விபரீத நேர்ச்சைகள்!
நேர்ச்சை! இது நம் பெரும்பாலானவர்களுடைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகி இருக்கிறது. நம் தேவைகள் நிறைவேறுவதற்காகவோ அல்லது நமக்கு ஏற்பட்டிருக்கின்ற சிக்கல்கள், பிரச்சனைகள் நீங்குவதற்காகவோ நாம் ஏதாவது ஒரு வகையில் நேர்ச்சைகளை செய்கிறோம். பொதுவாக, நேர்ச்சை செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.
அல்லாஹ் கூறுகின்றான்:
“இன்னும் செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கு அறிவான்” (அல்குர்ஆன்: 2:270)
“மர்யமே அவற்றை உண்டு ஆற்று நீரைப் பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் பார்க்க நேரிட்டால் மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கிறேன்; ஆதலால் இன்று எந்த மனிதருடனும் பேச மாட்டேன்’ என்று கூறுவீராக!” (அல்குர்ஆன்: 19:26)
“இம்ரானின் மனைவி ‘என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ள குழந்தையை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றாய்’ என்று கூறினார்” (அல்குர்ஆன்: 3:35)
மேற்கண்ட வசனங்கள் அனைத்தும், நேர்ச்சை என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்றும், மேலும் இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய ஒரு வணக்கம் என்றும் நமக்கு விளங்குகிறது. ஏனென்றால் எந்தவொரு வணக்கமாக இருந்தாலும் அதை அல்லாஹ் ஒருவனுக்கே செய்யவேண்டும் என்பது இறைவனின் கட்டளை. அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய வணக்கங்களை வேறொருவருக்கு செய்கின்ற போது அது அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்ற செயலாகும்.
இந்த வகையில், ஒருவர் அல்லாஹ் அல்லாத ஏனையவர்களுக்காக அதாவது, இறைநேசகர்களுக்காகவோ அல்லது நபிமார்களுக்காகவோ நேர்ச்சை செய்கின்றபோது அது இணைவைக்கின்ற செயலாகிறது. இதை பின்வரும் உதராணம் மூலமாக நாம் அறியலாம்.
உதாரணமாக, ஒருவர் தமது ஊரில் இருந்துக்கொண்டு நாகூரில் அடக்கமாகியிருக்கும் ஷாகுல் ஹமீது மகானிடம்,
“ஷாகுல் ஹமீது பாதுஷாவே! வெளிநாடு செல்வதற்கு எனக்கு விஷா கிடைப்பதற்கு உதவிசெய்யுங்கள். அவ்வாறு எனக்கு விஷா கிடைக்கப்பெற்றால் நான் தங்களின் சமூகத்திற்கு விஜயம் செய்து தங்களின் உண்டியலில் 101 ரூபாய் காணிக்கை செலுத்துகிறேன்”
என்று நேர்ச்சை செய்வதாக வைத்துக்கொள்வோம். இந்த நேர்ச்சையை நாம் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஆய்வு செய்வோம்! படிப்பதற்கு மிக எளிமையாக தோன்றுகின்ற இந்த நேர்ச்சையை ஒருவர் செய்து, அதே நிலையில் அவர் இறந்தும் விட்டால், அந்த நேர்ச்சையே அவரை நரகத்தின் அதளபாதாளத்திற்கு நிரந்தரமாக தள்ளக்கூடிய அதிபயங்கரமானதாக இருக்கின்றது. எப்படி என்கிறீர்களா? இதை சற்று விரிவாகப் பார்ப்போம்!
மேற்கண்ட நேர்ச்சையை செய்த ஒருவர் பின்வரும் வகைகளில் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தவராகின்றார். அவைகள்:
முதலாவது ஷிர்க்:
மேலே கூறப்பட்ட இறைவசனங்களான 2:270, 19:26 மற்றும் 3:35 ஆகிய வசனங்களின்படி, இறைவனுக்கு மட்டுமே செய்யவேண்டிய ”நேர்ச்சை” என்னும் வணக்கத்தை அல்லாஹ் அல்லாத பிறருக்கு செய்வதவராகின்றார்.
