ஹார்மோன்களை ஆய்வு செய்து ஆணா? பெண்ணா? என்பதைக் கண்டறியும் முறையும் இருப்பதாக இன்றைய விஞ்ஞானம் உலகம் கூறிக் கொண்டிருக்கிறது. ஆன்ட்ரோஜன் (ஆன்ட்ரொகென்) என்ற ஆண்களுக்கான ஹார்மோன் கருவில் அதிமாக இருக்கும் போது அது ஆண் குழந்தை எனவும், ஈஸ்டோரஜன் (ஓஎச்டொர்கென்) என்ற பெண்களுக்கான ஹார்மோன் அதிமாக இருக்கும் போது அந்தக் கரு பெண் குழந்தை எனவும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் இந்த செயல் முறைச் சோதனை எப்போது சாத்தியமாகும் எனில் பாலுறுப்பு உண்டாகும் போதுதான். பாலுறுப்புகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும் முன்பு இந்த ஹார்மோன் சோதனையின் மூலம் தெரிந்து கொள்ள முடியாது என்பதை தயக்கமின்றி ஏற்றுக் கொள்கிறார்கள் மருத்துவ மேதைகள்.
காரணம், பாலுறுப்பு வெளிப்படும் முன்பு கருக் குழந்தையிடம் உள்ள ஹார்மோன்கள், ஆணுக்குரியது, பெண்ணுக்குரியது என வித்தியாசப்படுத்தியோ, வேறுபடுத்தியோ பார்க்க முடியாத விகிதத்தில்தான் இருக்கும்.
அப்போது இந்த ஆய்வு, கருவில் உள்ளது ஆணா? பெண்ணா? என்பதை அறிந்து கொள்வதற்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என்று மருத்துவ மேதைகள் பேசிக் கொள்வது நமது காதுகளில் விழுகிறது.சுப்ஹானல்லாஹ். அல்லாஹ் மட்டுமே அறிந்த இந்த இரகசியம், உரிய நேரம் வரும் வரை யாரும் எந்த விதத்திலும் அறிந்து கொள்ள முடியாத படி எந்த அளவிற்குப் பாதுகாக்கப்படுகிறது என்பதைப் பார்த்தீர்களா?
பாலுறுப்பு வெளியே தெரிய ஆரம்பித்ததும் அதனை முதலில் வானவர் அறிந்து கொள்கிறார். அப்போது அது அல்லாஹ் மட்டுமே அறிந்த இரகசியம் என்ற நிலையிலிருந்து மாறி பலரும் அறிந்து கொள்வதற்கு முடியும் என்ற நிலைக்கு ஆகிவிடுகிறது.
ஆனால் அதைத் தெரிந்து கொள்வதற்குக் கூட நமக்கு நவீன கருவிகள் தேவைப்படுகிறது என்பதுதான் நமது அறிவாற்றலுக்குரிய பலஹீனத்தின் வெளிப்பாடாகும். இதில் நாம் பெருமை கொள்வதற்கும், இறைவனுடைய அறிவோடு போட்டிபோடுவதற்கும் என்ன இருக்கிறது என்பது இங்கே சிந்திக்கப்பட வேண்டிய தகவலாகும்.
இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான, அதே நேரத்தில் அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தைக் குறிப்பிட ஆசைப்படுகிறேன்.
அதாவது அல்லாஹ் மட்டும் அறிந்ததாக குறிப்பிடும் ஐந்து விஷயங்களில் கருவைறையில் இருப்பது என்ன? என்று அறிவது ஒன்றாகும். இது அத்தியாம் 31-ல் 34 வது வசனத்தில் இடம் பெற்றுள்ளது.
”கருவறைகளில் உள்ளவைகளை அவன் அறிகிறான்.” (அல்குர்ஆன் 31:34)
நவீன கருவிகள் மூலம் கருவறையில் இருப்பதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ள இந்தக் காலகட்டத்தில் கருவறையில் உள்ளதை அல்லாஹ் மட்டுமே அறிகிறான் என்ற கருத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும் என்று சிலர் இந்த வசனத்தின் மீது ஆட்சேபனை தெரிவிக்கிறார்கள்.
