மரணித்த பின்பும் தொடரும் நன்மைகள்
என்.எம். அப்துல் முஜீப்
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள். ”(ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுடைய அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும். (அவை)
நிலையான தான தர்மம் (ஸதகத்துல் ஜாரியா)
பயனளிக்கக் கூடிய அறிவு
தனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய சிறந்த பிள்ளை” (ஆதாரம் : முஸ்லிம்)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஅறிவிக்கும் இந்த ஹதீஸ் முஸ்லிம் (3:1631), அபூதாவூத் (3:2880), ஸுனன் அத்திர்மிதி (3:1376), ஸுனன் அந்நஸாயீ (6:3549), முஸ்னத் அஹ்மத் (2:316) ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸின் தராதரம் பற்றிக் கூற வந்த இமாம் அபூ ஈஸா அவர்கள், அது ‘ஹஸன் ஸஹீஹ்” எனக் குறிப்பிடுகிறார். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையை வைத்து நோக்கும் போதும் இது ஆதாரப்பூர்வமான ஒரு ஹதீஸ் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸ் ஒரு மனிதன் மரணித்து இவ்வுலகிற்கு பிரியாவிடை கொடுக்கும் போது தொடர்ந்தும் அவனுக்கு நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடிய 3 விஷயங்கள் மிகவும் இரத்தினச் சுருக்கமாகச் சொல்கிறது.
மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட விஷயம். உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் நிச்சயமாக அதன் சுவையை அனுபவித்தே தீர வேண்டும். ”ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுவத்தே தீரும்” என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. எனவே ஒவ்வொரு மனிதனுக்குமென இறைவன் நிர்ணயித்த காலக்கெடு முடிவடையும் போது அவன் மரணிப்பதை மருத்துவத்தாலோ அல்லது வேறு எந்த சக்திகளாலோ தடுத்து நிறுத்த முடியாது. மேலும் மரணம் வந்து விட்டால் ”என்னை இன்னும் கொஞ்ச நேரம் பிற்படுத்த மாட்டாயா?” என ஒவ்வொரு மனிதனும் இறைவனிடம் மன்றாடும் எந்த மன்றாட்டமும் பயனளிக்காது.
ஒரு மனிதன் உலகில் வாழும் போது அவன் கோடானுகோடி செல்வத்தோடும், மாட மாளிகைகளோடும் வாழ்ந்திருக்கலாம். வகைவகையான வாகனங்களில் பயணித்திருக்கலாம். ரகம்ரகமான உணவு வகைகளை உட்கொண்டிருக்கலாம். ரம்மியமான தோட்டங்களில் உலாவியிருக்கலாம். ஆனால் எந்த நிலையில் வைத்து அவனுக்கு மரண விலங்கு போடப்படுமோ அதனோடு அவனுடைய அனைத்து ஆட்டங்களும் முடிந்து விடும்.
இனி அவன் நினைத்தவாறெல்லாம் துள்ள முடியாது.
மாறாக, சாதாரண சக மனிதர்களைப் போன்று இவனும் ஆறடி நிலத்திற்குள் வைத்தே மூடப்படுவான்.
உண்மையில் இப்போது தான் அவனுடைய உண்மையான வாழ்க்கை ஆரம்பிக்கிறது.
இன்றிலிருந்துதான் அவன் வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளப் போகிறான்.
அவன் உலகில் தன் மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு தான் தோன்றித்தனமாக வாழ்ந்திருந்தால் அதற்குத் தகுந்த தண்டனைகளையும் வேதனைகளையும் அனுபவிப்பான்.
ஆனால் இறைவனுக்குக் கட்டுப்பட்டு தன் மனோ இச்சையைக் கட்டுப்படுத்தி வாழ்ந்திருந்தால் இன்பமான ஒரு வாழ்கை அவன் சுவைப்பான்.
அததோடு இவன் உலகில் வாழும் போது பண்பாட்டு விழுமியங்களின் பாற்பட்ட விஷயங்களுக்கு வழிகோலியிருந்தால்
அதன் அறுவடையையும் பெற்றுக் கொண்டு இருப்பான். ”யார் ஒருவர் நல்ல வழி முறையை ஏற்படுத்திச் செல்கிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மை கிடைக்கும். மேலும் அதனை அடுத்தவர்கள் பின்பற்றும் போது அதனாலும் இவர் நன்மை பெறுவார். மறுபக்கம் யார் ஒரு தீய வழி முறையை ஏற்படுத்திச் செல்கிறாரோ அதற்குரிய தீமை அவருக்குக் கிடைக்கும். அத்தோடு அதனை அடுத்தவர்கள் பின்பற்றுவதாலும் இவருக்குத் தீமைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்.
இந்த வகையில் நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஹதீஸில் ஒரு மனிதன் மரணித்த பின்னரும் அவனுக்கு அதிகமான பயன்களையும், நிரம்பிய நன்மைகளையும் பெற்றுத் தரக் கூடிய 3 விஷயங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் மிகச் சுருக்கமாக விளக்கியுள்ளார்கள். அவற்றை ஓரளவு விரிவாக நோக்குவோம்.
