கருவை உறை நிலையில் வைத்தல் தொடர்பான ஹுகும்ஷரியா (2)
மேலும் இத்தகைய உறைநிலை கருமுட்டை அளவில் நிறுத்திக் கொள்ளாமல் கருவூட்டம் பெறாத சினைமுட்டைகளையும் கருநிலை சிசுக்களையும் உறைநிலையில் சேமித்து வைத்து அவைகளைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுபவர்களுக்கு விற்பனை செய்கிறார்கள், இத்தகைய வர்த்தகத்தை மேற்கொண்டிருக்கும் சிலர் சில தருணங்களில் பிரபலமான சில மனிதர்களுடைய சினைமுட்டைகளையோ அல்லது கருநிலை சிசுக்களையோ உள்ளபடியே விற்பனை செய்துவருகிறார்கள்!
இதுதான் உறைநிலை கருமுட்டை மற்றும் கருநிலை சிசுக்கள் ஆகியவற்றைப் பற்றிய உண்மைநிலையாகும், இந்த விஷயம் தொடர்பாக விரிவான விளக்கம் இருந்தபோதிலும் நாம் கூறியுள்ளவை ஒட்டுமொத்த விஷயத்தையும் உள்ளடக்கிய சுருக்கமான விளக்கமாகும்,
இந்த விஷயங்களின் அடிப்படையில் இதற்குரிய ஹுகும் ஷரியா கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
1. சட்டரீதியான தம்பதிகளில் உள்ள பெண்ணின் சினைமுட்டையை அவளுடைய கணவனின் விந்தணுவோடு இணைத்து சோதனைக்குழாயில் கருவூட்டம் செய்வதைப் பொறுத்தவரை அதற்கு அனுமதியுண்டு.
திருமணமான தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு இயல்பாக விரும்புவார்கள் என்ற நிலையில் ஏதேனும் உடல்ரீதியான பிரச்சினைகளால் அவள் கருவறையில் இயற்கையாக கருவுறுதல் நடைபெறுவதற்கு வாய்ப்பபில்லை எனும்போது இது அனுமதிக்கப்பட்டதுதான். ஏனெனில் இது மருத்துவ சிகிட்சையை சார்ந்ததாகும், அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسل மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு கூறியிருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم கூறினார்கள்.
تَدَاوَوْا فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يَضَعْ دَاءً إِلَّا وَضَعَ لَهُ دَوَاءً غَيْرَ دَاءٍ وَاحِدٍ الْهَرَمُ
”நீங்கள் மருத்துவம் செய்து கொள்ளளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் அஸ்ஸவஜல் நிச்சயமாக நிவாரணம் இல்லாத நிலையில் முதுமையைத்தவிர (மரணத்தைத் தவிர) எந்த நோயையும் விட்டுவிடவில்லை” (உஸப்மா இப்னு ஷுரைக்ரளியல்லாஹு அன்ஹு, அபூதாவூது)
எனினும் குழந்தைப்பேறுக்காக இந்தமுறையில் சிகிட்சை மேற்கொள்வதற்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு,
முதலாவதாக: சோதனைக்குழாயில் கருவூட்டுதல் மேற்கொள்வது சட்டரீதியான தம்பதிகளுக்குள் மட்டுமே நடைபெறவேண்டும்,
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم கூறினார்கள்,
لَا يَحِلُّ لِامْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يَسْقِيَ مَاءَهُ زَرْعَ غَيْرِهِ
”அல்லாஹ்வின் மீதும் மறுமைநாள் மீதும் ஈமான் கொண்ட எவருக்கும் மற்றவர்களின் பயிரில் நீர்ப்பாசனம் செய்வதற்கு அனுமதியில்லை” (ருவைஃபா இப்னு தாபித்(ரலி). அபூதாவூது)
ஆகவே ஒரு பெண்ணின் சினைமுட்டையை அவளுடைய சட்டரீதியான கணவனின் விந்தணுவைக் கொண்டு அல்லாது கருவூட்டம் செய்வதற்கு அனுமதியில்லை,
இரண்டாவதாக: சோதனைக்குழாயில் கருவூட்டம் செய்யப்பட்ட கருமுட்டைகள் மனைவியின் கருவறையில் மட்டுமே செலுத்தப்படவேண்டும் என்பதோடு மனைவி இந்த சிகிட்சையை மேற்கொள்ளும்போது கணவன் உயிருடன் இருக்கவேண்டும் என்பதும் கட்டாயமாகும், மேற்குநாடுகளில் நடைபெறுவதைப்போல கணவனின் இறப்புக்குப் பின்னர் இந்த சிகிட்சையை மேற்கொள்வதற்கு அனுமதியில்லை, மேற்குநாடுகளின் மக்களைப் பொறுத்தவரை ஒரு பெண் குழந்தையை விரும்பும்போது கணவன் உயிருடன் இல்லாதபோதும் கருமுட்டையை கருவறையில் செலுத்திக் கொண்டு குழந்தை பெற்றுகொள்வதில் எந்த தீங்கும் இல்லையென்று கருதுகிறார்கள்.
