Dr. A.P.முஹம்மது அலி. Phd. I.P.S.(rd)
1976 ஆம் ஆண்டு இந்திய திரு நாட்டில் எமர்ஜென்சி என்ற அவசரகால நடவடிக்கை அமல் செய்யப்பட்டது இளைஞர்களுக்கு தெரியாத சம்பவமாக இருக்கலாம். அந்த சமயத்தில் பல எதிர்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு மிசா என்ற வெங்கொடுமையில் தள்ளப்பட்டனர். பல மாநில அரசுகள் தமிழகம் உள்பட கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்டது.
மக்கள் தொகை அதிகம் எனச் சொல்லி கையில் கிடைப்பவர்களுக்கெல்லாம் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. என்ன காரணங்களுக்காவோ பாரம்பரிமிக்க டெல்லி ஜூம்மா மஸ்ஜிதை சுற்றியுள்ள கடைகள்–வீடுகள், டர்க்மேன் கேட் ஆக்கிரமிப்பு என சொல்லி முஸ்லிம்கள் எதிர்ப்பினையும் மீறி புல்டோசர்களைக் கொண்டு கட்டாயமாக அகற்றப்பட்டன.
இவற்றிற்கெல்லாம் கதாநாயகன் அப்போதிருந்த பாரதப் பிரதமர் மதிப்புமிகு இந்திராகாந்தியின் இளைய மகனார் சஞ்சய் காந்தியின் களியாட்டத்தின் பங்காக கருதப்பட்டது. சில சமயங்களில் அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அஹமது அவர்களிடம் கூட சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததாக ஊடகங்கள் அப்போது வெளியிட்டன. சஞ்சயின் சில அதிரடி நடவடிக்கைகள் பிரதமருக்கே பிடிக்காத ஒன்றாகச் சொல்லப்பட்டது.
நான் 1976ஆம் ஆண்டு மதுரை ஊரக டி.எஸ்.பியாக பணியாற்றியபோது தமிழக ஆளுனரின் ஆலோசகர் தவே அவர்கள் மதுரை–மேலூர் ரோடிலுள்ள ஒத்தக்கடை காவல் நிலைய எல்கையிலிருக்கும் ஊத்தங்குடி கிராமத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களிடம் குறைகனை கேட்டார். அப்போது திருமணமாகாத இளைஞர்கள்–சில வயதானவர்கள் தங்களை அரசு அதிகாரிகள் கட்டாயப்படுத்தி குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்து விட்டதாக குறை சொன்னார்கள். அதை அவர் பொறுமையுடன் கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது போன்ற அத்து மீறல்கள் இந்தியா முழுவதும் நடந்தது என்னவோ உண்மைதான்.
மனிதர்கள் எல்லை மீறும் போது இறை தண்டனைகள் சிலருக்குக் கொடுத்து அதனை மற்றவர்களுக்கு படிப்பினையாக இருக்கும்படி அல்லாஹ் செய்வான் என்று குர்ஆனில் உள்ளது அனைவரும் அறிவர்.
