[ திருமணத்துக்கு முன்பே உடலுறவு கொள்ளும் இளைஞர்கள் யுவதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அவ்வப்போது பத்திரிகைகளில் “சிறப்புச் செய்திகள்” வருவது உண்டு.
இது ஏதோ சமுதாய அக்கறையில் வெளியிடப்படுவதாக யாரும் கருதிவிடக்கூடாது.
இந்தக் கட்டுரைகளே, அப்படி முறைதவறி நடக்க அஞ்சும் இளைய தலைமுறையை மனதளவில் தயார்படுத்த, பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் பணம் கொடுத்து எழுத வைக்கும் வியாபார உத்தி என்கிறார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள்.
சொல்ல நா கூசுகிறது என்றாலும் தனியார் தொலைக்காட்சிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இரவு நேர சிறப்புக் காட்சிகளும் “அந்த” தொழிலுக்கு வளம் சேர்க்கத்தான் என்பதே உண்மை.
வேசைத்தனமே இன்று காட்சி ஊடகங்களில் அப்பட்டமாக வெளிப்பட்டு நிற்கிறது.
எப்படியும் வாழலாம் என்கிற நிலைமை ஏற்பட்டால் அதன் முதல் பலி நீதித்துறையாகத்தான் இருக்கும் என்பதை நமது நீதிபதிகள் நினைவில் கொள்ள வேண்டும்!]
எப்படியும் வாழலாம்… அப்படியா !!!
வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதில் தவறு இல்லை, திருமணத்துக்கு முன்பே உடல் உறவில் ஈடுபடுவதில் தவறு இல்லை என்ற கருத்தை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்பட 3 நீதிபதிகள் தெரிவித்தபோது கோடிக்கணக்கான நெஞ்சங்கள் பதறின; இதை ஜாதி, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பெரியவர்கள் பலரின் குமுறலிலிருந்தும் கண்டனங்களிலிருந்தும் அறிய முடிகிறது.
அரசியல்வாதி ஒருவரால் சுட்டிக்காட்டப்பட்ட ஒரு விஷயம் அனைவராலும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.
ஒரு வீட்டில் விபசாரம் நடக்கிறது என்ற தகவல் கிடைத்து போலீஸ்காரர்கள் அவர்களைக் கைது செய்யச் சென்றால், “வயது வந்த நாங்கள் ஒரே இடத்தில் தனித்து இருப்பதும், உடல் உறவு கொள்வதும் சட்டப்படி செல்லத்தக்கதே” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துகளையே அவர்கள் திருப்பிச் சொன்னால் நடவடிக்கை எடுக்க முடியுமா?
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அதே அதிரடி பாணியில், “இங்கே வந்தீர்களே எங்கள் செய்கையால் உங்களுக்கு ஏதேனும் தனிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா, உங்கள் வீட்டில் யாராவது இதே போல நடந்துகொள்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா?” என்று கேட்டால் போலீஸ்காரர்களால் என்ன பதிலைக் கூற முடியும்?
அரசு வழக்கறிஞரைப் பார்த்து அந்த நீதிபதிகள் கேட்ட கேள்விகளை, அதே வழக்கறிஞர் மாற்றிக் கேட்டிருந்தால் நீதிபதிகளின் நிலை என்ன ஆகியிருக்கும்? உங்கள் மகனுக்கோ மகளுக்கோ வரன் பார்க்கும்போது, இப்படி திருமணத்துக்கு முன்னால் இன்னொருவருடன் சேர்ந்திருந்தால் பரவாயில்லை என்று திருமணம் செய்வீர்களா, உடலுறவு கொண்டிருந்தாலும் பரவாயில்லை என்று மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டிருந்தால்?
திருமணத்துக்கு முன்பே உடலுறவு கொள்ளும் இளைஞர்கள் யுவதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அவ்வப்போது பத்திரிகைகளில் “சிறப்புச் செய்திகள்” வருவது உண்டு. இது ஏதோ சமுதாய அக்கறையில் வெளியிடப்படுவதாக யாரும் கருதிவிடக்கூடாது. இந்தக் கட்டுரைகளே, அப்படி முறைதவறி நடக்க அஞ்சும் இளைய தலைமுறையை மனதளவில் தயார்படுத்த, பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் பணம் கொடுத்து எழுத வைக்கும் வியாபார உத்தி என்கிறார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள்.
கருத்தடை மாத்திரைகள், ஆண் உறை, பெண் உறை போன்ற சாதனங்கள் இவற்றின் விற்பனை மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் கடைவிரித்து இதற்காகவே செயல்படுகின்றன என்பது அப்பாவிகளான நம் நாட்டு மக்கள் அறியாத அப்பட்டமான உண்மை. தங்களுடைய “தொழிலுக்கு” உற்ற களத்தை பன்னாட்டு நிறுவனங்கள் தயார் செய்யத்தான் இந்தச் செய்திகளும் கட்டுரைகளும். சிவப்பழகி, கண் அழகி, கால் அழகி என்ற அழகிப் போட்டிகள் எல்லாம்கூட இந்த வியாபார உத்தியின் பிரிக்க முடியாத அங்கமே.
ஆங்கில வார இதழ்களிலும் மாநில மொழி வாரப் பத்திரிகைகளிலும் முறை வைத்துக் கொண்டு இப்படி அந்தரங்க விஷயங்களை ஏதோ அறிவியல்பூர்வமாக ஆய்ந்து எழுதுவதாக எழுத்து விபசாரம் செய்து இளைய தலைமுறையின் எதிர்காலத்தை மட்டுமல்ல, பாரதத் திருநாட்டின் வருங்காலத்தையும், தலைமுறை தலைமுறையாக நாம் கடைப்பிடித்து வந்த உயரிய பண்புகளையும் தகர்த்தெறியத் தலைப்படுகிறார்கள்.
கருத்தடை மாத்திரைகள், மோகத்தை அதிகப்படுத்தும் வீரிய சக்தி மாத்திரைகள், (லேகியங்கள்), உள்ளாடைகள், மாதவிடாய்க்கால சானிடரி நாப்கின்கள் போன்றவற்றின் விளம்பரங்களுக்காக மட்டும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவாகின்றன. வரவோ அவற்றைப் போல பல மடங்கு.
சொல்ல நா கூசுகிறது என்றாலும் தனியார் தொலைக்காட்சிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இரவு நேர சிறப்புக் காட்சிகளும் இந்தத் தொழிலுக்கு வளம் சேர்க்கத்தான் என்பதே உண்மை.
வேசைத்தனமே இன்று காட்சி ஊடகங்களில் அப்பட்டமாக வெளிப்பட்டு நிற்கிறது. இந்த நிலையில் நீதிபதிகளின் கருத்து நெஞ்சங்களில் தீயை வைத்துவிட்டது என்றால் மிகையில்லை.
பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்டோபஸ் வியாபாரப்பிடி மேலும் மேலும் இறுகுவதன் இன்னொரு அடையாளம்தான் இந்தத் தீர்ப்பு என்கிற குற்றச்சாட்டில் அர்த்தமே இல்லை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை…
எப்படியும் வாழலாம் என்கிற நிலைமை ஏற்பட்டால் அதன் முதல் பலி நீதித்துறையாகத்தான் இருக்கும் என்பதை நமது நீதிபதிகள் நினைவில் கொள்ள வேண்டும்!
நன்றி: தினமனி – 6.4.2010 தலையங்கம்