நல்ல அறிஞர்கள் மரணித்தபின் ஏற்பட்ட மார்க்கப் பிரிவுகள்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்திலிருந்தே இறுதிவடிவம் பெற்ற இஸ்லாம் உலகில் பரவ ஆரம்பித்தது ஆங்காங்கே மக்கள் உண்மையை உணர ஆரம்பித்தனர். நபிகளாருக்குப் பின் தலைசிறந்த மார்க்க அறிஞர்களும் இமாம்களும் மார்க்கத்தை போதித்தனர்.
ஆனால் மக்களோ இந்த நல்ல அறிஞர்களும் இமாம்களும் மரணித்தவுடன் அவர்களில் சிலர் சிலரை அவ்லியாக்களாகவும் மற்றும் சிலர் சிலரை தலைவர்களாக ஏற்றனர் இதன் விளைவுகள் தர்ஹா வழிபாடு போன்றவை.
வழிகெட்ட தலைவர்களால் ஏற்பட்ட மார்க்க பிரிவுகள் சிலர் வழிகெட்ட தலைவர்களை பின்பற்றினர் அவர்களோ முழுமையடைந்த மார்க்கதின் உன்னத 5 அடிப்படைக் கோட்பாடுகளில் புதிய கோட்பாடுகளை கலந்து ஷியா பிரிவு, தப்லீக் பிரிவு கொள்கைகளை உருவாக்கினர்.
சிந்தித்துப்பாருங்கள்! மக்களை சீர்த்திருத்த மார்க்கம் வந்ததா அல்லது மார்க்கத்தை சீர்திருத்த மக்கள் வந்தார்களா? என்னய்யா கொடுமை இது!
விஞ்ஞான தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் மார்க்கப் பிரிவு
மாற்றுமதத்திலிருந்தவர்கள் முஸ்லிம்களானார்கள் ஆனால் அவர்களுக்கு நேர்வழியை எடுத்துக்கூற போதிய வழிகாட்டல்கள் இல்லாததால் தங்கள் பழைய வழியை இஸ்லாத்திற்குள் புகுத்த ஆரம்பித்தனர். இவ்வாறு உருவானவைகள்தான் இன்றைக்கு நம் பகுதி மக்களிடம் உள்ள புதுப்புது அநாச்சாரங்கள். இவைகளை அன்றைக்கே கலைந்திருக்கலாம் ஆனால் தற்போது நம்மிடம் உள்ளது போன்ற விஞ்ஞான தொழில்நுட்பமும், வழிகெட்ட மக்களை நாள்தோறும் சந்தித்து நல்லறிவை எத்திவைக்கும் சூழலும் இல்லாததால் மக்கள் தரம்புரண்டார்கள். இது அவர்களது விதியாகவே நாம் கருத வேண்டும் மாறாக அன்றைய மார்க்க அறிஞர்களின் தவறு என கூற இயலாது பாவம் அவர்கள் நெடுந்தூரம் குதிரைகளில் பயணித்த மனிதர்கள்தானே!.
விஞ்ஞான தொழில்நுட்ப காலத்தில் மார்க்கப் பிரிவு
விஞ்ஞானம் தொழில்நுட்பமும் வளர்ந்தது, தொலைக்காட்சியும், கணிணியும் உதையமானது இதற்கிடையில் ஏகத்துவவாதிகளும் விழித்துக்கொண்டு அயராது வீரியமிக்க பிரச்சாரம் செய்தார்கள் முடிவு பட்டிதொட்டி எங்கும் மார்க்கம் பரவியது இதுதான் இஸ்லாம் என்பது மக்களுக்கு புரிய ஆரம்பித்தது ஆனால் இந்த விஞ்ஞானம் ஏகத்துவவாதிகளின் மத்தியில் பிளவையும் பிரிவையும் ஏற்படுத்தியது.
மார்க்க்ததில் புதுமையை புகுத்தாதீர்கள் என்று கூறிய ஒருசாரார் பிறையை விஞ்ஞானத்தில் தீர்மானித்தனர், இதனால் மனம் நொந்துபோன மற்றொரு சாரார் குர்ஆன்–ஹதீஸ்களைத் தவிர வேறு எதையும் பின்பற்றமாட்டோம் மார்க்கத்தில் புதுமையை புகுத்தமாட்டோம் என்று கூறி அவர்களை விட்டும் பிரிந்தனர். ஏகத்துவத்தின் முதல் பிரிவு இதுவாகத்தான் இருக்கும்!