அதுபோன்ற சம்பவங்கள் தான் கொடுங்கோலன் ஃபிர்அவுன், இத்தாலியின் முஸோலினி, ஜெர்மனியின் ஹிட்லர் போன்றவர்களுக்கும் நடந்துள்ளது. சஞ்சய் காந்தி தன் நண்பர் கேப்டன் சர்மாவுடன் புது டெல்லியில் ஒரு விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டபோது துரதிஸ்டவசமாக விபத்தில் மாட்டி அகால மரணமடைந்தார் தன் நண்பருடன். பூமிதான இயக்கத் தலைவர் வினோபாவின் சீடர் ஜெயப்பிரகாஸ் நாராயணன் தலைமையேற்று நடத்திய மக்கள புரட்சியினை சமாளிக்க முடியாமலும், சஞ்சய் காந்தி மறைந்த துக்கத்திலிருந்த இந்திரா காந்தி எமர்ஜென்சியினை திரும்பப்பெற்று பொதுத் தேர்தலுக்கு உத்திரவிட்டார். அதில் காங்கிரஸ் தோற்று ஜனதா கூட்டணி ஆட்சி திரு. மொராஜி தேசாய் தலைமையில் 1977 ஆம் ஆண்டு மலர்ந்தது என்பதினை இளைஞர்கள் சிலருக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
2009 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு மறைந்த சஞ்சய் காந்தியின் அருந்தவப் புதல்வன் வருண் பாரதிய ஜனதாவிற்கு புதிய வரவு. தன்னுடைய இளமைத் துடுக்கினைக் காட்ட உ.பி.மாநிலம் பெரேலிக்குச் செல்லும் போது பாரதிய ஜனதா தொண்டர்களால் சிறப்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவர்களை மேலும் உற்சாக மூட்ட பொதுக்கூட்டத்தில் காவிச்சட்டையினர் மீது யாரும் கை வைத்தால் அவர்கள் கையினை வெட்டுவேன் என்று முண்டாசு தட்டினார் என்று இந்தியா முழுவதும் உள்ள ஊடகங்கள் மூலம் கண்டனக் குரல் எழுப்பப்பட்டது. அவருடைய பேச்சு உ.பி.மாநில அரசால் கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு சில நாட்கள் கம்பியும் எண்ணினார்.
அவருடைய உற்சாகப் பேச்சுமூலம் ஹிந்துத்துவா நண்பர்களின் ஆதரவினைப் பெருக்கி தன் தாய் மேனகா காந்தியுடன் மக்களவையில் காலடியெடுத்து வைத்தார். இப்போது பாரதிய ஜனதாவின் புதிய ஆர்.எஸ்.எஸ் ஆதரவுத் தலைவர் நிதின், வருணை பொதுச் செயலாளராக்கியது அவரை மேலும் ஊக்கப்படுத்தியது. ஆனால் நீண்ட காலம் மக்களவை உறுப்பினராக இருந்து–மத்திய அமைச்சராக பணியாற்றியவருமான பீகாரைச் சார்ந்த சா நவாஸ்கான் கட்சிப் பொறுப்பிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளார் என்பதினை நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான சத்துருக்கன் சின்காவிற்குக் கூட ஜீரணிக்க முடியவில்லை.
வருண் தனக்கு வழங்கப்பட்ட பதலி தன்னை இந்தியாவின் முடி சூடாத மன்னருக்கு இணையானது எனக் கருதிக் கொண்டு உத்திரப் பிரதேச மாநிலம் சக்ரான்பூரில் 29.3.2010ந்தேதி அந்த மாநில முதல்வர் தலித் இனத்தினைச்சார்ந்த மாயாதேவியினுக்கு ஒரு பகிரங்கிரமான மிரட்டipனை விட்டிருக்கிறார் என்று 30.3.2010 தேதியிட்ட தினமலர் பத்திரிக்கை செய்தி சொல்கிறது. அது என்ன தெரியுமா? மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி வந்தால் மாயாதேவியினை பாதுகாப்புச்சட்டத்தில் அடைப்பேன் என்று கூறுவது எமர்ஜென்ஸி சமயத்தில் அவர் தந்தை சஞ்ஞையின் நடவடிக்கையினை பின்பற்றுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது. 1990 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிக்கும் போது உ.பி. மாநிலத்தில் பா.ஜ. கட்சி ஆட்சிதான் நடந்தது. அப்போது தலித், மைனாரிட்டி மக்களின் நலன் புறக்கனிக்கப்பட்டதால் மக்கள் அந்த ஆட்சியினை தூக்கி எறிந்தனர்.
தற்போதைய முதல்வர் சாதாரணக் தலித் குடும்பத்தில் பிறந்து ஆசிரியையாக பணியாற்றி தலித் மற்றும் மைனாரிட்டி மக்களிடம் ஓட்டுகளைப் பெற்று மீண்டும், மீண்டும் முதல்வராகி உள்ளார். சிலர் சொல்லலாம் அவர் மேல் ஊழல் குற்றச்சாட்டு சொல்லப்படுகிறதே என்று. மறைந்த இந்திரா காந்தி அம்மையாரிடம் ஒரு தடவை ஊழல் பற்றி நிருபர்கள் கேள்வி கேட்டபோது, ‘ஊழல் ஒரு சரவதேசத்தில் நடக்கும் சாதாசண நிகழ்வு (இண்டர் நேஷனல் ஃபினோமினா) என்றார். இன்று அரசியலில் ஊழல் செய்யாத பிரமுகர்கள் 110கோடி மக்களில் விரல் விட்டு என்னக்கூடியவர்கள் தானே உள்ளனர்.
