Zacky Ismail
[ இஸ்லாமிய சட்டம் திருமணத்தின் மூலமாக தம்பதிகள் இருவர்க்கிடையிலும் சம வாய்ப்பினையும், சுதந்திரத்தினையும், உயர் தராதரத்தினையும் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்ற அதேவேளை, விவாகரத்தினையும் அனுமதித்துள்ளது. ஆனாலும் இஸ்லாம் அனுமதித்துள்ள விடயங்களுள் மிகவும் வெறுக்கத்தக்கதாகவே அதனை கருதுகின்றது
இஸ்லாம் பெண்களது நலன் பற்றி அதிக அக்கரையுடன் செயற்படுகின்றது. அவளது பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துவதன் மூலமாக சம வாய்ப்பினை வழங்குகின்றது. இங்கு கணவனுடன் ஏற்பட்ட பிணக்கினை தீர்த்துக்கொள்ள தன்னுடைய மத்தியஸ்தரை கணவனுக்கெதிராக முன்னிலைப்படுத்துவது அக்குடும்ப சச்சரவினை முடிவுறுத்திக் கொள்ளுதற்கு மிகவும் உன்னதமானதும், குறிப்பிடக்கூடியதுமான செயற்பாடாகும்.
விவாகரத்து என்பதனை இஸ்லாமிய சட்டம் இறைவிசுவாசத்தினதும், கடமைப்பாட்டினதும் நடைமுறைக்கு மாற்றமானதாக வலியுறுத்துகின்றது. அத்தோடு விவாகரத்து பெறுவதற்கான உதவிக்கு அழைக்கும் செயற்பாட்டினை முற்றாக தடைசெய்துள்ளதனையும் நாம் அவதானிக்க முடிகின்றது. மேலாக, தனது மனைவி மீது அவதூறுகளை கூறுவதனையும் அவளுக்கு அளிக்கப்பட்டவைகளை மீண்டும் பெற்றுக்கொள்வதனையும் இஸ்லாம் தடைசெய்கின்றது. இவை ஒழுக்கமற்ற செயல்களாகும்.]
இஸ்லாமிய சட்டம் திருமணத்தினை ஒரு ஒப்பந்தமாக கருதுகின்றது. இதன் காரணமாக தம்பதிகள் இருவரினதும் சம்மதத்தின் வாயிலாக அதனை முடிவுறுத்திக்கொள்ளவும் அனுமதியளிக்கின்றது. பொதுவான சட்ட நடைமுறைகளுக்கு மாற்றமாக இஸ்லாம் பெண்களுக்கும் விவாகரத்து கோருவதற்கான வாய்ப்பினை உரிமையளித்துள்ளது. ‘குல்உ’ எனும் விவாகரத்து முறைமையின் மூலமாக தன் திருமண ஒப்பந்தத்தினை முடிவுறுத்திக்கொள்ள ஒரு பெண் உரிமை பெற்றுள்ளாள்.
மகிழ்ச்சியுடன் உறவு நடாத்துகின்ற இருவர்க்கிடையில் அவ்வப்போது ஏற்படுகின்ற பிரச்சினைகள் தவிர்க்க முடியாததாக மாறுகின்ற வேளை, அவ்வுறவு வாழ்வில் பல பிரச்சினைகளை தோற்றுவித்துவிடுகின்றன. எவ்வாறாயினும் சில சந்தர்ப்பங்களில் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு அம்சமாக விவாகரத்து அமைந்துவிடுகின்றது.
எப்போதும் திருமணத்தினை முடிவுறுத்திக்கொள்ள முடியாத ஒரு விடயமாக கையாள்வது கடினமாகும். ஏனைய சமயங்கள் அதனை ஒரு புனிதத்துவமிக்க விடயமாக எப்போதும் கருதுவதனால் திருமணம் மிகவும் இறுக்கமானதாகவும், முடிவுறுத்திக்கொள்வதற்கு மிகவும் சாத்தியப்பாடுகள் இன்றியதாகவும் பிரயோகப்படுத்தப்படுகின்றது.
ஆனால் ஒரு ஒப்பந்தம் என்ற வகையில் முடிவுறுத்தப்படக்கூடிய அனைத்து வகை இயற்கயான அம்சங்களினையும் கொண்ட விடயப்பரபாக அது காணப்படுகின்றது. இன்று ஆண் ஆதிக்க சமூகத்தினரால் அடிக்கடி தவறாக பிரயோகிக்கப்படுகின்ற ஒரு விடயமாக விவாகரத்து முறைமை காணப்படுகின்றது.