ஆனால் இஸ்லாத்தில் இதற்கு அனுமதியில்லை, ஏனெனில் கணவன் உயிருடன் இல்லாத நிலையில் மனைவி கர்ப்பம் அடைந்தால் பிறகு அவள் பெரும்பாவம் புரிந்தவர்களில் ஆகிவிடுவாள், உமர்ரளியல்லாஹு அன்ஹு மற்றும் அலீரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் அறிவித்துள்ள ஹதீஸில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது, இந்த ஹதீள்ஸ அவர்கள் அறிவித்தபோது ஸஹாபாக்கள் எவரும் அதற்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை, இவ்விருவரும் அறிவித்தது அல்லாஹ்வின்தூதர்صلى الله عليه وسلمகூறியதற்கு முரண்பாடாக இருந்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாக மற்ற ஸஹாபாக்கள் இதற்கு மறுப்பு தெரிவித்திருப்பார்கள்.
இதனடிப்படையில் இது ஸஹாபாக்களின் ஒருமித்த முடிவாக இருக்கிறது,எனவே கணவன் இல்லாத நிலையில் மனைவி கர்ப்பம் அடைதல் என்பது விபச்சாரம் புரிந்ததற்கு ஆதாரமாக கொள்ளப்படுகிறது, (கணவனல்லாத) அந்நிய ஆணுடன் உடலுறவு கொண்டதன் விளைவாக கர்ப்பம் ஏற்படும் பட்சத்தில் அந்த செயல் தண்டனை சட்டங்களுக்குஉட்படக்கூடியது, இதே அடிப்படையில் கர்ப்பம் அடைதல் உடலுறவு கொள்ளாத நிலையில் ஏற்பட்டாலும் அதாவது கணவன் இறந்துவிட்ட நிலையில் சோதனைக்குழாயில் கருவூட்டம் செய்யப்பட்ட கருமுட்டையை கருவறையில் செலுத்திக் கொள்வதன் மூலம் மனைவிக்கு கர்ப்பம் ஏற்பட்டாலும் அது தடுக்கப்பட்ட செயல்களில் உள்ள தண்டனைக்குரிய குற்றமாகும்,
இதனடிப்படையில் சட்டரீதியான கணவன் உயிரோடு இருக்கும் நிலையில் மனைவியின் கருவறைக்கு வெளியே சோதனைக்குழாயில் கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் இந்திரியங்களை(விந்தணு மற்னும் சினைமுட்டை) இணைத்து கருவூட்டம் ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியுண்டு,
2. உபரியாக கருமுட்டைகளை உறைநிலையில் வைத்திருப்பதைப் பொறுத்தவரை முதல் முயற்சி தோல்வியுறும்போது மறுபடியும் அதே முயற்சியை மேற்காள்வதற்காக அவை உறைநிலையில் பாதுகாத்து வைக்கப்படுகின்றன, இவ்வாறு இருக்கும் நிலையில் உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் அதே பெண்ணுக்கும் அவளுடைய சட்டரீதியான கணவனுக்கும் உரியதாக இருக்கவேண்டும், இதில் உயிரணுக்களில் கலப்படம் நிகழவில்லை என்பதை நிச்சயமாக உறுதிப்படுத்திக் கொண்டால் பிறகு அவற்றை பயன்படுத்துவதற்கு அனுமதி உண்டு, ஆனால் இச்சமயத்ததில் அவள் கணவன் உயிருடன் இருக்கவேண்டும் என்பது நிபந்தனையாகும்,
எனினும் செய்தி ஊடகங்களின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் சட்டரீதியான தம்பதிகளின் சினைமுட்டை மற்றும் விந்தணு ஆகியவற்றில் கலப்படம் நிகழ்கிறது என்பது திட்டவட்டமாக உறுதி செய்யபட்டிருக்கிறது, இவ்வாறு நிகழும்போது சோதனைக்குழாய் முறையில் பிறக்கும் குழந்தையின் தாய் தந்தை மரபுவழி குறித்து சந்தேகம் ஏற்படுவதால் அந்த குழந்தையின் வாழ்வு கேள்விக்குறி ஆகிவிடுகிறது. இது மனிதகுலத்தை அழிவுக்கு இட்டுச்செல்லும் மிகப்பாவமான செயலாகும்.
