கேள்வி: சில அறிவியல் ஆய்வுகள் முன்பு பேச்சளவில் மட்டும் இருந்துவந்த நிலைமாறி இப்போது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டு விட்டதால் எதார்த்த வாழ்க்கையில் அவற்றை மக்கள் செயல்படுத்த துவங்கிவிட்டார்கள், இவற்றில் உறைநிலையில் மனிதக்கருவை வைத்தல் மற்றும் குழந்தையின் பாலினத்தை (ஆணா அல்லது பெண்ணா என்று) நிர்ணயித்தல் ஆகியவை அடங்கும், மேற்கு நாடுகளில் இது சாதாரன விஷயமாகிவிட்ட நிலையில் இப்போது முஸ்லிம் நாடுகளில் நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது, இந்த ஆய்வுகள் இப்போது சோதனைக் கட்டத்தையும் ஆராய்ச்சி நிலைகளையும் தாண்டி பல முஸ்லிம் நாடுகளில் மக்களால் செயல்படுத்தப்பட்டு வருக்கிறது, ஆகவே இந்த விஷயம் தொடர்பான ஹுகும் ஷரியா என்னவென்று விளக்கிக் கூறுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக!
பதில்: இந்த கேள்விக்கு விடையளிப்பதற்கு முன்பாக சில உண்மைகளை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும், அல்லாஹ் سبحانه وتعالى மனித இனத்தை படைத்து மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறான், மேலும் மனிதனிடத்திலும் இந்த பிரபஞ்சத்திலும் குறிப்பிட்ட இயல்புகளையும். நியதிகளையும். அளவுகோல்களையும் பண்புகளையும் அல்லாஹ் سبحانه وتعالى படைத்து நிர்ணயித்திருக்கிறான், இதன் காரணமாக மனிதன் ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளக் கூடியவனாகவும்; அதன் மூலமாக அறிவியல் ஞானத்தை பெற்றுக் கொள்ளக் கூடியவனாகவும்; ஒட்டுமொத்த மனித குலத்தின் நலனுக்காக அவற்றை பயன்படுத்தக் கூடியவனாகவும் இருக்கிறான்.
இத்தகைய பயனுள்ள அறிவையும் அதனை மனிதர்களுக்கு எடுத்துக்கூறி விளக்குபவர்களையும் அல்லாஹ் سبحانه وتعالى புகழ்ந்து கூறியிருக்கிறான், ஏனெனில் இத்தகைய அறிஞர்கள்தான் அல்லாஹ் سبحانه وتعالى இருப்பதை ஆழமாக அறிந்து அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கக் கூடியவர்கள், இந்த பிரபஞ்சத்தையும் மனித வாழ்வையும் ஆய்வுசெய்து அதன் இரகசியங்களை விளங்கிக்கொள்வதன் மூலமாக அவற்றின் படைப்பாளனின் மகத்துவத்திற்கும் அவனுடைய எல்லையற்ற ஆற்றலுக்கும் அவனுடைய மகத்தான ஞானத்திற்கும் இவர்கள் உறுதியான சாட்சிகளாக விளங்குகிறார்கள்.
அல்லாஹ் سبحانه وتعالى கூறுகிறான்:
إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
”அவனுடைய அடியார்களிலெல்லாம் அவனை அஞ்சி நடப்பவர்கள் அறிவுடையோர்தான்” (அல் ஃபாதிர் : 28)
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم கூறினார்கள்,
أن العلماء ورثة الأنبياء لم يورثوا دينارا ولا درهما . إنما ورثوا العلم . فمن أخذه أخذ بحظ وافر
”(உலமாக்கள் எனப்படும்) அறிவுடையோர்தான் இறைத்தூதர்களின் வாரிசுகள் ஆவார்கள், தீனாரையோ அல்லது திர்ஹத்தையோ (தங்கத்தையோ அல்லது வெள்ளியையோ) இறைத்தூதர்கள் வாரிசுரிமையாக விட்டுச் செல்லவில்லை, அவர்கள் விட்டுச் சென்றதெல்லாம் அறிவுதான்! அதை எடுத்துக் கொள்பவர் விசாலமான வாய்ப்புகளை பெற்றவர் ஆவார்” (அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு. இப்னுமாஜா)
எனினும். ஷைத்தானும் அவனை பின்பற்றுபவர்களும் நிராகரிப்பவர்களும் இத்தகைய அறிவை தவறாக பயன்படுத்தி மனிதர்களுக்கு பல தீங்குகளை ஏற்படுத்துவதுடன் மனித இனத்திற்கு பெரும் களங்கத்தையும் ஏற்படுத்துகிறார்கள். மேலும் மனிதர்களை வழிகெடுத்து நேர்வழியிலிருந்து விலகிப்போகும்படி செய்கிறார்கள், அறிவியல் நுட்பங்களை சரியான வழியில் பிரயோகிப்பதை விடுத்து தவறானவழியில் பிரயோகிக்க தூண்டுகிறார்கள்.
