ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டது முதல் உலக அழிவுநாள் வரை சற்றும் தடம்புரலாமல், இசகு பிசகாமல் செல்லக்கூடிய ஒரு கொள்கை பிரிவினை கொள்கைதான். வாருங்கள் இதன் வரலாற்றை காண்போம்!
மனிதன் நிலத்தில் காலடி பதிப்பதற்கு முன் ஏற்பட்ட பிரிவுகள்
o ஆதம் நபி படைக்கப்பட்டதும் அவருக்கு அனைத்து படைப்பினங்களும் சஸ்தா செய்ய அழைப்பு விடுக்கப்பட்டதும் இப்லிஷ் மட்டும் தனித்து நின்று அல்லாஹ்வுக்கு கட்டுப்பட மறுத்தான் பிரிந்து நின்றான் இது முதல் பிரிவு!
o சுவனத்தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தை நெருங்காதீர்கள் என்று அல்லாஹ் கட்டளை விடுத்ததும் ஆதம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் தவறிழைத்து அல்லாஹ் விடமிருந்து பிரிந்து நின்றனர்.
o அல்லாஹ்வின் சபையில் ஒற்றுமையாக இருந்த ஆதம் (மனிதன்), மலக்குமார்கள், இப்லிஷ் (ஜின் கூட்டங்கள்) பிரிந்தன. அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்ட மலக்குமார்கள் மட்டும் அல்லாஹ்விடமே தங்கிவிட்டனர் காரணம் அவர்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்படிந்தவர்களாக இருக்கின்றனர். (சுப்ஹானல்லாஹ்) மாறாக மனிதனோ, இப்லிஷ் (ஜின் கூட்டங்களோ தங்கள் இறைவனை அஞ்சும் விதமாக அஞ்சவில்லை! (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவுன்)
ஆதம் நபியின் சந்ததியினர் இடையே ஏற்பட்ட பிரிவுகள்
ஆதம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் ஆகியோருக்கு பிறந்த ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளே ஒருவரையொருவர் பகைத்துக்கொண்டு கொலைகளில் ஈடுபட்டனர் இது நம்முடைய ஆதிகுடும்பத்தில் ஏற்பட்ட முதல் பிரிவு ஆகும்! இதோ உங்கள் பார்வைக்கு ஓர் இறை வசனம்;
”நீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னை நோக்கி நீட்டினாலும் கூட நான் உன்னை வெட்டுவதற்காக என் கையை ஓங்கமாட்டேன். இவ்வுலகில் உள்ளோர் அனைவரையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனை நான் அஞ்சுகிறேன்”. (அல்குர்அன் 5:28)
இந்த திருமறைவசனத்தில் உள்ள படிப்பினையை அறியமுடிகிறதா? ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனை கொல்ல முற்படுகிறான் ஆனால் தாம் கொல்லப்படுவோம் என்பதை அறிந்தும் அந்த சகோதரன் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்கிறார்! அல்லாஹ்வின் மீது இவருக்கு உள்ள பயம் உங்களுக்கு உள்ளதா?
நபிமார்களின் காலத்தில் ஏற்பட்ட பிரிவுகள்
நபிமார்களான நூஹ் அலைஹிஸ்ஸலாம், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் முதல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வரை அனுப்பப்பட்ட இலட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்களும் உண்மையைத் தவிர வேறு எதனையும் போதிக்கவில்லை ஆனால் இவர்களை ஏற்றுக்கொண்ட சமுதாயத்திற்கும் ஏற்றுக்கொள்ள தயங்கிய சமுதாயத்திற்கும் இடையே பிரிவு ஏற்பட்டது அதன் விளைவுகளாக புதுப்புது மதங்கள், சாதிகள், போலி தெய்வங்கள் உருவாக்கப்பட்டன. அல்லாஹ் அருளிய இஸ்லாம் அப்போதும் நிலைத்து நின்றது உலக அழிவு நாள்வரை இறைவனின் அருளால் தனித்தே நிற்கும்!
ஒரு நபியின் பிரிவும் அவர் பெற்ற தண்டனையும்
நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் தம் சமுதாயத்திடம் நன்மையை எத்திவைத்தார் வரவிருக்கும் அல்லாஹ்வின் தண்டனை பற்றி முன்னெச்சரிக்கையை அறிவித்தார் ஆனால் அவர் சமுதாயம் திருந்தவில்லை உடனே நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் தம் சமுதாயத்தின் மீது கோபம் கொண்டு அவர்களை விட்டுப் பிரிந்து சென்றார் ஆனால் அவர் பிரிந்த உடனேயே அல்லாஹ் அவருயை சமுதாயத்திற்கு நேர்வழிகாட்டினான் அவர்கள் தங்களை சுதாரித்துக் கொண்டு அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டனர். ஆனால் கோபம் கொண்டு மக்களைப் பிரிந்த நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார் மீனுடைய வயிற்றுக்குள் தள்ளப்பட்டு வேதனைக்குள்ளானார் இறுதியில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு பெற்று திருந்திக்கொண்டார். ஆதாரம் இதோ!
”மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம் என்று நினைத்தார். ‘உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்‘ என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.” (அல்குர்ஆன் 21-86, 87)
இறுதி நபியின் மறைவுக்குப் பின் சத்திய சஹாபாக்களிடம் ஏற்பட்ட பிரிவுகள்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேரடிப்பார்வையில் இருந்த சத்திய சஹாபாக்கள் ஓருடல் ஈருயிராகவும் வாழ்ந்துவந்தார்களே ஆனால் அந்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மரணமடைந்த பின் ஆட்சித்தலைமைக்கு ஆசைப்பட்டு தங்களுக்குள் பிரிந்து நின்றார்களே இதுவும் ஒருவகை பிரிவுதானே! மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேரடிப்பார்வையில் இருந்த இவர்கள் தங்களுக்குள் கருத்துவேறுபாடு கொள்ளாமல் தங்களுக்குள் பின்னிப் பிணைந்து வாழந்திருந்தால் இன்றைக்கு இஸ்லாத்தில் ஷியா பிரிவும், சுன்னி பிரிவும் தோன்றியிருக்குமா? இதோ கீழ்கண்ட நபிமொழிக்கு இவர்கள் கட்டுப்படவில்லையே!
உக்பா இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.
”ஒரு நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுகை நடத்துவதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழுதார்கள். பிறகு சொற்பொழிவு மேடைக்கு (மிம்பர்) வந்து ‘உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (‘அல்கவ்ஸர்‘ எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். மேலும், எனக்கு ‘பூமியின் கருவூலத் திறவுகோல்கள்‘ அல்லது ‘பூமியின் திறவுகோல்கள்‘ கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணைவைப்பவர்களாக ஆம்விடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகச் செல்வங்களுக்காக நீங்கள் ஒருவரோடுவர் போட்டியிட்டு (மோதி)க் கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்‘ என்றார்கள்.” (புகாரி 6690 Volume:7 Book:83)
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;
”மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் ‘இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்‘ என்பேன். அதற்கு இறைவன் ‘உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்‘ என்று சொல்வான்.” என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஅறிவித்தார். (புகாரி 6585 Volume:7 Book:83)
இன்ஷா அல்லாஹ், தொடரும்.