திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக்கல்லூரியின் ஃபத்வா:
”இறைவா, உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம்” என்பதன் மூலம் வணக்கமும் உதவி தேடுவதும் இறைனுக்கே சொந்தமானது என்று தெரிகிறதே. இறைவனல்லாத மற்றவர்களிடம் உதவியும் பாதுகாப்பும் கேட்பது எவ்வாறு ஆகுமாகும்?
இதனால்தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹளரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வஸிய்யத் செய்தார்கள்; ”ஏதாவது கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடமே உதவி தேடு”. (நூல்: மிஷ்காத் பக்கம் 53)
மேலும் இறைவன் தன் திருமறையில் கூறியுள்ளான்; ”நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்வித நன்மையை செய்வதற்கும் தீமையை தடுத்துக் கொள்வதற்கும் நான் சக்தி பெற மாட்டேன்.” (அல்குர்ஆன்: அஃராப்: 188)
”நிச்சயமாக நான் உங்களுக்கு தீங்கையோ, நன்மையோ செய்ய சக்தி பெற மாட்டேன்” என்று நபியே கூறுவீராக (அல்குர்ஆன்: அல்ஜின்: 21)
ஹளரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதல் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை சுமார் 1,24,000 நபிமார்களில் அனைவரும் தனது தேவைகளை அல்லாஹ்விடத்திலேயே கேட்டார்கள். மக்களையும் அல்லாஹ்விடத்திலேயே கேட்கும்படி கூறிவந்தார்கள். ஆனால் யாரும் தன்னிடம் தேவைகளை கேட்கும்படி கூறியதாக குர்ஆன், ஹதீஸ் மற்ற எந்த நூல்களிலும் காணப்படவில்லை.
இவ்வாறே ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஃ தாபிஈன்கள், அவ்லியாக்கள், ஷ{ஹதாக்கள், ஸாலிஹீன்கள் அனைவரும் தங்களின் தேவைகளை இறைவனிடத்திலேயே கேட்டார்கள். மற்ற மக்களுக்கு இதைத்தான் போதித்துள்ளார்கள்.
ஹளரத் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது மரண சமயத்தில் தனது மகன் அப்துல் வஹ்ஹாபுக்கு வஸிய்யத் செய்தார்கள்: ”அனைத்து தேவைகளையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிடு. அவனிடமே தேவைகளைக் கேள். அவன் அல்லாத யார் மீதும் நம்பிக்கை வைக்காதே. அவன் ஒருவனையே நம்பு” (ஆதாரம்: ஃபத்ஹுர்ரப்பானி, பக்கம் 665)
மவ்லவி, லியாகத் அலீ மன்பஈ
ஜமா அத்துல் உலமா மாத இதழ் – ஏப்ரல் 2010