ஜமாஅத்துக்கள் உதயம்
சத்தியத்தை எடுத்துக்கூற வீரியமிக்க மார்க்க அறிஞர்களும் அவர்களுக்கு உறுதுணையாக கொள்கைச் சகோதரர்களும் அவர்களுக்கு மத்தியில் பல்வேறு கருத்து மோதல்கள் தலைதூக்க விளைவோ மேலும் சில ஜமாஅத் உட்பிரிவுகள். சிலர் அரசியலிலும் சிலர் ஆன்மீகத்திலும் வேகம் காட்டினர் இன்றைக்கு விளைவோ உங்கள் கண் முன்னே! கொள்கையில் பிரிந்த சகோதரர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் குறை கண்டுபிடித்து வசைபாட ஆரம்பித்தனர் விளைவுகளோ ஆளுக்கொரு ஜமாஅத், ஆளுக்கொரு தலைவன்.
இணைவைப்பு ஜமாஅத்துகளுடன் என்ன செய்வது?
இஸ்லாம் என்பது ஒன்றே! இதன் முதல் முக்கிய கோட்பாடாகிய தவ்ஹீது ஒரு கடவுளை மட்டுமே வணங்குமாறும் ஏனைய நபிமார்களை பின்பற்றுமாறும் கூறுகிறது ஆனால் இந்த கொள்கைக்கு மாற்றமாக அல்லாஹ்வுடன் வேறு ஒன்றை இணையாக்கி நபிமார்களை புரக்கணிக்கும் விதமாக நடந்துக்கொள்ளும் கப்ருவணங்கிகளுடன் எவ்வாறு இணைவது? இவர்கள் தாங்களாகவே முன்வந்து கப்ருகளை வணங்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தாலே தவிர ஒற்றுமைக்கு வழி பிறக்காது! இப்படிப்பட்ட நிலையில் இந்த கப்ருவணங்கிகள் தங்கள் மறுமைக்கு தாங்களே பொறுப்பாளர்களாகிறார்கள் மாறாக முதல் கலிமாவை ஏற்றுக்கொண்ட ஏகத்துவவாதிகள் எவ்விதத்திலும் பொறுப்பாகமாட்டார்கள்! இதோ ஆதாரம்
”இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள். (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள். எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன்: 5:92)
”நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் (இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம்) அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.” அல்குர்ஆன் 6:153
ஏகத்துவவாதிகளின் ஒற்றுமைக்கு தீர்வு என்ன?
o முதலில் ஒவ்வொருவரும் தங்களின் மறுமை வெற்றிக்காக ஒருவரையொருவர் வசைபாடுவதை நிறுத்த வேண்டும்.
o தவறு செய்யக்கூடிய எந்த சகோதரனாக இருந்தாலும் கண்ணியமான முறையில் ஆதாரத்தின் அடிப்படையில் அவரை அணுக வேண்டுமே தவிர கேவலமான வார்த்தைகளால் ஒருவரையொருவர் நோகடிக்கும் போக்கை அறவே ஒழித்துக்கட்ட வேண்டும்!
o மறுமைக்காக தங்களுக்குள் உள்ள கருத்து மோதல்களை அலசிப்பார்த்து தாங்கள் எடுத்து வைக்கும் வாதம் மார்க்க வரம்புக்கு உட்பட்டதா! நேர்மையானதா என்பதை தாங்களே உணர வேண்டும் தங்கள் வாதம் மார்கத்திற்கு புரம்பாணவையாக இருந்தால் தாங்களே முன்வந்து அவைகளை உதரித்தள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
o அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் தங்களிடம் ஏதாவது தவறான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் இருந்தால் அவைகளை திருத்திக்கொள்ள வேண்டும். மேலும் நபிகளார் காட்டிய வழியில் ஒப்பந்தங்களையும் வகுத்து ஒற்றுமைக்கான கரம் நீட்ட வேண்டும்!
