அன்பே உருவான அம்மா….
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,
அல்லாஹ்வுடைய அருளும் பாதுகாப்பும் கிடைத்து நீங்கள் நல்ல சுகமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் எழுதிய அன்புக் கடிதம் கண்டேன். எனினும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அதற்கு பதில் எழுத தாமதித்து விட்டேன். எல்லாவற்றிற்கு முன்னர் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.
நீங்கள் என்னைப்பற்றி கொண்டுள்ள எண்ணமும் என் நலனில் கொண்டுள்ள அக்கறையும் மகத்தானவை. அதேபோன்று, நான் என்னுள்ளத்தில் தேக்கி வைத்துள்ள உங்கள் மீதான அன்பும், பாசமும் வார்த்தைகளில் வடித்து கூற முடியாதவை.
உங்கள் அன்பு நிறைந்த முகத்தைக் காண ஓடோடி வர வேண்டும் என என்னுள்ளம் ஆசைப்படுகிறது. எனினும் நான் பெற்றுவரும் சன்மார்க்கக் கல்வி என்னைத் தடுத்து நிறுத்துகின்றது. இந்தத் தடை இல்லாவிட்டால் நான் ஒரு கணமும் உங்களை விட்டுப் பிரிந்திருக்க மாட்டேன்.
உண்மையில், மார்க்கத்தைக் கற்பதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் நான் உணர்ந்திருப்பதுதான். நான் உங்களைப் பிரிந்திருப்பதை சகித்துக் கொள்ளச் செய்கிறது. இருப்பினும் உங்களைப் பற்றிய நினைவால் என் நெஞ்சம் நிறைந்திருக்கின்றது. நான் கழிக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் நீங்கள் என்மீது வைத்துள்ள வரையறையற்ற அன்பை, கருணையை எண்ணிப் பார்க்கின்றேன்.
நீங்கள் என்மீது செலுத்தும் அளவற்ற கருணைக்கும், எனக்காக காலமெல்லாம் செய்த தியாகங்களுக்கும் நான் எப்படித்தான் கைம்மாறு செய்வேனோ? உங்கள் தன்னலமற்ற உதவி ஒத்தாசைகளை என் நாவினால் எப்படித்தான் வர்ணித்து முடிப்பேனோ? உங்கள் முடிவேயில்லாத அன்புடன் கூடிய மகத்தான பணிகளுக்கு எந்த விதத்தில் பிரதி உபகாரம் செய்வேனோ? நான் அறியேன்!.
என் அகம் நிறைந்த அம்மா!
நீங்கள் எப்பொதும் வேதனையுடன் வடித்த கண்ணீருடனும் சொல்லும் சில விஷயங்கள் என் உள்ளத்தில் எப்பவும் எதிரொலித்துக் கொண்டேயுள்ளன. அவற்றிற்காக நான் கவலைப்படாத நாளே இல்லை எனலாம்.
நீங்கள் கூறுவீர்கள்:
o ”என் தங்க மகன் என்னை விட்டுப் போய்விட்டான், தவறான பாதையின் பால் அழைத்துச் செல்லப்பட்டு விட்டான், சோதிடர் கூறியது போலவே என் மகன் எனக்கு இல்லாமலாகி விட்டான்” என்று.
அம்மா! இவற்றை நான் எப்பொழுதும் நினைத்துப் பார்க்கின்றேன், ஏனம்மா இப்படி என்னைப் பற்றி வேதனைப்படுகின்றீர்கள்? எனது எந்தச் செயல் உங்களுக்கு இப்படியான வருத்தத்தைத் தருகின்றது? இப்படி அச்சத்தைத் தோற்றுவிக்கின்றது? இப்படி பலமுறை எண்ணியப் பார்த்ததுண்டு.
சொல்லுங்கள் தாயே! நான் செய்த குற்றம் என்ன?
o ”அல்லாஹ் ஒருவன்தான் உண்மையான படைப்பாளன்’ என்று நான் ஏற்றுக் கொண்டது குற்றமா?
o இறுதிய நபிகளார் மீது இறுக்கமான விசுவாசங் கொண்டேனே, அது நான் செய்த குற்றமா?
o ”என் வாழ்வு முழுவதையும் இறை கட்டளைக்கு இணக்கமான முறையில் அமைத்து கொள்ள விழைந்தேனே அதுதான் என் குற்றமா?’
o ”அல்லாஹ்வைப் புகழ்கின்றேன், அவனுக்கு இணையான எதுவுமே இல்லை’ என நான் உறுதியாக இறை விசுவாசம் கொண்டதுதான் என் குற்றமா?