நிலையான தானதர்மம் (ஸதகத்துல் ஜாரியா):
ஸதகத்துல் ஜாரியா என்ற இந்தச் சொற்றொடர் மிக விரிவான கருத்தைக் கொண்டுள்ளது. நிலையான தான தர்மம் என நாம் இதனை மொழி மாற்றிய போதிலும் முஸ்லிம்கள் நடந்து செல்லும் பாதையில் தீங்கு விளைவிக்கும் விதத்தில் அமைந்திருக்கும் ஒரு முள்ளை அல்லது ஒரு கல்லை எடுத்து வீசுவது கூட ஸதகத்துல் ஜாரியா என்ற பட்டியலில் அவர்களுக்குச் சேரும் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் ஸ{ன்னாவில் இருந்து விளங்க முடிகிறது. இதனை அறிஞர் அலி அப்துல் முன்இம் அவர்கள் பின்வருமாறு விளக்குகின்றார்:
”பொதுவாக ஒரு சில தனிமனிதர்களோ அல்லது ஒரு சமூகமோ நன்மை பெறக்கூடிய வகையில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் அது இஸ்லாமிய வரையறைக்குட்பட்டதாக இருக்கும் போது அதனை ஸதக்கத்துல் ஜாரியா என வரையறை செய்யலாம்.
இந்த வகையில் ஒருவர் தன்னிடம் இருக்கும் செல்வத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் சமூகம் பயன்பெறும் வகையில் தொழிற்சாலைகள், பாட சாலைகள், வாசக சாலைகள், பள்ளிவாசல்கள், மருத்துவமனைகள், சந்தைகள் போன்றவற்றை நிர்மாணித்தல், பாதைகள் அமைத்து முஸ்லிம்களின் பிரயாணங்களை இலகுபடுத்திக் கொடுத்தல், நீர் வசதிகள் செய்து கொடுத்தல் போன்ற இன்னோரன்ன சமூகப்பணிகளை ஸதக்கதுல் ஜாரியா எனக் குறிப்பிடலாம். அல்லது தன் உடலியல் ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகளையும் குறிப்பிடலாம்.
இவ்வாறான சமூகப் பணிகளினால் குறித்த முஸ்லிம் சமூகமோ அல்லது சில தனி மனிதர்களோ பயன்பெறும் காலமெல்லாம் அது அப்பணியை மேற்கொண்டவர்களுக்;கு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும்.
எனவே இவ்வாறான ஒரு பணியைச் செய்வதன் மூலம் ஒருவன் தான் மரணித்த பின்பும் நன்மைகளைப் பெறலாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறியுள்ளார்கள்.
பயனளிக்கக் கூடிய அறிவு:
மனிதனைப் பொறுத்தவரையில் அறிவு என்பது மிக முக்கியமான ஒன்று மிருகத்தில் இருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டும் பிரதான ஊடகமாக அறிவு காணப்படுகிறது.”அல்லாஹ்வின் அடியார்களில் நிச்சமயாக அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் அறிஞர்களே”” என அல்குர்ஆன் கூறுகின்றது. இமாம் ஷெய்க் அல் கஸ்ஸாலி அவர்கள் இதனையே”அறிவும் ஈமானும் ஒன்றோடொன்று நெருக்கமானது. எனவே அறிவில்லாதவன் ஈமானைச் சரியாகப் புரிந்து கொள்வது சாத்திமானதன்று. ஒருவன் இஸ்லாத்தை விளங்கிய நிலையில் தான் அவன் முஃமினாக வாழ முடியும். அந்த வகையில் அறிவு எப்போதும் ஈமானுடன் இணைந்தே இருக்கும்” என்ற கருத்துப்படக் கூறியுள்ளார்கள்.
எனவே ஒரு மனிதனின் வாழ்வில் அறிவு மிகவும் முக்கியமான ஒரு பகுதியாகும்.
இந்த அறிவை அவன் அடுத்தவர்களுக்கும் பயன்படக் கூடிய வகையில் அமைத்துக் கொண்டால் அது இவன் மரணித்த பின்னரும் பல நன்மைகளைப் பெற்றுத்தரும் ஒரு ஊடகமாக மாறுகின்றது.
இதனையே நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”பயனளிக்கக் கூடிய அறிவு” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
பயன் அளிக்கும் அறிவு எனும் போது அறிவார்ந்த ரீதியில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் அது சமூகத்துக்குப் பயனளிக்கக் கூடியதாக அமையும் போது இதனுள் உள்ளடக்கப்படுகிறது.
