[ ஏற்கெனவே, நமது பொருளாதாரக் கொள்கையை அமெரிக்கா நிர்ணயிக்கத் தொடங்கிவிட்டது. நமது பாரம்பரிய விவசாயப் பொருள்களின் சத்துகளுக்கு அமெரிக்கா பெயர் சூட்டி, அந்தப் பொருள்களின் “உலகளாவிய காப்புரிமை” எனும் பெயரில் தனதாக்கிக் கொள்ள முயற்சித்துவிட்டது.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பயிரிடப்பட்டு இன்றளவும் உள்ள கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளுக்கு மரபணு மாற்றம் என்ற பெயரில் தீங்குமிக்கதாகப் பயிரிடச் செய்வதுடன், இந்திய விவசாய பூமியையே பாழ்படுத்தும் திட்டத்துக்கு இணங்கும் நிர்பந்த நிலைமை நேரிட்டுக் கொண்டிருக்கிறது.
அணுசக்திக் கொள்கையில் அமெரிக்காவுக்கு இந்தியா நிபந்தனைகள் விதிப்பதற்கு மாறாக, அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்கும் நிலை உருவாகி வருகிறது.
இந்தியாவில் அயல்நாட்டு மின்நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் அதற்கான நஷ்டஈடுக்கு உச்சவரம்பாக ரூ. 2,142.85 கோடி நிர்ணயித்து, அதில் ரூ. 1,642 கோடியை இந்திய அரசே செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுவதைச் சம்மதிக்கும் நிலை வந்துள்ளது.
இவையெல்லாம் வெளியே தெரியவந்துள்ள கட்டிகள், புண்களே! ஆனால், உள்ளுக்குள் அழுகி, புரையோடிப் போயுள்ளவை எவ்வளவோ! ]
வாணிபம் செய்வதற்காக இந்தியா வந்த ஆங்கிலேயர்கள், இங்கிருந்த நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களையும் சிற்றரசுகளையும் தந்திரமாக வசப்படுத்தி, ஆதிக்கமாக ஆட்சி நடத்தியதை அகற்றி சாதனை புரிந்திருப்பதாகப் பெருமைப்படுகிறோம்.
ஆனால், தற்போது அமெரிக்க ஆதிக்கத்துக்கு அவர்கள் விரிக்கும் வலையில் நமக்கு நாமே பெருமையுடன் சிக்கிக் கொள்கிற நிலை உண்டாகிக் கொண்டிருக்கிறது. “உலகமயமாக்கல்’ என்ற ஒரு டாம்பீகக் கொள்கையை “உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’ என்ற அடிப்படையில் ஓரளவு ஏற்பதில் தவறில்லை. இன்றைய விரைவான விஞ்ஞான வளர்ச்சிச்சூழலில் தேவையும்கூட.
ஆயினும், “கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவதுபோல’ முழுமையாக அதற்கு உள்படுவது முன்னிலும் கீழான அடிமை நிலையை நாமே ஏற்றுக் கொள்வதாகிவிடும். இருட்டுக் குகைக்குள் உழலும் குருட்டுப்பூனைகளாக ஆகிவிட வேண்டியிருக்கும்.
ஏற்கெனவே, நமது பொருளாதாரக் கொள்கையை அமெரிக்கா நிர்ணயிக்கத் தொடங்கிவிட்டது.
நமது பாரம்பரிய விவசாயப் பொருள்களின் சத்துகளுக்கு அமெரிக்கா பெயர் சூட்டி, அந்தப் பொருள்களின் “உலகளாவிய காப்புரிமை” எனும் பெயரில் தனதாக்கிக் கொள்ள முயற்சித்துவிட்டது.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பயிரிடப்பட்டு இன்றளவும் உள்ள கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளுக்கு மரபணு மாற்றம் என்ற பெயரில் தீங்குமிக்கதாகப் பயிரிடச் செய்வதுடன், இந்திய விவசாய பூமியையே பாழ்படுத்தும் திட்டத்துக்கு இணங்கும் நிர்பந்த நிலைமை நேரிட்டுக் கொண்டிருக்கிறது.
அணுசக்திக் கொள்கையில் அமெரிக்காவுக்கு இந்தியா நிபந்தனைகள் விதிப்பதற்கு மாறாக, அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்கும் நிலை உருவாகி வருகிறது.