இல்லையெனில்,
o ”எமக்கு உணவளித்து வாழ வைக்கும் இறைவன் அந்த அல்லாஹ்தான்’ என மனப்பூர்வமாக ஏற்றேனே அதுதான் நான் செய்துவிட்ட உங்கள் மனதைக் குடையும் குற்றமா?
அன்புத் தாயே!
இந்த வாழ்வு, இதில் காணப்படும் எண்ணற்ற வசதிகள், காற்று,நீர், உணவு, உடை ஆகிய அனைத்துமே அல்லாஹ்வின் அருட்கொடைகள். நிச்சயமாக இந்த வாழ்வும் உலகமும் என்றோ அழிந்துவிடும். இப்படி அழிந்து போகும் நம்மை, அல்லாஹ் மீண்டும் உயிர்தந்து எழச் செய்வான். நமக்கு இவ்வுலகில் வாழும் வாய்ப்பைத் தந்த அவனுக்கு ‘நாம் எப்படி வாழந்தோம்’ எனக் கேட்கும் உரிமை உண்டு என்பதை நான் திடமாக நம்புகின்றேன்.
அவன் தந்த சட்ட திட்டங்களுக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப வாழாதவர்கள் நரகில் எறியப்படுவார்கள், அங்கு அவர்கள் மிகக் கடுமையான வேதனைகளை அனுபவிப்பர். இந்த உண்மைகள் யாவற்றையும் எத்தகைய சந்தேகமுமின்றி முழு மனதோடு ஏற்றுக் கொண்டது நான் செய்த குற்றமா?
o ”நரக நெருப்புக்கு இரையாகாது இறை சட்டங்களுக்கு ஏற்ப இயங்கி சுவனத்தைப் பெற வேண்டும்’ என உறுதிபூண்டு செயற்படுகின்றேனே – இது குற்றமா?
o ”எல்லாவற்றையும் படைத்து பரிபாலித்து வரும் அல்லாஹ், தனது இறுதித்தூதரான நபி (ஸல்) அவர்கள் மூலம் அருளிய ஆணைகள் யாவற்றையும் நெஞ்சம் நிறைத்து பின்பற்றுவேன், அவன் ”கூடாது” என தடுத்த பாவச் செயல்களிலிருந்து முற்றாக ஒதுங்கி நிற்பேன்’ என்ற முடிவோடு வாழ்வை அமைத்துக் கொள்ள முற்படுகின்றேனே – இதைக் குற்றம் என்கிறீர்களா?
ஆமாம் தாயே! உங்கள் கண்ணோட்டத்தில் நான் செய்த குற்றங்கள் இவைதான்! உங்களது வேதனைக்கும் வெறுப்பிற்கும் காரணமாகி இருப்பவை இத்தகைய என் குற்றங்களே!
சுருக்கமாக சொல்கிறேன்.
உண்மையான இறைவனுக்கு உளப்பூhவமாக அடிபணிந்து வாழும் ஒரு முஸ்லிமின் வாழ்வுதான் என் வாழ்வு. என் செயல்கள் யாவும் அப்படித்தான் அமைந்துள்ளன. எவர் தனது வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் எல்லாக் கட்டங்களிலும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, இணக்கமாக வாழ்கிறாரோ அவர்தான் ‘முஸ்லிம்’ என அழைக்கப்படுபவர். அதனை நன்கு உணர்ந்தவன் நான். எனவே, இறைவன் ‘வேண்டாம்’ என தடுத்துள்ள பாவச் செயல்களிலிருந்து நானும் ஒதுங்கி வாழ முயற்சிக்கின்றேன்.
என் அம்மா!
நான் உங்கள் மகன். நான் இஸ்லாத்தை ஏற்குமுன் இஸ்லாமியப் பாதையிலான பயணத்தை ஆரம்பிக்குமுன் எத்தகைய கெட்ட செயல்கள் உடையவனாக இருந்தேன் என்பது நீஙகள் அறியாதது அல்ல. திருடுவது. பொய் பேசுவது போன்றவை அப்போது எனக்கு மிகச் சிறிய விஷயங்கள். எந்தக் கணமும் இத்தகைய தீமைகளில் மிக தைரியமாக ஈடுபட பின்வாங்கியது இல்லையே! அந்த அளவுக்கு தீய எண்ணங்கள் என் உள்ளத்தை ஆக்கிரமித்திருந்தன. என்னுடைய தரங்கெட்ட வார்த்தைகள், கேலிகிண்டல்கள், நிந்தனைகள் எத்தனை பேரின் கண்களில் நீர் மல்கச் செய்திருக்கும்?