ஆனால் உ.பி. முதல்வர் மாயாவதி பற்றி கண்காலயலால் ராஜ்புத் என்ற வழக்கறிஞர் , ‘மாயாவதி ஆட்சிக்கு வந்தபின்பு தலித் மற்றும் மைனாரிட்டி மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தப் பாடுபடுகிறார்” என்று சொல்லுகிறார். ஆகவே தான் வருண் ஆட்சிக்கு வரும் முன்பே பூச்சாண்டி காட்டுகிறார். இதேபோல் தான் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தடை செய்யப்பட்ட தமிழ் ஈழத்தினை ஆதரித்து குரல் கொடுப்பேன் என்ற ம.தி.மு.க தலைவர் கோபாலசாமி வேலூர் சிறையில் தள்ளி 18 மாதம் பொடா சட்டத்தில் வாடினார். ஆனால் வருண் கைது செய்யப்பட்டு மூன்று நாட்களுக்குள் விடுதலை செய்யப்பட்டார். ஆகவே தான் அவர் தொடர்ந்து தலித் மக்களுக்கும், சிறு பான்மையினருக்கும் மிரட்டல் விட்டுக் கொண்டிருக்கிறார்.
அது மட்டுமா புதிதாக பாரதிய ஜனதா தலைவராக பதவியேற்றிருக்கும் நிதின் கட்கார் என்ன சொல்கிறார் தெரியுமா? பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என்று. பாபரி பஸ்ஜித் ஒரு பாரம்பரிய முஸ்லிம்–இந்து மக்கள் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான பழங்கால கட்டிடக்கலையின் திறமையில் உருவாக்கப்பட்டது. அந்தக் கட்டிடம், ‘எடுத்தோம் கர்சேiவு ஆயுதம்–உடைத்தோம் பாரம்பரியப் பள்ளிவாசல்’என்று அந்தக்கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டது. இந்த நேரத்தில் உங்களுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொது நலன் மனுவினை டிராபிக் ராமசாமி என்பவர் தாக்கல் செய்துள்ளதின் சாராம்சம் சொல்லலாம் என நினைக்கிறேன்.
அதில் சென்னை மாநகரத்தில் வாகன போக்குவரத்து அதிகரித்து விட்டது. ஆகவே போக்குவரத்திற்கும்–பொதுமக்கள் நடைபாதையில் நடப்பதிற்கும் இடைஞ்சலாக பல வழிபாட்டு தலங்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளன, அவைகளை அகற்ற வேண்டுமென்று சொல்லியுள்ளார். சென்னை உயர்நீதி மன்றமும் சென்னை மாநகராட்சியில் அவ்வாறு ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வழிபாட்டு தலங்கள் மத வாரியாக எத்தனை என்று கமிஷரைக் கேட்டிருந்தது. அவர் தாக்கல் செய்துள்ள தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டன உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். அவை:
1) ஹிந்துக் கோயில்கள்: 196
2) ஹிருத்துவ சர்ச்சுகள்: 027
3) புள்ளிவாசல் : 005
அந்த ஐந்தும் பள்ளிவாசலில்லை. அவைகள் தர்ஹாக்கலாகும்.
