காட்டுமிராண்டித்தனம்–கொதிக்க கொதிக்க காய்ச்சி… குழந்தைங்க மேல ஊத்தி… ‘வீல்‘ பாயசம்!
பக்தி என்ற பெயரில் உ.பி–யில் கடந்த 4-ம் தேதி நடந்த இந்த காட்டுமிராண்டித்தனம், வட இந்தியாவை அதிர வைத்துள்ளது!
உத்தரப் பிரதேசத்தின் தெய்வீக நகரமான காசி என்கிற வாரணாசியில்தான் அந்த கொடூரம். அன்றைய தினம் மதியம், நகரின் இதயப் பகுதியான சோக்கில் உள்ள அகர்சன் மஹாஜனி மஹா வித்தியாலயா எனும் கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தம் குடும்பத்தினருடன் கூடியிருந்தனர்.
கூட்டத்தின் நடுவே 18 அடுப்புகளை வரிசையாக மூட்டி அதன் மீது வைக்கப்பட்டிருந்த பானைகளில் அரிசி, சர்க்கரை மற்றும் பாலுடன் சேர்த்து பாயசம் கொதித்துக் கொண்டிருந்தது.
கொதி பானைகளுக்கு முன் ‘ஜய் ஷீத்லூ மாதா!’ என்றும் ‘ஷீத்லூ மாதா கி ஜய் ஹோ!’ என்றும் கோஷமிட்டார் நின்றிருந்த பூசாரி கோவிந்த் பகத். கூட்டத்தினர் அவருக்கு சாமந்திப்பூ மாலைகளை அணிவித்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு இருந்தனர். இதன் பேக்ரவுண்ட் மியூசிக்காக உடுக்கை மேளம் முழங்க… அதன் பிறகு,
அங்கு பார்ப்பவர் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் கொடூரம் அரங்கேறியது.
தன் 6 மாதப் பச்சிளங் குழந்தையை ஒரு தாய் பக்தியுடன் பூசாரியிடம் கொடுத்தார். அதை லாகவமாக வாங்கிய பூசாரி, தன் ஒரு கையின் இடுக்கில் வைத்துப் பிடிக்க… அந்தக் குழந்தையின் முகத்தில் பயம் பரவத் தொடங்கியது. மறு கையால் பானையில் கொதித்து வழிந்த பாயசத்தை கரண்டியால் எடுப்பதுபோல் தனது கையால் அள்ளினார்.
கொதிக்க, கொதிக்க பாயசத்தை அப்படியே அந்தக் குழந்தையின் மொட்டைத் தலையில் கொட்டித் தேய்த்தார். சூடு தாங்காமல் அந்தக் குழந்தை அலற… கூடியிருந்தவர்களோ ‘ஷீத்லூ மாதா கீ ஜெய்!’ என்ற கோஷம் போட அந்த பிஞ்சின் அலறல் அந்த கூச்சலுக்கு நடுவே வெறும் முனகல் போல அடங்கிப் போனது.
பூசாரி, மீண்டும் தனது கையாலேயே அடுத்த பானையில் கொதித்து வழிந்த சூடான பாயசத்தை அள்ளி, இந்த முறை அந்த குழந்தையின் உடலில் கொட்டித் தேய்த்தார். வீறிட்டுக் கதறியது அந்த சிசு… ஆனால், கூட்டத்தினர் அதைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. குழந்தையை பரம பக்தியுடன் திரும்பப் பெற்ற பெற்றோர், பூசாரியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.
