உணவில்லாமல் கூட மனிதன் ஓரிரு நாள் இருந்து விடலாம். ஆனால் ஒரு நாள் தூக்கம் கெட்டாலும் அதன் பாதிப்பு ஒரு வாரம் மனதையும் உடலையும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மருத்துவ அறிவியல் கூற்று.
நாள் முழுக்க உழைத்த உடலுக்கு சில மணி நேரக் கட்டாய ஓய்வு அவசியம். ஓய்வைக் கொடுக்காமல், அதற்கு எதிராகப் போராடும்போது, அது உடல்நலத்தையும் பாதித்து, அழகையும் பாதிக்கிறது. உதாரணத்துக்கு ஓய்வுக்கு எதிராகப் போராடும்போது, இரத்த ஓட்டமானது உடலின் பெரிய பகுதிகளுக்குத் திருப்பப் படுகிறது. தூக்கமில்லாததால் முகம் வெளிறிப் போவதும், கண்களுக்கடியில் கருவளையம் வருவதும் கூட இதனால்தான்.
எது நல்ல தூக்கம்?
எது நல்ல தூக்கம், எத்தனை மணி நேரம் தூங்குவது நல்லது என்கிற குழப்பம் பலருக்கும் உண்டு. சிலருக்கு ஆறு மணி நேரம் தூங்கும் பழக்கமிருக்கும். சிலர் எட்டு மணி நேரம் தூங்குவார்கள். சிலருக்கு பத்து மணி நேரம் வரை கூடத் தூக்கம் கலையாது. அது அவரவர் வசதியையும், வேலை நேரம் மற்றும் பிற விஷயங்களைப் பொறுத்து மாறுபடலாம். ஆனால், பகல் வேளையில் தூக்க உணர்வு உண்டானால், அந்த நபருக்கு இரவில் போதிய அளவு தூக்கம் இல்லை என்று அர்த்தம்.
நல்ல தூக்கத்துக்கு என்ன வழி?
படுத்தவுடன் தூங்கிப் போவது உண்மையிலேயே ஒரு வரம் மாதிரி. அது இயல்பாக அப்படியே பழக்கப் படுத்தப்படவேண்டும். தூக்கம் வராமல் தவித்து, அதற்காக மருந்துகள் எடுத்துக் கொள்வது என்பது மிக மோசமான பழக்கம்.
நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். பாதித் தூக்கத்தில் திடீரென விழித்துக் கொள்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதைப் பற்றி பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். உடனே மறுபடி தூங்க ஆரம்பித்து விடுங்கள். மறுநாள் காலையில் வழக்கம் போல தானாக விழிப்பு வரும். குறிப்பிட்ட சில மணி நேரம் நன்றாகத் தூங்குவது, அந்த நாள் முழுவதற்குமான புத்துணர்வையும், சுறுசுறுப்பையும் தரும்.
நீங்கள் தூங்கப் போகிற நேரத்தையும், விழிக்கிற நேரத்தையும் முறைப் படுத்திக் கொள்ளுங்கள். தினம் ஒரே நேரத்தில் தூங்குவதையும், விழித்துக் கொள்வதையும் வழக்கப் படுத்த்திக் கொள்ளுங்கள்.
பகல் தூக்கம் வேண்டவே வேண்டாம். ரொம்பவும் அசதியாக உணர்கிறீர்களா? கண்களை மூடியபடி சிறிது நேரம் தியானம் செய்யலாம். குட்டித் தூக்கம் போட்டதற்கு இணையான புத்துணர்வைத் தரும் டெக்னிக் இது.
தூக்கம் வரவில்லையே என்கிற கவலையை விடுங்கள். டென்ஷன், கோபம், கவலை இல்லாத மனது நல்ல தூக்கத்துக்கு அடிப்படை. உடல்நலத்தில் ஏதேனும் கோளாறுகள் இல்லாத பட்சத்தில் எல்லாருக்கும் போதிய அளவு தூக்கம் நிச்சயம் வரும்.
உடற்பயிற்சிக்கும், தூக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தினசரி சில மணி நேரம் ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்கிறவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சினையே வராது. குறிப்பாக நடைப்பயிற்சி.
