அபூ ரிஸ்வான்
[ ”மேலும் அவர்கள் (உண்மையான அடியார்கள்) செலவு செய்யும் போது வீண்விரயமும் கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக அவர்களுடைய செலவுகள் இந்த மிதமிஞ்சிய இரு நிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும்‘ (அல்–குர்ஆன், அல்–ஃபுர்கான் 25:67)
”உறவினர்களுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்க்குரிய உரிமையை வழங்கிவிடும். ஆனால் வீண் செலவு செய்யாதீர்! நிச்சயமாக வீண் செலவு செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர். ஷைத்தானோ தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கொன்றவனாய் இருக்கின்றான்” (அல்–குர்ஆன், பனூ இஸ்லாயீல் 17:29)]
பணிகளுக்கு செல்லும் ஆண்களும் பெண்களும் ரொக்கமாக கொடுத்து பொருள்களை வாங்க முடியாவிட்டால் தங்களது கிரெடிட் கார்டு (credit card) மூலம் பொருள்களை வாங்க முற்படுகிறார்கள். கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் பொருள்களுக்கு உண்டான தொகையை அடுத்த மாதத்திற்குள் கிரெடிட் கார்டு பெற்றுக் கொண்ட வங்கியில் செலுத்தத் தவறினால் அதற்கு மிக அதிக சதவீதம் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும்.
அமெரிக்காவில் கிரெடிட் கார்டுகள் மூலம் பொருள்களை கணக்குவழக்கில்லாமல் வாங்கிக் குவித்து முழுமையாக திவாலானவர்கள் (Bankrupcy) பல லட்சம் பேர்கள்! இருப்பினும் உடனே ரொக்கத்தை கொடுக்காமல் நினைத்த பொருள்களை வாங்க முடிகிறதே என்ற எண்ணத்தில் பொருள்களை தேவைப்படாவிட்டாலும் வாங்கிவைத்துக் கொள்பவர்கள் ஏராளமாக இருக்கத்தான் செய்கின்றார்கள்.
மிகப்பெரும் செல்வந்தர்களும் அவர்களின் குடும்பத்தினர்களும் தங்களுக்குப் பிடித்தமான பொருள்களை வாங்கி அனுபவிக்க எத்தகைய செலவையும் செய்யத்தயாராக இருக்கிறார்கள். உலகப்புகழ் (?) ஷாப்பஹாலிக்குகளில் சிலருடைய பெயர்கள் சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அவர்களின் பெயர்கள் – மேரி ஆன்டாய்னெட் (Marie Antoinette), மேரி டோட் லிங்கன் (Mary Todd Lincon), வில்லியம் ரண்டால்ப் ஹீஸ்ட் (William Randolph Hearst), ஜாக்குலின் கென்னடி ஒனாயிஸ் (Jacqualine Kennedy Onasis), இமால்டா மார்கோஸ் (Imelda Marcos) மற்றும் இளவரசி டயானா (Princess Diana) என்பவர்களாகும்.
இவர்களின் விபரீத ஆசைகள் (addiction), விதவிதமான உடைகள் (ஜாக்குலின், டயானா), கலைப்பொருள்களும், பழங்காலப் பொருட்களும் (art & antiques) – (ஹீஸ்ட்), காலனிகளும் (shoes) ”இமால்டா” பிலிப்பைன்ஸ் (Philiphines) நாட்டு சர்வாதிகாரி மார்கோஸின் மனைவி இமால்டா மார்கோஸ் வசித்த மாளிகையில் சோதனையிட்ட காவலர்கள், (மார்கோஸை புரட்சியின் மூலம் நாட்டைவிட்டு துரத்திவிட்டு) இமால்டாவின் காலனிகளின் மொத்த எண்ணிக்கையாக 8000 ஜோடிகள் இருந்ததாகக் கண்டார்கள் என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு இருந்தன. இதையெல்லாம் பார்க்கும் போதும் இப்படிப்பட்ட வாங்கும் பைத்தியங்கள் கூட உலகில் இருந்திருக்கிறார்களா என்று நாம் வியப்புறத் தோன்றும்.
இன்றும் சில கொழுத்த பணக்காரர்கள் உலகில் பலநாடுகளில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு விஷேசமான பொருட்களை (rare items) சேகரித்து வைத்துக் கொண்டு அழகுபார்ப்பது ஒரு பொழுது போக்கு அல்லது ஓய்வு நேரப்பணி (hobby) ஆகும். இப்படி சேகரிப்பவர்களிடம் உள்ள பொருள்களின் வகைகளுக்கு அளவே இல்லை.