அந்த வகையில் ஒரு பாடசாலையை நிறுவுதல், அல்குர்ஆனைக் கற்றுக் கொடுத்தல், இஸ்லாம் பற்றிய தெளிவை வழங்குதல், பல்வேறு அறிவியல் கலைகளையும் இஸ்லாமிய கலைகளையும் உருவாக்குதல் அவற்றை வளர்த்தல் அவற்றை சமூகத்துக்கு கற்றுக் கொடுத்தல், அறிவியல் சாதனங்களையும், கருவிகளையும் கண்டுபிடித்தல், இஸ்லாமிய தஃவா பணியில் ஈடுபடுதல், இஸ்லாமிய போதனைகளை விளக்கும் வகையில் நல்ல நூல்கள், நல்ல துண்டுப் பிரசுரங்கள், பத்திரிக்கைகள், இதழ்கள், ஒளி-ஒலிப்பதிவு நாடாக்கள் போன்றவற்றை வெளியிடல்,விரிவுரைகள், ஆய்வரங்குகள், ஒன்று கூடல்கள், மகாநாடுகள் போன்றவற்றை நடத்துதல், உரைகள் நிகழ்த்துதல் போன்ற அனைத்து அறிவியல் சார் நடவடிக்கைகளையும் குறிப்பிட முடியும்.
இவ்வாறான முயற்சிகளால், நடவடிக்கைகளால் ஒரு சமூகமோ அல்லது அதிலுள்ள தனி நபர்களோ நன்மை பெறும் காலமெல்லாம் அதில் பங்களிப்புச் செய்தவர்களுக்கு அவை நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கின்றன என்பதை இதிலிருந்து நாம் விளங்க முடிகிறது.
தனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய ஸாலிஹான பிள்ளை:
சிறந்த பிள்ளை எனும் போது அவன் தன் பெற்றோர்களால் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களால் பண்படுத்தப்பட்ட, நற்பண்புள்ள ஒரு குழந்தையை அல்லது சிறுவனைக் குறிப்பிடலாம்.
இதற்கு இஸ்லாமிய சூழலில் வார்க்கப்பட்ட ஒருவன் எப்போதும் அல்லாஹ்வுக்கும், தன் பெற்றோர்களுக்கும் நன்றியுடையவனாக இருப்பான். மார்க்கப்பற்றோடு என்றும் வாழ்வான். அத்தோடு தன் பெற்றோர்கள் உயிர்வாழும் போது அவன் அவர்களுக்கு மனம் குளிர பணிவிடை செய்வான். அவர்கள் மரணித்த பின்னரும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வான். இவனை இவ்வாறு பயிற்றுவித்ததன் காரணமாக அந்தப் பெற்றோர்கள் பல நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்கள்.
அவர்களின் பயிற்சியால் இவன் மார்க்கப் பற்றோடு வாழ்ந்து, இஸ்லாத்திற்குச் சேவை செய்யும் காலமெல்லாம் அவனுடைய பெற்றோர்கள் நன்மையடைவார்கள். மேலும் இவனது பிரார்த்தனைகளாலும் அவர்கள் பயன் பெறுவார்கள்.
இவ்வாறு பயிற்றுவிக்கப்பட்ட ஓர் இளைஞர் பரம்பரை உருவாகும் போது அவர்கள் இஸ்லாமிய கலாசாரத்தையும், நாகரீகத்தையும் பேணி மார்க்கப் பற்றோடு வாழ்வதுடன் இஸ்லாத்திற்கு ஒரு சக்தியாகவும் மாறுவார்கள் என்பதில் ஐயமில்லை.
இத்தயைவர்களால் இஸ்லாம் பாதுகாக்கப்படும் காலமெல்லாம் அவர்களைப் பயிற்றுவித்த பெற்றோர்களும் இறைவனிடத்தில் சிறந்த வெகுமதிகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.
எனவே ஒரு மனிதன் மரணித்த பின்னரும் அவனுக்கு அதிகமான நன்மைகளையும், சிறந்த வெகுமதிகளையும் பெற்றுத்தரக்கூடிய மிகப் பிரதான சாதனங்களாக இவை மூன்றும் அமைந்துள்ளன என்பதை நாம் அறிய முடிகிறது. அத்தோடு ஒருவன் தன் குழந்தைகளைப் பராமரிப்பதில் ஆரம்பித்து அறிவியல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ தான் செய்யும் ஒவ்வொரு சமூகப் பிணக்கும் அப்பணியால் அடுத்தவர்கள் பயன்பெறும் காலமெல்லாம் இறைவனிடம் அவன் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வான் என்பதையும் நாம் விளங்க முடிகிறது.
யா அல்லாஹ்..! நாமும் இவ்வாறான பணிகளை மேற்கொண்டு அதிகமான நன்மைகளைப் பெற எமக்கும் அருள்பாளிப்பாயாக!!
துணைநின்றவைகள் :
ஸஹீஹ் முஸ்லிம் பி ஷரஹ் அந்-நவவி – இமாம் நவவி
அவ்னுல் மஃபூத் – இமாம் இப்னுல் கையூம்
அல்-வஃயுல் இஸ்லாமி (மாத இதழ்) – ஆகஸ்டு 1969.