இவ்வாறாக குளோனிங் முறையை கையாளுதல். ஆண்விந்தணுவையும்பெண்சினை முட்டையையும் இணைத்து கருவூட்டம் செய்து அந்த கருமுட்டைகளை உறைநிலையில் வைத்து மற்றவர்களுக்கு அதை விற்பனை செய்தல். இறந்த உடல்களை அறுத்து பரிசோதனை மேற்கொள்ளுதல். பிறகு அந்த உடல்களிலிருந்து உறுப்புகளை அகற்றி அவற்றை விற்பனை செய்தல். இதற்கும் மேலாக உயிரோடு இருக்கும் மனிதர்களை கடத்திச்சென்று அவர்களை கொலைசெய்து பிறகு அவர்களின் உடல் உறுப்புகளை எடுத்து விற்பனை செய்தல் ஆகிய பாவச்செயல்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
கருவுற்ற சினைமுட்டைகள் மற்றும் கருவிலுள்ள சிசுக்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் இத்தகைய சோதனைகளில் அவற்றை உறைநிலையில் வைத்து அந்த சிசுக்களின் வாழ்வை விருப்பம்போல் தவறாக பயன்படுத்துவதற்காக அவற்றின் உறுப்புகளை பிரித்தெடுத்தல் போன்ற பாவச்செயல்களை அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரிலும் மருத்துவ பரிசோதனை என்ற பெயரிலும் கட்டுப்பாடின்றி நிகழ்த்தி வருகிறார்கள்,
அல்லாஹ் سبحانه وتعالى கூறுகிறான்:
وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آَدَمَ
”நிச்சயமாக! ஆதமுடைய சந்ததியினரை நாம் கண்ணியப்படுத்தி இருக்கின்றோம்.” (அல்இஸ்ரா : 70)
அல்லாஹ் سبحانه وتعالى மனிதர்களுக்கு அருட்கொடையாக வழங்கியுள்ள இந்த கண்ணியத்தின் விளைவாகத்தான் உண்மையான அறிவாற்றல் அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. மேலும் இந்த கண்ணியத்தின் விளைவாகத்தான் மற்ற படைப்பினங்களிலிருந்து தனித்துவம் கொண்ட சிறந்த படைப்பாக மனிதன் உருவெடுத்திருக்கிறான், இதன் மூலமாக மனிதன் அருள்பெற்றவனாகவும் மனநிறைவு கொண்டவனாகவும் ஆகலாம்.
மேலும் இதன் மூலமாக அவனுடைய உலக வாழ்க்கையையும் அறிவார்ந்த நிலையையும் உயர்த்திக் கொள்ள்ளலாம், ஆனால் தீயவர்களாகவும் களங்கமுற்ற சிந்தனை உடையவர்களாகவும் இருக்கும் சில அறிவியல் அறிஞர்கள் இந்த அறிவியல் அறிவைக் கொண்டு மனித இனத்தை வழிகெடுத்து அதை தாழ்ந்த நிலையிலுள்ள விலங்குகள் நிலைக்கு இட்டுச்செல்லவும் மனிதனை தீய ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தி மனித குலத்தை பாவத்திற்கும் அழிவிற்கும் உட்படுத்தவும் துணிந்துவிட்டார்கள்.
மேற்கூறப்பட்ட கேள்விக்கு இப்போது விடை காண்போம்:
கருவை உறைநிலையில் வைத்தல்குறிப்பிட்ட சில நோய்களின் காரணமாக மனைவியின் சினைமுட்டையோடு கணவனின் விந்தணு இணைந்து கருவுறுதல் நடைபெற்று இயற்கையாக கர்ப்பம் தரிக்க இயலாத நிலை சில தம்பதிகளுக்கு நேரிடுகிறது என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது, பெண்ணின் சினைக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு. சினைப்பையின் இயக்கத்திறன் குறைவு. கருப்பையின் பலவீனம். அல்லது ஆணின் விந்தணுவின் எண்ணிக்கை குறைவு மற்றும் விந்தணுவின் இயக்கத்திறன் குறைவு ஆகிய காரணங்களினால் இயற்கையாக ஒரு பெண் கர்ப்பம் தரிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
ஆகவே மகப்பேறு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பெண்ணின் கருவறைக்கு வெளியே தகுந்த சூழலில் ஒரு சோதனைக்குழாயில்மனைவியின் சினைமுட்டையைகணவனின் விந்தணுவோடு இணைத்து கருவூட்டம்செய்யும் முயற்சியின் மூலமாக மகப்போறு அற்ற நிலையிலிருக்கும் பெண்ணுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது, குளோமிட்எனப்படும் மருத்துவமுறை மூலமாக ஒரு பெண்ணின் சினைமுட்டையை அவளுடைய சினைப்பையிலிருந்து என்டோஸ்கோப்பிஎனப்படும் சிகிச்சைமுறையின் வாயிலாக சரியான தருணத்தில் பிரித்தெடுத்து ஒரு கடினத்தன்மை கொண்ட தட்டில் வைத்து பின்னர் ஒரு சோதனைக்குழாயில் அதை அவளுடைய கணவனின் விந்தணுவுடன் இணைத்து கருவூட்டம் செய்கிறார்கள்.
