குடும்பத்தில் ஆண்களின் பங்கு
அஹமது பாகவி
[ சமுதாயக் காவலர்களாய் அல்லாஹ்வின் அழகிய அரிய பிரதி நிதிகளாய் படைக்கப்பட்ட நம் இஸ்லாமிய ஆண்கள் கடமை பொறுப்புணர்ந்து செயல்பட்டால் குடும்பம் ஒரு மார்க்க பூஞ்சோலையாகும்.
ஒரு மனிதன் மகனுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது அதிகமாக தான் தருமம் செய்வதை விட சிறந்ததாகும்.” நபிமொழி.
ஒரு கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கை நடத்தும் ஒருவன் தனது மனைவிக்கும், தாய் தந்தை, சகோதரர், சகோதரி ஆகியோருக்கு மத்தியில் பிணக்கு ஏற்பட்டால் அப்போது எந்த பக்கமும் வளைந்து விடாமல் நீதியின் சின்னமாய், தராசின் முள்ளாய் நிலமையைச் சமாளிக்க வேண்டும் என்ற கருத்தை இறைவசனம் எடுத்தோதுகிறது.
இறை விசுவாசிகளில் நிறையுடையோர் பற்றிக் குறிப்பிட்ட பெருமானார் அவர்கள் அழகிய நற்குணமும், எல்லோரிடமும் இனிமையாக நடந்து கொள்ளும் ஆண் மகனே இறைவிசுவாசிகளில் நிறையுடையோன் என குறிப்பிட்டார்கள்.]
هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ
”அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்” (2:187)
என்று ஆண்களை நோக்கி கூறுகிறான் இறைவன். மானத்தை காக்கும் ஆடையாய் ஒருவருக்குகொருவர் இருங்கள் என்ற இறைவனின் வாக்கு ஆண்பெண்ணுக்கும், பெண்ஆணுக்கும் பாதுகாவலர் என்பதை அழகாகக் கூறுகிறது.
சமுதாயத்தின் ஆரம்பப்பள்ளியான குடும்பத்தில் ஆண்களின் பங்கு என்ன என்பதைப் பற்றி காண்போம். ”குடும்பம்” என்பது ஆண், பெண் அல்லது கணவன், மனைவி இரு சாராரையும் பின்னிப் பிணைந்த ஒன்றின் பெயராகும்.
பெண் துணையின்றி ஆண் மட்டுமோ ஆண் துணையின்றி பெண் மட்டுமோ சீராக நடத்த முடியாத ஒன்றின் பெயரே ”குடும்பம்” என்று சொன்னாலும் மிகையாகாது. ஏனெனில் இருவரும் குடும்பம் என்ற கூட்டமைப்பில் ஒருவரை விட்டு மற்றொருவர் பிரித்துப் பார்க்க முடியாத கலவையாவர்.இருப்பினும், இந்த உறவில், ஒவ்வொருவருக்கும் அவரவருக்கேற்ற கடமைகளயும், உரிமைகளயும் இஸ்லாம் அளித்துள்ளது.
குடும்பத்தை நிர்வகித்து வழி நடத்திச் செல்லும் சீரிய பொறுப்பு ஆணின் மீது சுமத்தப்பட்டுள்ளதாக.
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاء
”ஆண்கள் பெண்களின் நிர்வாகிகளாவார்” என்ற இறைவசனம் எடுத்துக் காட்டுகின்றது. மேலாண்மைப் பொறுப்பு வகிக்கும் ஆண் தனக்கு எல்லாவித அதிகாரங்களும் உண்டு என்று கொடுங்கோலனாக மாறி விடக்கூடாது. இதனையே நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
خِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ
உங்களில் எவர் தமது மனைவியின் அன்பைப்பெற்று அவரிடம் தாம் நல்லவர்என்ற பெயரைப் பெறுகிறாரோ அவரே உங்களில் உயர்ந்தவர். சிறந்தவர்” என்று உரைக்கிறார்கள்.(அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ர், ஆதாரம்: அபூதாவூது 2054)
உலக மாந்தர் அனைவரும் ஒப்பற்ற வழி காட்டியாகவும். அழகிய முன் மாதிரியாகவும் திகழும் அண்ணலார் அவர்கள் தன் குடும்ப வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடும் போது. ”நான் எனது மனைவியர்களிடம் நல்லவன்” என்ற பெயரைப் பெற்றுள்ளேன் என்று கூறி தம்மையே இதற்கும் முதல் உதாரணமாக எடுத்துக் காட்டுகின்றான். மேலும்,
لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَاطِع
குடும்ப உறவை முறிப்பவன் சுவனம்புக மாட்டான் (புகாரி: 5984)
என பெருமானார் அவர்கள் கூறியதாக ஹதீஸ் நூற்கள் புகாரி, முஸ்லீம் அறிவிக்கின்றன.