அறிந்த நிலையிலோ அல்லது அறியாத நிலையிலோ முஸ்லிம்கள் இந்த இழிசெயலுக்கு உடந்தையாக இருந்துவிடக்கூடாது, ஆகவே சட்டரீதியான முஸ்லிம் தம்பதிகள் சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள சிகிச்சை மேற்கொள்ளும்போது கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ளவேண்டும்.
1, மனைவியின் சினைமுட்டையை உயிருடன் இருக்கும் கணவனின் விந்தணுவோடு இணைத்து கருவூட்டம் செய்யும்போது முறையான கவனம் எடுத்துக் கொள்ளப்படவேண்டும், மனைவியின் கருவறைக்குள் கருமுட்டை செலுத்தப்படும்போதும் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும்போதும் நிகழ்வுகளை எச்சரிக்கையாக கண்காணித்து வரவேண்டும்.
2, உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையை கையாள வேண்டும், அவைகள் எந்தவிதமான கலப்படத்திற்கும் உட்படுத்தப்படாமலும் மற்றவர்கள் அதை பயன்படுத்துவதற்கு எந்த முகாந்திரத்திற்கு இடம் கொடுக்காமலும் அவை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும், இந்தமுறையில் கருமுட்டைகளுக்கு மத்தியில் கலப்படம் நிகழ்கிறது என்ற அறிவிப்பின் அடிப்படையில் அவ்வாறு நிகழாமல் இருப்பதற்கு மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.
3, கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டை கருவாக வளர்ச்சியடைந்து கர்ப்பம் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டால் உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் அனைத்தும் உடணடியாக அழிக்கப்படவேண்டும், அவைகளை அந்நியர்கள் பயன்படுத்தும் விதத்திலோ அல்லது அந்நியர்களுக்கு விற்பனை செய்யப்படும் விதத்திலோ எதுவும் நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும், எனினும் இதை கண்கூடாக அறிந்துகொள்வதற்கு வழிமுறை எதுவும் இல்லை என்பதுதான் உண்மை நிலையாகும், உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் என்ற இந்த நிபந்தனை முறையாக நிறைவேற்றப்பட்டதா என்பதை திட்டவட்டமாக உறுதிசெய்ய முடியாதவகையில் இந்தவிஷயம் வெறும் யூகமாவே இப்போது இருந்துவருகிறது.
الوسيلة إلى الحرام حرام
”ஹராமான செயலை செய்வதற்கு ஏதுவாக இருக்கும் அனைத்து சாதனங்களும் ”ஹராமானவையே” என்ற ஷரியா விதிமுறையின் அடிப்படையில் ஹராம் நிகழ்வதற்கு சிறிய வாய்ப்பு கூட இருக்குமானால் பிறகு இந்த சிகிச்சைமுறை ஹராமாகிவிடும், உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள உபரியான கருமுட்டைகள் அந்நியர்களுக்கு விற்பனை செய்யப்படும்போதும் அறிந்த நிலையிலோ அல்லது அறியாத நிலையிலோ அவற்றில் கலப்படம் நிகழும்போதும் அது ஹராமாகிவிடுகிறது, மரபுவழியில் பரிசுத்தத்தை பாதுகாப்பது கட்டாய கடமை என்று இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது,
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم கூறினார்கள்,
من انتسب إلى غير أبيه، أو تولى غير مواليه، فعليه لعنة الله والملائكة والناس أجمعين