மனச்சோர்வுக்குக் காரணமான ஹார்மோன்கள்தான் ஒருவரைத் தூக்கமில்லாமல் புரண்டு, புரண்டு தவிக்க வைக்கிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம், இது கட்டுப்படுத்தப் படுவதால், நல்ல தூக்கம் நிச்சயம். மாலை நேரத்தில் ரொம்பவும் வேகமாக, வியர்க்க, விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.
நீங்கள் படுக்கும் அறை ரம்மியமாக, போதிய அளவு காற்றோட்டதுடன் கூடியதாக இருக்க வேண்டியது முக்கியம்.
தூங்கச் செல்வதற்கு முன் காபி, கோலா மாதிரியான பானங்களைத் தவிருங்கள். மதியம் 2 மணி அளவில் குடித்த காபியே, இரவுத் தூக்கத்தைப் பாதிக்கும் அளவுக்குத் தீவிரம் கொண்டதாம். கோலா, சாக்லேட், டீ போன்றவையும் தவிர்க்கப் படவேண்டும்.
நீங்கள் தூங்கும் திசையும் நல்ல தூக்கத்துடன் தொடர்பு கொண்டது. வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுத்தால் நல்ல உறக்கம் வருமாம்.
தூங்கச் செல்வதற்கு முன்பு வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது கூட நல்ல, ஆழ்ந்த தூக்கத்தைத் தரும்.
மனதுக்குப் பிடித்த புத்தகங்கள் படிப்பது, மெல்லிய இசையை ரசித்தபடி படுத்திருப்பது போன்றவையும் தூக்கம் வரவழைக்கும்.
அரோமாதெரபியில் தூக்கமின்மைக்கான பிரத்யேக சிகிச்சைகள் உள்ளன. லேவண்டர் மாதிரியான குறிப்பிட்ட அரோமா ஆயில்களுக்கு தூக்கத்தைத் தூண்டும் குணம் உண்டு. நல்ல அரோமாஃபேஷியல் பல நாட்களாகத் தூக்கமின்றித் தவிப்போரது பிரச்சினையை ஒரே இரவில் மாற்றும். அரோமாஃபேஷியல் செய்து கொள்கிறபோது, அரோமாதெரபியில் கை தேர்ந்த நிபுணர்களிடம் செய்து கொள்வது நல்லது. அழுத்தப் புள்ளிகளைப் பார்த்துச் செய்ய வேண்டிய ஃபேஷியல் என்பதால் கவனம் தேவை.
தூக்கத்தின் அளவு
தூக்கத்தின் அளவு மனிதனுக்கு அவரவர் வயதிற்கேற்ப மாறுபடுகிறது. பிறந்த குழந்தைக்கு 16 மணியிலிருந்து 20 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது.
வயது வந்தவர்களுக்கு 7 மணி முதல் 9 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது. வயதானவர்களுக்கு 5 மணி முதல் 6 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது. தூக்கமின்மைக்கான காரணங்களை மூன்று விதமாக பிரிக்கலாம்.
1. தவறான பழக்க வழக்கங்கள், சுகாதாரம் மற்றும் சூழ்நிலை.
2. மனநிலை காரணமாக
3. உடல் நோயின் காரணமாக
தூக்கம் குறைந்தால் புற்றுநோய் வரலாம்!
ஒரு மனிதனுக்கு ஆழ்ந்த நித்திரை அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது. தூக்கம் இல்லையேல் பலவித நோய்களுக்குள்ளாக நேரிடலாம். இதோ தூக்கமின்மையால் ஏற்படும் மற்றுமொரு விளைவைப் பற்றிய புதுத் தகவல் ஒன்று..
புற்றுநோயின்றி வாழ வேண்டுமானால், குறிப்பிட்ட அளவு தூக்கம் அவசியமாகிறது.
ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி அன்றாடம் உடற்பயிற்சியைத் தொடரும் பெண்களுக்குப் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து இல்லை என்று தெரிய வந்தது. ஆனால், பெண்கள் மத்தியில் தூக்கமின்மையால் புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வேறுசில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புற்றுநோயைத் தவிர்ப்பதற்காக வழக்கமான உடற்பயிற்சிகளைர் செய்யும் பெண்கள், குறைந்த அளவு தூங்குவதால் உடற்பயிற்சியின் பலன் கிடைக்காத நிலையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது முதல் 65 வயது வரையிலான சுமார் 5 ஆயிரத்து 968 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் போது, பெண்களின் தூங்கும் தன்மை, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி போன்றவை பரிசோதிக்கப்பட்டது. பெண்களின் புற்றுநோய் ஏற்படும் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
உடற்பயிற்சி பெண்களின் புற்றுநோய் வாய்ப்பைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும், 7 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு 47 வீதம் புற்றுநோய் வாய்ப்பு உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறைந்த அளவே தூக்கம் இருப்பவர்களுக்கு உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், வலிப்பு, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில், தற்போது புற்றுநோய் வாய்ப்புகள் உள்ளதாக வெளிவந்துள்ள இந்தத் தகவலும் குறிப்பிடத்தக்கது தானே?.
தூக்கத்தில் நடக்கிற விந்தைகள்
தூக்கத்தில் நடக்கிற விந்தைகள் பற்றி நமக்கெல்லாம் அதிகம் தெரிய வாய்ப்பில்லை.
அதாவது தூங்கும்போது நம் உடலில் சுரக்கும் வளர்ச்சிக்கான ஹார்மோன், சரும ஆரோக்கியத்துக்கான செயல்பாடுகளைத் தூண்டுகிறது.
சரும ஆரோக்கியத்துக்கு மிக முக்கியத் தேவைகளான கொலாஜன் மற்றும் கெராட்டின் இரண்டும் சீராக உற்பத்தியாகவும், சரும செல்கள் புதுப்பிக்கப் படவும் கூட தூக்கம் அவசியம்.
தூக்கம் சரியாக இல்லாதவர்களுக்கு சருமப் பிரச்சினைகள் அதிகம் என்கின்றன ஆராய்ச்சிகள்.
உதாரணத்துக்கு பருக்கள், சரும வறட்சி மாதிரியான பிரச்சினைகள் அதிகம் வருகின்றனவாம்.
அலுவலகத்தில் தூக்கம் – கருத்துக்கணிப்பில் ருசிகர தகவல்
அலுவலக நேரங்களில் 58 சதவீதம் பேர் தூக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர். 11 சதவீதம் பேர் வேலை செய்யும் போதே தூங்கி விடுகிறார்கள் என்று சமீபத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
பிலிப்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல நீல்சன் நிறுவனம் இதுகுறித்து சர்வே நடத்தியது. முழுக்க முழுக்க இந்திய நகரங்களிலேயே இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
கருத்து கேட்கப்பட்டவர்களில் 58 சதவீதம் பேர் தூக்கத்தால் தங்கள் அலுவலக வேலை பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர். 11 சதவீதம் வேலை செய்யும்போதே மேஜையிலோ அல்லது நாற்காலியிலோ அசந்து தூங்கி விடுவதாக (Nap) தெரிவித்துள்ளனர்.
நகர்புறங்களில் உள்ளவர்களில் 93 சதவீதம் பேர் அரைகுறை தூக்கம் தூங்குபவர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒருநாளைக்கு 8 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகிறார்கள்.
நகரங்களில் வசிப்பவர்களில் 90 சதவீதத்தினர் காலையில் தூக்கத்தில் இருந்து எழுவதற்கு காலைக் கடன் தான் காரனமாக இருப்பதாக கூறுகின்றனர். 15 சதவீதம் பேர் வேலை நிமித்தமாக எழுத்திருக்கிறார்கள். 10 சதவீதம் பேர் சாலை வாகன ‘சவுண்டு‘ தாங்க முடியாமல், தூங்க முடியாமல் விழிக்கின்றனர்.
தூங்கும் போது சுவாசம் தடைபடும் ஒஎஸ்ஏ என்ற தூக்க கோளாறால் 62 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்னை நீடித்தால் இதய கோளாறு ஏற்படவும் வாய்ப்புள்ளதாம்.
தூக்கமின்மை என்பது வியாதி கிடையாது. அது பல்வேறு வியாதி காரணமாக உண்டாகும் ஒரு குறிதான். அடிப்படை காரணத்தை அறிந்து நோயை கண்டறிந்து குணப்படுத்தினால் மட்டுமே தூக்கத்தை ஏற்படுத்த முடியும்.
”நோய்நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.”