தனது மனைவியின் ஒழக்க மேம்பாட்டில் ஒரு ஆணிற்கு இருக்கும் உண்மையான பங்கு மகத்தானது என்பதை ஏற்றுக் கொள்ளும் இஸ்லாம், மனைவியிடம் தான் விரும்பாத ஒன்றைக் காணும் போது நான்கு பேருக்கு மத்தியில் அதைச் சுட்டிக் காட்டுதல் கணவனின் அத்து மீறல் என்று கண்டிக்கும் வகையில் மனைவியரை பழிக்க வேண்டாம். குறை கண்டால் அதை வீட்;டிலேயே சரி செய்து கொள்ள வேண்டும் என உணர்த்துகிறது.
மனைவியிடம் தான் வெறுக்கும் குணங்களைக் கண்டு ”மனம் நொந்து நிற்கும்” கணவனை, மனைவியிடம் காணும் நல்ல பண்புகளை எண்ணி மனநிறைவு கொள்ள வேண்டும் என அறிவுரை கூறுகிறது. நாயகமே! ஒரு கணவன் தனது மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? என்று நாயகத் தோழர் வினவியபோது ”நீ உணவு உண்ணும் போது அவளையும் உண்ணச் செய்ய வேண்டும். உனக்கு புத்தாடைகள்ள வாங்கிடும் போது மனைவியை எண்ணிப் பார்த்து அவளையும் புத்தாடை அணியச் செய்ய வேண்டும்.அவளை முகத்தில் அடிப்பதும், பழிப்பதும் கூடாது. வெறுப்புக்காட்டி கண்டிப்பது வீட்டில் மட்டுமே இருக்க வேண்டும்”. என்று விளக்கம் அளித்தார்கள்.
தனது மனைவி கண்ணுக்கு அழகாக காட்சி தர வேண்டும் என்று விரும்பும் கணவனைப் பார்த்து உனக்கு உள்ள அதே உணர்வும், அழகை அனுபவிக்கும் இயல்பும் பெண்ணுக்கு உண்டு என்று கூறி பரட்டைத் தலையினால் இருந்த ஒருவரை எண்ணெய் தேய்த்து சிகை அலங்காரம் செய்து கொள்ளச் செய்தார்கள்.
ஒரு கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கை நடத்தும் ஒருவன் தனது மனைவிக்கும், தாய் தந்தை, சகோதரர், சகோதரி ஆகியோருக்கு மத்தியில் பிணக்கு ஏற்பட்டால் அப்போது எந்த பக்கமும் வளைந்து விடாமல் நீதியின் சின்னமாய், தராசின் முள்ளாய் நிலமையைச் சமாளிக்க வேண்டும் என்ற கருத்தை இறைவசனம் எடுத்தோதுகிறது.
இறை விசுவாசிகளில் நிறையுடையோர் பற்றிக் குறிப்பிட்ட பெருமானார் அவர்கள் அழகிய நற்குணமும், எல்லோரிடமும் இனிமையாக நடந்து கொள்ளும் ஆண் மகனே இறைவிசுவாசிகளில் நிறையுடையோன் என குறிப்பிட்டார்கள்.
لأَنْ يُؤَدِّبَ الرَّجُلُ وَلَدَهُ خَيْرٌ مِنْ أَنْ يَتَصَدَّقَ بِصَاعٍ
”ஒரு மனிதன் மகனுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது அதிகமாக தான் தருமம் செய்வதை விட சிறந்ததாகும்.” நபிமொழி.
ஒரு தந்தையின் கடமை தனது மகனுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது, அறிவூட்டுவது, சொத்து சேர்த்து வைத்தல், திருமணம் செய்து வைப்பது போன்றவையாகும். கல்வியைக் கற்று கொடுப்பது தந்தை சமுதாயத்திற்குச் செய்யும் அரிய தொண்டாகும்.
சமுதாயக் காவலர்களாய் ஆண்டவனின் அழகிய அரிய பிரதி நிதிகளாய் படைக்கப்பட்ட நம் இஸ்லாமிய ஆண்கள் கடமை பொறுப்புணர்ந்து செயல்பட்டால் குடும்பம் ஒரு மார்க்க பூஞ்சோலையாகும். சமுதாயம் முன்னேறும். ஏன் உலகமே பயன் பெறும். இதற்கு இறைவன் அருள் புரிவானாக
source: http://albaqavi.com/home/?p=244