[ சோகத்தை வெளிப்படுத்துவது கண்களாலும், உள்ளத்தாலும் ஏற்ப்பட்டால் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுவதாகும் இறையருளுக்கு உரியதாகும். கையாலும், நாவாலும் ஏற்படுமானால் அது ஷைத்தானிடமிருந்து ஏற்படுவதாகும். (இப்னு அப்பாஸ்ரளியல்லாஹு அன்ஹு: அஹ்மத்)
”ஒப்பாரி வைப்பவளையும் ஒப்பாரியைக் கேட்டு மகிழ்பவளையும் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்.” (நூல்: முஸ்லிம்)
”ஓலமிட்டு அழுபவள் மரணத்திற்குமுன் தௌபா(பாவ மன்னிப்பு கோரல்) செய்யவில்லையானால் தாரினால் சட்டை போடப்பட்டு நரகத்தில் வேதனை செய்யப்படுவாள்.” (ஆதாரம் : முஸ்லிம், இப்னுமாஜா)
”ஒப்பாரி வைத்து அழுபவர்கள் நரகத்தில் இரு வரிசையாக நிறுத்தப்படுவார்கள்.
ஒரு நாயைப் பார்த்து இன்னொரு நாய் குரைத்துக் கொண்டிருப்பது போல குரைத்துக் கொண்டிருப்பார்கள்.” (ஆதாரம் : தப்ரானி)]
ஒப்பாரியுடன் அழுவது கூடாது
முஸ்லிம் அல்லாத சிலரின் வீடுகளில் இறப்பு ஏற்பட்டுவிட்டால் அவர்கள் குழுவாக அமர்ந்து அழுவார்கள். காலப் போக்கில் அழுவதற்காக கூலிப்பட்டாளமே உருவானது. கூலிக்கு மாரடித்தல் என்ற சொல் இதற்காக வந்ததுதான்.
முஸ்லிம் அல்லாத சிலரின் வீடுகளில் அழுவோரின் ஒப்பாரிக்குரல் வெளியே கேட்க வேண்டும் என்பதற்காக ஒலிபெருக்கி அமைத்தும் தரப்படும். ஒப்பாரி வைக்கப் படாத வீடுகள் விமர்சனத்திற்கு உள்ளாவதால் ஊருக்கு பயந்தேனும் ஒப்பாரி வைக்கும் வழக்கம் இன்றைக்கு முஸ்லிம் வீடுகளிலும் வந்துவிட்டது.
(மூஅத்தாப் போரில்) ஸைத் பின் ஹாரிஸா ரளியல்லாஹு அன்ஹு, ஜஹ்பர் பின் அபூதாப் ரளியல்லாஹு அன்ஹு, அப்துல்லாஹ் பின் ரவாஹா ரளியல்லாஹு அன்ஹு, ஆகியோர் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது, நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தார்கள்.
நான் கதவிடுக்கில் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கவனித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ஜஹ்பர் அவர்களின் வீட்டுப் பெண்கள் (ஒப்பாரி வைத்து) அழுவதாகக் கூறினார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி கூறினார்கள். அவர் சென்றுவிட்டு மீண்டும் வந்து, அவர்கள் (என்பேச்சிற்குக்)- கட்டுப்படவில்லை என்றார். உடனே நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (நீர்சென்று) அவர்களைத் தடுத்து நிறுத்தும் என்று கட்டலையிட்டார்கள். அவர் சென்றுவிட்டு, மூன்றாம் முறையாக வந்து அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக (அப்பெண்கள்) எங்களை மிகைத்து விட்டனர் (கட்டுப்படவில்லை) என்றார்..
அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப்போடுங்கள் என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என நினைக்கிறேன். பின்னர் நான் அந்த நபரை அழைத்து அல்லாஹ் உம்மை இழிவாக்குவானாக! நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டதையும் செய்யவில்லை. நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தொந்தரவு செய்வதையும் நீர் நிறுத்தவும் இல்லை என்று கூறினேன். இதை ஆயிஷாரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள். (புகாரி 1299)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும் இன்று போலவே ஒப்பாரி வைக்கும் வழக்கம் இருந்துள்ளது. அவர்கள் ஒப்பாரி வைக்கக் கூடாது என்பதில் அதிகம் கவனம் எடுத்துள்ளார்கள் என்பதையே இந்த நிகழ்ச்சி மூலம் அறியமுடிகிறது.