”தனது தந்தையை அல்லாமல் மற்றொருவரிடம் பிறப்புரிமையை கோருபவர் மீதும் தனது பாதுகாவலரை அல்லாமல் மற்றவரிடம் பாதுகாப்புரிமையை கோருபவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும் மலக்குகளின் சாபமும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்” (இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, இப்னுமாஜா)
”லிஆன் – சாபமிடுதல்” தொடர்பான வசனம் அருளப்பட்ட தருணத்தில் அல்லாஹவின் தூதர் صلى الله عليه وسلم கூறினார்கள்,
أيَّما امرأة أدخلت على قوم نسباً ليس منهم فليست من الله في شيء، ولم يدخلها الله جنته
”எவளேனும் ஒருபெண் ஒருகூட்டத்தாருக்கு வாரிசாக இல்லாத சந்ததியை (அவர்களுக்கு உரியது என்று) அறிமுகப்படுத்துவாளாயின் அவளுக்கு அல்லாஹ்வுடன் எந்தவிதமான தொடர்பும் கிடையாது மேலும் அவன் அவளை சுவனத்தில் நுழைவிக்கமாட்டான்.” (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, திர்மிதி)
இதனடிப்படையில் சோதனைக்குழாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது உபரியாக கருமுட்டைகளை உறைநிலையில் வைத்திருப்பது ஹராமாகும், மனைவியின் கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டையைத் தவிர்த்து உபரியாக கருவூட்டம் செய்யப்பட்ட கருமுட்டைகள் அனைத்தும் உடனே அழிக்கப்பட வேண்டும். அவைகளை உறைநிலையில் வைப்பதற்கோ அல்லது மறுமுறை பயன்படுத்துவதற்கோ அனுமதி கிடையாது. கருவறையில் செலுத்தப்பட்ட முதல் கருமுட்டை செயலற்றுவிடுமாயின் பிறகு மனைவி மறுபடியும் அதே மருத்துவ சிகிச்சைக்கு உட்படவேண்டும், ஒவ்வொருமுறையும் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுவது மனைவிக்கு கஷ்டம் என்ற காரணத்திற்காக கருமுட்டைகளை உறைநிலையில் வைத்துக்கொள்வதற்கு அனுமதியில்லை ஏனெனில் இது குழந்தையின் தாய்தந்தை மரபுவழியில கலப்படம் ஏற்படுவதற்கு வழிவகுத்துவிடும்,
கருமுட்டைகளை உறைநிலையில் வைக்கும்முறை ஷரியாவின் அடிப்படையில் ஹராம் என்று கூறப்பட வேண்டுமானால் கருமுட்டையில் கலப்படம் ஏற்படும் என்ற சந்தேகம் மிகைத்து நிற்கவேண்டும் என்றும் ;ஆனால் இதில் சாதாரணமான சந்தேகம் நிலவுகிறதே தவிர உறுதியான சந்தேகம் நிலவவில்லை என்றும் சிகிட்சை அளிக்கும் மருத்துவநிலையம் நம்பிக்கைக்குரியதாக இருந்து செயல்முறைகள் உரிய கண்காணிப்புடனும் பாதுகாப்புடனும் நடத்தப்படுமாயின் இது அனுமதிக்கப்பட்டதாக இருக்கும் என்றும் ஒருவர் வாதிடலாம்.
முதல்தடவை கருவறையில் கருமுட்டை செலுத்தப்பட்டதற்கு பின்னர் உபரியாக உள்ள கருமுட்டைகளை மீண்டும் பயன்படுத்தாமல் முறையாக அழித்துவிடும் நம்பிக்கைக்குரிய மருத்துவ நிலையங்கள் இருக்குமானால் திரும்பத்திரும்ப மருத்துவ சிகிட்சைக்கு மனைவியை உட்படுத்தும் கஷ்டத்தை நீக்கும்வகையில் உபரியாக கருமுட்டைகளை உறைநிலையில் வைத்துக்கொள்வதற்கு அனுமதி உண்டா? என்ற கேள்வியைப் பொறுத்தவரை கீழ்கண்ட விளக்கம் அளிக்கப்படுகிறது:
ஷரியாவின் இந்த விதிமுறையை பிரயோகிப்பதற்கு சந்தேகம் உறுதியான முறையில் இருக்கவேண்டும் என்ற வாதம் சரியானதுதான், சிகிட்சை பெறும் மருத்துவ நிலையம் நம்பிக்கைக்கு உரியதாக இருக்கும் நிலையில் இத்தகைய உறுதியான சந்தேகம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்பதும் உண்மைதான்.