சென்னை மாநகரில் மட்டும் 196 ஆக்கிரமிப்பு கோவில்கள் இருக்கிறது என்றால் இந்தியா முழுவதும் எத்துனை ஆக்கிரமிப்பு கோவில்கள் இருக்கும் என நீங்களே கணக்கிட்;டுக் கொள்ளுங்கள். இதனை எதுக்கு இங்கே குறிப்பிடுகிறேனென்றால் முதலில் பி.ஜே.பி. புதிய தலைவர் நிதின் இந்தியாவில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்பு கோவில்களையும் இடித்து விட்டால் அயோத்தியாவில் உள்ள பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் அவர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கோவில் கட்டலாம். அதனைச் செய்ய அவர் தயாரா என மக்கள் கேட்க உரிமை இருக்கிறதல்லவா? ஆட்சியினை பிடிக்கு முன்னே முண்டாசு தட்டும் வருணும், நித்தினும் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆட்டம் போடுவார்கள் என்று அறியாத மக்களா இந்திய குடிமக்கள். அதனால் தானே பி.ஜே.பி ஆட்சி மத்தியிலும், சில மாநிலத்திலும் பறிபோனது என்று அனைவரும் அறிவர்.
தமிழில் ஒரு பாட்டுண்டு, ”பதவி வரும்போது பணிவு வரவேண்டும் தோழா”. அதற்கு ஆதாரமாக ஒரு நீதிக்கதையினைச் சொல்வது இங்கே பொருத்தமாகும் என எண்ணுகிறேன்.
ஒரு தடவை சக்கரவர்த்தி அலெக்ஸாண்டர் தன் நாட்டின் தெரு வழியே நகர் வலம் படை சூழ வந்தார். அப்போது ஒரு ஜென் முனிவர் எதிரே வந்தார். உடனே அலெக்ஸாண்டர் அந்த முனிவர் முன்பு சாஸ்டாங்காக விழுந்து வணங்கினார். இதனைப்பார்த்து மந்திரிகள், படைவீரர்கள், பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.
உடனே தலைமை மந்திரி சக்கரவர்த்தி அலெக்ஸாண்டரைப் பார்த்து, நீங்களோ இந்த உலகின் புகழ் வாய்ந்த சக்கிரவர்த்தி அவரோ சாதாரண முற்றும் துறந்த முனிவர் அவர் முன்பு நீங்கள் விழுந்து வணங்கலாமா? உங்கள் ஆடைகளெல்லாம் வீனாகிவிட்டதே, உங்களை மக்கள் குறைத்து மதிப்பிட மாட்டார்களா? என்ற வினாவினை எழுப்பினார்.
அதற்கு அலெக்ஸாண்டர் மந்திரியிடம் ஒரு ஆட்டுத்தலை, ஒரு மாட்டுத்தலை, ஒரு மனிதத்தலை கொண்டு வர ஆணையிட்டார். சக்கரவர்த்தி உத்திரவு விசித்திரமாக இருந்தது. இருந்தாலும் அவர் ஆணைக்கிணங்க மூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டது. உடனே அலெக்ஸாண்டர் தர்பாரில் கூடியிருந்த மக்களைப் பார்த்து, ”இந்த ஆட்டுத் தலையினை இனாமாகத் தருகிறேன் யாருக்கு வேண்டும்?” என்றார். உடனே தங்களுக்கே வேண்டும் என்று பலர் போட்டியிட்டனர்.
அதனை ஒருவருக்கு சக்கரவர்த்தி வழங்கினார். அதன் பின்பு, ”இந்த மாட்டுத்தலை யாருக்கு வேண்டும்? எனக் கேட்டார். இதற்கும் ஏகப்பட்ட போட்டி. மாட்டுத்தலையும் ஒருவருக்கு கொடுக்கப்பட்டது. அதன் பிறகு இந்த மனித தலை யாருக்கு வேண்டும் என்று அலெக்ஸாண்டர் குரலை ஓங்கி எழுப்பினார். என்ன ஆச்சரியம்? ஒருவரும் அந்த மனிதத்தலையினை வாங்க முன்வரவில்லை.
அதன் பின்பு மந்திரியினைப் பார்த்துச் சொன்னார் அலெக்ஸாண்டர் மனிதப் புகழும் இந்த மனிதத்தலை போன்று தான் மடிந்ததும் அழிந்து விடும். ஆனால் முனிவர்கள் புகழும், ஒரு தன்னலமற்ற–பணிவான மனிதனின் புகழும் என்றுமே அழியாதிருக்கும்.