ஆண்களிடம் ஒப்பாரி வைத்து அழும் பழக்கம் இல்லை என்று கூறினாலும், பெண்களிடம் இருக்கவே செய்கிறது. இப்படி ஓலமிட்டு அழக்கூடாது என்று பெண்களிடம் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உறுதிமொழி வாங்கியும் உள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் ஒப்பாரி வைக்கக் கூடாது என்று உறுதிமொழி வாங்கினார்கள். எனினும் இந்த ஒப்பந்தத்தை எங்களில் ஐந்துப் பெண்களைத் தவிர வேறுயாரும் நிறைவேற்றவில்லை. அப்பெண்கள் உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா, உம்முல் அலா ரளியல்லாஹு அன்ஹா, முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவியும், அபூசப்ராவின் மகளுமான ஒருவர், மற்றும் இரண்டு பெண்கள், அல்லது அபூசப்ராவின் மகள், முஆத் அவர்களின் மனைவி, இன்னும் ஒரு பெண் என அறிவிப்பாளர் ஒருவர் சந்தேகத்துடன் கூறுகிறார். இதை உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள். (புகாரி 1306)
ஒப்பாரி வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
”(துன்பம் ஏற்படும்போது) தலையை மழித்துக் கொள்பவனைவிட்டும், ஒப்பாரி வைப்பவனை விட்டும், ஆடையைக் கழித்துக் கொள்பவனை விட்டும் நான் நீங்கிக் கொண்டேன்”. என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.(அபூமூஸாரளியல்லாஹு அன்ஹு: புகாரி, முஸ்லிம்)
அறியாமை காலத்து நான்கு காரியங்கள் எனது சமுதாயத்தவர்களிடம் உள்ளன. அவற்றை அவர்கள் விட்டுவிடுவதில்லை. 1. பரம்பரை பற்றி பெருமையடிப்பது, 2. பிறரது பற்றி குறை கூறுவது, 3. நட்சத்திரங்களால் மழைப் பொழிவதாக நம்புவது, 4. ஒப்பாரி வைப்பது என்பது நபிமொழி. (அபூமாலிக் அல்அஷ்அரி ரளியல்லாஹு அன்ஹு: முஸ்லிம்)
பாரம்பர்யப் பெருமை பேசுவதும், பிறரது பரம்பரையில் குறைகாண்பதும், நட்சத்திரங்கள் மூலம் மழை வேண்டுவதும், ஒப்பாரி வைப்பதும் ஆகிய நான்கு, அறியாமைக்கால விஷயங்கள், என் உம்மத்தில் இருந்து வருகின்றன. அவற்றை விடமாட்டேன் என்கிறார்கள் என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூமாலிக் அல் அஷ்அரீரளியல்லாஹு அன்ஹு: முஸ்லிம்)
சோகத்தை வெளிப்படுத்துவது கண்களாலும், உள்ளத்தாலும் ஏற்ப்பட்டால் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுவதாகும் இறையருளுக்கு உரியதாகும். கையாலும், நாவாலும் ஏற்படுமானால் அது ஷைத்தானிடமிருந்து ஏற்படுவதாகும். (இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு: அஹ்மத்)
ஒப்பாரி வைப்பதும், ஆடைகளைக் கிழிப்பதும் கன்னத்தில் அடிப்பதும் முடியைப் பிடுங்குவதும் முகத்தைப் பறண்டுவதும், தகாத வார்த்தைகளைக் கூறுவதும் இதுபோன்ற அல்லாஹ் விதித்த விதியில் பதட்டத்தை ஏற்படுத்துகின்ற செயல்களைச் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது பொறுமை இழந்து நிற்பது பெரிய குற்றமாகும்.