இதற்கு நாம் மேலே சொன்ன பாலுறுப்புகள் வெளிப்படுத்தப்படும் முன்பு அறிந்திருப்பது அல்லாஹ்தான் என்று பொருள் கொள்ளும் போது, மேற்கூறிய அனாவிசியமான கேள்வி எழுவதற்கு அறவே வாய்ப்பு இல்லாமல் போய்விடும். காரணம் பாலுறுப்புகள் வெளிப்படுத்தப்படும் முன்பு எந்த நவீன கருவிகளின் மூலமும் இந்த தகவலை அறிந்து கொள்ள முடியாது என்பது நிதர்சனமான சத்தியமாகும். அதனை அறிந்திருப்பது அல்லாஹ் மட்டும்தான் அவனைத்தவிர இந்த உண்மையை அறிந்தவர்கள் யாரும் இல்லை. நெருக்கமான வானவர்களாக இருந்தாலும் சரி, மிகப் பெரிய அந்தஸ்து பெற்ற நபிமார்களாக இருந்தாலும் சரி, எவராலும் அறிந்து கொள்ள முடியாது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
ஆனால் இந்த வசனத்தின் பொருளை சரிகாண்பதற்கும், அந்த வசனத்தின் மீது எழுப்பப்பட்ட வினாவிற்கு பதில் கூறுவதற்கும் நினைத்த சிலர், இந்த வசனத்துடன் பொருந்திவராத விதத்தில் சில பதில்களைச் சொல்லி இருக்கிறார்கள்.
எவ்வாறெனில் ஒரு சாரார்,
கருவறையில் இருப்பதை அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கிறான் என்பதன் பொருள் அது ஆணா? பெண்ணா? என்பது பற்றியதல்ல. காரணம் பாலைக் (sex) குறிக்கக்கூடிய வார்த்தை அந்த வசனத்தில் இடம் பெறவில்லை. (கவனிக்க வசனம்.)
மாறாக தாயின் கருவறையில் உள்ள குழந்தையின் தன்மையைத்தான் அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், அதன் படி கருவறையில் இருக்கும் அந்தக் குழந்தையின் தன்மைகள் என்ன? நல்லவனா? கெட்டவனா? அது தனது பெற்றோருக்கு அருட்கொடையாக இருக்குமா? சாபக்கேடாக இருக்குமா? அது சமுதாயத்திற்கு நன்மையாக அமையுமா? தீமையாக அமையுமா? சுவர்க்கத்திற்குச் செல்லுமா? நரகத்திற்குச் செல்லுமா? போன்ற அனைத்து விபரங்களையும் அறிந்தவன் அல்லாஹ்தான். வேறு யாரும் அறிந்திருக்க முடியாது. என்று பதில் கூறியுள்ளார்கள்.
மேலோட்டமாக இந்தப்பதிலை படித்துப் பார்க்கும் போது இந்த பதில் சரிதானே என்று தோன்றும். சற்று ஆழமாக சிந்தித்துப்பார்த்தால் இந்த வசனத்தில் சொல்லப்பட்ட விஷயத்திற்கும் இந்த பதிலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பது புரியவரும்.
அவர்களது பதிலில் கூறப்பட்டிருக்கும் இந்தத் தன்மைகளை அறிந்திருப்பது அல்லாஹ் மட்டும்தான் என்பது கருவில் இருக்கும் குழந்தைக்கு மட்டுமல்ல, குழந்தை கருவில் உருவானதிலிருந்து, பிறந்து, வளர்ந்து மரணிக்கும் வரை உள்ள மேற்கூறிய அதனது தன்மைகள் அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் மட்டும்தான். வேறு யாரும் எந்த நவீனக் கருவிகள் மூலமும் அறிந்து கொள்ள முடியாது.
ஏன்? ஒருவன் மரணித்ததன் பின்பு கூட அவன் சுவர்க்கத்திற்குச் செல்வானா? நரத்திற்குச் செல்வானா? என்பதை கூட யாரும் அறிந்து கொள்ள முடியாது, அதனையும் அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கிறான்.
அவ்வாறெனில் இந்த வசனத்தில் கருவறையில் இருப்பதை அறிந்தவன் அல்லாஹ் மட்டும்தான் என்று குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவசியம்தான் என்ன?
எனவே கருவறையில் உள்ளதை அல்லாஹ் மட்டுமே அறிகிறான் என குறிப்பாக சொல்லப்பட்டதற்கு இது அல்லாத வேறு ஒரு பொருள் நிச்சயம் இருக்க வேண்டும். அது தான் நாம் மேலே குறிப்பிட்ட பதில். அதாவது கருவறையில் உள்ள குழந்தை பாலுறுப்பு வெளிப்படும் முன்பு அது ஆணா? பெண்ணா? என்பதை அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கிறான் என்று பொருள் கொள்ளவதுதான் சரியாக இருக்கும்.