ஆகவே நம் பதவி–புகழ் நம்முடைய கண்களை மறைக்கக்கூடாது என்பது நமக்குப் புரிகிறது. ஆனால் காவிச்சட்டை புதிய வரவுகளுக்குபு; பரிய வைப்பது யார்? வருங்கால வாக்காள மக்களாகிய உங்களைப் போன்றவர் தானே சொந்தங்களே!
இஸ்லாம் எப்போதும் சாந்தியும்–சமாதானம்–சகோதரத்தினை விரும்பும் மார்க்கம். ஆனால் அமைதியினைக் குழைக்கும் அராஜகத்தில் யார் ஈடுபட்டாலும் அதனை எதிர்த்து குரல் எழுப்ப தயங்கக்கூடாது. சென்ற 26.3.2010 வெள்ளிக் கிழனையன்று ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் சார்மினார் அருகில் உள்ள பள்ளிவாசல் வெளி சுவரில் ராமர் படதட்டியினை காவி உடை நண்பர்கள் வைத்ததின் மூலம் கலவரம் ஏற்பட்டு உயிர் பலி–சொத்து நாசம் என்று நடந்து இன்றும் கூட(31.3.2010) அங்கே ஊரடங்கு சட்டம் அமல் செய்யப்பட்டதாக எலக்ட்ரானிக் மீடியாக்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இது போன்ற துயர சம்பவங்கள் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா மீது உலக நாடுகள் பார்வையில் குஜராத் இனக்கலவரம் போன்ற ஒரு கரும்புள்ளியாக கருத வாய்ப்பிருக்காதா? ஏன் காவியுடை நண்பர்கள் அறிய வேண்டாமா?
இருந்தாலும் இந்தியாவினை முகலாய மன்னர்கள் மூலம் ஆண்ட முஸ்லிம் மைனாரிட்டி மக்களுக்கு ஒரு நீதிக்கதையினைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.
சீன நாட்டில் ஒரு உயிரியல் பூங்காவில் ஒரு 15 வருட புலி வளர்த்தார்கள். அந்தப்பலிக்கு உணவாக மாட்டு மாமிசம் வழங்குவார்கள். ஒருநாள் அந்த உயிரியல் பூங்காவிற்கு ஏராளமான கூட்டம் வந்திருந்தது. அவர்களுக்கு உற்சாமூட்ட பூங்கா கண்காணிப்பாளர் ஒரு பதிய யுக்தியைக்கையாண்டார்.
அதாவது புலிக் கூண்டுக்குள் ஒரு கொம்புள்ள காளை மாட்டினை உயிரோடு உணவாக விட்டார். புலியும் மாட்டினைக் கொன்று சாப்பிட காளை மீது பாய்ந்தது. என்ன ஆச்சரியம் அந்த மாடு புலியனை தனது கொம்பினால் குத்தி ஓட, ஓட விரட்டியது.
காளையின் ஆக்ரோஷம் தாங்காது புலி வேதனையால் கதறியது. உடனே பூங்கா கண்காணிப்பாளர் அந்த புலியினை கானை மாட்டினிடமிருந்து காப்பாற்றினார். அது பற்றி அவர் கூறும் போது, ”புலி காட்டில் வாழும் போது அதன் வேட்டைக்கு தன் உடல் வாகினையும் கூர்மையான பற்களையும் பயன்படுத்தும். ஆகவே அது மற்ற மிருகங்களை வெற்றி கொள்ளும். ஆனால் கூண்டுக்குள் இருக்கும் வளர்ப்பு புலி தினம் தோறும் காப்பாளர் போடும் மாமிசத்தினை சாப்பிடுவதால் அதன் வேட்டையாடும் திறன் மங்கி விட்டது” என்றார்.
இது எதற்குச் சொல்கிறேனென்றால் நமது உரிமையினை யாருக்கும் விட்டுக்கொடுக்காது, உடலின் வலிமையினை காக்க மறக்கக்காது, உறவினை தவிர்க்காது , ஒற்றுமைக்கு கைகொடுத்து, உரினைக்கு குரல் கொடுத்து, புலியின் ஆக்ரோசத்தை விடாது, அத்துடன் காளையின் போராட்டக் குணத்தினையும் பெற்று வீறு நடை போட வேண்டும் என வேண்டுகோள் விடுவது சரிதானே சொந்தங்களே!