காரணம், கணவன் மனைவி இருவருக்கிடையில் மீள் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் ஏனைய சமூக உறுப்பினர்களினால் உருமாற்றப்படுகின்றன. இவை அதிகமாக, மனித உரிமைகள் பற்றிய ஆர்வலர்களாக, நவீனத்துவ சிந்தனையின் இருப்பிடங்களாக தங்களை உருப்படுத்திக் கொண்டவர்களினாலேயே மேற்கொள்ளப்படுவது மிகவும் சிந்திக்கவேண்டிய ஒன்றாகும்.
இஸ்லாமிய சட்டம் திருமணத்தின் மூலமாக தம்பதிகள் இருவர்க்கிடையிலும் சம வாய்ப்பினையும், சுதந்திரத்தினையும், உயர் தராதரத்தினையும் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்ற அதேவேளை, விவாகரத்தினையும் அனுமதித்துள்ளது. ஆனாலும் இஸ்லாம் அனுமதித்துள்ள விடயங்களுள் மிகவும் வெறுக்கத்தக்கதாகவே அதனை கருதுகின்றது[1].
மேலும் அல்குர்ஆன் திருமணத்தினை ஒரு பலம் பொருந்திய உடன்படிக்கை (mithaq-i-ghaliz) ஒன்றாகவே எடுத்துரைக்கின்றது[2]. எனவே, விவாகரத்து என்பது சாதாரண விடயம் ஒன்றாக அன்றி அசாதாரண ஒரு நிகழ்வாகவே கருதப்படுகின்றது. அது சில வேறுபட்ட நிலைகளில் மாத்திரம் பிரயோகிக்கப்படவேண்டிய சிறப்புக்குரியதாகும். இஸ்லாம் அதனை எந்த ஒரு நிலையிலும் ஏற்படுத்திக்கொள்வதற்கான ஊக்கத்தினை அளித்திருக்கவில்லை.
இங்கு விவாகரத்து என்பதனை இஸ்லாமிய சட்டம் இறைவிசுவாசத்தினதும், கடமைப்பாட்டினதும் நடைமுறைக்கு மாற்றமானதாக வலியுறுத்துகின்றது. அத்தோடு விவாகரத்து பெறுவதற்கான உதவிக்கு அழைக்கும் செயற்பாட்டினை முற்றாக தடைசெய்துள்ளதனையும் நாம் அவதானிக்க முடிகின்றது[3]. மேலாக, தனது மனைவி மீது அவதூறுகளை கூறுவதனையும் அவளுக்கு அளிக்கப்பட்டவைகளை மீண்டும் பெற்றுக்கொள்வதனையும் இஸ்லாம் தடைசெய்கின்றது[4]. இவை ஒழுக்கமற்ற செயல்களாகும். இவ்வாறாக கணவன் மனைவிக்கிடையில் பிணக்குகள், பிளவுகள் ஏற்படும்வேளை மத்தியஷ்தர்களை நியமிக்குமாறும் இஸ்லாமிய சட்டம் தேவைப்படுத்துகின்றது[5].
இவ்வாறு நியமிக்கப்படும் மத்தியஸ்தர்களது பங்களிப்பு என்ன? இவ்வாறானவர்களது நியாயங்கள், தீர்மானங்கள் இரு திறத்தவர்களையும் பிணிக்குமா? அல்லது பரிந்துரைகளாக மாத்திரம் கருதப்படக்கூடியதா? ஏன ஆராய்வோமானால், இவை தொடர்பில் சட்டவியலாளர்களிடையில் வேறுபட்ட கருத்துக்களை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
இமாம் ஷாஃபிஈ அவர்கள் அவ்வாறானவர்களது தீர்மானம் பிணிக்கக் கூடியது எனக் கூறும் அதேவேளை, இமாம் அபூஹனீபா அவர்களது எண்ணம் இதற்கு மாற்றமாக காணப்படுகின்றது. இங்கு இமாம் ஷாஃபிஈ அவர்கள் தனது கருத்திற்கு ஆதாரமாக ஆட்சியாளராக திகழ்ந்த அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மத்தியஸ்தர்களது தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தியதனை எடுத்துக்காட்டுகின்றார்[6].
இக்குறித்த வசனம் விவாகரரத்து பற்றிய பிரச்சினை எழுகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை முறை பற்றி தெரிவிக்கின்றது. இது கணவன் தன் மனைவியினை புறந்தள்ளுவதற்கானதல்ல, அதனை தீர்மானிப்பது நீதிபதியின்பாற் பட்டதாகும்.