இரண்டாவது ஷிர்க்:
அல்லாஹ்விடம் மட்டுமே உதவிதேடவேண்டும் என்ற இறைவனின் கட்டளைகளை மீறி, அல்லாஹ் அல்லாத ஷாகுல் ஹமீது நாயகத்திடம் உதவி கோருவதன் மூலம் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவராகின்றார்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?” அல்குர்ஆன் (2:107)
இதுபோல, இன்னும் பல வசனங்களில், அல்லாஹ்விடமே உதவி தேடவேண்டும் என்பதை திருமறையின் பல இடங்களில் அல்லாஹ் வலியுறுத்துகின்றான். பார்க்கவும்: 2:153, 3:150, 3:160, 4:45, 9:116 மற்றும் பல வசனங்கள்.
மூன்றாவது ஷிர்க்:
அல்லாஹ் தன்னுடைய திருமறையின் பல இடங்களில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக்கூடாது என்று கூறியிருக்க, அல்லாஹ் அல்லாத ஷாகுல் ஹமீது நாயகத்திடம் பிரார்த்தனை செய்து நேர்ச்சை செய்தல்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்” அல்குர்ஆன் (7:197)
இதுபோல் இன்னும் பல வசனங்களில் அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை செய்யவேண்டும் என இறைவன் ஆணையிடுகின்றான். பார்க்கவும் : 2:186, 50:16
நாம் 7:197 என்ற வசனத்தை மீண்டும் ஒருமுறை படித்து சற்று சிந்திப்போமேயானால், இறைவன் திட்டவட்டமாக கூறிய ஒரு பேருண்மை நமக்குப் புலப்படும். அதாவது, ”அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்” என்று இறைவன் கூறுகிறான். ஒருவர் தமக்குத் தாமே உதவிசெய்து கொள்ள சக்தியற்றவராக இருக்கும் போது பிறருக்கு எவ்வாறு உதவ முடியும்? இறைவனின் இந்த திருவசனத்தை நாம் சற்று கவனமாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நான்காவது ஷிர்க்:
தம் கண்முன் இல்லாமல் மறைவாக இருக்கும் நாகூர் ஷாகுல் பாதுஷாவை அழைத்து உதவி கோருதல். இதுவும் ஷரிக்காகும். ஏனென்றால், ஒருவர் தமக்கு முன்னால் இல்லாதிருக்கும் பட்சத்தில் அவரை அழைத்து உதவி கோருவதும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத, அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது” (அல்-குர்ஆன் 46:5)
இந்த வசனத்தையும் நாம் சற்று சிந்தித்தோமேயானால், கியாமநாள்வரை அழைத்தாலும் அவர்களால் பதிலளிக்கமுடியாது என அல்லாஹ் கூறுகின்றான். மேலும், இந்த வசனத்தின்படி பார்த்தால், நாம் ஷாகுல் ஹமீது பாதுஷாவை அழைப்பதையே அவரால் அறிந்து கொள்ள இயலாதபோது நமக்கு அவர் எவ்வாறு உதவ முடியும்?
ஐந்தாவது ஷிர்க்:
இறைவனின் பண்புகளில் ஒன்றான ”ஷமீஉண்”, என்பதை இணை வைப்பதாகும். அதாவது ஒருவர் தமதூரில் இருந்துக்கொண்டு நாகூரில் அடக்கமாகியிருக்கின்ற ஷாகுல் ஹமீது நாயகத்திடம் உதவி கோரும் போது, எத்தனை தூரமாக இருந்தாலும் அதையும் தாண்டி கேட்கும் அபூர்வ சக்திபடைத்தவராக ஷாகுல் ஹமீது நாயகத்தைக் கருதுவது. இதுவும் அப்பட்டமான ஷிர்க்காகும்.
ஏனென்றால், ஒருவர், எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை தூரத்திலிருந்து அழைத்தாலும் அதைக் கேட்கக்கூடிய சக்தி அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. அதுபோல, ஒரே நேரத்தில், எத்தனை பேர் அழைத்தாலும் அத்தனை பேர்களுடைய கோரிக்கைகளையும் ஏற்று அவர்களுக்கு அதை நிறைவேற்றி வைக்கின்ற சக்தி எல்லாம் வல்ல இறைவன் ஒருவனுக்கே உரிய பண்பு, ஆற்றலாகும்.