கருமுட்டைகளில் கலப்படம் ஏற்படுவதற்கு அறவே வாய்ப்பில்லை என்றும் கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டை கருவாக வளர்ந்து முயற்சி வெற்றி பெற்றுவிட்ட பின்னர் உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் முறையாக அழிக்கப்பட்டுவிடும் என்றும் முழுமையான நம்பிக்கை இருக்கும்பட்சத்தில் இது அனுமதிக்கப்பட்டதுதான். எனினும் இது மிகவும் உணர்வுபூர்வமான விஷயமாக இருப்பதாலும் செய்தி ஊடகங்களின் ஆய்வறிக்கை திட்டவட்டமாக குற்றங்கள் நடப்பதை சுட்டிக்காட்டுகின்றன என்ற அடிப்படையிலும் இத்தகைய சிகிட்சைமுறையில் இடம்பெறும் இரண்டு நிலைகளை ஆய்வுசெய்யும்போது இதுபோன்ற நம்பிக்கைகள் நிச்சயமற்றவை என்பது உறுதியாகும்,
முதலாவதாக. கருவறையில் கருமுட்டை செலுத்தப்பட்டு அது கருவாக வளர்ச்சி அடைகிறதா இல்லையா என்பதை உறுதிசெய்வதற்கு காத்திருக்கும் காலகட்டத்தில் அனைவரின் கவனமும் கருவளர்ச்சியின் மீது நிலைத்திருக்குமே ஒழிய உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டை மீது கவனம் நிலைத்திருக்காது,
இரண்டாவதாக. கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டை கருவாக வளர்ச்சி அடைவது உறுதிசெய்யப்பட்ட பின்னர் உபரியாக உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் அனைத்தையும் அழிக்கும் செயல்முறை முறையான கண்காணிப்போடு நிறைவேற்றப்படவேண்டும், ஆனால் கருவுற்ற மனைவியோ அல்லது அவளது கணவனோ இவ்விஷயத்தில் உரிய கவனத்தையோ அல்லது முறையான அக்கறையையோ எடுத்துக்கொள்வதில்லை. அதிகப்பட்சமாக ”உபரியான கருமுட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதா?” என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு ”ஆம். அழிக்கப்பட்டுவிட்டன” என்ற பொதுவான பதிலை மருத்துவர்கள் தெரிவிப்பார்கள். இவ்வாறு இருக்கும் நிலையில் மருத்துவ நிலையங்கள் நம்பிக்கைக்கு உரியவை என்ற யூகத்தை வைத்துக்கொண்டு எவ்வாறு முழுமையாக திருப்தி கொள்ளமுடியும்?
எனவே சந்தேகம் மிகைக்கும்நிலை இடம்பெறாதபோதும் மேற்கண்ட ஷரியா விதிமுறையின் அடிப்படையில் இந்த செயல்முறை ஹராமாக இருக்கக்கூடாது என்பது அவசியமாகும், ஆனால் மிக நிச்சயமாக இது ”சந்தேகத்திற்குரியது” என்பதுதான் உண்மைநிலையாகும்.
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم கூறினார்கள்,
دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ
”சந்தேகத்திற்கு உரியவைகளை விட்டுவிட்டு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவைகளை எடுத்துக்கொள்ளுங்கள்” (ஹஸன் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, திர்மிதி)
முடிவுரை
இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத தம்பதிகள் சோதனைக்குழாய் மருத்துவமுறையில் மனைவியின் சினைமுட்டையோடு கணவனின் விந்தணுவை இணைத்து கருவறைக்கு வெளியே கருவூட்டம் செய்துகொள்வதன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியுண்டு,
கருவூட்டம் செய்யப்பட்ட கருமுட்டைகள் சோதனைக்குழாயிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு கருவறையில் செலுத்தப்பட்ட பின்னர் எஞ்சியுள்ள கருமுட்டைகள் அனைத்தும் வேறெந்த வகையிலும் பயன்படுத்துவதற்கு இடம் கொடுக்காத வகையில் உடனே அழிக்கப்படவேண்டியது கட்டாயமாகும்,
அல்லாஹ் سبحانه وتعالى வின் நாட்டப்படி முதல்முறை செலுத்தப்பட்ட கருமுட்டையின் மூலம் கர்ப்பம் தரிக்குமானால் நிச்சயமாக அந்த தம்பதிகள் அல்லாஹ் سبحانه وتعالى வுக்கு நன்றி செலுத்துவார்கள், ஒருவேளை அல்லாஹ் سبحانه وتعالى நாடி கருவறையில் செலுத்தப்பட்ட கருமுட்டை செயலற்றுப்போய் முயற்சி தோல்வியுறுமானால் அந்த தம்பதிகள் மறுமுறையும் இந்த மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளவேண்டுமே ஒழிய உபரியாக கருமுட்டைகளை உருவாக்கி அவற்றை உறைநிலையில் வைத்துக்கொள்வதற்கு ஒருபோதும் முயற்சிக்கக்கூடாது,
சட்டரீதியாக திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் சினைமுட்டை மற்றும் விந்தணு ஆகியவற்றை கருவறைக்கு வெளியே வைத்து கருவூட்டம் செய்துகொள்வதற்கு அனுமதியுண்டு ஆனால் இதை கணவன் உயிரோடு இருக்கும்போது மட்டுமே மேற்கொள்ளமுடியும்,
source: http://sindhanai.org/?p=216