o ஒரு ஏகத்துவ சகோதரனுக்கு துன்பம் ஏற்பட்டால் மற்றொரு ஏகத்துவ சகோதரன் உதவ முன்வர வேண்டும் இது ஜமாஅத் தலைவர்கள் மத்தியில் முதலில் நடைபெற வேண்டும். ஒரு ஜமாஅத் உண்மைக்காக கலத்தில் இறங்கினால் மற்றொரு ஜமாஅத் வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு அணியணியாக கலத்தில் இறங்க வேண்டும்!
o எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ்வின் மீது பயம் இருக்க வேண்டும், நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டிய வழியை பின்பற்றும் உறுதி இருக்க வேண்டும்!
o இறுதியாக மறுமையில் முஸ்லிம்கள் அனைவரும் சுவனத்திற்கு செல்ல வேண்டும் என்ற அபரிமிதமான ஆசை வேண்டும் அதற்காக தன்னலம் விட்டு பிறர்நலம் பேணும் உன்னதமான உத்திகளை கையாள வேண்டும்!
அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதை நினைவில் கொள்ளுங்கள்:
‘‘மக்கள் எதில் கருத்து வேறுபட்டுள்ளனரோ அவற்றை நீர் தெளிவுபடுத்த வேண்டு மென்பதற்காகவும் நேர்வழியாகவும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு அருளாகவும் தான் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்”. (அல்குர்ஆன் 16:64)
”உமது இறைவன் மேல் ஆணையாக! தங்களிடையே பிணக்கு ஏற்படும்போது உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் அளித்த தீர்ப்பில் எந்தக் குறையும் காணாமல் முழுமையாகக் கட்டுப்பட்டால் தவிர அவர்கள் மூஃமின்களாக மாட்டார்கள்”. (4:65)
”அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள் நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்” (அல்குர்ஆன் 3:132)
”அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு விஷயத்தில் முடிவு செய்து விட்டால் சுய விருப்பம் கொள்ளமூஃமினான ஆணுக்கோ,மூஃமினான பெண்ணுக்கோ உரிமையில்லை. யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவர் பகிரங்கமாக வழி கெட்டுவிட்டார்.” (அல்குர்ஆன் 33:36)
”அல்லாஹ்வின் பக்கமும் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவனது தூதரின்பாலும் அழைக்கப்படும்போது நாங்கள் செவியுற்றோம், கட்டுப்பட்டோம் என்பதுதான் மூஃமின்களின் பதிலாக இருக்க வேண்டும். மேலும் அவர்களே வெற்றி பெற்றவர்கள்.” (அல்குர்ஆன் 24:51)
முடிவுரை
கவலைப்படாதீர்கள் தோழர்களே இவர்கள் இணையவில்லை என்றால் என்ன! நாம் நல் அமல்களை செய்து நம்மால் ஆன மார்க்கப்பணிகளை செய்துவருவோம்! மஹ்ஷரின் கேள்விக் கணக்குகளுக்குப் பின்னர் அல்லாஹ் தான் நாடினால் நமக்கு நல்லருள் புரிந்து சுவனத்தை அளிப்பான் அங்கு நாம் ஒற்றுமையாக இருப்போம்! அந்த சந்தோஷமாவது நமக்கு அல்லாஹ் கொடுப்பானல்லவா? கவலை விடுங்கள் இன்றே மார்க்கப் பணிக்கு உங்களாலான ஒத்துழைப்புகளை கொடுத்து நன்மையை அள்ளிக்கொள்ளுங்கள்! அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக!
”நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (சுகம் பெற்று ) இருப்பார்கள்.” (அல்குர்ஆன் 15-45)
”(அவர்களை நோக்கி) சாந்தியுடனும், அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள் (என்று கூறப்படும்).” (அல்குர்ஆன் 15-46)
”மேலும் அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம், (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்.” (அல்குர்ஆன் 15-47)
”அவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது, அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களுமல்லர்.” (அல்குர்ஆன் 15-48)
”(நபியே!) என் அடியார்களிடம் அறிவிப்பீராக! “நிச்சயமாக நான மிக்க மன்னிப்போனாகவும், மிக்க அன்புடையேவனாகவும் இருக்கிறேன்.” (அல்குர்ஆன் 15-49)
source: http://islamicparadise.wordpress.com/