[ வெறும் 10 பேருந்துகள் வைத்திருக்கும் தனியார் பேருந்து நிறுவனங்களும், சுமார் 10 ஆம்னி பஸ்கள் வைத்திருக்கும் தனியார் நிறுவனங்களும் ஆண்டுதோறும் கோடிகோடியாய் சம்பாதிக்கும்போது, தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு, அதிலும் 20,000 பேருந்துகளையும் 1.3 லட்சம் ஊழியர்களையும் வைத்திருக்கும் நிறுவனத்துக்கு ஆண்டு லாபம் வரிகளுக்குப் பிறகு மிகச் சில கோடிகள் மட்டுமே.
அப்படியானால் மக்கள் அனைவரையும் இந்தப் பேருந்துகள் இலவசமாக ஏற்றிச் செல்கின்றனவா அல்லது தனியார் நிறுவனங்களைவிட குறைந்த கட்டணத்தில் ஏற்றிச் செல்கின்றனவா என்றால் அதுவும் கிடையாது. அப்படியானால் ஏன் இவ்வளவு குறைந்த லாபம்? மிகவும் நுட்பமாகப் பார்த்தால், இது பொன்முட்டையிடும் வாத்து. வாத்து உயிருடன் இருக்க வேண்டும் என்பதற்காக மிகக் குறைந்த லாபத்தில் இதைத் துடிப்போடு வைத்திருக்கிறார்கள்.
அரசு நிறுவனம் என்பதற்காக, பணத்தை அள்ளி வழங்கிக் கொண்டேயிருந்தால், போக்குவரத்துக் கழகத்தின் மூலமாக அரசுக்கு வருவாய் கிடைக்கவே கிடைக்காது என்றால், அரசு நிறுவனம் என்று சொல்லி நாம் கட்டியிழுப்பதில் எந்தப் பயனும் இல்லை.]
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் புதிய பேருந்துகள் வாங்க நிதிநிலை அறிக்கையில் ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத் தொகையை அனைத்துப் பேருந்துகளையும் எரிவாயுவால் இயங்கும்படி செய்வதற்கான ஊக்க மானியமாக போக்குவரத்துக் கழகத்துக்கு அளித்திருந்தால் அதற்காகத் தமிழக அரசைப் பாராட்டியிருக்கலாம்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் பொதுத்துறை நிறுவனம் என்றபோதிலும், அது தனது நிதியிலிருந்து புதிய வாகனங்களை வாங்குவதுதான் முறையாக இருக்கும். மேலும் பேருந்துகளைச் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக, எரிவாயுவில் இயங்கக்கூடியதாக, ஏன் சூரிய ஆற்றலில் இயங்கக்கூடியதாகவும்கூட, மாற்ற வேண்டிய தேவை தமிழகத்துக்கு இருக்கிறது.
பிகார் மாநில அரசின் 2010-11-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு- டிராக்டர்கள், டிரைலர்கள் நீங்கலாக- கூடுதல் வரியை விதித்துள்ளார்கள். பாட்டரியில் இயங்கும் வாகனங்கள், எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களுக்கு வரி பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நடைமுறைதான் இன்று தமிழக அரசுக்குத் தேவையாக இருக்கிறது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் அனைத்துப் பேருந்துகளையும் எரிவாயுவால் இயங்கும் நடைமுறை மாற்றத்தை ஏற்படுத்த அரசு ஊக்கப்படுத்தலாமே தவிர, புதிய பேருந்துகள் வாங்க ரூ. 250 கோடி மக்கள் பணத்தை எடுத்துக் கொடுப்பது சரியல்ல. போக்குவரத்துக் கழகத்தை மேம்படுத்தத்தானே அரசு நிதிஒதுக்கீடு செய்துள்ளது என்று சொல்லலாம். ஆனால், போக்குவரத்துக் கழகம் தனது லாபத்தின் மூலம் வாகனங்களை வாங்க வேண்டுமே தவிர, மக்கள் பணத்தைப் பெற்று பேருந்துகள் வாங்குவது முறையாக இருக்குமா என்ற கேள்வி எழவே செய்கிறது.
வெறும் 10 பேருந்துகள் வைத்திருக்கும் தனியார் பேருந்து நிறுவனங்களும், சுமார் 10 ஆம்னி பஸ்கள் வைத்திருக்கும் தனியார் நிறுவனங்களும் ஆண்டுதோறும் கோடிகோடியாய் சம்பாதிக்கும்போது, தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு, அதிலும் 20,000 பேருந்துகளையும் 1.3 லட்சம் ஊழியர்களையும் வைத்திருக்கும் நிறுவனத்துக்கு ஆண்டு லாபம் வரிகளுக்குப் பிறகு மிகச் சில கோடிகள் மட்டுமே. போனஸ் தரவேண்டிய நேரத்தில், நஷ்டம் என்றுகூடச் சொல்வதுண்டு.