பிறகு கருவுற்ற அந்த கருமுட்டையை பெண்ணின் கருவறைக்குள் செலுத்துகிறார்கள். அல்லாஹ் سبحانه وتعالى நாடினால் அது குழந்தையாக வளர்ச்சி அடைகிறது. அல்லது அல்லாஹ் سبحانه وتعالى நாடினால் அது செயலற்று இறந்துவிடுகிறது. பின்னர் இயற்கையாக அது கருவறையில் அழிக்கப்பட்டுவிடுகிறது, இத்தகைய மருத்துவ சிகிச்சையை அந்தப் பெண்ணும் அவளது கணவனும் தெரிவுசெய்யும் சிறப்பு மருத்துவ நிபுணர் மேற்கொள்கிறார்,
சில சந்தர்ப்பங்களில் கருவின் இறப்புவிகிதம் 90 சதவீதம் அளவுக்கு இருப்பதாலும் தம்பதிகள் குழந்தைப்பேறுக்காக ஏக்கம் கொள்வதாலும் அவர்கள் இந்த சிகிச்சையை திரும்பத் திரும்ப மேற்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள விழைகிறார்கள், பெண்ணுக்கு இது ஒரு கஷ்டமான மருத்துவ சிகிச்சை என்பதால் அவளிடமிருந்து அதிக எண்ணிக்கையில் சினைமுட்டைகளை பெறுவதற்காக குறிப்பிட்ட மருந்துகள் அவள் உடலில் செலுத்தப்படுகின்றன.
சோதனைக்குழாயில் பெண்ணின் சினைமுட்டைகளை கருவூட்டம் செய்யும் செயல்முறையில் முழுவெற்றிக்கு உத்திரவாதம் இல்லை என்ற காரணத்தால் ஒரு சினைமுட்டை கருவூட்டம் பெறாதபோது மற்றொன்றை உபயோகப்படுத்தும் விதமாக சில சினைமுட்டைகளையாவது பெண்ணிடமிருந்து எடுப்பது அவசியமாக இருக்கிறது, இவ்வாறு எடுக்கப்பட்ட சினைமுட்டைகளை கருவூட்டம் செய்து அவற்றை இருப்பில் வைத்துக் கொண்டு அதில் ஒன்றை பெண்ணின் கருவறையில் செலுத்துகிறார்கள். அதை கருவறை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் மற்றொன்றை செலுத்துகிறார்கள். இவ்வாறு இந்த முயற்சி சிலமுறை மேற்கொள்ளப்படுகிறது,
கருவூட்டம் பெற்ற கருமுட்டை ஒரு தனிப்பட்ட கருவியின் துணைகொண்டு பெண்ணின் கருவறையில் செலுத்தப்படுகிறது, வெற்றிவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தோடு பொதுவாக மூன்று கருமுட்டைகள் கருவறையில் செலுத்தப்படுவதற்கு தயார்நிலையில் வைக்கப்படுகின்றன, ஒருமுட்டை கருவாக வளர்ச்சி அடைவதில் தோல்வி ஏற்படும்போது மற்றொன்று பயன்படுத்தப்படுகிறது.
சோதனைக்குழாயில் கருவூட்டம் ஏற்படுத்தும் இந்த முறையில் ஒரே தடவையில் முயற்சி வெற்றிபெற்று கருமுட்டை கருவாக வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்ற காரணத்தாலும் ஒவ்வொரு முறையும் என்டோஸ்கோப்பி மூலம் சினைமுட்டையை பிரித்தெடுப்பது அந்தப்பெண்ணுக்கு மிகுந்த கஷடத்தை ஏற்படுத்தக்கூடியது என்ற காரணத்தாலும் குறிப்பிட்ட மருந்துகளை அவள் உடலில் செலுத்தி அதன்மூலம் அதிக எண்ணிக்கையில் சினைமுட்டைகள் அவளிடமிருந்து பெறுகிறார்கள். இதன்மூலம் அடிக்கடி மருத்துவ சிகிச்சைக்கு உட்படும் கஷடத்திலிருந்து அவள் காக்கப்படுகிறாள்.