அந்த பண்பு, ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர்த்து, ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் இருக்கிறது என்று ஒருவர் நம்பி தமதூரிலிருந்து அழைத்தால் நாகூரில் இருக்கும் ஷாகுல் ஹமீது கேட்பார் என்று திட்டவட்டமாக நம்பும் போது இதுவும் இணைவைத்தலாக மாறுகிறது.
ஆறாவது ஷிர்க்:
ஒருவர் எங்கிருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தாலும் அதை அறியும் சக்தி அல்லாஹ் ஒருவனுக்கே உரியதாகும். ஒருவர் தமதூரிலிருந்து ஷாகுல் ஹமீது பாதுஷாவை அழைக்கும் போது அவ்வாறு அழைப்பவர், தம் கண் எதிரே இல்லாமல் இருந்தும் அதை அறியும் சக்தி ஷாகுல் ஹமீது நாயகத்திற்கும் உண்டு என்று நம்புவதும் இணைவைப்பாகும். ஏனென்றால் இது ‘பஷீரன்’ என்று இறைவனின் பண்பிற்கு இணை வைக்கும் செயலாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
“அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 2:265)
“அவன், நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும்போது, உம்மைப் பார்க்கிறான். இன்னும், ஸஜ்தா செய்வோருடன் நீர் இயங்குவதையும் (அவன் பார்க்கிறான்)” (அல்-குர்ஆன் 26:218-219)
இறைவனின் இந்த எளிமையான திருவசனங்களைப் படித்துப்பார்த்தால், நாம் எங்கிருந்தாலும், என்ன செய்துகொண்டிருந்தாலும் அதை பார்த்து அறிகின்ற சக்தி, ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது! இறைவனின் இந்த வல்லமையை அல்லாஹ் அல்லாதவருக்கு உரியதாக ஆக்குகின்றபோது அதுவும் இணைவைப்பாகின்றது. எனவே தமதூரில் இருந்து தாம் அழைப்பதை ஷாகுல் ஹமீது பார்க்கிறார் என்று நம்பிக்கைக் கொள்வதும் இறைவனின் இந்த தன்மையை, வல்லமையை பிறருக்கு பங்கிடுவதன் மூலம் இணைவைத்தவராகிறார்.
ஏழாவது ஷிர்க்:
மறைவான விஷயங்களை அறியும் ஆற்றல் ஷாகுல் ஹமீது பாதுஷாவிற்கும் இருப்பதாக நம்புவது. அல்லாஹ் கூறுகின்றான்:
“மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்)” (அல்-குர்ஆன் 10:20)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
“(நபியே!) நீர் கூறும்: ”என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.” இன்னும் நீர் கூறும்: “குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” (அல்-குர்ஆன் 6:50)
சகோதரர்களே! இந்த வசனத்தை சற்று ஆழமாக நாம் சிந்தித்தோமேயானால், ஒரு பேருண்மை நமக்கு விளங்கும். அதாவது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே மறைவான விஷயங்கள் தெரியாது என்று அறிவிக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். ஆனால் நாம் தமதூரில் இருந்துக்கொண்டு உதவிகோருவதை, அழைப்பதை, எங்கோ கண்காணாத தூரத்தில் மறைவாக இருப்பவராகிய ஷாகுல் ஹமீது நாயகம் அறிகிறார் என்று நம்பிக்கை கொள்வது மேற்கண்ட இறைவசனங்களுக்கு முரணாக அமையாதா?
இது போல மேற்கூறிய நேர்ச்சையின் உதாரணத்திலுள்ள ஷிர்க் மற்றும் மார்க்கத்திற்கு முரணான காரியங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். விரிவுக்கு அஞ்சி நிறுத்திக்கொள்கிறேன்.