அப்படியானால் மக்கள் அனைவரையும் இந்தப் பேருந்துகள் இலவசமாக ஏற்றிச் செல்கின்றனவா அல்லது தனியார் நிறுவனங்களைவிட குறைந்த கட்டணத்தில் ஏற்றிச் செல்கின்றனவா என்றால் அதுவும் கிடையாது. அப்படியானால் ஏன் இவ்வளவு குறைந்த லாபம்? மிகவும் நுட்பமாகப் பார்த்தால், இது பொன்முட்டையிடும் வாத்து. வாத்து உயிருடன் இருக்க வேண்டும் என்பதற்காக மிகக் குறைந்த லாபத்தில் இதைத் துடிப்போடு வைத்திருக்கிறார்கள்.
அரசு நிறுவனம் என்பதற்காக, பணத்தை அள்ளி வழங்கிக் கொண்டேயிருந்தால், போக்குவரத்துக் கழகத்தின் மூலமாக அரசுக்கு வருவாய் கிடைக்கவே கிடைக்காது என்றால், அரசு நிறுவனம் என்று சொல்லி நாம் கட்டியிழுப்பதில் எந்தப் பயனும் இல்லை. தமிழகத்தில் தனியார் பேருந்துகள் சிறப்பாகவே சேவை அளித்த காலத்தில், எந்தப் புகாரும் கூற முடியாத அந்த நாளிலேயே அந்த நடைமுறையை மாற்றி, அரசுப் போக்குவரத்துக் கழகத்தை உருவாக்கியவர் தமிழக முதல்வர் கருணாநிதி. திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகமும் தொடங்கப்பட்டது.
அதன் பிறகு, அதிமுக ஆட்சியில் ஜெஜெ பேருந்து நடைமுறைக்கு வந்தது. அதன் பிறகு எல்லா பேருந்துகளும் எல்லா அடைமொழிகளையும் உதறிவிட்டு, வெறுமனே அரசுப் பேருந்துகளாக மாறின. இத்தனை மாற்றங்களும் அரசியல் கட்சிகளின் விருப்பு வெறுப்புகளால் மட்டுமே நடைபெற்றன.
இன்றைய அவசியத் தேவை, மக்கள் கார்களிலும் இரு சக்கர வாகனங்களிலும் செல்வதைத் தவிர்த்து பொது வாகனங்களைப் பயன்படுத்தும்படி செய்வதுதான். இதன் மூலம் தனி நபருக்குச் சேமிப்பு ஏற்படும் என்பது மட்டுமல்ல, நாட்டுக்கும் மிகப் பெரிய சேமிப்பு ஏற்படும். சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும்.
பேருந்துகளை அதிகரிக்க வேண்டிய அதேநேரத்தில், இவை பசுமைச் சூழலுக்கு உகந்ததாக, எரிவாயு மற்றும் சூரிய சக்தியைப் பயன்படுத்துவதாக அமைந்தால், தமிழக மக்களில் 90 சதவீதம் பேர் நுரையீரல் தொடர்பான நோய்களிலிருந்து விடுபட முடியும். இத்தகைய ஊக்குவிப்பை மட்டுமே தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.
இத்தனை பேருந்துகள் வைத்திருந்தும் லாபம் சம்பாதிக்க முடியவில்லை என்றால் அதில் ஊழல் இருக்கிறது என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இருக்க முடியாது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் ஊழல் என்று அத்துறையின் அமைச்சர் மற்றும் அவர் சார்ந்தவர் வீடுகளில் சோதனை நடத்தி, அமைச்சரையும் சிறையிலிட்டார்கள். ஆனால், அதே முறைகேடுகள் இப்போதும் தொடர்ந்துகொண்டிருப்பதால்தான் அரசு போக்குவரத்துக் கழகத்தால் அதிக லாபம் ஈட்ட முடியவில்லை.
20,000 பேருந்துகளில்- அதுவும் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் வேளையில்- எந்த அளவுக்கு ஒரு போக்குவரத்துக் கழகம் சம்பாதிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்தவொன்று.
நிஜமாகவே போக்குவரத்துத் துறை நஷ்டத்தில்தான் இயங்குகிறது என்றால், அதை ஏன் அரசு தன் வசம் வைத்திருக்க வேண்டும்? பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்காக ரூ.300 கோடி கூசாமல் வாங்கிக்கொண்டு, பள்ளிக் குழந்தைகளை சாலையில் அலையவிடும் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு இன்னமும் மக்கள் பணத்தைக் கொட்டிக் கொடுத்துத்தான் தூக்கிப் பிடிக்க வேண்டுமா?
source: நன்றி: தினமணி