ஆனால் இன்று, அப்படி ஒரு தீர்மானம் எடுத்ததன் பின்பு, இஸ்லாத்தை என் வாழ்வோடு ஒன்றிவிட்ட மார்க்கமாக ஏற்றதற்குப் பின்னர், இறையொளியால் என் உள்ளம் நிறைந்து காணப்படுகின்றது. பாவ இருள்கள் முற்றாக நீங்கி விட்டுள்ளன.
என்னைப் படைத்த நாயன் ‘இவை கெட்டவை’ எனத் தடுத்தவற்றை நான் எப்படியம்மா துணிந்து செய்ய முடியும்? அது அவனுடைய கூற்றபை; புறக்கணிக்கும் கொடிய குற்றமல்லவா?
அன்புள்ள என் அம்மா!
நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை முறைக்குப் பெயர் ‘இஸ்லாம்’. அது முழு மனித சமுதாயத்திற்கு அல்லாஹ்வால் அருளப் பெற்றது. அதில் எத்தகைய குறையும் இல்லை. மனிதனின் முழு வாழ்வுக்கும் அவசியமான அத்தனை செயல்திட்டங்களும் அதில் அடங்கியுள்ளன.
ஒரு மனிதன்
o எப்படி வாழ்வது
o எப்படி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது
o மற்றவர்களுடன் நெருங்கிப் பழகும் பொழுது ஏற்படும் பிசரச்சனைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்வது.
o அரசியலில் எவ்வாறு ஈடுபடுவது
o ஓர் ஆட்சியை எவ்வாறு நடத்திச் செல்வது
o வாழ்வில் எத்தகைய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது.
o எவ்வாறு உண்பது, உழைப்பது, திருமணம் புரிவது
இப்படிப் போன்ற எல்லா விடயங்களிலும் இஸ்லாம் முன் வைக்கும் இறையாணைகள் பொருத்தமான வழிவகைகளை நமக்குக் காட்டித் தருகின்றன.
இன்னும் கேளுங்கள் அம்மா!
இஸ்லாம், மனிதர்கள் தமது பெற்றோர், சகோதர சகோதரிகள், கணவன், மனைவி, அண்டைவீட்டவர், உற்றார். உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உள்ளோருடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பதையும் சொல்லித் தருகின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடந்து காண்பித்து விட்டுச் சென்றார்கள்.
நான் இப்பொழுது வல்லமையும். அன்பும், கருளையும் உடைய அல்லாஹ்வின் ஆணைகளை சிரமேற்கொண்டு, அவன் விருப்பப்படி வாழ உறுதி பூண்டுள்ளேன். அந்த வகையில், பெற்றோருடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றிய அவனது வழிகாட்டல் என்ன என்பதை அறியந்து அதற்கொப்ப நான் நடந்து கொள்கிறேன்.
அல்லாஹ்வும், அவனது இறுதித் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், பெற்றோருடன் எவ்வாறு நடந்து கொள்வது? அவர்களுக்கு எவ்வாறு மரியாதை செய்வது என்பன பற்றி என்ன மொழிந்துள்ளனர் என உங்களுக்கு தெளிவுபடுத்த விழைகின்றேன்.
வல்லமைமிக்க அல்லாஹ் தனது பரிசுத்த குர்ஆனில் பெற்றோருக்குப் பணிந்து நடப்பது பற்றி பெருமளவில் குறிப்பிட்டுள்ளான். ”பெற்றோருடன் பேணுதலாக நடந்து கொள்ளுங்கள், அவர்களை துன்புறுத்தாதீர்கள், அவர்கள் கூறுபவற்றை மிக்க மரியாதையுடன் செவிமடுங்கள், அவர்கள் செய்த உதவிகளுக்கு நன்றி செலுத்துங்கள்” என்பன அவற்றுள் சில.
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெற்றோருக்குக் கண்ணியம் அளிப்பது பற்றி மொழிந்தவை இவ்விறை போதனைகளுக்கு முற்றிலும் இணக்கமானவை.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்