இந்த வசனத்தின் மீதான வினாவிற்கு பதில்கூற நினைத்த வேறு சிலர், இந்த வசனத்தின்
ما في الأرحام
என்ற சொற்றொடரில் (மா) என்ற அரபி எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளதால், அது உயர்திணைக்கு (பகுத்தறிவுள்ள இனம்) பயன்படுத்தும் வார்த்தை அல்ல, மாறாக அது அஃறிணைக்கு (பகுத்தறிவற்ற இனம்) பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். கருவில் வளரும் குழந்தை உயர்திணையாக இருப்பதால், அதற்கு இந்த வார்த்தையை பயன்படுத்துவது பொருத்தமற்றது,
எனவே, இந்த வசனத்தில் கருவறையில் உள்ளதை அறிவது என்பது கருவறையின் தன்மைகளை அறிவது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். காரணம் கருவறை ஒரு அஃறிணைப் பொருளாகும் என்று கூறுகிறார்கள். அதாவது கருவறை எத்தகைய தன்மையுடையது, மலட்டுத் தன்மையுடையதா? பிரசவிக்கும் தன்மையுடையதா? அது ஆண் குழந்தையைப் பிரசவிக்குமா? பெண் குழந்தையைப் பிரசவிக்குமா? என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிந்து கொள்ள முடியாது என்பது அவர்களது விளக்கத்தின் சாராம்சமாகும்.
இந்த பதிலும் பொருத்தமானதல்ல. காரணம் மருத்துவம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் ஒரு பெண்ணை பல மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி உள்ளவளா? இல்லையா? என்பதை தெளிவாக சொல்லிவிடுகின்ற அளவிற்கு விஞ்ஞான உலகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. எனவே, அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கிறான் என்று பொருள் கொள்வது பொருந்தி வரக் கூடியதல்ல.
மேலும், ஒரு கருவை ஆணாக, பெண்ணாக உற்பத்தி செய்கின்ற திறன் கருவறைக்கு இல்லை. அது ஒரு விளை நிலம் மட்டுமே! (பின்னர் இது குறித்து விவரிக்கப்படும்) எந்த விதையை ஆண் மகன் விதைக்கிறானோ அதைத்தான் விளைவிக்கும். ஆணா? பெண்ணா? என்பதைத் தீர்மானிப்பது பெண் கருவறையல்ல. ஆண் உயிரணுக்களின் மூலமே தீர்மானிக்கப்படும். எனவே, கருவறையில் உள்ளதை அறிந்தவன் அல்லாஹ் என்ற வசனத்திற்கு மேற்கூறிய விளக்கம் தொடர்புடையதல்ல என்பது தெளிவு.
மேலும், கரு உயிரூட்டப்படும் வரை அது அஃறிணைப் பொருளாகவே இருக்கிறது என்பதை குர்ஆனின் பின் வரும் வசனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
பின்னர் அந்த உயிரணுவை அலக்காக (இதனைப் பின்பு விவரிக்கப்படும்.) படைத்தோம் பின்னர், அந்த அலக்கை மாமிசத் துண்டாகப் படைத்தோம் பின்னர் அந்த மாமிசத்துண்டை எலும்புகளாகப் படைத்தோம் பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம் பின்னர் நாம் அதனை வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். படைக்கிறவர்களில் மிக அழகானவனான அல்லாஹ் மிக உயர்வானவன். (அல்குர்ஆன்: 23:14)
இந்த வசனத்தில் கருவின் ஆரம்ப நிலையிலிருந்து இறுதிக்கட்டம் வரை உள்ள அதன் பல நிலைகள் சொல்லப்பட்டிருக்கிறது. கருவின் ஆரம்ப நிலையான உயிரணு முதல் எலும்புகளுக்கு மாமிசம் அணிவிக்கப்படும் நிலை வரை அந்தக் கரு அஃறிணையாகவே இருக்கும்.
மாமிசம் அணிவிக்கப் பட்டப் பிறகுதான் அந்தக் கருவினை ஆணாக அல்லது பெண்ணாகப் படைக்க வேண்டுமா? என்பதை வானவர் இறைவனிடத்தில் கேட்டு செயல் படுத்துகிறார். (பார்க்க மேலே கூறப்பட்ட முஸ்லிம் கிரந்தத்தில் இடம் பெற்ற நபி மொழி.)