அடுத்து வந்த மூன்று வயது குழந்தைக்கும் இந்த சூடான பாயச அபிஷேகம்! அது திமிறி ஓடாதபடி கெட்டியாக தன் கை இடுக்குகளில் பூசாரி பிடித்திருக்க… அந்த குழந்தை, சூடு தாளாமலும் மூச்சு முட்டியும் அலறி மயக்கமானது. அதன்பெற்றோர் முகம் கொள்ளாத சந்தோஷத்துடன் பூசாரியை வணங்கி குழந்தையைப் பெற்றுக்கொண்டனர். அப்போது, உச்ச தொனியில் மேளமும் முழங்க… பெற்றோரை உற்சாகப்படுத்தும் வகையில் கூட்டத்தினரும் பலத்த ஆராவரம் செய்தனர். இதன் பிறகு பூசாரி கைகளில் கொடுக்கப்பட்ட மற்றொரு பச்சைக் குழந்தைக்கு நடந்த பயங்கரம் விவரிக்க முடியாதது.
ஷீத்லூ மாதா கி ஜய் ஹோ!’ என்ற பூசாரி பகத், குழந்தையை பிறந்தமேனியாக படுக்க வைத்தார். பக்தியின் பேரால் நடக்கப் போகும் பயங்கரம் தெரியாமல் குழந்தையும் கூட்டத்தினரைப் பார்த்து சிரிக்க… கொதித்த பாயசத்துடன் பானையை எடுத்து தனது தோளில் வைத்துக்கொண்டார் பூசாரி. இதன் சூட்டின் தாக்கம் கொஞ்சம்கூட உணராதவர்போல குழந்தையை சுற்றி வலம் வரத் தொடங்கினார்.
நான்காவது ரவுண்டில் பானையில் இருந்த சூடான பாயசத்தைக் கொஞ்சமாக குழந்தையின் மீது சிந்தியவர் பிறகு தபதபவென கொட்டத் தொடங்கினார். மேளத்தின் சத்தம் மற்றும் கூட்டத்தினரின் கோஷம் என அந்தப் பகுதியே அதிர்ந்தது! அந்தக் குழந்தையின் அலறலும் எடுபடாமல் அடங்கியது.
ஏழு மாதக் குழந்தையின் துடிப்பைக் கண்டு, நடக்கும் கொடுமையைத் தடுக்க முயன்றவர்களை முரட்டுக் கூட்டம் ஒன்று பிடித்து தூர இழுத்துச் சென்று மிரட்டத் தொடங்கிவிட்டது!
இப்படியே பாதி பானையைக் காலி செய்த பூசாரி, மீதியை தன் தலையில் ஊற்றிக் கொண்டார். இப்படியே இன்னொரு பச்சிளங் குழந்தைக்கும் இன்னொரு பானை பாயசத்தைக் கொண்டு வந்து ஊற்றியவர், மறுபடி மீதியை தன் தலையில் ஊற்றிக் கொண்டார். ”பாயசம் பட்டு குழந்தைகள் அழுகிறதே தவிர அதன் சூடு கொஞ்சம்கூட அவர்களுக்கு இருக்காது. ஷீத்லூ மாதாவின் மகிமையால் சூட்டின் காயம்கூட ஏற்படாது. இப்படிச் செய்வதால் குழந்தை எந்த நோய், நொடியும் இன்றி நீண்ட காலம் வாழும். பெற்றோர் செய்த பாவமும் சட்டென விலகிவிடும். இந்த வாய்ப்பை நம் குழந்தைக்குக் கொடுத்த அந்த மாதாவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!” என இரு கரம் கூப்பி வணங்கியபடி பேசுகிறார் ஒரு குழந்தையின் தாயான காயத்ரிதேவி.
பூஜையை நடத்திய நிர்வாகிகளில் ஒருவரான யாதவ் ”இங்கிருப்பவர்கள் பெரும்பாலும் யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தங்கள் குலதெய்வமான ஷீத்லூ மாதா எனும் துர்கை அம்மனுக்காக பல வருடங்களாக நடத்தப்படும் பானை பூஜை இது. வருடந்தோறும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் இந்த பூஜை, உ.பி–யின் கிழக்குப் பகுதியில் பல இடங்களில் நடக்கும். இதே பூசாரிதான் அங்குபோய் இந்த பூஜையை நடத்துவார். அவர், இதற்காக பல வருடங்கள் தவம் இருந்து சிவனிடம் சக்தியைப் பெற்றுள்ளார். அவரது உடலில் நெருப்பையே அள்ளி கொட்டினாலும் அது அவரை ஒன்றும் செய்யாது!” என்கிறார்.