பொதுவாக விவாகரத்து பற்றின விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படக் கூடாது. பிணக்கிலுள்ள கணவனது தரப்பிலிருந்து ஒருவரையும், மனைவியினது தரப்பிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக நீதிபதி நியமிப்பது அவசியம். இவ்விரு மத்தியஸ்தர்களும் பிணக்கினது உண்மை நிலையினை கண்டறிய முயற்சிப்பார்கள். ஆனால் அவர்களினுடைய நோக்கம் கட்டாயமாக இரு தரப்பினரினையும் ஒன்று சேர்த்து சமாதானம் செய்வதாக அமைய வேண்டும்.
இங்கு ஒருங்கு சேர சமாதானப்படுத்துவதற்கான எல்லா நிலமைகளும் தோல்வியுறுமானால், விவாகரத்திற்கான அனுமதி இறுதியாக வழங்கப்படும். என்றாலும், விவாகரத்திற்கான இறுதி தீர்மானம் என்பது அதனை முன்மொழிய சட்ட ரீதியாக அனுமதி அளிக்கப்பட்ட நீதிபதியில் தங்கியுள்ள விடயமாகும்.[7]
இஸ்லாம் பெண்களது நலன் பற்றி அதிக அக்கரையுடன் செயற்படுகின்றது. அவளது பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துவதன் மூலமாக சம வாய்ப்பினை வழங்குகின்றது. இங்கு கணவனுடன் ஏற்பட்ட பிணக்கினை தீர்த்துக்கொள்ள தன்னுடைய மத்தியஸ்தரை கணவனுக்கெதிராக முன்னிலைப்படுத்துவது அக்குடும்ப சச்சரவினை முடிவுறுத்திக் கொள்ளுதற்கு மிகவும் உன்னதமானதும், குறிப்பிடக்கூடியதுமான செயற்பாடாகும்.
பெண்கள் எவரும் தமது குடும்ப நிலமை, அந்தஸ்து என்பதற்கு அப்பால் விவாகரத்து நடவடிக்கையில் பங்கு கொள்ளுதற்கு இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கின்றது. இதனால் பெண்கள் தமக்கான மத்தியஸ்த பிரதிநிதிகளை தெரிவது மட்டுமல்லாது தமது விவாகரத்து தொடர்பான செயல் முறையில் கூட பங்கு கொள்ள முடியும். இவ்வுரிமையை பிரயோகித்தலின் போது எதுவித சாதி, வகுப்பு, அந்துஸ்து என்ற அடிப்படையிலான தயவு தாட்சண்யங்களும் காட்ட முடியாது. இவ்வேற்பாடுகள் இஸ்லாமிய சட்ட முறைமையில் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். இவைகள் உருக்குலைக்கப்படுகின்ற வேளையிலேயே அதிகமான விவாகரத்துக்கள் அர்த்தமற்றவையாக, அநியாயமாக மாறிவிடுகின்றன.
விவாகரத்து என்பதற்கு இஸ்லாமிய சட்டத்தில் ‘தலாக்’ (Talaq) என்ற சொல் பிரயேகமாகின்றது. அராபிய இலக்கணத்தில் தலாக் என்பது பிரிக்கக்கூடிய (அவிழ்கக்கூடிய) கட்டு(சுருக்கு) அல்லது, விடுபாடுடைய உடன்படிக்கை எனப் பொருள்படுகின்றது. ‘தலாக்’; எனும் சொல்லானது ‘இத்லாக்’ எனும் அராபிய அடிச்சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். ‘வேறாக பிரிந்து செல்லல்’ அல்லது ‘திருமண ஒப்பந்தத்திலிருந்து பிரிந்து கொள்ளல்’ என்பன இதன் பொருளாகும். இதனால் ‘தலாக்’ என்பது ‘திருமணப் பிணைப்பில் இருந்து வெளியேறுதல்’, அல்லது ‘சுதந்திரமாதல்’ என கூறப்படுகின்றது. இத்லாக் என்றால் விட்டு செல்லல், கைவிடுதல் என பொருளாகின்றது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
[1] Imaam Hajar Al-Asqalani, Bulugul at-maram (Benaras,1982),p.312
[2] The Glorious Qur’an, Surat 04.An-Nisa, Verse No.21
[3] Ibid, Verse No.19
[4] Ibid, Verse No. 20-21
[5] Ibid Verse No.35
[6] Al- Razi, Al-tafsir-al-kabir (dar al-fikr, Beirut, 1981),vol.V,section x,p.96
[7] Mohammad Ali, the Holy Quran (Lahore, 1973), p.200.f.n.573
Posted by : Zacky Ismail, Student of Comparative and Conflict law. Undergraduate, Faculty of Law. University of Colombo. Sri Lanka
source: muslman.blogspot.com