எனினும் கருவறையில் செலுத்தப்பட்ட முதல் கருமுட்டை வளர்ச்சி அடையும் நிலையோ அல்லது செயலற்றுப் போகும் நிலையோ உடணடியாக ஏற்படாது. உண்மையில் பலமணி நேரத்திற்குப் பின்னரோ அல்லது சில நாட்களுக்குப் பின்னரோதான் அதுபற்றி கண்டறியமுடியும், இந்த காலகட்டத்தில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள உபரியான கருமுட்டைகளை தகுந்த சூழலில் சரியான வெப்பத்தில் இருக்கும்படியாக உறைநிலையில் பாதுகாத்து வைக்கவில்லை எனில் அவை இறந்துவிடும். ஆகவே இந்த உபரியான கருமுட்டைகள் திரவநிலை நைட்ரஜைன்எனும் திரவத்தில் உறைநிலையில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. தேவைப்படும்போது பின்னர் அவை உபயோகப்படுத்தப்படுகின்றன.
இவ்வாறுதான் கருவூட்டம் பெற்ற கருமுட்டைகளை உறைநிலையில் வைத்து பாதுகாக்கும் வழிமுறை ஏற்பட்டது, பலமுறை பெண்ணிடமிருந்து சினைமுட்டைகளை பிரித்தெடுக்கும் கஷ்டத்தை நீக்குவதற்காகவும் பலமுறை அதற்காக மருத்துவ சிகிட்சை பெறும் சிரமத்தை குறைப்பதற்காகவும் ஒரே சமயத்தில் பெண்ணிடமிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட சினைமுட்டைகள் பெறப்பட்டு கருவூட்டம் செய்யப்படுகின்றன, கருவூட்டம் பெற்ற கருமுட்டைகளில் ஒன்று கருவறைக்குள் செலுத்தப்பட்டதற்கு பின்னர் முயற்சி தோல்வியுறும் பட்சத்தில் மறுமுறை இதே சிகிச்சையை மேற்கொள்வதற்கு ஏதுவாக உபரியாக உள்ள கருமுட்டைகள் உறைநிலையில் பாதுகாத்து வைக்கப்படுகின்றன.
இருந்தபோதிலும் முயற்சி வெற்றி பெற்று மருத்துவ சிகிட்சை முடிவுற்ற பின்னர் உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள கருமுட்டைகள் வர்த்தக பொருளாக ஆக்கப்படுகின்றன, குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் இந்த தீயசெயல் சாதாரணமாக நடந்துவருகின்றன, நீண்ட காலத்திற்கு அல்லது சில தருணங்களில் ஒரு வருட காலத்திற்குக்கூட கருமுட்டைகள் உறைநிலையில் வைக்கப்பட்டு எந்த பெண்ணிடமிருந்து எடுக்கப்பட்டதோ அந்த பெண்ணிற்கு செலுத்தப்படாமல் மற்ற தம்பதிகளுக்கோ அல்லது திருமணம் ஆகாத பெண்ணிற்கோ விற்பனை செய்யப்படுகின்றன.
இத்தகைய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் உறைநிலைக் கருக்களின் சேமிப்பு வங்கிகளாக செயல்படுகின்றன, செய்தி ஊடகங்களின் ஆய்வறிக்கை அடிப்படையில் வெவ்வேறு பெண்களிடமிருந்து எடுக்கப்படும் சினைமுட்டைகள் வேறுபாடின்றி வெவ்வேறு ஆண்களின் விந்தணுவோடு இணைத்து கருவூட்டம் செய்யப்படுகின்றன, முதல் தடவை கருமுட்டை செலுத்தப்பட்டு முயற்சி தோல்வியடைந்த மற்ற பெண்களுக்கு இத்தகைய அந்நிய கருமுட்டைகள் செலுத்தப்படுகின்றன, இவ்வாறு இவர்கள் பிறக்கப்போகும் குழந்தையின் தாய்தந்தை மரபுவழியை தவறாக மாற்றியமைத்து சந்ததிகளின் மரபுவழி சீர்முறையை திரித்து மனித இனத்தை வழிகேட்டில் ஆழ்த்துகிறார்கள்!
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்