இந்நிலையில், பானை பூஜை குறித்த செய்தி அன்றைய தினம் மாலையே ஒரு இந்தி சேனலில் வெளியாக, போலீஸாரின் தூக்கம் கலைந்தது. உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கியவர்கள் ராம் நாராயண் யாதவ், தரம்சிங் யாதவ், பாபுலால் யாதவ், கிஷோரிலால் கோஸ்வாமி உட்பட எட்டு பேரை அள்ளிக்கொண்டு வந்தனர். சூடான பாயசத்தை சமாளிக்கத் தெரிந்த பூசாரி கோவிந்த் பகத், போலீஸாரின் நடவடிக்கையை சமாளிக்க பயந்துவிட்டார் போலிருக்கிறது. அவர் எங்கோ தலைமறைவாகிவிட, போலீஸ் இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறது. இவர்களுடன் சேர்த்து பெயர் தெரியாத 40 பேர் மீது ஐ.பி.சி. 312, 126 மற்றும் 120 ‘பி‘ ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்ப ட்டுள்ளது.
சிறைக்கு அனுப்பப்பட்டவர்களில் ஒரு லோக்கல் காங்கிரஸ் புள்ளியும் இருந்ததால், பிரச்னைக்கு அரசியல் உருவமும் கிடைத்தது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த வாரணாசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தயாசங்கர் மீது, குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுக்காமல் அதை ஊக்குவித்ததாக வழக்குப் பதிவானது. இதை எதிர்த்து வாரணாசியின் சுமார் 100 காங்கிரஸார் சோக் காவல் நிலையம் முன்பு கூடி அவரை விடுதலை செய்யும்படி கோஷமிட்டனர். உ.பி–யில் ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி உத்தரவின் பேரில் இந்த கைது நடைபெற்றுள்ளதாக புகார் கூறி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டவர்களை, போலீஸார் தடியடி நடத்தினர். கடைசி யில், வேறு வழியின்றி போலீ ஸுக்கு தயாசங்கரை மட்டும் ஜாமீனில்விட வேண்டி யதாயிற்று.
இது குறித்து உ.பி.யின் மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ”வழக்கமாக அந்தப் பூசாரி சூடான பாய சத்தை தன் மீது மட்டும் ஊற்றிக் கொள்வார். இத்துடன், கூட்டத்தின் நடுவே ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பூரி சுடுவார்கள். அந்த சூடான பூரியை ஜல்லிக்கரண்டி இல்லாமல், வெறுங்கையாலேயே எடுத்து அதை கூட்டத்தினரை நோக்கி வீசுவார் பூசாரி. அதைக் கூட்டத்தினர் போட்டி போட்டுப் பிடித்து பிரசாதம் என சாப்பிடுவார்கள்!” என்றார்.
இந்த வருடம்தான் புதிதாக பூஜை என்ற பெயரில் குழந்தைகள் மீது பாயசத்தை ஊற்றும் காட்டுமிராண்டித்தனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், கண்டிப்பாக அந்தக் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அதை வெளியில் சொல்லாமல் பெற்றோர்கள் வீட்டிலேயே ஏதாவது சிகிச்சை செய்திருப்பார்கள். அதுவும் இந்த பூஜை ஒரு காங்கிரஸ் தலைவர் தலைமையில் நடந்ததால்தான் இந்த நடவடிக்கை!” என விரக்தியுடன் பேசுகின்றனர்.