இந்தியாவில் அயல்நாட்டு மின்நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் அதற்கான நஷ்டஈடுக்கு உச்சவரம்பாக ரூ. 2,142.85 கோடி நிர்ணயித்து, அதில் ரூ. 1,642 கோடியை இந்திய அரசே செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுவதைச் சம்மதிக்கும் நிலை வந்துள்ளது.
இவையெல்லாம் வெளியே தெரியவந்துள்ள கட்டிகள், புண்களே! ஆனால், உள்ளுக்குள் அழுகி, புரையோடிப் போயுள்ளவை எவ்வளவோ!
இந்நிலையில் இந்தியாவுக்குள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அமைச்சரவை. இந்தத் திட்டம் மசோதாவாகி அமலாகுமானால், வெளிநாட்டினர் நேரிடையாகக் கல்வி நிறுவனங்களை எட்டு மாதத்துக்குள் தொடங்கிவிடலாம்.
ஏற்கெனவே, இந்தியப் பண்பாடு, பாரம்பரியம், சீலம் மற்றும் கலைகள் போன்ற உலகளாவிய கண்ணோட்டம் எனும் அடிப்படையில் சீர்குலைந்து விட்டதுடன், இந்தியப் பாதுகாப்பு என்பதே ஐயத்துக்கு உரியதாகவும் அச்சத்துக்கு ஆள்பட்டதாகவும் உள்ளது.
ரோம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது வரலாறு. அதுபோல், இந்தியாவில் தற்போது தொலைக்காட்சி நாடகங்களிலும் நடனங்களிலும் மக்கள் தமது சிந்தனையை மறந்து திரிவதே நிகழ்கிறது. போர் மூலம் ஆக்கிரமிப்பு செய்வது முற்காலத்தில் இருந்த ஆதிக்க மனோபாவம். பின்னர், வணிகம் மற்றும் தானம் மூலம் ஆக்கிரமிப்பு செய்வது என்று உருவானது.
தற்போது நலம் விளைவிக்கும் நட்புநாடு போல் ஊடுருவியும், மொழி கலைகளை நாசப்படுத்தியும், ஆட்சியாளர்களை வசப்படுத்தி நிர்பந்தம் ஏற்படுத்தியும் அடிமைப்படுத்தும் புதிய போர்க்கலையை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இருபது பல்கலைக்கழகங்களும், நானூற்று இருபது கல்லூரிகளுமாக இருந்த நிலையில், அறுபது ஆண்டுகளில் தற்போது முன்னூறு பல்கலைக்கழகங்களும் ஆறாயிரம் கல்லூரிகளுமாக வளர்ந்துவிட்டது.
இந்தியப் பல்கலைக்கழகங்களில் படித்த பல லட்சம்பேர் உலகின் பல நாடுகளிலும் அனைத்துத் துறைகளிலும் உயர்ந்த பொறுப்பு வகிக்கின்றனர்.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்கள் ஒன்றரை லட்சம் இருந்தாலும், வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்து படிக்கும் மாணவர்களும் மிக அதிகமே.
சென்ற ஆண்டில் நிகழ்ந்த உலகப் பொருளாதார நெருக்கடியில் விபத்தில் அமெரிக்கா முதலிய நாடுகள் கடும் பாதிப்பு அடைந்திருந்தாலும், இந்தியாவுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. காரணம் – இந்தியாவில் குடும்பக் கட்டமைப்பு, சீரான வியாபார அடித்தளம், வணிக நாணயம், தொழில்நேர்மை போன்ற பாரம்பரியங்கள் பெருமளவு கெட்டுப்போகாமல் இருந்ததுதான்.
நமது அரசியல் சுதந்திரம் என்ற தேரைச் செலுத்தும் லகானை அமெரிக்கர்களிடம் அளிக்கத்தான் வேண்டுமா?
“வெள்ளையனை வெளியேற்றப் பீரங்கிகள் தேவையில்லை; கைராட்டினமே போதும்” என்று திடமாக ஒலித்த காந்திஜியின் உருவத்தைக் கரன்சியில் பொறித்துவிட்டு, அமெரிக்க ஆதிக்கத்துக்கு அடிபணியத்தான் வேண்டுமா?
source: தினமணி ”இருட்டுக் குகைக்குள் குருட்டுப் பூனை…”