அதற்குப்பிறகு வேறு ஒரு படைப்பாக (முழு மனித வடிவமாக) மாறுகிறது. அப்போது அது உயர்திணை நிலையை அதாவது மனித நிலையை அடைகிறது.
பாலுறுப்பு வெளிப்படும் முன்புவரை கருவின் நிலை அஃறிணையாக இருப்பதால்தான் அந்த நிலையைக் குறிக்க, மேற்கூறிய இறை வசனத்தில் அஃறிணைக்கு பயன்படுத்தப்படும் ما (மா) என்ற எழுத்து உபயோகிக்கப் பட்டுள்ளது. மாறாக கருவறையைக் குறிப்பதற்கல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அப்போது, அஃறிணைக்குரிய எழுத்தான மா என்பது பயன்படுத்துப்பட்ட நோக்கமும் தெளிவாகிவிடும் இந்த வசனத்திற்கு நாம் கொடுத்த விளக்கம் எவ்வளவு யதார்த்தமாக உள்ளது என்பதும் தெரியவரும். (அல்லாஹ்வே மிக நன்கு அறிந்தவன்)
காரணம் இல்லையேல் காரியம் இல்லை
எனவே கருவறையில் உருவாகும் சிசுவினை ஆணாக பெண்ணாக படைப்பது அல்லாஹ்வின் நாட்டத்தில் உள்ளதாகும். எதுவாக படைக்க விரும்புகிறானோ அதுவாகவே படைக்கும் ஆற்றலுடையவன். எனினும் காரண காரிய மிகுந்த இந்த உலகில் எந்த காரியம் நடைபெற வேண்டும் என்றாலும் அதற்கு சில காரணங்களை அமைத்து வைத்துள்ளான் ரப்புல் ஆலமீனான அல்லாஹ். (அவன் காரணம் இல்லாமலேயே காரியத்தை உண்டாக்குவதற்கு ஆற்றல் பெற்றவன் என்பது யாரும் சந்தேகம் கொள்ள முடியாத விஷயமாகும்.
ஆண் துணையின்றி மரியம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம் ஈஸா நபியை பிறக்கச் செய்தது அவனது ஆற்றலுக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.) காரணம் இருக்கும் போது காரியம் நடைபெறும். (நடைபெறாமலும் போய்விடலாம் என்பது வேறு விஷயம்.) இது அல்லாஹ் ஏற்படுத்திய ஒரு நியதியாகும். உதாரணமாக மழை பொழிவதற்கு கருமேகம் கூடுவதை காரணமாக ஆக்கியிருக்கிறான். விளை நிலம் விதைகளை முளைக்க வைப்பதற்கு நீரை காரணமாக ஆக்கி இருக்கிறான். இந்த காரணங்கள் இல்லாத போது இந்த காரியங்கள் நடப்பது அரிதாகும்.
யார் காரணம்?
அது போல் குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக பிறப்பதற்கும் அல்லாஹ் சில காரணங்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறான். அறிவியல் முதிர்ச்சி அடைந்த இந்த நவீன காலத்தில் பல ஆய்வுகளுக்குப் பிறகு குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக பிறப்பதற்கு யார் காரணம் என்பதை சமீபத்தில்தான் கண்டுபிடித்துள்ளார்கள். அந்த கண்டுபிடிப்பு, பெண்கள் தான் அதற்கு காரணம் என்று இது நாள் வரை பாமரனாலும், படித்தவர்களாலும் நம்பப்பட்டு வந்த கருத்தோட்டத்திற்கு முற்றிலும் மாறுபட்டிருக்கிறது.
அறிவியல் ஆய்வுகளின்படி ஆண்கள் தான் அதற்கு முழுக் காரணம், ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள்தான் ஆணா? பெண்ணா? என்பதைத் தீர்மானிக்க காரணமாக இருக்கிறது என்று மருத்துவ அறிஞர்கள் ஆதாரத்துடன் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த தகவலை 1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆன் மிகத் தெளிவாக கூறிவிட்டது. அத்துடன் பெண்களை காரணமாக ஆக்கக்கூடாது என்ற செய்தியையும் அதில் தெளிவாக சொல்லப்பட்டிருப்பது வியக்கத்தக்க ஒரு தகவலாகும். பெண்களைக் காரணமாக ஆக்க முடியாது என்ற செய்தியை எந்த வசனத்தில், எவ்வாறு கூறப்பட்டுள்ளது என்பதை அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.
source: http://www.islamkalvi.com/portal/?p=4657
இன்ஷா அல்லாஹ் தொடரும்