தர்ஹாவில் நடக்கும் சில பகீர்…
மகாராஷ் டிராவின் ஒளரங்காபாத்துக்கு அருகில் உள்ள ஒரு தர்ஹாவில் குழந்தைகளுக்கான பயங்கர சடங்கு நடக்கிறது. இங்கு வருடம் ஒரு முறை கூடும் முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளை சுமார் 20 அடி உயரம் உள்ள மாடியில் இருந்து கீழே போடுகிறார்கள். அலறலுடன் விழும் குழந்தைகளை ஒரு பெரிய தரை விரிப்பில் கச்சிதமாகப் பிடித்து விடுகிறார்கள்.
கரணம் தப்பினால் மரணம் எனும் இந்த முட்டாள்தனமான பக்தியில் அந்தப் பகுதியிலுள்ள முஸ்லிம்களுக்கு ஏகப்பட்ட பெருமை.
இதே மாநிலத்தின் சாங்லி மாவட்டத்தில் பாக்டே கிராமத்தில், ஒரு பழைமையான கோயில் உள்ளது. இதனுள்ளே இருக்கும் பெரிய கிணற்றில் குழந்தைகளை சிறு ஊஞ்சலில் கட்டி இரு பக்கமும் கயிற்றால் பிடித்துக் கொள்கிறார்கள். பிறகு அதை சுமார் 50 அடி ஆழத்துக்கு இறக்கி தண்ணீரைத் தொட்டுவிட்டு வரும்படி எடுக்கிறார்கள். அது பயங்கர அலறலுடன் தனியாகப் போய் வருகிறது.
இதைவிடக் கொடுமையானது, பீகாரின் கட்டியாரில் நடந்தது. இங்குள்ள ஜாகு பிரசாத் பாபா என்பவரிடம் நோய்வாய்பட்ட குழந்தைகள் கொண்டு வரப்படுகின்றன. அதை கீழே தரையில் போட்டு இரு கால்களையும் ஒரே சமயத்தில் அதன் மீது வைத்து ஏறி நிற்கிறார் பாபா. 60 வயது பாபாவின் 65 கிலோ எடையை சமாளிக்க முடியாமல் மூச்சு முட்டிக் கதறுகிறது குழந்தை.
ஆனால், இதைப் பார்த்து அந்தத் தாய் எந்த உணர்ச்சியும் இன்றி, குழந்தையின் நோய்கள் தீரும் என அமைதியாக பார்த்துக்கொண்டு நிற்கிறார். இந்த செய்தி டி.வி–யில் வெளியாக… தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் ஜாகு பிரசாத்.
இந்த விஷயத்தில் தென்னிந்தியா மட்டும் இளைத்ததல்ல.
கர்நாடகாவில் குழந்தைகளைக் கொதிக்கும் எண்ணெயில் போட்டு எடுத்ததாக செய்திகள் சமீபத்தில் வெளியானது. இங்கு மாடியிலிருந்து குழந்தைகளைப் போட்டு பெட்ஷீட்டில் பிடிக்கும் பயங்கரமும் ஒவ்வொரு வருடம் நடக்கிறது.
தமிழகத்திலும் குழந்தைகளை உயிருடன் புதைத்துவிட்டு மறுநிமிடம் தோண்டி எடுக்கும் ‘குழி மாற்றுத் திருவிழா‘ பல வருடங்களாக மதுரையில் நடந்து வந்தது. இது, அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் துரைராஜ் கலந்துகொள்ள வெளிச்சத்துக்கு வந்து வழக்குப் பதிவாகி பலர் கைது செய்யப்பட்டனர். அதனால், சில வருடங்களாக அந்தத் திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியிலும் குழந்தைகளை ஒரு மொத்தமான பைப்பில் கட்டி உயரத் தூக்கி மேலிருந்து கீழே போடும் ஆபத்தான சடங்கும் நடந்தது. இந்த மூட நம்பிக்கைக்கு முடிவு காண வேண்டியது 21 ஆம் நூற்றாண்டு மக்களின் கடமையல்லவா!
posted by: munaskhan