”துன்பத்தின்போது கன்னத்தில் அடிப்பவனும் சட்டையை கிழிப்பவனும் அறியாமை காலத்து பிரார்த்தனையைச் செய்பவனும் நம்மைச் சார்ந்தவனல்ல” என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
மேலும், ”சோதனையின்போது சப்தத்தை உயர்த்துபவளை விட்டும் தலைமுடியை மழிப்பவளை விட்டும், ஆடையை கிழித்துக் கொள்பவளை விட்டும் நான் ஒதிங்கிக் கொண்டேன்” என்றும் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
”ஒப்பாரி வைப்பவளையும் ஒப்பாரியைக் கேட்டு மகிழ்பவளையும் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்.” (நூல்: முஸ்லிம்)
ஒப்பாரி வைத்து அழுபவர்களுக்கான தண்டனைகள்:
”ஓலமிட்டு அழுபவள் மரணத்திற்குமுன் தௌபா(பாவ மன்னிப்பு கோரல்) செய்யவில்லையானால் தாரால் (தாரினால்) சட்டை போடப்பட்டு நரகத்தில் வேதனை செய்யப்படுவாள்.”(ஆதாரம் : முஸ்லிம் மற்றும் இப்னுமாஜா)
”ஒப்பாரி வைத்து அழுபவர்கள் நரகத்தில் இரு வரிசையாக நிறுத்தப்படுவார்கள். ஒரு நாயைப் பார்த்து இன்னொரு நாய் குரைத்துக் கொண்டிருப்பது போல குரைத்துக் கொண்டிருப்பார்கள்.”(ஆதாரம் : தப்ரானி)
முஸ்லிம் சகோதரியே! சோதனையின்போது இதுபோன்ற தடுக்கப்பட்ட செயல்களை விட்டும் ஒதுங்கிக்கொள்! சோதனையின்போது பொறுமையைக் கடைபிடித்துக் கொள்! உனக்கு ஏற்படக்கூடிய சோதனை உன்னுடைய பாவத்திற்கு பரிகாரமாகவும் உன்னுடைய நன்மையை அதிகரிக்கக் கூடியதாகவும் அமைந்துவிடும்.
அல்லாஹ் கூறுகிறான்: ”நிச்சயமாக நாம் உங்களை அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச் சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம், (ஆனால்) பொறுமையுடையோருக்கு நபியே! நீர் நற்செய்தி கூறுவீராக!”
”அவர்களுக்கு துன்பம் ஏற்படும்போது நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்’ என்று கூறுவார்கள். இத்தகையோர் மீதுதான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்களே நேர்வழியை அடைந்தவர்கள். (அல்குர்ஆன்: 2:155, 157)
ஒப்பாரி வைத்து ஓலமிட்டு அழுவதுதான் கூடாதே தவிர வெறுமென கண்ணீர் விட்டு அழுவது தவறல்ல!.
நாங்கள் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் (அவர்களின் குழந்தை) இப்றாஹிம் வளர்ந்து வந்த அபூ ஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்றாஹிமின் பால்குடி தாயாருடைய கணவர் ஆவார். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்றாஹிமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்றாஹிமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக்கண்ட அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! தாங்களா அழுகிறீர்கள்…? என்று கேட்டார்கள். அதற்க்கு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவ்ஃபின் புதல்வரே! இது கருணையினால் உள்ளதாகும் என்று கூறிவிட்டு, தொடர்ந்து அழுதார்கள்.
பிறகு கண்கள் நீரைச்சொறிகின்றன. உள்ளம் வாடுகின்றது. எனினும் இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் நாங்கள் கூறமாட்டோம். இப்றஹிமே! நிச்சயமாக நாங்கள், உனதுப் பிரிவால் அதிகக் கவலைப்படுகிறோம். என்று கூறினார்கள். இதை அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (புகாரி 1303)
சகோதர, சகோதரிகளே! மறுமையில் இத்தைகைய வேதனை தரும் இழிசெயலாகிய ஒப்பாரி வைத்தலை நமது சகோதரிகளில் சிலர் தமக்கு மிக நெருக்கமானவரை இழந்துவிடும் போது அறியாமையினால் செய்கின்றனர். நாம் அவர்களுக்கு இதன் தீமைகளை எடுத்துக் கூறி தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். பொறுமையயைக் கடைப்பிடிப்பவர்களுக்கு அல்லாஹ் தரவிருக்கின்ற வெகுமதியைப் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.