சிலர் பழையகாலத்து மோட்டார் வாகனங்களை (antique cars) சேகரிக்கிறார்கள்! சிலர் பழைமை கால கைக்கடிகாரங்களையும், சுவர் கடிகாரங்களையும் மேலும் சிலர் வகைவகையான மோட்டார் சைக்கிள்களையும், இன்னும் சிலர் தங்கம், வைரங்கள் பதிக்கப்பட்ட முட்டையையும் (நிஜ முட்டையல்ல – அலங்காரப் பொருள்) (Eggs), மேலும் சிலர் பழங்காலம் முதல் நிகழ்காலம் வரை வெளியிடப்பட்ட கரண்ஸி நோட்டுகள் மற்றும் நாணயங்களையும், சேகரித்து வருகிறார்கள். இன்னும் சிலருக்கு புத்தகங்கள் , சிலைகள், இசைக் கருவிகள், ரிக்காட்டுகள் என்று எண்ணிலடங்காத சேகரிக்கும் பொருள்கள் (collector’s items) உள்ளன.
சிகெரெட் லைட்டர்ஸ் (cigarette lighters) முதல், தீப்பெட்டிவரை (match boxes) சேகரிக்கும் பொருள்களாக உள்ளது. இப்பொருட்கள் சிலசமயம் மிகப்பெரும் தொகைக்கு இன்னொரு சேகரிப்போரால் (collector) வாங்கிக்கொள்ளப்படுகிறது. பெரும்பாலான சமயங்களில் இப்படிப்பட்ட சேகரிப்போருக்கு மனஉள்திருப்தியைத் தவிர வேறொன்றும் கிடைப்பதில்லை. பொருளாதார நஷ்டம் ஏற்பட்டதுதான் கைமேல் கண்டபலன்.
இப்படிப்பட்ட ஷாப்பஹாலிக்குகளாய் இருந்தாலும், மற்றும் ஒரே வகையானவைகளை சேகரிப்பவராக இருந்தாலும் இஸ்லாம் இவர்களுக்கு என்ன அறிவுரை வழங்குகிறது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
திருக்குர்ஆனில் வல்ல இறைவன் தன் உண்மையான அடியார்களைப் பற்றி கூறும் பொழுது பின்வருமாறு கூறுகிறான்:
”மேலும் அவர்கள் (உண்மையான அடியார்கள்) செலவு செய்யும் போது வீண்விரயமும் கஞ்சத்தனமும் செய்வதில்லை. மாறாக அவர்களுடைய செலவுகள் இந்த மிதமிஞ்சிய இரு நிலைகளுக்கிடையில் மிதமானதாக இருக்கும்‘ (அல்–குர்ஆன், அல்–ஃபுர்கான் 25:67)
இத்திருவசனத்திலிருந்து இறைவன் ”வீண்விரயம் செய்வோரையும்” ”கஞ்சத்தனம் செய்வோரையும்” தன் உண்மையான இறை நம்பிக்கையாளராய் ஏற்றுக்கொள்வதில்லை என்று கண்டோம்.
இன்னொரு திருவசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்:
”உமது கையை கழுத்தோடு சேர்த்துக் கட்டிவிடாதீர்; முற்றிலும் அதனை விரித்து விடாதீர். அப்படிச் செய்தால் பழிப்புக்குரியவராகவும், இயலாதவராகவும் நீர் ஆகிவிடுவீர்” (அல்–குர்ஆன், பனூ இஸ்லாயீல் 17:29)
”ஊதாரித்தனமாக செலவு செய்பவர்களை” குறிப்பிடும் பொழுது அல்லாஹ், ”கையை முற்றிலும் விரித்துவிட்டவர்” என்று உவமானத்தோடு குறிப்பிடுகின்றான். இவர்கள் முதலில் பழிப்பிற்குரியவர்களாகவும், பின்னர் எதுவும் கொடுக்க அல்லது வாங்க இயலாதவராகவும் ஆகிவிடுவார் என்பது கண்கூடாக காண்பதாகும்.
