‘‘தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக!
இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்!
நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ அவனுக்குக் கட்டுப்படாதீர்!
அவன் தனது மனோஇச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது’ (அல்குர்ஆன் 18:28)
காலையிலும் மாலையிலும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் கூட்டத்தாருடன் இருக்குமாறும், மனோ இச்சையைப் பின்பற்றியவனுக்குக் கட்டுப்பட வேண்டாம் எனவும் இவ்வசனம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கட்டளையிடுகிறது.
இறைவனைக் காலையிலும் மாலையிலும் பிரார்த்தனை செய்யும் கூட்டத்தார் எனக் குறிப்பிடப்படுவோர் இவ்வுலகின் புகழ் வசதி வாய்ப்புகள் இல்லாதவர்களாக இருந்தனர் எனவும் மனோ இச்சையைப் பின்பற்றியோர் செல்வமும் செல்வாக்கும் பெற்றவர்களாக இருந்தனர் எனவும் இந்த வசனத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. இவ்வுலகின் கவர்ச்சியின்பால் உமது கண்களைத் திருப்ப வேண்டாம் என்ற சொற்றொடரிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
இது போன்ற கருத்தை 6:52 வசனமும் கூறுகின்றது.
‘‘(முஹம்மதே!) தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும் மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அந்த இழைத்தவராவீர்!’ (அல்குர்ஆன் 6:52)
இவ்வசனத்தில் காலையிலும் மாலையிலும் இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களை விரட்டியடிக்க வேண்டாம் எனவும் அவ்வாறு விரட்டியடித்தால் அநீதி இழைத்தவராவீர் எனவும் கூறப்படுகின்றது.
இது போன்ற கருத்து மேலும் இரண்டு வசனங்களிலும் கூறப்பட்டுள்ளது.
‘‘அவர்களில் பல்வேறு கூட்டத்தினர் அனுபவிப்பதற்காக நாம் வழங்கியுள்ளதை நோக்கி உமது கண்களை நீட்டாதீர்! அவர்களுக்காகக் கவலைப்படாதீர்! நம்பிக்கை கொண்டோரிடம் உமது சிறகைத் தாழ்த்துவீராக!‘‘ (அல்குர்ஆன் 15:88)
‘‘(முஹம்மதே!) சோதிப்பதற்காக அவர்களில் சிலருக்கு நாம் வழங்கிய இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கி உமது கண்களை நீட்டாதீர்! உமது இறைவனின் செல்வம் சிறந்ததும் நிலையானதுமாகும்‘‘ (அல்குர்ஆன் 21:131)
சாமான்யர்களையும் ஏழைகளையும் அடிமைகளையும் செல்வந்தர்களுக்காக செல்வாக்குடையோருக்காக இழந்து விடக் கூடாது என்பது இவ்வசனங்கள் கூறும் சாராம்சம்.
இது எந்தச் சந்தர்ப்பத்தில் கூறப்பட்ட அறிவுரை என்பதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நான், இப்னு மஸ்வூத், ஹுதைல் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர், பிலால் மற்றும் இருவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அவ்விருவரின் பெயரை நான் மறந்து விட்டேன். அப்போது இணை வைப்பவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தனர். ‘இவர்களை விட்டு விடுவீராக! இல்லாவிட்டால் எங்கள் விஷயத்தில் இவர்களுக்கு துணிச்சல் வந்து விடும்’ என்று கூறினார்கள்.
அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உள்ளத்தில் எது ஏற்பட வேண்டும் என்று அல்லாஹ் நாடினானோ அது ஏற்பட்டு விட்டது. அப்போது தான் இந்த (6:52) வசனம் அருளப்பட்டது என்று ஸஃது பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (நூல் : முஸ்லிம் 2413)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எதிர்த்தவர்களுக்கு நபிகளார்மீது நம்பிக்கை இருந்தது. நாற்பது வருடங்களாக அவர்களின் அப்பழுக்கற்ற வாழ்க்கையைப் பார்த்த அம்மக்கள் இறைத்தூதர் என்று முஹம்மது பொய் சொல்கிறார் என நினைக்கவில்லை.
அவர்களிடம் உள்ள முக்கியமான தயக்கம் காலாகாலம் கட்டிக்காத்து வந்த சாதி அமைப்பை இவர் உடைத்தெறிகின்றார். உயர் குலத்தைச் சேர்ந்த இவர் இழிகுலத்தைச் சேர்ந்தவர்களைத் தம்மோடு சமமாக அமர வைக்கின்றார். இவரோடு நாமும் சேர்ந்தால் அனைவரையும் சமமாக ஆக்கி விடுவார் என்ற அச்சம் தான் நபிகள் நாயகத்தை ஏற்பதற்குப் பெரிய தடையாக அம்மக்களுக்கு இருந்தது.
எனவே தான் பலவீனர்களை விரட்டினால் அல்லது அவர்களுக்குத் தனி சபையையும் தங்களுக்குத் தனி சபையையும் ஏற்படுத்தினால் இஸ்லாத்தை ஏற்கத் தயார் என்று அவர்கள் கோரினார்கள்.
செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்கள் இஸ்லாத்தில் சேர்வது பலம் சேர்க்கும் என்று நினைத்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இதைச் சரி என நினைத்தார்கள். இஸ்லாத்தை ஏற்ற பின் அவர்களைப் பக்குவப்படுத்திக் கொள்ளலாம் என்பது இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு நினைத்தார்கள் என்பதை மேற்கண்ட முஸ்லிம் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஆனால் இறைவனுக்கு அதில் உடன்பாடில்லை. இஸ்லாத்தை ஏற்பதாக இருந்தால் அனைவரும் சமம் என்ற அடிப்படையையும் சேர்த்து ஏற்றாக வேண்டும். தமக்கு வசதியானதை மட்டும் ஏற்று மற்றதை ஏற்க மறுப்பவர்களுக்காக வளையத் தேவையில்லை. அவர்கள் வரத் தேவையில்லை என்பது தான் அல்லாஹ்வின் நிலையாக இருந்தது.
எனவே தான் இவ்வசனங்களில் கடுமையாகவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் எச்சரிக்கிறான். ஏற்கனவே முழு இஸ்லாத்தை ஏற்றவர்களுடன் தான் இருக்க வேண்டுமே தவிர பாதி இஸ்லாத்தை ஏற்பதாகக் கூறுவோரின் செல்வம் செல்வாக்கு போன்றவற்றால் கவரப்பட்டுவிட வேண்டாம் என்று கண்டிக்கிறான்.இதே போல் மற்றொரு சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைவன் கண்டிக்கிறான்.
அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற தோழர் நபிகள் நாயகத்திடம் வந்தார். எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இணை வைப்பவர்களில் முக்கியப் பிரமுகர் ஒருவர் இருந்தார். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தப் பார்வையற்ற தோழரைப் புறக்கணித்து விட்டு, முக்கியப் பிரமுகரின் பால் கவனம் செலுத்தினார்கள். ‘நான் கூறுவதில் தவறேதும் காண்கிறாயா?’ என்று அந்தப் பிரமுகரிடம் நபியவர்கள் கேட்க, அவர் இல்லை என்று கூறினார். அப்போது தான் அல்குர்ஆன் 80வது அத்தியாயம் 1 முதல் பத்து வரையிலான வசனங்கள் அருளப்பட்டன. (நூல்கள் : திர்மிதி 3452,3328, முஸனத் அபூயஃலா 4848)
தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர். (அல்குர்ஆன் 80:1-10)
ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்ற பலவீனரை விட இஸ்லாத்தை ஏற்காதவர் பிரமுகர் என்பதற்காக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முக்கியத்துவம் அளித்தார்கள் என்பதால் எவ்வளவு கடுமையான சொற்களால் இறைவன் கண்டிக்கிறான் என்பதைக் காணும் போது இணை வைத்தலுக்கு அடுத்த படியாக குலத்தால் உயர்வு கற்பித்தல் இறைவனுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தும் காரியம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே இந்த விஷயத்திற்காக மிகவும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளதால் தான் முஸ்லிம்கள் சாதி, குலம், நிறம், மொழி, இனம், தேசம் போன்ற காரணங்களால் மனிதர்களுக்கிடையே உயர்வு தாழ்வு கற்பிப்பதைக் காண முடியவில்லை. எத்தனையோ சட்டங்கள் போட்டு ஒழிக்க முடியாத தீண்டாமையை அடியோடு ஒழித்துக் கட்டியதற்கு இத்தகைய கடுமையான நிலைபாடே காரணமாக இருக்கின்றது.
சாதாரண மக்களுக்காக தனது தூதரையே இறைவன் கண்டிக்கிறான் என்பதால் தான் மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பித்தல் கூடாது என்பது முஸ்லிம்களின் இரத்தங்களில் இரண்டறக் கலந்து விட்டது.
நபிகள் நாயகத்தின் மரியாதையை இவ்வசனங்கள் குறைப்பதாக சிலர் நினைக்கலாம். நிச்சயமாக இது தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மதிப்பை உயர்த்தியது எனலாம்.
திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து தமக்கு வருவதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அவர்கள் கற்பனை செய்து இறை வேதம் எனக் கூறியிருந்தால் தம்மை இவ்வளவு கடுமையாகக் கண்டிக்கும் வசனங்களை இட்டுக் கட்டியிருக்க முடியாது. அவர்களின் மரியாதையைப் பாதிக்கும் கண்டனங்களையும் மக்கள் மத்தியில் அவர்கள் வைத்ததில் இருந்து குர்ஆன் இறைவனின் செய்தி தான் என்பது ஊர்ஜிதமாகின்றது. குர்ஆன் இறைச் செய்தி என்பது ஊர்ஜிதமாகும் போது நபிகள் நாயகம் இறைவனின் தூதர் தாம் என்பதும் உறுதியாகின்றது.