்தஸ்தின் கீழ் மாணவர்களைச் சேர்த்தது குறித்து கேள்வி எழுப்பி, மாணவர் சேர்க்கை அனுமதியைப் புதுப்பிக்க முடியாது என்று இந்திய மருத்துவக் கவுன்சில் கூறியுள்ளது.இது தொடர்பாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் என்.சேதுராமன் கூறியதாவது:
”தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் விண்ணப்பித்த பிறகு இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் கடந்த ஆண்டு திருச்சியில் உள்ள இந்த மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்தனர்.அதன் பிறகு பல்கலைக்கழக அந்தஸ்து அளிக்கும் வகையில் மத்திய மனித வள அமைச்சகத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழுவும் அறிக்கை அனுப்பியது.
பல்கலைக்கழக அந்தஸ்தின் கீழ் 150 மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்த்த பிறகு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ்தான் திருச்சி கல்லூரி செயல்பட வேண்டும் என மத்திய சுகாதாரத் துறையிடமிருந்து தகவல் வந்தது.
அதன் அடிப்படையில் நடப்புக் கல்வி ஆண்டிலிருந்து (2010-11) தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட ஒப்புதல் அளித்தும், கடந்த ஆண்டு மாநில ஒதுக்கீட்டுக்கு அளிக்க வேண்டிய 97 எம்.பி.பி.எஸ். (65 சதவீத ஒதுக்கீடு) இடங்களை, இந்த ஆண்டு 49 இடங்கள் மற்றும் அடுத்த ஆண்டு 48 என அளிப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டது.
அதாவது, இந்த உறுதிமொழியை ஸ்டாம்ப் பேப்பரில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திடம் எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமம் அளித்துள்ளது. ஆனால், எல்லாவற்றையும் எடுத்துக் கூறியும்கூட மாணவர் சேர்க்கை அனுமதியைப் புதுப்பிக்க இந்திய மருத்துவக்கவுன்சில் மறுத்து விட்டது. இது குறித்து பெற்றோரும் மாணவர்களும் கவலைப்பட வேண்டாம். நீதிமன்றத்தில் வழக்கு தொடர எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது” என்றார் டாக்டர் என்.சேதுராமன்.
மதுராந்தகம், தருமபுரி கல்லூரிகளுக்கும் அனுமதி மறுப்பு:
மதுராந்தகம் அருகே கடந்த ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி தொடங்கிய கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி, ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கையில் சிக்கித் தவிக்கும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கும் மாணவர் சேர்க்கை அனுமதியைப் புதுப்பிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் மறுத்துள்ளது. மாணவர் சேர்க்கை புதுப்பிப்பு அனுமதி பரிந்துரை ரத்தை அது தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
Posted by: |Sarfu deen sarfudin@gmail.com