பிறிதொரு இறைவசனத்தில் ”வீண்விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்கள்” என்று குறிப்பிட்டு ஷைத்தானாகவே அடையாளம் காட்டுகின்றான். அத்திருவசனம் பின்வருமாறு உள்ளது:
”உறவினர்களுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்க்குரிய உரிமையை வழங்கிவிடும். ஆனால் வீண் செலவு செய்யாதீர்! நிச்சயமாக வீண் செலவு செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர். ஷைத்தானோ தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கொன்றவனாய் இருக்கின்றான்” (அல்–குர்ஆன், பனூ இஸ்லாயீல் 17:29)
வீண் விரயம் செய்யாதீர்கள், அப்படி செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாவர் என்று கூறுவதற்கு முன்னர், இறைவன் தன் அடியானுக்கு கொடுத்திருக்கும் பொருளாதாரத்திலிருந்து உறவினர்களுக்கும், வரியவர்களுக்கும், மேலும் வழிப்போக்கர்களுக்கும் உரிய பங்கினை வழங்கிவிடுமாறு அறிவுரை பகர்கின்றான். இதில் கடமையாக்கப்பட்ட ஜக்காத்தும், உபரியாக செய்யும் தான தர்மங்களும் (ஸதகாவும்) அடங்கும். ஒவ்வொரு முஸ்லிமும் தனது செல்வ நிலைக்கேற்ப கணக்குப் பார்த்து ஜகாத்தும், அதற்கு மேலாக சதகாவும் வருடாவருடம் கொடுத்து வருவாரேயானால் அவரை இறைவன் வீண் செலவுகள் செய்து ஷைத்தானின் சகோதரனாக ஆவதைவிட்டும் பாதுகாப்பான்.
ஆனால் நிலைமை இன்று எவ்வாறு இருக்கிறது என்று பார்த்தால், அதிகமாக வீண் செலவு செய்பவர்கள் ஜக்காத் கொடுக்காதவர்களாகவும், மற்ற தானதர்மங்களைச் செய்யாதவர்களாகவும் தான் இருக்கிறார்கள். அவர்கள் சம்பாதிக்கும் செல்வங்களையெல்லாம் தனது ஆடம்பர வாழ்க்கைக்கும், அலங்கார பொருட்களுக்கும் தேவைக்குமேல் வாங்கிக் குவிக்கும் சாதனங்களுக்கும் செலவிடப்படுவதால் சேமிப்பு என்பது பூஜ்ஜியமாக இருக்கிறது.
ஒரு முஸ்லிமுக்கு தனது செலவுக்குப் போக மீதம் சேமித்த தொகை அவனிடம் ஒரு வருடம் பணமாகவோ அல்லது விற்பனைக்கு இருக்கும் நிலம் போன்றவைகளாகவோ இருந்தால் தான் ஜக்காத் கடமையாகிறது. ஆனால் தன் ஆடம்பரச் செலவுகளாலும் வீண் செலவுகளாலும் பணத்தை அழிக்கும் ஒருவர் ஜக்காத் கொடுக்க எப்படி முடியும்? அப்படி கொடுத்தாலும் மிகக்குறைவாகவே கொடுப்பார்; கணக்குப் பார்த்துக் கொடுக்கமாட்டார். ஆகையால் தான் அவரை ”ஷைத்தானின் சகோதரராய்” இறைவன் வர்ணிக்கின்றான்.
இஸ்லாம் ஒரு பூரணப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறியாக இருப்பதால் இறைவன் தனது அடியானுக்கு ”தன்மேல் நம்பிக்கை கொண்ட இறைநம்பிக்கையாளனுக்கு – வீண் செலவு செய்தல் மற்றும் பொருள்களை வீண் விரயம் செய்வதை முற்றாக தடுத்துக் கொள்ளவேண்டும் என்று அறிவுரை பகர்கின்றான்.
ஒரு முஸ்லிம் வீண்செலவை கட்டுப்படுத்திக் கொள்ள இந்த ஒரு அறிவுரையே போதும். ஒரு முஸ்லிம் ஊதாரித்தனமாய் வீண் செலவு செய்யாமலும், கஞ்சத்தனமாய் செலவு எதுவும் செய்யாமலும் இருக்கக்கூடாது. இதற்கு இடைப்பட்ட நிலையில்” மிதமாக செலவு செய்வதுதான் ஒரு முஸ்லிம் தனக்கும், தன் குடும்பத்திற்கும், ஏன் தன் நாட்டிற்கும் நன்மைகளை பெறமுடியும்.
வீண் செலவு செய்து தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பதால் ஒருவனின் பொருளாதாரம் மட்டும் அழிவதில்லை. மாறாக இப்படிப்பட்ட மக்கள் பல ஆயிரம் பேர்கள் இருந்தால் ஒரு நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்.
அபூ ரிஸ்வான் (Kuttukkal Mohamed Jaffarullah, M.Tech, Koothanallur)