எனவே சகோதரர்களே! நேர்ச்சை என்பது ஒரு வணக்கம் என்பதையும் அதை அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யவேண்டும் என்பதையும் உணர்ந்துக் கொள்ளவேண்டும். மேலும் அவை மார்க்கம் அனுமதித்த வகையில் இருக்க வேண்டும். மார்க்கம் அனுமதிக்காத வழிகளில் நேர்ச்சை செய்திருந்தால் அதை நிறை வேற்றத் தேவையில்லை. உதாரணமாக மேற்கண்ட நேர்ச்சையில் ஒருவர் நேர்ச்சை நிறைவேறிவிட்டால் நாகூர் தர்ஹாவிற்கு செல்வதாக நேர்ச்சை செய்தார். ஆனால் இந்த நேர்ச்சையின் செயல், ‘மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜதுந் நபவி மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய இம்மூன்று இடங்களைத் தவிர வேறெங்கும் நன்மையை நாடி பிரயாணம் செய்யக்கூடாது’ என்ற நபிமொழிக்கு மாற்றமானது ஆகும்.
மேலும், ஒருவர் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்திருந்தால் அவர் அதை கண்டிப்பாக நிறைவேற்றியே ஆகவேண்டும். ஏனென்றால் அல்லாஹ் கூறுகின்றான்:
“நல்லவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள்” (அல்குர்ஆன்: 76:7)
நேர்ச்சை குறித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழி:
“நேர்ச்சையானது விதியில் எழுதப்படாத எந்த ஒன்றையும் மனிதனிடம் கொண்டு வந்து விடாது. மாறாக, அவனுக்கு எழுதப்பட்ட விதியின் பக்கமே நேர்சை அவனைக் கொண்டு செல்கிறது. நேர்ச்சை செய்வதன் மூலம் கஞ்சனிடமிருந்து இறைவன் (செல்வத்தை) வெளிக்கொணர்கிறான். இதற்கு முன் எந்தக் காரணத்திற்காக (ஏழைக்கு) அவன் வழங்காமல் இருந்தானோ அதே காரணத்திற்காக (இப்போது) வழங்கத் தொடங்கி விடுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்)
ஒருவர் அல்லாஹ்வுக்கு அல்லாமல் வேறெருவருக்காக, அதாவது அவுலியாவுக்கோ அல்லது நபிமார்களுக்கோ செய்துவிட்டார்; ஆனால் இப்பொது உண்மையை உணர்ந்துவிட்டார். இப்போது என்ன செய்ய வேண்டும்?
இதற்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையில் விடையிருக்கின்றது:
“அல்லாஹ்வுக்கு வழிபடும் காரியத்தில் ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை அவர் நிறைவேற்றி) அவனுக்கு அவர் வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் காரியத்தில் ஒருவர் நேர்ச்சை செய்திருந்தால் (அதை நிறைவேற்றி) அவனுக்கு அவர் மாறு செய்ய வேண்டாம்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்” ஆதாரம் புகாரி, திர்மிதீ நஸயீ.
முடிவாக மேற்கண்ட விளக்கங்களின் மூலமாக நாம் அறிந்தது என்னவென்றால்,
நேர்ச்சை என்பது மார்க்கத்தில் அனுமதிக்கபட்ட ஒன்று
நேர்ச்சையை அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யவேண்டும்
அல்லாஹ்வுக்கு அல்லாத வேறொருவருக்கு நேர்ச்சை செய்தால் அது இறைவனால் என்றுமே மன்னிக்கப்படமாட்டாத ”ஷிர்க்” என்னும் மாபெரும் பாவமாகும் (அல்-குர்ஆன் 4:116)
ஒருவர், அல்லாஹ்வுக்காக மார்க்கம் அனுமதிக்கின்ற வகையில் நேர்ச்சை செய்திருந்தால் அதை அவசியம் நிறைவேற்றியே ஆகவேண்டும்
அல்லாஹ்வுக்கு மாறு செய்கின்ற விதத்தில் ஒருவர் நேர்ச்சை செய்திருந்தால் அதை நிறைவேற்றத் தேவையில்லை
இறுதியாக, நேர்ச்சையானது விதியில் எழுதப்படாத எந்த ஒன்றையும் மனிதனிடம் கொண்டு வந்து விடாது. மாறாக அவனுக்கு எழுதப்பட்ட விதியின் பக்கமே நேர்சை அவனைக் கொண்டு செல்கிறது. நேர்ச்சை செய்வதன் மூலம் கஞ்சனிடமிருந்து இறைவன் (செல்வத்தை) வெளிக்கொணர்கிறான்” என்ற நபிமொழியை அறிய முடிகிறது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
posted by: புர்ஹான், சவூதி அரேபியா